அல்லாஹ்வின் திருப்பெயரால்...
மனிதர்களுக்கு பணம் என்பது தேவையான ஒன்று தான்! அதற்காகத் தன்னையே அழிக்கும் துறையில் இறங்கி விடக்கூடாது .பணம் இல்லாதவன் பிணத்துக்குச் சமம் . பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே! என்ற பழமொழியை பெரியோர்கள் சொல்வார்கள். எண்ணெய்யை பூசிக்கொண்டு தரையில் எவ்வளவுதான் உருண்டாலும் ஓட்டுகிற மண் தான் உடலில் ஓட்டும் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்!
மனைவி, மக்கள், ஐசுவரியம் அனைத்தும் உலகின் அலங்காரப் பொருள்களாகும். நீ செய்த நல்ல அமல் தான் சிறந்தது! இறைவனிடத்தில் நற்பலன் பெற்றுத்தர வல்லது மாகும். நாம் காணும் உலகமும்,வாழும் வாழ்க்கையும் மாயமானவை; மறையக்கூடியவை, எதை பெரிதாக நினைக்கிறமோ, எதை உயர்வாக மதிக்கிறோமோ, நிரந்தரமாகப் பயன்படும் என்று எதை நம்பி வாழ்கிறோமோ அவையனைத்தும் 'கானல் நீர்' போன்றவை என்பதை மனதில் கொண்டு சிந்தனை செய்து, நிதானமாக வாழவேண்டும்!
தடுக்கி விழுந்தாலும் பள்ளிவாசல் பக்கம் விழுவதில்லை என்ற வறட்டு வாதம் பேசித்திரிபவர்கள், வயோதிகம் தந்த படிப்பினையை உணர்ந்து இறைவனை நினைக்காதவர்கள் , தொழுகையை மறந்தவர்கள், மற்ற கடமைகளை விட்டவர்களை பார்க்கும்போது, அவர்களை மனிதனாக நினைத்துப் பார்க்கக்கூட நமக்கு மனம் வருவதில்லை.
உங்கள் துஆவில் எப்பொழுதும் இதை கேட்க நீங்களும் சரி, நாங்களும் சரி மறக்கவேண்டாம்! ''இரட்சகனே! உன்னைப்பற்றிய ஏகத்துவத்தை என் இதயத்துக்கு உணவாகத் தா! என்னுடைய செயலில் முகஸ்தூதி இல்லாத தூய்மையான செயலைத் தா! என் முடிவை நல்ல முடிவாக ஆக்கித் தா!
உலகமும்- அதில் உள்ளவை அனைத்தும் உங்களுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது; நீங்கள் மறுமைக்காக படைக்கப்பட்டிருக்கிறீர்கள் ' இது ஒரு ஹதீஸின் கருத்து.
''ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதி ஆவான்.'' (அல்குரான்; 6:142)
''மனிதனின் இரத்தம் ஓடும் இடமெல்லாம் ஷைத்தான் ஓடுகிறான் இது ஒரு ஹதீஸின் கருத்து.
மறுமையைப் பயப்படக் கூடியவர்கள் , இறைவனின் விசாரணைக்கு அஞ்சக்கூடியவர்கள், பட்டோலை எந்தக்கரத்தில் கொடுக்கப்படுமோ எனத் தவிப்பவர்கள், இறை சன்னிதானத்தில் குற்றவாளியாக நிறுத்தப்படும் காட்சியை காணப் பொறுக்க முடியாதவர்கள், மறுமை வருவதற்கு முன்பாக மரணம் வருவதற்கு முன்பாக பாவத்திலிருந்து விலகி, பாவ மன்னிப்பு கோரி இறைவனிடம் அழுது வேண்டி பரிசுத்தவனாக மாறிவிட வேண்டும்!
நாளை மறுமையில், மனைவி, மக்கள், அண்ணன் , தம்பி, அக்கா , தங்கை , சுற்றத்தார்கள், தேடிய பொருள் எதுவும் நம்மை ஈடேற்றமடைய செய்யா. நாம் செய்த நல்ல அமல்கள், தூய்மையான எண்ணம் நம்மை ஈடேற்றமடையச் செய்யும்!
இந்த வாழ்க்கை ஒரு சொற்ப வாழ்க்கை! மறுமை வாழ்க்கை ஒரு அழகான சிறப்பான நிம்மதியான நிரந்தமான வாழ்க்கை !
உங்கள் சிந்தனைக்கு இந்த சிறிய கட்டுரை!
சத்திய பாதை இஸ்லாம்.
http://islam-bdmhaja.blogspot.com/2020/03/blog-post_28.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக