தொழுகை, ஒருவனைப்
பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும்
– நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச்
சென்ற தொடரில் கண்டோம்.
அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின்
மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம்.
நிரந்தரமாக நிறைவேற்றுதல்:
அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று
அல்லாஹ் கூறுகின்றான். دَآٮِٕمٌ (தாயிம்) என்றால் நிலையான, நிரந்தரமான என்று பொருள். دَائِمُونَ (தாயின்மூன்) என்றால் அந்த காரியத்தை நிலையாக நிரந்தரமாகச்
செய்பவன் என்று பொருள்.
நாலடியார்களுக்கு சுவனத்தின் உணவும் அதன் நிழலும் நிலையான, நிரந்தரமானது என்பதைக் குறிப்பிடும்போது دَائِمُ என்ற சொல்லைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன்: 13:35)
ஒருவன் ஒரு காரியத்தை தற்காலிகமாகச் செய்வதற்கும், அதே காரியத்தை நிரந்தரமாகச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இஸ்லாத்தில்
எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதை விடாமல் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்யவேண்டும்.
உலகக் காரியங்களில்கூட விடாமல் தொடர்ந்து செய்பவனுக்குத்தான் மதிப்பும், சலுகையும் அதிகம்.
‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே
செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை
அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் யாதெனில்,
குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’ என
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி)
(ஸஹீஹுல் புகாரி:5861)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையோடு
(நடுநிலையாக) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து
கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிக்காது.
(மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம்
புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து
செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். ஆயிஷா(ரலி) (ஸஹீஹுல் புகாரி: 6464).
குறித்த நேரத்தில் தொழுதல்
தொழுகையின் நேரத்தை பற்றி அல்லாஹ் கூறும்போது اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا தொழுகையானது இறைநம்பிக்கையானார்கள் மீது குறித்த நேரத்தில்
நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். (அல்குர்ஆன்: 04:103)
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை
அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’ என்று பதில் கூறினார்கள்.
(அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (ஸஹீஹுல் புகாரி: 527).
நோன்பு – ஹஜ் போன்ற வணக்கங்களை
நிறைவேற்றுவதற்குக் காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று ஒவ்வொரு தொழுகைக்கும்
நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே நிறைவேற்றுவது
இறைநம்பிக்கையாளர்கள்மீது கடமையாகும் அதுதான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
காரியமாகும்.
இறையச்சத்தோடு தொழுதல்
நிலையாக, நிரந்தரமாக, அந்த நேரத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகையை நிதானமாகவும், இறையச்சத்தோடும், நிறைவேற்றவேண்டும். தொழுகையில்
நிற்பவர் அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் அவரைப் பார்க்கின்றான் என்ற உள்ளச்சத்தோடு
தொழவேண்டும். அடியான் தொழும்போது தன் இரட்சகனோடு (அல்லாஹ்வோடு)
உரையாடுகின்றார், அல்லாஹுவும் அடியானுக்கு பதிலளிக்கின்றான் என்பதை
நினைவில் கொண்டு தொழவேண்டும்.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள்
மத்தியிலிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில்
வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது
அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும்
நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும்
நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று
கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு
(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை
நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில்
நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.
இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார்.
அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப்
போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன்
உம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்றார்கள்.., (ஹதீஸ்
சுருக்கம்)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் :
புகாரீ 50,)
தொழுகையில் இறைவனோடு
உரையாடுதல்!
தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன்.
என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. ‘அல்ஹம்து
லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ என்று ஒருவன் கூறும் போது ‘என்னை என் அடியான் புகழ்ந்துவிட்டான்‘ என்று அல்லாஹ்
கூறுகிறான். அவன் ‘அர்ரஹ்மானிர் ரஹீம்‘ என்று கூறும் போது ‘என் அடியான் என்னைப் பாராட்ட
வேண்டிய விதத்தில் பாராட்டிவிட்டான்‘ என்று அல்லாஹ்
கூறுகிறான். ‘மாலிக்கி யவ்மித்தீன்‘ என்று
கூறும் போது என் அடியான் ‘என்னைக் கௌரவப்படுத்த வேண்டிய
விதத்தில் கௌரவப்படுத்தி விட்டான்‘ என்று அல்லாஹ்
கூறுகிறான். ‘இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்‘ என்று கூறும் போது ‘இதுதான் எனக்கும் எனது
அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்‘ என்று அல்லாஹ்
கூறுகிறான். ‘இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்‘ என்று கூறும் போது ‘என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்‘
என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 655)
தொழுகை, ஒருவனைப்
பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, கெட்ட குணத்தையும் –
நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய
செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்றால் அது எப்படியான
தொழுகையாக இருக்கவேண்டும்
http://www.islamkalvi.com/?p=126751
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக