ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் அவசியம். எந்த வயதினராக இருந்தாலும் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம்.
ஓய்வுக்கு மட்டுமின்றி நம்முடைய உடலைப் புதுப்பிக்க, பழுதுபார்க்கத் தூக்கம் மிகவும் அவசியம். தூக்கமின்மை பிரச்னை பலருக்கும் உள்ளது. தூக்கமின்மை சாதாரண விஷயம் என்று புறக்கணிக்க வேண்டாம். சரியான, ஆழ்ந்த தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை முயற்சி செய்து பார்க்க வேண்டும். என்ன செய்தும் சரியான தூக்கமில்லை என்றால், மருத்துவர்களின் உதவியை நாட தயங்க வேண்டாம்...
நல்ல ஆழ்ந்த தூக்கத்துக்குச் சௌகரியமான படுக்கை, தலையணை மிகவும் அவசியம். அடர் இருள் சூழல் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும். அதிக குளிரோ, அதிக வெப்பமோ இல்லாத அளவுக்கு அறை தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். அதிக சப்தம், இரைச்சல் என அதுவும் இல்லாமல் அமைதியான சூழல் இருக்க வேண்டும். படுக்கை அறையில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு குறட்டை, அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது போன்ற பிரச்னை இருந்தால் அது மற்றவர்களின் தூக்கத்தைப் பாதிக்கும்.
சரியான தூக்கம் இல்லை என்பதைக் கண்டறிய...
படுத்த உடன் தூக்கம் வர வேண்டும். அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கும் நிலை.
ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூக்கம் அவசியம். அதற்கும் குறைவான நேரம் மட்டுமே தூங்க முடிகிறது என்றால் அது சரியான தூக்கம் இல்லை.
இரவில் தூங்கும் போது, அடிக்கடி விழிப்பு வருவது.
காலையில் கண் விழிக்கும் போது அதிக சோர்வு, இன்னும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்றால் இரவில் நல்ல தரமான, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
பகல் நேரத்தில் படுத்த உடன் தூக்கம் வருவது, நாள் முழுக்க ஆற்றலின்றி, சோர்வுடன், தூக்கக் கலக்கத்தில் இருப்பது எல்லாம் நல்ல, ஆழ்ந்த தூக்கம் இன்மையால் அவதியுறுவதற்கான அறிகுறிகள் ஆகும்.
தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அறையின் தட்ப வெப்பநிலை, அறையில் வெளிச்சம் தடுப்பது போன்ற நம்மால் சரி செய்யக் கூடிய காரணிகளைச் சரி செய்துகொள்ள வேண்டும். உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் காரணமாகத் தூக்கம் தடைப்படலாம். மருத்துவரை அணுகி அதை சரி செய்துகொள்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
நல்ல தூக்கம் வர தினமும் காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பது, இரவில் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்க வேண்டும். 10 மணிக்கு படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்றால், அந்த நேரத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீறக் கூடாது. படுக்கை டிவி, திரைப்படம் போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் சௌகரியமான, இதமான படுக்கை அறை சூழலை ஏற்படுத்த வேண்டும். இரவு தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது போன்றவற்றைச் செய்தால் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக