பெண்களின் ஆசைக்கான பட்டியலில் முதன்மையான இடம், புடவைகளுக்கு உண்டு. அதிலும், பட்டுப் புடவை என்றால் எப்போதும் ஸ்பெஷல் தான்.
பட்டுப் புடவையை ஆசைப்பட்டு வாங்கும் பெண்களுக்கு அதைப் பராமரிப்பதுதான் பெரிய வேலை. பட்டுப் புடவைகளை துவைக்கக் கூடாது என்றும், வெளியில்தான் டிரை வாஷ் கொடுத்து வாங்க வேண்டும் என்றும் பலரும் நினைத்திருப்பர். வீட்டிலேயே எளிய முறையில் பட்டுப் புடவையை வாஷ் செய்வதற்கான வழிகள் இங்கே...
தேவையான பொருள்கள்:
- வாளி
- குளிர்ந்த நீர்
- வாஷிங் லிக்விட்
1. பட்டுப் புடவைகளை அலசுவதற்குக் வெந்நீரோ, சாதாரண தண்ணீரோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. குளிர்ந்த நிலையில் உள்ள தண்ணீர்தான் பயன்படுத்த வேண்டும்.
2. அரை வாளி குளிர்ந்த நீரில், மைல்டான வாஷிங் லிக்விட்டை தேவையான அளவு சேர்த்துக் கலக்கவும். உடனே இதில் பட்டுப் புடவையை ஊறவைக்கக் கூடாது. முன்னதாக, ஒரு சிறிய பஞ்சை அந்த வாளி நீரில் விட்டு சில நிமிடங்களில் வெளியே எடுத்து, அதில் நிறம் ஏதேனும் மாறியுள்ளதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை செக் செய்துகொண்டு, பின்னர் பட்டுப்புடவையை வாளியில் ஊறவைக்க வேண்டும்.
3. பட்டுப்புடவையை ஊறவைக்கும் முன், புடவை முழுக்க விசிறி மடிப்பாக மடித்து, பார்டரை மொத்தமாகச் சேர்த்து நூல்/கயிற்றால் முடிச்சிட்டுக் கட்டிவிடவும். அதேபோல, முந்தானைப் பகுதியையும் விசிறி மடிப்பாக மடித்து, கட்டிவிடவும். இப்போது, பார்டர், முந்தானை தவிர, புடவையின் உடல் பகுதியை மட்டும் தண்ணீரில் ஊறவைக்கவும். இப்படி செய்வதன் மூலம் பார்டர், முந்தானையில் உள்ள சாயம் புடவையில் பட்டுப் பாழாகாமல் தவிர்க்கலாம்.
4. புடவையின் உடல் பாகம் முழுக்கத் தண்ணீரில் மூழ்கும் வகையில் பிரித்து, விரித்துவிடலாம். ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்க வேண்டாம்.
5. பின், மற்றொரு வாளியில் குளிர்ந்த தண்ணீர் கொண்டு, அதில் புடவையை மென்மையாக அலசி எடுக்கவும். அலசும்போது கறைகள் ஏதேனும் இருந்தால், பிரஷ் இல்லாமல் கைகளால் தேய்க்கவும். கவனத்தில் கொள்க... அலசிய பின் பிழியவோ, கசக்கவோ கூடாது.
6. அலசி முடித்த பின்னர் தண்ணீரை வடியவிட்டு, நிச்சயமாக நிழலில்தான் உலர்த்த வேண்டும். வெயிலில் நேரடியாகக் காயவைத்தால் நூல் பாதிக்கப்பட, நிறம் மாற வாய்ப்புள்ளது. முடிந்தால் டவல் டிரை செய்த பின் உலர்த்தலாம்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக