வெற்றி பெறுகின்ற போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செல்வம் சேருகின்ற போது நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் வெற்றி கொஞ்சம் பிசகினால் நமக்கு ஆணவத்தையும், மமதையும் ஏற்படுத்திவிடும்.
மிகப் பெரிய யானைதான் ஆனாலும் எந்த நேரத்திலும் பூச்சி தன் காதில் நுழைந்து
விடலாம் என்ற எச்சரிக்கையுடன் காதை சதா ஆட்டிக்கொண்டே இருக்கிறது!
இந்த உலகம் நான் இனி தோல்வியே பெற மாட்டோம் என்று சொல்லி நம்மை
மனோவசியப்படுத்த பார்க்கும்.
அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள்தான் உலகத்தை ஜெயிக்க வேண்டும் என்று
அலெக்சாண்டருடைய தலையில் பேராசையை ஏற்படுத்தியது.
தான் பெற்ற வெற்றி நிரந்தரம் என்று நினைத்ததால்தான் நெப்போலியன்
தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.
இனி நாம் தோல்வியே அடைய மாட்டோம் என்கின்ற எண்ணம்தான் ஹிட்லரையும், முசோலினியையும் வீழ்த்தியது.
உலகப் போரில் வென்ற சர்ச்சில் உள்ளூர் தேர்தலில் தோற்றுப்போனார்.
வெளி உலகில் மட்டுமல்ல, நம் அகவய
உலகத்திலும் நம்முடைய முன்னேற்றங்களைக் காரணமாக்கி, நாம்
அதீத மகிழ்ச்சி அடையக் கூடாது.
நம்மை கண்டு நாமே வியந்தால் நம்மால் அடுத்த நிலையை அடைய முடியாது.
என்னை யாரும் வெற்றி கொள்ள முடியாது என நினைப்பவர்களெல்லாம்
பரிதாபமான தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.
அது சூழ்ச்சியால் நிகழ்ந்திருக்கலாம்.
கவனமின்மையால் இருந்திருக்கலாம்.
பலவீனங்களால் நிழந்திருக்கலாம்.
எச்சரிக்கையின்மையால் நிகழ்ந்திருக்கலாம்.
அதீத நம்பிக்கையால் ஏற்பட்டிருக்கலாம்.
அடுத்தடுத்த வெற்றிகள் நம்மை தவிர யாருமில்லை என்று எண்ண வைத்து
விடுகின்றன.
இப்படித்தான் இஸ்லாமிய உஹத் யுத்தத்தில் நடந்தது.
ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக்
கொண்டு வந்து கொடுத்தார். அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்
என்றும், அதில் 700 குதிரைப்படை,
அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன்
படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எதிரிகள் கரையோரத்து மேற்குப்பாதை வழியாக வந்து கொண்டிருக்கின்றனர்
என்றொரு செய்தியும், பின்னர் உஹத் மலையின் அடிவாரத்தில் பாசறை
அமைத்துக் கொண்டனர் என்ற மற்றொரு செய்தியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை
வந்தடைந்தது.
உடனே தமது தோழர்களை அழைத்து ஆலோசனை செய்துவிட்டு, யுத்தத்திற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
மறுநாள் பிற்பகல் தொழுகையை முடித்தபின் 1000 வீரர்களைக்
கொண்ட படை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின்
தலைமையில் உஹதை நோக்கி நகரத் தொடங்கியது.
ஷைகன் என்ற இடத்தை அடைந்தபோது மாலை நேரமாகியது. மாலைநேரத் தொழுகையை
முடித்த நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள், தமது படையினரைப் பார்வையிடச்
சென்றார்கள். அச்சமயம் எதிரிகள் மிக அதிகமாக உள்ளனர் என்ற பொய்க் காரணத்தை
முன்வைத்து 300 நயவஞ்சகர்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்று
விட்டனர்.
மீதி இருந்த 700 வீரர்களில்
எட்டுச் சிறுவர்களும் இருந்தனர். அவர்களில் மல்யுத்தம் மற்றும் வாள்வீச்சு தெரிந்த
இருவரைத் தவிர ஏனைய ஆறு பேரையும் மதீனாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்கள்
நபிகளார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்.
இருந்த வீரர்களில் வில்வித்தை தெரிந்த சிலரை காலையில் ஒரு சிறிய குன்றின்
மீது நின்று கண்காணிக்க வேண்டுமெனப் பணித்து,’ என்
அறிவிப்பு இன்றி குன்றை விட்டு நகரக் கூடாது’ என்று
கட்டளையிட்டு விட்டு ஏனையோரை ஐம்பது, ஐம்பது பேராக
அணிவகுத்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.
மிக அருமையான ராஜதந்திர யுத்த வியூகம். மறுநாள் காலை யுத்தம் ஆரம்பித்தது.
ஏற்கனவே அணிவகுத்து நின்ற எதிரிப் படைகளைக் குன்றின் மீது நின்ற இஸ்லாமிய படை
எளிதாக துவம்சம் செய்ய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் எதிரிப்படைகள் நாலா பக்கமும்
சிதறியபோது, அவர்கள் விட்டுச் சென்ற பொருள்களை நபியவர்களின்
படைவீரர்கள் எடுப்பதைக் கண்டு, குன்றின் மீது பாதுகாப்பிற்காக
நின்ற வில்வீரர்கள் தாம் வெற்றியடைந்ததாக எண்ணி , நபிகளாரின்
கட்டளையை மீறி ,குன்றை விட்டு இறங்கி வந்து எதிரிகளின் பொருள்களை
எடுக்கத் தொடங்கினார்கள்.
குன்றின் மீது இஸ்லாமிய வீரர்கள் எவருமில்லை என்று தெரிந்த
எதிரிகள், பின்புறமாக வந்து நபி யவர்களின் படைகளைத் தாக்கத்
தொடங்கினார்கள். இதனால் நபியவர்களின் படையினருக்கு பெரும் சேதமேற்பட்டது. ஹம்ஸா ரளியல்லாஹு
அன்ஹு போன்ற
முக்கிய நபித்தோழர்கள் 70க்கும் மேற்பட்டோர் இந்த
பின் விளைவால் ஷஹீதாக்கப்பட்டனர் .
உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக்
கல்லெறிந்தான். இதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழே
விழுந்து, நபிகளாரின் வலது கீழவரிசையின் முன் பல் சேதமடைந்து
கீழ் உதடும் காயமடைந்தது.
இந்த உஹுத் போரில் அம்பெறி வீரர்கள் செய்த தவறினால் எதிரிகள்
நபிகளாரைச் சூழ்ந்து கொண்டனர். நபிகளாரைத் தாக்கவிடாமல் நபித்தோழர்கள் கடுமையாக எதிரிகளை
எதிர்த்துப் போராடினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வைத்திருந்த
அன்பினால் தங்களையே அர்ப்பணித்து வீர மரணத்தைச் சுவைத்தனர். ஸஅது இப்னு அபீ
வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய
இரு தோழர்களுமே மிகுந்த வீரத்துடனும் துணிவுடனும் போரிட்டனர்.
இதற்கிடையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்
என்ற வதந்தி பரவியது. முஸ்லிம்கள் நிலை தடுமாறி, எது முஸ்லிம் படையினர், எது எதிரிப்படையினர் என்று
குழம்பிவிட்டவர்களாகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் நிலை வந்தது.
நிலைமையை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்
பின்னால் இருந்த அணியிலிருந்து அம்பெறி வீரர்களைப் போர்க்களத்திற்குத் திரும்பி வரும்படி
அழைத்தார்கள்.
ஆனால் அவர்கள் அதைக் கவனிக்கவில்லை. அணிகளுக்கிடையில் பெரும்
குழப்பம் நிலவியது.எந்த அளவிற்கென்றால் முஸ்லிம்களில் முன்னணிப் படையினர்
திரும்பிச் சென்று முஸ்லிம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.
அப்போது அங்கு ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அருகிலிருந்த தன் தந்தை
யமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முன்னணிப் படையினரிடம் சிக்கியதைப் பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை, இது என்
தந்தை!’ என்று உரக்கக் கூறி தடுக்க முயன்றார்கள். ஆனால்
முஸ்லிம் வீரர்களுக்கு அந்தக் கூச்சல் குழப்பத்தில் எதுவும் கேட்கவில்லை, அவரைத் தாக்கிக் கொன்றே விட்டனர். ஆனாலும் முஸ்லிம்களை ஹுதைஃபா
மன்னித்ததோடு ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று பெருந்தன்மையாகக் கூறினார்.
தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு எதிரிகளுடன் சண்டையிட்டு நபிகளாரைக் காத்தார்கள்.
அப்போது தல்ஹாக்கும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களைத் தாக்க விரைந்த எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருந்தது.
அதைப் போலவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காக்க
வேண்டுமென்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
நபிகளாரைக் காக்க வேண்டுமென்று அவர்களின் தோழர்களான அபூபக்ர்
ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ
ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் அங்கு விரைந்து நபிகளாரைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாக
மாறினர்.
(ஸஹீஹ் புகாரி 3:59:3290, இப்னு
ஹிஷாம், – அர்ரஹீக் அல்மக்தூம்.)
மரங்களில் ஏறுவதற்கு கைதேர்ந்த நிபுணர் ஒருவர் பலரை மரம் ஏறப்
பழக்கிக் கொண்டிருந்தார். அப்படி ஒருவனுக்கு கற்றுக் கொடுக்கும் போது, சற்று ஆபத்தான உயரத்தில் எறவும் முடியாமல், இறங்கவும்
முடியாமல் கஷ்டப்படும் போது அந்த நிபுணர் ஒன்றுமே சொல்லாமல் வாளாவிருந்தார்.
ஆனால் இறங்குகின்ற போது பாதுகாப்பான இடத்திற்கு வந்ததும் “பார்த்து இறங்கு ,பார்த்து இறங்கு” என்று சத்தமிட்டார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் “இப்போது எச்சரிக்கை செய்கிறீர்களே என்ன ஆபத்து இருக்கிறது ?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் அவன் மரத்தின் ஆபத்தான உயரத்தில் இருக்கும் போது
மிகவும் குழம்பி இருந்தான். அவன் பயத்தில் இருக்கும் போது நான் ஏதாவது சொல்லி இருந்தால், அவன் இன்னும் பதற்றப்பட்டு இருப்பான். எளிதான இடத்தில்தான் அஜாக்கிரதையாக
இருந்து தவறுகள் அதிகம் செய்வார்கள் அதனால் தான் அந்த இடத்தில் நான் எச்சரிக்கை
செய்தேன்” என்றார்.
வாழ்க்கை விசித்திரமானது.இலகுவான விஷயங்களில்தான் நாம் அதிகம்
கோட்டை விடுகிறோம். எளிதான தேர்வுகளில்தான் குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறோம்.
வெற்றியும் மமதையும் இயற்கைத்தான் ஒன்றாக பிணைத்து மறைத்து
வைத்திருக்கிறது.
ரஹ்மத் ராஜகுமாரன்
source: https://www.facebook.com/photo/?fbid=2866804153578921&set=a.1412423615683656
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக