லேபிள்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

இணைவைப்பவர்கள்அன்றும், இன்றும்.


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், "ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே" என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால்,

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை; இறைநேச செல்வர்களின் கப்ருகளுக்கு சென்று அவர்களிடம் தானே பிரார்த்திக்கின்றோம் (துஆச் செய்கின்றோம்)! அந்த இறை நேச செல்வர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்து கண்ணியப்படுத்துகிறோம்! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம்! ஆனால் நாங்கள் அவர்களை வணங்கவில்லை" என்று கூறுகின்றனர்.


இங்கு நாம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்துக் கொள்ள வேண்டும். வணக்கம் என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்டால், உடனே அவர்கள் "தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகியவை வணக்கமாகும்" என்று பதில் கூறுவார்கள். வணக்கம் என்பது மேற் கூறியவைகள் மட்டுமன்று. பிரார்த்தனை, வேண்டுதல், நேர்ச்சை செய்தல் , அறுத்துப் பலியிடுதல், உதவி கோருதல், பாதுகாவல் தேடுதல் இவைகள் அனைத்துமே வணக்கமாகும். இவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும். (மேலதிக விபரங்களுக்கு…)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

"
பிராத்தனையும் (துஆவும்) வணக்கமாகும்" (அபூதாவூத்)

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கை எவ்வாறிருந்தது எனில், இவ்வுலகத்தையும் அதில் உள்ளவர்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் என்றே அறிந்து வைத்திருந்தனர். இதை இறைவனுடைய திருமறையும் பின்வருமாறு கூறுகிறது.

'
உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் 'அல்லாஹ்' என பதிலளிப்பார்கள் 'அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?' என்று நீர் கேட்பீராக. (அல்-குர்ஆன் 10:31)

மேலும் பார்க்கவும் அல்-குர்ஆனின் வசனங்கள் 43:87 மற்றும் 29:63.

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொணடிருந்தார்களே! பிறகு எதற்காக இறைவன் அவர்களை "முஷ்ரிக்குகள்"  என்று அழைக்க வேண்டும்? காரணம் என்னவெனில் அவர்கள் முன் சென்ற நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் உருவங்களை சிலைகளாக வடித்து அந்த சிலைகளிடம் தங்களின் தேவைகளை முறையிட்டு வந்தனர். அந்த சிலைகளிடமே உதவி தேடினர். ஆபத்து காலங்களில் பாதுகாவலும் தேடி வந்தனர்.

"
படைத்தவனிருக்க அவனை விட்டு விட்டு, ஏன் இந்த சிலைகளிடம் பிரார்த்திக்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதில், "எங்களுடைய தேவைகள் நிறைவேறுவதற்காக மற்றும் அவைகள் எங்களை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கிவைக்கும் என்பதற்காகத்தான் நாங்கள் அந்த சிலைகளை வணங்குகிறோம்" என்று கூறினர். இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான்.

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், 'அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை' (என்கின்றனர்). (அல்-குர்ஆன் 39:3)

 ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளின் செயல்களோடு தற்போது கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களின் செயல்களை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், இவைகளிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இந்த 'அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து ஆட்சி செலுத்தி வருபவன் அல்லாஹ் ஒருவனே' என்று நம்பியிருந்தார்கள்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் நபிமார்கள், இறந்த நல்லடியார்கள் ஆகியோர்களிடம் தங்களின் தேவைகளை கேட்டும், ஆபத்து காலங்களில் பாதுகாவல் தேடியும்  வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்களிடமும், இறைநேசர்களிடமும் ஷெய்கு மார்களிடமும் தங்களின் கோரிக்கைகளையும் பிரார்தனைகளையும் செய்கின்றனர். ஆபத்து காலங்களில் அவர்களிடம் பாதுகாவலும் தேடுகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இறந்து போன அந்த நல்லடியார்களின் உருவங்களைச் சிலைகளாக வடித்து, அவற்றை பூஜித்து வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர் இறந்தவுடன் அவர்களுடைய கல்லறைகளில் கட்டடங்கள் (தர்ஹா) எழுப்பி அவர்களுடைய கப்றுகளை உயரமாக எழுப்பி, அவற்றிற்கு சந்தனம் பூசி, போர்வைகள் போர்த்தி, பூமாலைகள் அணிவித்து பூஜை புணஸ்காரங்கள் செய்கின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் அந்த சிலைவடிவத்தில் உள்ள நல்லடியார்களுக்காக நேர்ச்சை செய்து அவர்களுக்காக காணிக்கை செய்து அறுத்துப் பலியிட்டனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் கப்ருகளில் அடக்கமாகியிருக்கும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர்களுக்காக நேர்ச்சைகள் செய்தும் அறுத்துப் பலியிட்டும் வருகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள், நல்லடியார்களின் உருவத்தில் உள்ள சிலைகளை தவாபு செய்து அவர்களிடம் மன்றாட்டம் செய்து வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் நல்லடியார்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மன்றாடுகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகளிடம் படைத்த இறைவனை விட்டு விட்டு நீங்கள் ஏன் இந்த சிலைகளை இப்படி வழிபடுகறீர்கள் என்று கேட்டால், "நாங்கள் இந்த சிலைவடிவத்தில் இருக்கின்ற நல்லடியார்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்" என்று கூறினர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளிடம், அதே போல் கேட்டால் "நாங்கள் இந்த கப்றுகளில் அடக்கமாகியிருக்கும் இறை நேசர்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்" என்று கூறுகிறார்கள்.

என தருமை சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தனை செய்து பாருங்கள்! ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளுக்கும் இன்றைய காலக் கட்டத்தில் வாழும் கப்று வணக்க முறைகளை ஆதரிப்போருக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் செய்தவற்றையே தான் இவர்களும் செய்கின்றார்கள். அவர்கள் கூறிய காரணத்தையே இவர்களும் கூறுகின்றார்கள்.

சிலருக்கு கோபம் வரலாம். நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே! எங்களை ஏன் கப்று வணங்கி என்று திட்டுகிறீர்கள் என்று?

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நல்லடியார்களின் வடிவத்தில் இருந்த உருவச்சிலைகளை வலம் வந்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்தி அதன் மூலம் அந்த நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் அவர்களை சிலை வணங்கிகள் என்கிறோம்.

மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள் உருவத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்ற அந்த சிலைகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அந்த தெய்வங்களை வணங்குவதால் அவர்களையும் சிலை வணங்கிகள் என்கிறோம்.

ஆனால் இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கப்ருகளை வலம் வந்து, அதற்கு பூசி, மெலுகி, போர்வை போர்த்தி, நெய் விளக்கு ஏற்றி, சந்தனம் பூசி, பத்தி கொழுத்தி, பூமாலை அணிவித்து அந்த சிலைகளை வணங்குவோர் என்னென்ன காரியங்களை அந்த சிலைகளுக்கு செய்கிறார்களோ அவையனைத்தையும் அந்த நல்லடியாரின் கப்றுகளுக்கு செய்பவரை கப்று வணங்கி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதை விட்டு விட்டு அந்த நல்லடியார்களின் சிலைகளிடம் இவர்கள் கேட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் "முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)" என்றான். அதே செயல்களையே செய்யும் தற்காலத்தவர்களை என்ன சொல்வது? சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருந்தாலும் தான் நாடினால் மன்னித்து விடுவேன் என்று கூறுகிறான். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறுகிறான். இறைவனால் மன்னிப்பே கிடைக்காத அத்தகைய படுபயங்கரமான பாவம் என்னவெனில் "இறைவனுக்கு இணை வைத்தலாகும்". அதாவது எந்த தேவைகளையும் இறைவனிடம் நேரடியாக கேட்டுப் பெறாமல் இடைத்தரகர் (அவுலியா, இறை நேசர் போன்றவர்கள்) மூலம் கேட்டு பெறுவது இத்தகைய இணைவைப்பாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

'
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (அல்குர்ஆன் 4:116)

அல்லாஹ் நம் முஸ்லிமான நம் அனைவரையும் காப்பாற்றி நமக்கு அவனுடைய நேர்வழியை காட்டுவானாகவும்.
நன்றி :சுவனத்தென்றல்
இணைவைப்பவர்கள் அன்றும், இன்றும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts