முமின் களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம்" (49:12) என்பது திருக்குர்ஆன் வசனமாகும்.
இறைவன் இங்கே மூன்று விதமான அம்சங்களை பட்டியல் போடுகிறான். 1) ஊகம், 2) துருவித்துருவி ஆராய்வது, 3) புறம்.
இம்மூன்று அம்சங்களிலும் நன்மையைவிட பாவமே மிகைத்து நிற்கும். இம்மூன்றுமே ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையவையாகும்.
ஊகம் என்பது உறுதிப்படுத்தாத வதந்தியாகும். வதந்தியை துருவித்துருவி ஆராயும்போது பிறர் மீது புறம் பேசக்கூடிய நிலைக்கு தள்ளிவிடும். வதந்தியால் பரவக்கூடிய செய்தியால் நன்மையை விட தீங்குகளே அதிகம்.
எனவே, வதந்தியை பாவங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டு அதிலிருந்து முஸ்லிம்கள் முற்றாக விலகி நிற்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவு பிறப்பிக்கிறது.
சமீப காலமாக இ.மெயில், வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ஊடகங்களில் அதிகமாக வதந்திகள் பரப்பப்படுகிறது. இதில் குறிப்பாக மரண செய்திகள், இஸ்லாமியப் பெண்கள் அன்னிய மதத்தவர்களோடு தொடர்ப்பு உள்ளதைப் போன்ற செய்திகள் அதிகமாக உலா வருகின்றன.
இந்த வதந்தியைப் பருப்புவோர், அச்செய்தியைப் போட்டுவிட்டு இதை அதிகமாக ஷேர் செய்யவும் என்ற ஒரு வாசகத்தையும் சேர்த்து போட்டுவிடுவார். நம்மவர்களுக்கு அவ்வளவுதான், நன்மையைதானே செய்கிறோம் என்ற பெயரில், அந்த தவகல் உண்மையானதா? அல்லது முஸ்லிம்களை விமர்சிக்கவேண்டும் என்பதற்காக பாசிஸ சக்திகளால் உருவாக்கப்பட்டதா? என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திப்பதர்க்கு அவகாசம் எடுத்துக்கொள்வதே இல்லை. எந்த விஷயத்தை சொன்னாலும் குர்ஆனில் இருக்கிறாதா? ஹதீஸில் இருக்கிறதா? என்று ஆதாரம் கேட்பவர்கள் இந்த வதந்திகளை மட்டும் செய்தி உண்மையா? என எவ்வித ஆதாரமும் தேடாமல் ஷேர் செய்வது வியப்பாகத்தான் இருக்கிறது?
"முமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்" (திருக்குர்ஆன் 49:6).
மேற்கூறப்பட்ட இறைவசனம் இறங்கியதன் பின்னணியை அறிந்துகொள்வோம்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள்.
இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது.
ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.
இதை கண்ட ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவிட்டார்கள்.
மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின்வரும் சில வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்.
இந்த வதந்திகளை நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஹசரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.
அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், ஹசரத் காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள். அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்றபோது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.
இந்த செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது.
உடனே நபி (ஸல்) அவர்கள் "நிதானம் இறைவனின் செயல். அவசரம் ஷைத்தானின் செயல்" என்று கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் அவசரப்படாமல் நிதானமாக சமயோசிதமாக நடந்து கொண்டதினால் ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. அந்த நபித் தோழரின் வதந்தியை நம்பி, நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டால் அநியாயமாக ஒரு சமூகத்தாருக்கு அநீதி இழைத்தவர்களாக ஆகியிருப்பார்கள்.
கண்டதை எல்லாம் பேசுவது வதந்தியின் ஆரம்ப நிலையாக அமைந்து விடுகிறது. நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு. வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவர் மீதே சாரும்.
"எதைப் பற்றி உமக்கு (த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்" (திருக்குர்ஆன் 17:36)
"தான் கேட்பதையெல்லாம் ஒருவன் பரப்புரை செய்வது அவன் பொய்யன் என்பதற்கு இதுவே போதுமானது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹசரத் ஹப்இபின் ஆஸிம் (ரலி) அவர்கள், (நூல்:முஸ்லிம்).
"தான் கேட்பதையெல்லாம் பரப்புரை செய்பவன் பரிபூரண முஸ்லிமாக முடியாது; மேலும் அவன் ஒரு போதும் தலைமைத்துவத்திற்கு தகுதியும் பெற முடியாது" (பைஹகீ)
ஹசரத் உமர் (ரலி) அவர்கள் கூறும்போது "உங்களையும், குழப்பத்தையும் நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில், வாளால் ஏற்படும் அதே பாதிப்பு நாவினாலும் ஏற்படும்" என்றார்கள்.
வதந்தியால் பலரின் வாழ்க்கை பாழாகி போயிருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் தகவல் பரப்பும் சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது. பகிரவும் செய்யப்படுகிறது. இதனால் கலவரம் கூட ஏற்படுகிறது. வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும்.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, நெல்லை டவுன்.
நன்றி: மாலைமலர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக