மனித உடலிலுள்ள திசுக்களின் இறப்பு, நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்கு பிந்தைய இம்மாற்றங்களுக்கு காரணம் உடல் அணுக்களில் பொதிந்துள்ள அழிவு நொதிகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆற்றும் வினை.
அடுத்த காரணம் உயிர்வாழ்வதற்கு முக்கியத் தேவைகளான உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியன நின்றுபோவது.
ஆனால் இம்மாற்றங்கள் உடலின் எல்லா உறுப்புகளிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. உறுப்புக்கு உறுப்பு இம்மாற்றங்கள் நிகழ்வதற்கான காலம் வேறுபடும். இறப்புக்கு பிந்தைய மாற்றங்கள் குருதியில் உடனடியாக உண்டாகின்றன.
இறப்புக்கு பின் இதயத்தில் குருதி ஓட்டம் நின்றுபோவதால், இறந்த உடலில் இருந்து குருதியை வெளிக்கொணர்ந்தால் நுண்ணுயிரிகளின் தொடர்பால் குருதி மாசடைந்து போகும்.
மாசடைந்த குருதியைப் பயன்படுத்த இயலாதல்லவா? இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒருவர் உடலில் குருதிக் கொடையளித்த சில நாட்களுக்குள் மீண்டும் புதுக்குருதி ஊறிவிடும். குருதிக் கொடையளிக்கும் நல்ல உள்ளம் கொண்ட பலர் உலகில் உள்ளனர். எனவே பிணத்தில் இருந்து அதனைப் பெறவேண்டிய கட்டாயம் இல்லை.
அடுத்து சிறுநீரகம், விழிகள் ஆகிய உறுப்புகளில் இறப்புக்கு பிந்தைய மாற்றங்கள் சற்று தாமதமாக நிகழும். எனவே இறந்த உடனே அவற்றை எடுத்து தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாண்டு பதப்படுத்தி வைத்தால் வேறொருவர் உடலில் பொருத்திட இயலும். மேலும் உயிரோடு இருக்கும் ஒருவர் கண்களைக் கொடுத்தால், அது அவருக்கு நிரந்தர இழப்பாக அமைந்துவிடும். எனவே தான் இறந்தவர் உடலில் இருந்து அதனைப் பெறுகிறோம்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக