இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்தில் சிறு பிரச்சனை இருந்தாலும் ஒட்டு மொத்த உடலும் சோர்ந்து விடும்.
எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை, அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.
இதயம் நாள் முழுக்க நமக்காக வேலை செய்யும் முக்கியமான உறுப்பு. உடலின் மிக முக்கியமான தசை இது. உடல் உறுப்புகளுக்கு இரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் செலுத்தும் பொறுப்பை கொண்டிருப்பதன் மூலமே இதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
இதயம் சில விநாடிகள் அதன் பொறுப்பை தவிர்க்கும் போது அது ஓராயிரம் பிரச்சனைகளை நொடிக்குள் உருவாக்கிவிடலாம். தமனிகளின் புறனிக்குள் கடுமையான பிரச்சனைகள் உருவாகலாம். பிறகு மாரடைப்பு மற்றும் இரத்த தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபட வாய்ப்புண்டு.இன்றைய நிலையில் இதயத்தை பாதுகாத்து அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் ஆரோக்கியம் தான் உயர்ந்த செல்வம் என்று சொல்லப்படுகிறது.
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.
சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு' என்று பெயர்.
இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு "ஆஞ்சைனா' என்று பெயர்.
நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக