லேபிள்கள்

புதன், 9 நவம்பர், 2022

பெண்களின் ஆடை – கவனம் தேவை

இந்தத் தொடரில் நாம் பார்க்கப்போவது பெண்களிடம் உள்ள தவறு. ஆனாலும் அந்த தவறை சரி செய்ய வேண்டிய ஆண்கள் அதை கண்டும் காணாமல் இருப்பதால் அவர்கள் மீதும் குற்றம் உள்ளது. இதை சரிசெய்ய முயற்சிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் திருத்தம் செய்ய முடிவதில்லை. காரணம் இந்த தவறு தவறாகவே கருதப்படுவதில்லை. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தவறை திருத்துவதற்கு முயல்வோம். வயிற்றை திறந்து காட்டியவாறு பெண்கள் உடுத்தும் ஆடைமுறை ஒரு கேவலமான தவறாகும். ஆனால் இந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் இது நாகரீகம்!

ஆதிகாலத்தில், ஆடையில் முன்னேற்றம் ஏற்படாத காலகட்டத்தில் பெண்கள் தங்களின் மேல்பகுதியை குறைந்த அளவில் மறைத்திருக்கலாம். ஆனால் உடைகளில் முன்னேற்றங்கள் பல ஏற்பட்ட பிறகும் அந்த ஆதிகால நடைமுறையை தொடர்வது தவறுதானே!

அதிலும் ஆண்கள் கூட வெளிக்காட்டாமல் மறைக்கக்கூடிய பகுதியை பெண்கள் திறந்து காட்டுவது எப்படி சரியாகும்?

பிறமதப் பெண்கள் இந்த தவறை செய்வது பெரிய விஷயமல்ல. ஏனென்றால், அவர்கள் இறைவனின் இறுதி மார்க்கம் இஸ்லாத்தை அறியாதவர்கள், ஏற்காதவர்கள்.  அதே நேரத்தில் முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு இடையை வெளிப்படுத்திக் காட்டுவது ஒரு பெரிய குற்றம்!

நமது சத்திய மார்க்கத்தில், "பெண் என்பவள் மறைந்திருக்க வேண்டியவள்" (நபிமொழிநூல்: திர்மிதி) என்று சொல்லப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து சிறப்பான ஹிஜாப் முறை காட்டித்தரப்படுகிறது.

ஹிஜாப் நிபந்தனை: உடை மெல்லியதாக  இருக்கக்கூடாது என்பது ஹிஜாபின் நிபந்தனைகளில் ஒன்றாகும். உடல் இலேசாகக் கூட தெரிந்துவிடக்கூடாது என்பதுதான் இந்த நிபந்தனைக்குக் காரணம்.

அதேபோல் உடை அடர்த்தியானதாக இருந்தாலும் இறுக்கமானதாக இருக்கக்கூடாது என்பது மற்றொரு நிபந்தனை. உடல் பார்வைக்கு தெரியாது என்றாலும் உடல் பாகங்களின் தன்மைகளை எடுப்பாகக் காட்டிவிடக்கூடாது என்பதுதான் இதற்குக் காரணம்!

இப்படியெல்லாம் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கும் போது உடலின் முக்கிய பகுதியை நேரடியாக திறந்து காட்டுவது தகுமான செயலா? சொல்லுங்கள் சகோதரிகளே!
இங்கிலாந்துக் காரரின் விமர்சனம்!

சவூதி அரேபியாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய ஒரு சகோதரர் தன்னோடு பணி செய்த ஒரு இங்கிலாந்துக்காரர், "உலகப் பெண்களின் ஆடைகளிலேயே இந்தியப் பெண்களின் ஆடைதான் மிக ஆபாசமானது" என்று சொன்னதாக கூறினார். அதாவது ஜாக்கெட், சேலையைத் தான் சொல்லுகிறார். இந்த ஆங்கிலேயர் சொன்னது சரிதான். இங்கிலாந்திலோ மற்ற மேலை நாடுகளிலோ பெண்களின் கீழாடையை கீழேயிருந்து குறைக்கிறார்கள். முழங்கால்கள் வரை வருகிறது. அல்லது மேலாடையை மேலே குறைக்கிறார்கள்.  கைகள் அக்குள் உட்பட முழுமையாக  தெரியும் வகையில் உடுத்துகிறார்கள்.

ஆனால் நம் நாட்டு பெண்மக்கள் உடலின் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் மறைத்து மையப் பகுதியை காட்டிக் கொண்டு உடை உடுத்துகிறார்கள். ஆண்கள் கூட பொதுவாக மறைக்கக்கூடிய பகுதியை பெண்கள் பொதுவாக திறந்துக்காட்டிக் கொண்டிருப்பது அசிங்கமில்லையா?

இப்படிக் கேட்டால் இதுதான் நம் நாட்டு கலாச்சாரம்! பண்பாடு! இதெல்லாம் தவறில்லை என்று சத்திய மார்க்கத்தை ஏற்காத பெண்கள் கூறலாம். இறைமார்க்கத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் முஸ்லிம் பெண்கள் இப்படிச் சொல்ல முடியுமா?

பாரம்பரியமோ  கலாச்சாரமோ எதுவாக இருந்தாலும் அது அசிங்கமாகவும் தவறாகவும் இருந்தால் அதை விட்டுத் தொலைப்பதுதானே முறை!
படைத்தவன் கூற்றை படிக்கவில்லையா? இதோ படித்துப் பாருங்கள்.

(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், "தீயதும், நல்லதும் சமமாகா. எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக (அல்குர்ஆன் 5:100)

நிறைய பேர் இடையைக் காட்டித்தான் உடை உடுத்துகிறார்கள் என்பதால் இந்த அருவருப்பு  நல்லதாகிவிடாது.

வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது புர்கா போட்டுக்கொள்கிறோம், வீட்டுக்குள்ளே இருக்கும் போதுதான் வயிறு திறந்த ஆடையோடு இருப்போம் என்று நியாயம் பேசலாம். பல அவசியத் தேவைகளை முன்னிட்டு அன்னியர்கள் வீட்டுக்குள் வருவது தவிர்க்க முடியாதது. அதேபோல் சில காரணங்களை முன்னிட்டு நம் பெண்கள் புர்கா அணியாமல் வீட்டிலிருந்து வெளியே இறங்கும் சூழ்நிலைகளும் உள்ளன. ஆகையால் வீட்டுக்குள் இருக்கும் போதும் வயிற்றை முழுமையாக மறைக்கக்கூடிய மேலாடை அணிவதுதான் முறையாகும்.

ஒரு பெண் கீழாடையின் அளவை சுருக்கி முழங்காலுக்கு கீழே உள்ள கால்களின் பகுதியை வெளிப்படுத்தியவாறு ஆடையணிந்தால் அதை ஒழுக்கங்கெட்ட ஆடை என்பீர்கள். முழங்காலுக்குக் கீழே தெரிந்தாலே ஒழுக்கக் கேடு என்றால் உடலின் உள்பகுதியான கால்களை விட மென்மையும் கவர்ச்சியும் உள்ள பகுதியான வயிற்றை வெளியே காட்டி உடையணிவது பெரிய ஒழுக்கக்கேடு இல்லையா?

தேவையை விட அதிக அளவு துணிகொண்ட ஐந்தரை மீட்டர் சேலையை உடுத்திக் கொண்டு வயிற்றை திறந்து வைத்திருப்பது அறிவார்ந்த செயலாக இல்லையே? சிந்திப்பீர்களா சகோதரி சகோதரிகளே?

நமது பகுதி மக்களின் ஆடை முறை நமது இனமக்களின் ஆடை முறை என்று மட்டும் இறைநம்பிக்கையாளர்கள்  பார்க்கக் கூடாது. அந்த ஆடைமுறை இறைமார்க்கம் இஸ்லாத்தின் வழிகாட்டலுக்கு ஒத்து வருகிறதா என்று பார்ப்பதுதான் முக்கியம்.
இதன்படி இப்போது நம் நாட்டில் இடை என்ற பெயரில் வயிற்றை வெளிக்காட்டி பெண்கள் ஆடை அணியும் முறை இஸ்லாத்துக்கு எதிரானது, அசிங்கமானது, பாவமானது!

எனவே, பெண்கள் இந்தத் தவறான முறையை விட்டொழித்து மேலாடையை கழுத்திலிருந்து இடுப்பு வரை முழுமையாக மறைக்கும் விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய முறைப்படி பெண்ணின் ஆடை உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும். முகம், முன் கைகளுக்கு மட்டும் விதிவிலக்கு. அத்துடன் முகத்தை மறைப்பது மிக நன்மையானது என்று காட்டித்தரப்பட்டுள்ளது.

பெண்கள் இந்த முறையில் ஆடைகளை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம் ஆண், பெண் தையல்காரர்கள் இஸ்லாமிய முறைப்படி பெண்களின் மேலாடையை தைத்து அறிமுகப்படுத்தவும், பரப்பவும் முன்வர வேண்டும்! ஆண்கள் இஸ்லாமிய முறைப்படி பெண்கள் ஆடை அணிய வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். இதில் ஏற்படும் குறையை கண்டித்துத் திருத்த வேண்டும்.

http://www.islamkalvi.com/?p=126091


--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts