லேபிள்கள்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

குழந்தைகளுக்கு வரலாம் கேட்டராக்ட்' பாதிப்பு; பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? - கண்கள் பத்திரம்.

``கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு என்பது பெரியவர்களைத் தாக்கும் எனக் கேள்விப் பட்டிருப்போம்.

ஆனால், அது குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கூட பாதிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படுகிற இந்தக் கண்புரை பாதிப்பானது, ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ இருக்கக்கூடும். சில வேளைகளில் அது பரம்பரையாகத் தொடரும் பாதிப்பாக இருக்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அது குறித்து அவர் தரும் விளக்கமான தகவல்கள் இங்கே...

 சிறப்பு மருத்துவர் வசுமதி

``சில குடும்பங்களில் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ மிகச் சிறிய வயதிலேயே கண்புரை பாதிப்பு ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் கண்புரை பாதிப்பு இருக்கக்கூடும். சொந்தத்தில் திருமணம் செய்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரக்கூடும். கண்ணின் பாப்பா எனப்படும் பகுதியில் வெண்மையாக ஒரு படலம் போன்று தெரியும். அதை வைத்து கண்புரை பாதிப்பைச் சந்தேகிக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை... அரசுத்திட்டம் அறிவீர்களா?

`ராஷ்டிரியபால ஸ்வாஸ்த்ய கார்யக்ரம்' (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) எனப்படும் ஒன்றிய அரசுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே அதற்கு முழுமையான கண் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகிறது. கண்ணில் புரையோ, வேறு ஏதேனும் பிரச்னைகளோ, புற்றுநோயோ இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிய உதவுகிறது இந்தப் பரிசோதனை.

பிறக்கும்போதே ஒரு குழந்தைக்கு கண்ணில் புரை பாதிப்பு இருந்தால், அது கடந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த சோம்பேறிக் கண் பாதிப்பில் கொண்டுபோய்விடும். அதுவும் தீவிர நிலை சோம்பேறிக் கண் பாதிப்பை ஏற்படுத்த காரணமாகிவிடும்.

கண்புரை பாதிப்பு உள்ள அந்தக் கண்ணில் பார்வை வளர்ச்சியே இருக்காது. இதனால் இது கண்டுபிடிக்கப்பட்டால் குழந்தை பிறந்த அடுத்தடுத்த நாள்களிலேயேகூட அறுவைசிகிச்சை செய்து கண்புரையை நீக்குவதுண்டு. பெரியவர்களுக்கு கண்புரை பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் லென்ஸ் வைப்பதைப்போல குழந்தைகளுக்கு முதல் ஒரு வருடத்தில் வைக்க முடியாது.

குழந்தையின் கண்களின் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது. தவிர, குழந்தையின் கண்பார்வையின் பவரானது மாறிக்கொண்டே இருக்கும். எனவே, ஒரு வருடம் ஆன பிறகு, குழந்தையின் கண்களைப் பரிசோதித்துவிட்டு, பிறகு அதன் கண்களில் லென்ஸ் வைப்போம். அதன் பிறகு, நன்றாக உள்ள இன்னொரு கண், சோம்பேறிக் கண்ணாக மாறாமலிருக்க சிகிச்சை அளித்துக் காப்பாற்றப்படும். ஒருவேளை இரண்டு கண்களிலும் கண்புரை இருந்து அகற்றப்பட்டிருந்தால் குழந்தைக்கு கண்ணாடி கொடுத்து அணியப் பழக்கப்படுத்தப்படும்

அம்மாக்கள் கவனத்துக்கு...

பரம்பரைத் தன்மையை மீறி இந்தப் பிரச்னை வர குழந்தையின் அம்மாவுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ருபெல்லா எனப்படும் மணல்வாரி அம்மை பாதிப்பும் ஒரு காரணம். தாய்க்கு ருபெல்லா பாதித்திருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண்புரையும், விழித்திரை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின் கண் சிறியதாக இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கு Congenital Rubella Syndrome (CRS) என்று பெயர். இந்த பாதிப்பு உள்ள குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும், காது கேட்பதில் பாதிப்பும் கூட இருக்கக்கூடும். அதனால்தான் திருமணத்துக்கு முன்பே இளம் பெண்களுக்கு எம்.எம்.ஆர் தடுப்பூசி போட வலியுறுத்தப் படுகிறது. இது போடப்படும் பட்சத்தில் கர்ப்ப காலத்தில் அந்தப் பெண்ணுக்கு இந்த அம்மை பாதிப்பது தவிர்க்கப்படும்.

 Eye Issues (Representational Image)

இதுதவிர, சம்பந்தப்பட்ட அந்த கர்ப்பிணி ஏதேனும் ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்திருந்தாலும், கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே எடுத்திருந்தாலும், வைட்டமின் குறைபாடு இருந்தாலும்கூட அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. கண்புரை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்கு அதை அறுவைசிகிச்சை மூலம் நீக்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவரிடம் செக்கப்புக்கு அழைத்து வர வேண்டியது மிகவும் அவசியம்."



--

கருத்துகள் இல்லை:

குழந்தைகளுக்கு வரலாம் கேட்டராக்ட்' பாதிப்பு; பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? - கண்கள் பத்திரம்.

`` கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு என்பது பெரியவர்களைத் தாக்கும் எனக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் , அது குழந்தைகளுக்கு பி...

Popular Posts