லேபிள்கள்

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மறதிக்கான சுஜூது எப்படிசெய்யவேண்டும்?

அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே அவனது சாந்தியும், அருளும் தூதுச்செய்தியை தெளிவாக எடுத்துரைத்த நமது தூதர் முஹம்மத் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்மீதும் அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக.

மறதிக்கான சுஜூது பற்றிய விளக்கத்தை பெரும்பாலான மக்கள் சரியாகப்புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் மறதிக்கான சுஜூதை கடமையான  இடத்தில்  நிறைவேற்றாமல் விட்டு விடுகின்றார்கள். வேறு சிலர், செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இடம் மாற்றி செய்கின்றார்கள். சிலர் ஸலாம் கூறியதற்குப் பிறகு செய்யவேண்டிய சுஜூதை ஸலாம் கூறுவதற்கு முன் நிறைவேற்றுகின்றார்கள். இன்னும் சிலர் ஸலாம் கூறுவதற்கு முன் செய்யவேண்டிய சுஜூதை ஸலாம் கூறியதற்குப் பிறகு நிறைவேற்றுகின்றார்கள்.   எனவே மறதிக்கான சுஜூது பற்றிய சட்டத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக இமாம்களுக்கு இது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவர்கள் தான் மக்களுக்கு தொழுகை நடத்துவதற்குத் தலைமை ஏற்கின்றார்கள். ஷரியாவின் நடைமுறைப்படி தொழுவிப்பதற்கு இமாம்கள் தான் பொருப்பாளர்கள் ஆவார்கள்.

மறதிக்கான சுஜூது என்பது தொழுகையாளி தனது தொழுகையில் ஏற்பட்ட தவறை நிவர்த்தி செய்வதற்காகச் செய்யும் இரண்டு ஸஜ்தா ஆகும் அதற்குரிய காரணங்கள் மூன்று. அவை;

  • அதிகப்படுத்துதல்
  • குறைத்தல்
  • சந்தேகம் கொள்வது

முதல் காரணம்: அதிகப்படுத்துதல்

தொழுகையில் நிற்பது, அமர்வது, ருகூஉ அல்லது சுஜூது இவற்றில் எதையேனும் தொழுகையாளி வேண்டுமென்றே அதிகப்படுத்தினால், அவரது தொழுகை பாழாகிவிடும்.

ஆனால் மறதியாக அவ்வாறு செய்தால், அவரது தொழுகை நிறைவேறும் பொருட்டு மறதிக்கான சுஜூதைத் தவிற வேறு எதையும் அவர் செய்யவேண்டியது இல்லை .

மேற்கூறியவற்றை அதிகப்படுத்துவதுப்பற்றி ஒருவருக்கு அப்படிச் செய்யும் போதே நினைவு வந்து விட்டால் அதை விட்டு விடுவது அவர் மீது கடமையாகும்.  இன்னும் அவர் மறதிக்கான சுஜூதையும் செய்யவேண்டும். அதன் மூலம் அவரது தொழுகை சரியாக நிறைவேறிவிடும்.

உதாரணமாக  ஒருவர் லுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்தாக தொழுகின்றார் ஒரு ரக்அத் அதிகமாகிவிட்டது என்பது அத்தஹியாத்தில் இருக்கும்போதுதான் அவருக்கு நினைவு வருகிறது என்றால் அத்தஹியாத்தை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தாவை செய்யவேண்டும்.

ஸலாம் கூறிய பிறகு தான் அவருக்கு ஒரு ரக்அத் அதிகமாகத் தொழுதது நினைவுக்கு வருகிறது என்றால் மறதிக்கான இரண்டு ஸஜ்தாவை செய்து ஸலாம் கொடுக்கவேண்டும்.

நபி அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 1226

மேலும் ஒரு அறிவிப்பில்

(நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 401

தொழுகை முழுமை அடைவதற்கு முன் ஸலாம் கொடுத்தல்

தொழுகை முழுமை அடைவதற்கு முன் ஸலாம் கொடுப்பது தொழுகையில் அதிகப்படுத்துதலாகும் வேண்டுமென்றே ஒருவர் அப்படி செய்தால் அவரது தொழுகை வீணாகிவிடும்.

மறந்து அவ்வாறு செய்து, பின் நீண்ட நேரத்திற்கு பிறகு அது பற்றிய நினைவு திரும்பினால், அத்தொழுகையை அவர் மீண்டும் புதிதாக தொழவேண்டும்.  சிறிது நேரத்திலேயே இரண்டு மூன்று நிமிடத்திலேயே நினைவுக்கு வந்துவிட்டால் அவர் தொழுகையை தொடர்ந்து நிறைவு செய்யவேண்டும், மறதிக்கான இரண்டு ஸஜ்தாவை செய்து பிறகு ஸலாம் கொடுக்கவேண்டும்.

நபி அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக் காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் 'தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது' என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு رضي الله عنه உமர் رضي الله عنه ஆகியோர் அக்கூட்டத்திலிருந்தனர். (இது பற்றி) நபி அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு கைகளும் நீளமான ஒருவர் இருந்தார். துல்யதைன் (இரண்டு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவுமில்லை" என்று நபி கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரிதானா?' என்று கேட்க 'ஆம்' என்றனர் மக்கள். (தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். அபூ ஹுரைரா رضي الله عنه லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்துவிட்டதாகவும் இப்னுஸீரீன் குறிப்பிடுகிறார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 482

இரண்டாவது காரணம் குறைத்தல்

அடிப்படைக் கடமைகளில் (ருக்ன்) ஒன்றைக் குறைப்பது:

தொழுகையில் அடிப்படைக் கடமையைக் குறைத்தல். அதாவது தக்பீர் கட்டுவதைக் குறைத்தால் அவரது தொழுகை நிறைவேறாது அவர் அதை மறதியாக விட்டாலும் சரி வேண்டுமென்றே விட்டாலும் சரி ஏனெனில் அவர் தொழுகையை தொடங்கவே இல்லை .

குறைவு தக்பீர் தஹ்ரிமா அல்லாத வேறு ஒன்றாக இருந்தால் அதனை வேண்டுமென்றே விட்டிருந்தால் அவரது தொழுகை வீணாகிவிடும். மறதியாக விட்டிருந்தால் இரண்டாவது ரக் அத்தில் மறந்து விட்ட இடத்திற்கு வந்ததும் முந்திய ரக்அத்து வீணாகிவிடும். இரண்டாவதாக தொழுத ரக்அத்து வீணான ரக்அத்தின் இடத்தில் அமைந்து விடும். இரண்டாவது ரக்அத்தின் அந்த இடத்திற்கு இன்னும் வரவில்லையெனில் விடுபட்ட ருகுனின் பக்கம் திரும்புவது அவர் மீது கடமையாகும். பின்னர் விடுபட்ட ருகுனையும் அதனை தொடர்ந்து உள்ள ருகுனையும் வரிசையாக நிறைவேற்ற வேண்டும்  ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும்.

உதாரணமாக ஒருவர் முதல் ரக்அத்தில் இரண்டாவது ஸஜ்தாவை மறந்து விட்டார். பிறகு இரண்டாவது ரக்அத்தில் ஒரு ஸஜ்தா செய்து அமர்ந்திருக்கும் போது முந்தைய ரக்அத்தில் விடுபட்ட ஒரு சஜ்தா பற்றிய ஞாபகம் அவருக்கு வந்தது என்றால், இரண்டாவது சஜ்தாவை நிறைவேற்றிவிட்டு, ஒரு ரக்அத் முடிவுற்றதாக அவர் கணக்கிட வேண்டும்.  அதாவது முதல் ரக்அத் வீணாகிவிடும். அதன் இடத்தை இரண்டாவது ரக்அத் எடுத்துகொள்ளும் . ஒரு ரக்அத் தொழுததாக நினைத்து அவர் மீதமுள்ள ரக்அத்துகளைத் தொடர்ந்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும். ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்ய வேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

மேலும் ஒர் உதாரணம்

ஒருவர் இரண்டாவது ஸஜ்தாவையும் அதற்கு முன் அமர்வதையும் மறந்து விட்டார்.

(அதாவது ஒரு ஸஜ்தா செய்ததோடு எழுந்து விட்டார் )பிறகு இரண்டாவது ரக்அத்தில் ருகுவில் இருந்து நிமிர்ந்த பிறகு தான் அது பற்றிய நினைவு வந்தது என்றால், அவர் திரும்ப உட்கார்ந்து விடுபட்ட ஸஜ்தாவை செய்ய வேண்டும். பிறகு தனது தொழுகையை நிறைவு செய்ய வேண்டும். ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

வாஜிபான கடமையைக் குறைப்பது ;

தொழுகையில் வாஜிபான கடமையை ஒருவர் வேண்டுமென்றே விட்டு விட்டால் அவரது தொழுகை வீணாகிவிடும்

மறதியாக விட்டு தொழுகையின் அந்த இடத்தை விட்டு பிரியும் முன் அது நினைவுக்கு வந்தால் அதனை அவர்செய்யவேண்டும். வேறு எதனையும் செய்ய வேண்டியதில்லை .

அடுத்து வரக்கூடிய ருகுனை செய்வதற்கு முன்னதாக அது பற்றி நினைவு வந்தால் விடுபட்டதன் பக்கம் திரும்பி அதனை நிறைவேற்றவேண்டும். பின்னர் தனது தொழுகையை பூர்த்தி செய்து ஸலாம் கொடுத்து பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

அடுத்து வரக்கூடிய ருகுனை செய்யதொடங்கிய பிறகு நினைவு வந்தால், விடுபட்டது விடுபட்டதாகவே இருக்கும். அதனை திரும்பி செய்யாமல் தொழுகையில் தொடர வேண்டும். ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸஜ்தாவை செய்யவேண்டும்.

உதாரணமாக : ஒருவர் இரண்டாவது ரக் அத்தில் முதல்  தஷஹுதில் (அத்தஹிய்யாத்தில்) அமராமல் மறதியாக எழ முயற்சிக்கிறார் எழுவதற்கு முன்னரே நினைவு வந்து விட்டால் உடனே அமர்ந்து தஷஹுத் ஓதி தொழுகையை முடித்து கொண்டால் போதுமானது.

எழ முயற்சிக்கிறார். பாதி எழுந்ததும் நினைவு வந்து விடுகிறது என்றால் அவர் திரும்பி கீழே அமர்ந்து தஷஹுத் ஓதி தொழுகையை முழுமைப் படுத்த வேண்டும். பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்து பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

முழுமையாக எழுந்ததற்கு பிறகு தான் ஞாபகம் வந்தது என்றால்  தஷஹுதில் அமராமல் தொடர்ந்து தொழுகையை நிறைவேற்றி, ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸஜ்தாவை செய்யவேண்டும் இதற்கான ஆதாரம் அப்துல்லாஹ் பின் புஹைனவின் அறிவிப்பாகும்.

நபி அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமலே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகின்றார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது, உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 829

மூன்றாவது காரணம் சந்தேகம் கொள்வது:

இரண்டில் எது நடந்தது என்று தடுமாற்றம் அடைவது தான் சந்தேகம் கொள்வது என்பதாகும்.

மூன்று நிலைகளில் இபாதத்தில் ஏற்படும் சந்தேகத்தை கவனத்தில் கொள்ள வேண்டாம்.

1) எதார்த்தமில்லாத ஊசலாட்டங்கள்

2) ஒருவர் வழமையாக அதிகம் சந்தேகம் கொள்பவராக இருந்தால்

3) தொழுகையை முடித்த பிறகு சந்தேகம் வருவது.

இது போன்ற நிலைகளில் உறுதியாக உள்ளதை எடுத்துக் கொள்ளவேண்டும் சந்தேகமானவற்றை பற்றி பொருட்படுத்தத் தேவையில்லை.

உதாரணமாக ஒருவர் லுஹர் தொழுதபின் மூன்று ரக்அத் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்று சந்தேகம் கொள்கிறார் என்றால் மூன்று ரக்அத் முடிந்துவிட்டது என்று உறுதியான விஷயத்தை பிடித்துக் கொண்டு, சந்தேகமான நான்கு என்ற எண்ணிக்கையைப் பொருட்படுத்தத் தேவையில்லை.  தொழுது முடித்தவுடன் சந்தேகம் ஏற்பட்டு  மூன்று ரக்அத் தான் தொழுதோம் என்பது உறுதியானால்  மீதமுள்ள ரக்அத்தை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

நீண்ட நேரம் கழித்து தான் தவறவிட்ட ரக்அத்தை குறித்து ஞாபகம் வருகிறது என்றால் அவர் தொழுகையை புதிதாக தொழவேண்டும்.

மேற்கூறப்பட்ட மூன்று இடங்கள் அல்லாமல் வேறு இடங்களில் ஏற்படும் சந்தேகம் கவனிக்கப் படவேண்டியதாகும்.

சந்தேகம் இரண்டு நிலைகளில்  இருக்கும்.

முதல் நிலை: தொழுகையாளியிடம் இதுவா அல்லது அதுவா என்று இரண்டில் எதை செய்தோம் என சந்தேகம் ஏற்பட்டு அதில் ஒன்று மிகைத்து நிற்கும். அப்போது மிகைத்து நிற்பதைகொண்டு அவர் செயல்படுவார் அதன் அடிப்படையில் தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக : ஒருவர் லுஹர் தொழுகின்றார். தொழுகையில் இரண்டாவது ரக்அத்தா மூன்றாவது ரக்அத்தா என்று சந்தேகம் ஏற்படுகிறது. ஆனாலும் மூன்று என்பதே மிகைத்து நிற்கிறது. அப்போது அவர் மூன்றாகவே கணக்கிட்டு மீதமுள்ள ஒரு ரக்அத்தை தொழுது, ஸலாம் கொடுத்து பிறகு மறதிக்கான ஸஜ்தா செய்யவேண்டும்.

இதற்கான ஆதாரம்:

உங்களில் ஒருவர் தங்களின் தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்' என்று கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رضي الله عنه அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 401

இரண்டாவது நிலை:

இரண்டில் எதுவும் அவரிடத்தில் மிகைத்து நிற்கவில்லையெனில் குறைந்த எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு செயல்படுவார். அதன்படி தனது தொழுகையை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸஜ்தாசெய்து பிறகு ஸலாம் கொடுக்கவேண்டும்.

உதாரணமாக : ஒருவர் அஸர் தொழுகின்றார். அப்போது இரண்டாவது ரக்அத்தா? மூன்றாவது ரக்அத்தா? என சந்தேகம் கொள்கிறார். இரண்டாவதா? அல்லது மூன்றாவதா? எனபதை உறுதி செய்யமுடியவில்லை எனும்போது அதனை இரண்டாவதாக கருதி முதல் தஷ்ஹுதை ஓதி அதன் பிறகு இரண்டு ரக்அத்து தொழுது மறதிக்கான ஸஜ்தா செய்த பின் ஸலாம் கொடுக்கவேண்டும்.

இதற்குரிய ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு ஸஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும். ஸஹீஹ் முஸ்லிம் :990

தொழும்போது ஒருவருக்கு சந்தேகம் வந்தால், மேற்சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் சந்தேகத்தில் உறுதியான எண்ணத்தின் அடிப்படையிலோ அல்லது மிகையான எண்ணத்தின் அடிப்படையிலோ தொழ வேண்டும். தான்  அதிகப்படுத்தவுமில்லை

குறைக்கவுமில்லை என்பது உறுதியானால் அவர் மறதிக்கான சுஜூது செய்யவேண்டியதில்லை. காரணம் சந்தேகமில்லை என்பது தான்.

மூலம்  மஜ்மூஃ ஃபதாவா வ ரசாயில் ஷைகு உஸைமின்     14/94-101 

தமிழாக்கம்: அஷ்ஷேக் பஷீர் ஃபிர்தெளஸி

http://www.islamkalvi.com/?p=124760


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்னீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும் , இதைச் செய்பவர்கள் எ...

Popular Posts