லேபிள்கள்

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி (ﷺ) அவர்கள் வபாத்தான தினத்தைப் பிறந்த தினமாகக் கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டில் மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்கச் செய்வதை எப்படி பித்அத் , ஷிர்க் என்று சொல்லுவீர்கள்? என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

நபி (ﷺ) அவர்களைப் புகழுங்கள் என்று அல்லாஹ்வோ, அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ சொல்லி உள்ளதாக வஹியிலிருந்து ஒரு செய்தி இவர்களால் காட்ட முடியுமா…? எனக் கேட்டால் நிச்சயமாக முடியாது.

இந்தக் கேள்விக்கு இவர்கள் கேட்கும் எதிர்க் கேள்வி அல்லாஹ் நபி (ﷺ) அவர்களின் மீது ஸலவாத் சொல்லும்படிக் கூறி உள்ளானே..? அப்படி இருக்க நீங்கள் எப்படிப் புகழக்கூடாது என்று கூறுவீர்கள் .? என்ற அடிப்படையிலாக இருக்கும்.

இதற்கான எமது பதில்.

1) நபிகளாரின் புகழை நாம் மேலோங்கச் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை அல்லாஹ் அதை செய்து முடித்து விட்டான்.

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ

மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 94:4)

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

திருக்குர்ஆன் (21:107)

நபி (ﷺ) அவர்கள் தனக்குள்ள பெயர்களைக் கூறும் போது இவ்வாறு கூறினார்கள்.

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

1: நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.

2: நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.

3: நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.

4: நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.

5:நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி)

நபிகளார் தன்னைப் பற்றிக் கூறும் போது ஏற்கனவே தான் புகழப்பட்டவர் என்று கூறுகின்றார் முன்னைய வேதங்களில் அவரின் பண்புகள் கூறப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: "قرأت في التوراة صفة النبي صلى الله عليه وسلم: محمد رسول الله، عبدي ورسولي، سميته المتوكل، ليس بفظ ولا غليظ" رواه البخاري.

அதா இப்னு யஸார் (ரஹ்) அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து 'தவ்ராத்தில் நபி( ﷺ) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்!

அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன.

'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்!

நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்!

المُتَوَكِّلُ

தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!'

(இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ﷺ) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்)

1 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசிச் சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்!

2 தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்துக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்!

3: அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!' என பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் புகாரி 2125 )

நான் முஹம்மத் புகழப்பட்டவன் எனக் கூறிவிட்டு அடுத்ததாக நபிகளார் சொல்லும் செய்தி நான் அஹ்மத் இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன் என்று தான் கூறுகின்றார்களே தவிர தன்னை அதிகம் புகழுமாறு கூறவில்லை.

2) நபி (ﷺ) அவர்களைப் புகழ்வதைப் பொதுவாக இரண்டு விதத்தில் நோக்க முடியும்

1: நபி (ﷺ) அவர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளைக் கூறி மக்களுக்கு உபதேசம் செய்தல். இதன் போது உத்தமத் தூதரின் பரிசுத்த வாழ்கையில் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி புகழ்ந்து பேசுதல். இது அனுமதிக்கப்பட்ட காரியம். இது நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற பகுதியில் உள்ள ஓர் இபாதத்தாகும். பல நபித்தோழர்கள் நபிகளாரின் அழகிய வாழ்வு பற்றிக் கூறியுள்ள செய்திகள் இதற்குச் சிறந்த சான்றாகும்.

4625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا

உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது. உங்களில் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!
(அல்குர்ஆன் : 33:21)

நபி (ﷺ) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த விடயங்களைப் பாடலாகப் படித்து அவர்களைப் புகழ்வது வணக்கம் கிடையாது. நபி (ﷺ) அவர்களின் முன்மாதிரிகளை வாழ்கையில் எடுத்து நடப்பதே வணக்கமாகும்.

2: நபி(ﷺ) அவர்களைப் புகழ்வதை ஒரு வணக்கமாக எடுத்துக் கொண்டு அதற்காக அல்லாஹ்வின் இடத்துக்கு நபி (ﷺ) அவர்களை உயர்த்தி அல்லாஹ்வின் பண்புகளை நபி ( ﷺ) அவர்களுக்கு வழங்கும் விதமான வாசகங்களைக் கொண்ட கவிதைகளைக் கட்டி மக்களை ஒன்று திரட்டி அந்தக் கவிதைகளை நபிகளாரை புகழுகிறோம் என்ற பெயரில் பாடலாகப் படிப்பது ஷிர்க்காகும். இத்தகைய புகழ்ச்சியை நபி (ﷺ) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள், 'முஹம்மத் (ﷺ) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத் (ﷺ) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கின்றவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ 'அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்' என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)' என்றார்கள்.

(ஸஹீஹ் புகாரி 7380)

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்) அவர்களிடம்) கூறினார்.

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ﷺ) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ﷺ) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்" என்று கூறினாள். உடனே, நபி( ﷺ) அவர்கள், '(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி 5147)

3) நபி( ﷺ) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது என்பது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு இபாதத்தாகும். ஆனால் ஸலவாத் என்பது நாம் அவர்களுக்காகச் செய்யும் பிரார்த்தனையே ஒழிய புகழாரம் கிடையாது. என்பதை அதன் பொருளைப் படிக்கும் குர்ஆன் மத்ரஸா மாணவனும் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு முறை நபி(ﷺ) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களே உங்கள் மீது 'ஸலாம்" உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் 'ஸலவாத்" சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ﷺ) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் '

اللّهمّ صلّ على محمّد وعلى آل محمّد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد ، اللّهمّ وبارك على محمّد وعلى آل محمّد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد

எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் – கஃப் இப்னு உஜ்ரா (ரலி).

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்ததைப் போல் முஹம்மத் (ﷺ) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ﷺ) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தியை(பரக்கத்தை) அருள்வாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

நபி (ﷺ) அவர்களைப் புகழ்வதை இஸ்லாம் ஒரு அமலாக இபாதத்தாகச் சொல்லவில்லை மாறாக நபி( ﷺ) அவர்களைப் பின்பற்றுவதையே இஸ்லாம் வணக்கமாகக் கூறி உள்ளது. அதுவே நபிகளாரை நேசிப்பதற்கான அடையாளமும் கூட.

4).அளவுக்கதிகமாக ஒருவர் மற்றவரைப் புகழ்வதை நபி (ﷺ) வெறுத்தார்கள்.

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ﷺ) அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது நபி (ﷺ) அவர்கள், "அந்த மனிதரின் முதுகை அழித்துவிட்டீர்களே! அல்லது முறித்துவிட்டீர்களே" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5729.

ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசலானார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து, அவரது முகத்தில் பொடிக்கற்களை அள்ளி வீசலானார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் உடல் பருமனான மனிதராயிருந்தார்கள். (எனவே தான், முழந்தாளிட்டு அமர்ந்தார்கள்.)
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, "உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ﷺ)
அவர்கள், "அளவுக்கதிகமாகப் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அறிவிப்பவர் மிக்தாத் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 5731.

5) இறந்த மனிதரின் நற்செயல்களைப் பற்றிப் புகழ்து பேச அனுமதியுண்டு:

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ﷺ) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ﷺ) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ﷺ) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்' எனக் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 1367.

இறந்தவர் உலகில் செய்த நற்கருமங்களைப் பற்றிப் பேசுவது நாம் அவருக்குச் செய்யும் ஒரு பிரார்த்தனை போன்ற ஒரு காரியமாகும். வானவர்கள் அதற்கு ஆமீன் கூறுவார்கள்.

6) புகழ்வதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ)அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமில்லை. அதனால்தான்,அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமில்லை. ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமில்லை. அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5328.

இப்னு மஸ்ஊத் ரழி அறிவித்தார்கள்.

'அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் வேறெவருமில்லை. எனவேதான் மானக் கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடைசெய்துள்ளான். மேலும், அல்லாஹ்வை விட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இல்லை. எனவே, தான் அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளான்' என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4637.

புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனையே நாம் புகழ வேண்டும். அவன் தன்னைப் புகழ்வதை விரும்புகிறான். அதை அடியார்கள் மீது கடமையாக்கி உள்ளான்.

7) உயிரை விட மேலாக நபி (ﷺ) அவர்களை நேசிப்போம்.

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ۗ

6. நம்பிக்கை கொண்டோருக்குத் தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்..

திருக்குர்ஆன் 33:6

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (15)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:)

1. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதனையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (16)

8) நபிகளாரை நேசிப்பது அவர்களைப் பின்பற்றுவதாகும். கவிதைகளைக் கொண்டு புகழ்வது நேசிப்பதாக ஆகிவிடாது.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெரும் கருணையுடையவனுமாவான்."
(அல்குர்ஆன் : 3:31)

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந் தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
நூல் : புஹாரி (2957)

9) நபிகளாரின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவது எப்படி?

பாங்கு சொல்லும் போது அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்பதை செவியுற்றால் இரு கட்டைவிரல்களையும் கண்களில் ஒத்திக்கொள்ளுதல், முஹம்மது என்று அட்டையில் எழுதி வீட்டு வாயலில் மாட்டி வைத்தல் போன்ற காரியங்கள் நபிகளாரை நேசிப்பதின் அடையாளமாக ஆகுமா என்றால் ? நிச்சயமாக இல்லை.

உண்மையான நேசம் எது தெரியுமா?

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

(நபியே!) நீர் கூறுவீராக: "உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம், மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால்,

அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை."
(அல்குர்ஆன் : 9:24)

எமது வியாபாரம், எமது மனைவியர் , எமது பிள்ளைகள் , உற்றார் உறவினர்கள், எமது விருப்புக்கள், அனைத்தையும் விட உலகமே எம்மை எதிர்த்து நின்றால் கூட அல்லாஹ்வையும், றஸுலையுமே நாம் நேசிக்க வேண்டும். அப்போது தான் நபிகளாரை உண்மையில் நாம் நேசித்தவர்களாக ஆக முடியும்.

وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
(அல்குர்ஆன் : 59:7)

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ﷺ)
அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். நபி (ﷺ) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்" என்று பதிலலித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : புஹாரி (7280)

வருடத்தில் ஒரு முறை நபிகளாரின் புகழைப்பாடி நினைவு கூற நபி( ﷺ) அவர்கள் ஒன்றும் கட்சித் தலைவர் கிடையாது. அவர் அல்லாஹ்வின் உத்தமத் தூதர் அவரின் வாழ்கை வழிமுறைகளை அணுவணுவாக வாழ்கையில் கடைபிடிப்பது ஒவ்வொருவர் மீதும் நாளாந்தக் கடமையாகும்.

மர்யமின் மகன் ஈஸாவை நஸாராக்கள் அளவு கடந்து புகழ்வதைப் போன்று என்னைப் புகழாதீர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், (என்னை) அல்லாஹ்வின் அடியார், தூதரென்று மாத்திரமே சொல்லுங்கள்' என நபிகளார்(ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6830).

இவற்றைப் புரிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அளவுகடந்து புகழ்ந்து அல்லாஹ்வின் மகன் என்று சொல்லி இன்று பிறந்ததினம் கொண்டாடுவதற்கு ஒப்பாக நபிகளாரை ஷிர்க்கான வாசகங்களைக் கொண்டு அளவுகடந்து புகழ்ந்து கவிதைபாடி பிறந்த தினக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் சகோதரர்கள் நேர்வழியின்பால் மீள முயற்சிக்க வேண்டும்.

நபிகளாரை உண்மையிலே நேசித்த ஸஹாபாக்கள் நபிகளாரைப் புகழ அதற்கென மஜ்லிஸ்களை ஏற்படுத்தவுமில்லை. பிறந்த தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடவுமில்லை. இத்தகைய பித்அத்துக்கள் அனைத்தும் ஹிஜ்ரி 600க்குப்பின் பாதிமிய்யாக்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட பித்அத்துக்களாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

http://www.islamkalvi.com/?p=125367


--

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts