லேபிள்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஆணினம்உலகில் அழிந்து கொண்டு வருகிறதா?

      எஸ்.ஹலரத் அலி,- திருச்சி     
இனி வருங்காலத்தில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் முன்னறிவித்ததை நவீன அறிவியல் இன்று உறுதிப்படுத்துகிறது.]
அல்லாஹ் படைத்த பெரும்படைப்புகளில் மனிதப்படைப்பு ஒன்றாகும்.எல்லா படைப்புகளையும் படைத்து இறுதியில் களிமண் சத்திலிருந்து ஆதி தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்தான்.
அவர்களிலிருந்து ஹவ்வா அலைஹிஸ்ஸலாம். இப்படி ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து மனித வர்க்கம் பல்கிப்பெருகியது.
பிறக்கும் குழந்தைகள் சிலநேரம் ஆணாகவும், சிலநேரம் பெண்ணாகவும் பிறப்பதற்கு என்ன காரணம்?
அன்று மதீனாவில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்னும் யூத மதகுரு, ஆண,பெண் குழந்தை பிறப்பு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில கேள்வி கேட்டார்.
o    "நான் தங்களிடம் ஒன்றைப் பற்றி வினவ வந்தேன். அதை ஒரு நபியைத் தவிர அல்லது ஓரிரு மனிதரைத் தவிர மற்ற எவரும் அறியமாட்டார்கள்" என்று கூறினார். ""நான் உமக்குப் பதில் அளிப்பதால் உமக்கு பலன் உண்டா?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   வினவினர். "ஆம், என் காதைக் கொண்டு கேட்பேன்" என்றார் அவர், "கேளும்" என்றார்கள்.
குழந்தை ஆணாகவும், பெண்ணாகவும் கர்ப்பப்பையில், எவ்விதம் உருவெடுக்கிறது என்பதைப் பற்றி அறிய விரும்புகிறேன் என்றார் அவர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;
 "ஆணின் இந்திரியம் வெண்மையாகவும் பெண்ணின் மதன நீர் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.
அவ்விரண்டும் ஒன்ற கூடும்பொழுது ஆண் இந்திரியம் பெண்ணின் மதன நீரை விட மிகைத்து விடுமானால் இறைவனின் அனுமதி கொண்டு அது ஆண் பிள்ளையாகவும்,
பெண்ணின் மதன நீர் ஆணின் இந்திரியத்தை விட மிகைத்து விடுமானால் இறைவனின் அனுமதி கொண்டு அது பெண் பிள்ளையாகவும் உருவாகிறது" என்று கூறினார்கள்.
தாங்கள் உண்மையைக் கூறினீர்கள். அன்றியும் தாங்கள் நிச்சயமாக, நபியேயாவீர்! என்று அவர் கூறிச்சென்று விட்டார். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றைப் பற்றி அவர் தம்மிடம் கேட்கும் பொழுது அவற்றில் ஒன்றும் தமக்குத் தெரியாதென்றும், ஆனால் அல்லாஹ் தான் தமக்கு அவற்றை அறிவித்தான் என்றும் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸப்வான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
o      உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து "அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படுவதில்லை. ஆண்கள் தங்கள் உறக்கத்தில் உணர்வது போல் பெண்ணும் உணர்ந்தால் இதற்காக அவள் குளிக்க வேண்டுமா?" என்று கேட்டார்.
"ஆம்" என்று நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அருகே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் உம்மு ஹுலைமை நோக்கி    ''சீ... பெண்ணுக்கும் இதுபோல் ஏற்படுமா?'' என்று கேட்டார்கள்.
அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவை நோக்கி   " உன் வலக் கையில் மண்படியட்டுமாக; (பெண்ணுக்கும் நீர் வெளிப்படாவிட்டால்) குழந்தை தாயைப்போல் எப்படி அமைகின்றது?" என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா)
o      "அல்லாஹ், உண்மையைச் பேச வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?" என்று ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களிடம் கேட்டபோது "ஆம்! ஈரத்தை(அவள் ஆடையில்) கண்டால் குளிக்க வேண்டும்" என்றனர்.
இதனைக் கேட்ட உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சிரித்துவிட்டு பெண்ணுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா என்ன? என்று கேட்டார்கள். "அவள் பெற்ற பிள்ளை அவளைப் போலவே அமைந்து விடுவது எதனால்?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, முஅத்தா)
o      "ஆனுடைய விந்து கடினமானதும், வெண்மையானதும் , மஞ்சளானதுமாகும், இரண்டில் எது மிகைக்கின்றதோ அதற்கேற்ப குழந்தையின் உருவ ஒற்றுமை ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ)
ஆண் பெண் உருவாகும் விந்தையை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். இதைத்தான் நமது நவீன அறிவியலும் இன்று சொல்கிறது.
பெண்ணின் கருவில் உருவாகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆணாகிய கணவனே, மனைவியல்ல. ஒவ்வொரு உடல் செல்லின் உள் கருவில் (நியூக்கிளியஸ்) கயிறு போன்ற அமைப்பில் குரோமசோம்கள் (Chromosomes) உள்ளன.டி.என்.ஏ என்னும் உட்கரு அமிலம் குரோமசோமில்தான் உள்ளது. தாய்,தந்தையின் குணங்களைக் கொடுக்கும் மரபணு ஜீன்கள் இந்த டி.என்.ஏ வில் உள்ளது.
நம் உடல் செல்லில் ஒன்றில் 23 ஜோடி குரோமசோம்கள் உள்ளன. அதாவது ஒரு செல்லில் மொத்தம் 46 குரோமசோம்கள். பெண்களுக்கு எப்போதும் X (எக்ஸ்) குரோமசோம்கள் மட்டுமே இருக்கும். இவை ஜோடியாக இருப்பதால் XX என்கிறார்கள். ஆண்களுக்கு X குரோமசோமும் Y குரோமசோமும் இருக்கும். ஆகவே ஆண்களின் குரோமசோமை XY என்கிறார்கள்.
இவற்றில் 22 ஜோடி உடல் செல்களை தீர்மானிப்பவை.அந்த 23 வது ஜோடி மட்டுமே ஆண்-பெண் பாலினத்தைத் தீர்மானிக்கிறது. சினைமுட்டையிலும் விந்தணுவிலும் தலா 23 குரோமோசோம்கள்தான் இருக்கும். இவற்றில் 22 குரோமோசோம்கள் உடல் செல்களைத் தீர்மானிப்பவை. அந்த 23-வது குரோமோசோம் மட்டும் பாலினத்தைத் தீர்மானிக்கிறது.
இது பெண்ணின் சினைமுட்டையில் X`எக்ஸ்' குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் விந்துவில் X'எக்ஸ்' குரோமோசோம் உள்ள விந்தணுக்களும் இருக்கும். Y'ஒய்' குரோமோசோம் உள்ள விந்தணுக்களும் இருக்கும். கருவில் ஒரு சினைமுட்டையும் ஒரு விந்தணுவும் இணையும்போது, தலா 23 ஜோடி குரோமோசோம்கள் இணைந்து மொத்தம் 46 குரோமோசோம்கள் ஆகிவிடும்.
இணைந்த அன்று எந்த குரோமோசோம் உடைய விந்தணு இணைந்ததோ அதைப் பொறுத்து அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று முடிவாகிறது. அதாவது ஒரு ஆணின் விந்துவில் உள்ள "X Y" ல் X முந்திவிடுமானால் பெண் குழந்தையும், Y முந்திவிடுமானல் ஆண் குழந்தையும் பிறக்கிறது.ஆணிடம் உள்ள ஒரு X ம் பெண்ணிடம் உள்ள ஒரு X ம் சேர்ந்து "X X" பெண்குழந்தை.அல்லது ஆணிடமுள்ள ஒரு Y ம், பெண்ணிடமுள்ள ஒரு X ம் சேர்ந்து X Y" ஆண் குழந்தையாகிறது.
சாட்சியம் அளிப்பதில் ஒரு ஆணுக்கு இரு பெண்கள் சாட்சியம். (அல் குர்ஆன்-2:282) சமம் என்று இஸ்லாம் சொல்வதன் அறிவியல் காரணமும் இதுதான். ஆணின் ஒரு Y யானது பெண்ணின் இரண்டு "X X" க்கு சமமாக உள்ளது.அதாவது ஆணின் ஒரு Y மட்டும் ஆண் குழந்தையை தீர்மானித்துவிடும். ஆனால் பெண் குழந்தையை உறுதி செய்ய இரண்டு X X கள் தேவை. இஸ்லாம் ஒரு அறிவியல் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஒரு குழந்தை உருவாக ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் அவசியம் என்று பல வசனங்களில் கூறும் திருக்குர்ஆன் ஆண் பெண் என தீர்மானிக்கப்படுவதைப் பற்றிக் கூறும் இவ்வசனத்தில் (75:39) அவ்விருவரிலிருந்து எனக் கூறாமல் அவனிலிருந்து என ஒருமையாகக் கூறுவதன் காரணம் ஆண்-பெண் குழந்தையை உறுதி செய்வது ஆணின் X Y" குரோமசோம்களே!
ஆண்கள் குறைதல் பெண்கள் மிகைத்தல்  :
கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது (அதிகமாக) அருந்தப்படுவதும், விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் என்ற அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து, பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளமாகும். இவை ஏற்படாதவரை மறுமை நாள் வராது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் – புகாரி 6808. முஸ்லிம்.5187)
மக்களுக்கு ஒரு காலம் வரும், அப்போது ஒருவர் தங்கத்தை எடுத்துக் கொண்டு தர்மம் செய்வதற்காக அலைவார்; ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எவரையும் அவர் காணமாட்டார். மேலும் (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்து விடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்து வந்து, அவனை சார்ந்திருக்கும் நிலை காணப்படும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூமூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்: 1838)
இனி வருங்காலத்தில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் முன்னறிவித்ததை நவீன அறிவியல் இன்று உறுதிப்படுத்துகிறது.
எப்படி?
ஆண் குழந்தை பிறப்பதை உறுதி செய்யக்கூடிய ஒய் (Y) குரோமசோம்கள் ஆணின் விந்துவில் குறைந்து கொண்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறதாம்.
தற்காலத்தில் ஆண் குழந்தை பிறப்பின் அளவு குறைவதற்கான அடிப்படை காரணமாக இருப்பது ஆணின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை சராசரி 99 million/lr. ஆக இருந்தது. ஆனால் இன்று 47.1 million/lr. ஆக குறைந்துள்ளது. சுமார் 52% விகிதம் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆணினத்திற்கு ஏன் அழிய வேண்டும்? என்ற கேள்விக்கு முதலில் சமூகக்காரணம் கூறப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஆண்களின் உயிரணு எண்ணிக்கையில் பாதியளவு கூட இன்று இருக்கும் ஆணிடம் இல்லை. மட மடவென்று ஆணின் உயிரணு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. வேலை,டென்ஷன்,உணவு முறை ,வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கை உயிரணுக்களைக்கொண்டு ஒரு பெண்ணை தாய்மையடையச் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
மருத்துவ காரணங்கள் வேறுமாதிரியாக சொல்கின்றன. இயற்கையே ஆணை பலவீனமானவனாகத்தான் படைத்திருக்கிறது. உருவத்திலும் உடல் வலிமையிலும் வேண்டுமானால் ஆண் பெண்ணைவிட சிறந்தவனாகத் தோன்றலாம். ஆனால், உள்ளுக்குள் நோய் எதிர்ப்பு திறனில் பெண் இனம் மிக வலுவுள்ள இனமாக இருக்கிறது.
இயற்கையே அப்படிதான் உருவாக்குகிறது. 100 பெண் சிசுக்களை பெண்கள் வயிற்றில் உருவாக்கும் அதே நேரத்தில் 140 ஆண் சிசுக்கள் அந்த பெண் சிசுக்களுக்கு இணையாக இயற்கை தோற்றுவிக்கிறது. அதாவது கருவாக உருவாகும்போதே ஆண் இனம் பெண் இனத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக உருவாக்கப்படுகிறது.
அப்படியிருந்தும் பிறக்கும் போது கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில்தான் பிறக்கின்றன.
கரு உருவான கணக்குப்படிப் பார்த்தால் 100 பெண் குழந்தைகளுக்கு 140 ஆண் குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆனால், 34 ஆண் குழந்தைகளும் கருவிலே அழிந்துவிடுகின்றன.
அல்லாஹ் உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த விரும்புகின்றான்;ஏனென்றால் மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான். – (அல்குர்ஆன் 4:28)
அதற்கு காரணம் ஆண் பலவீனன் என்பதுதான். இதில் என்னவொரு அதிசயம் என்றால் பெண் குழந்தைகள் இயற்கையான முறையில் கருவில் அழிவதேயில்லை. கருவில் அழிவதெல்லாம் ஆண் குழந்தைகள் மாத்திரமே..!
சரி, பிறந்த பிறகாவது ஆண் குழந்தைகள் தாக்குப் பிடிக்கின்றனவா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் பெண் குழந்தைகள்தான் ஜெயிக்கின்றன. குழந்தைகள் பிறந்த 6 மாதங்கள் முடியும் முன்பே தொற்றுநோய், சுற்றுப்புற தூய்மை கேடால் 1,000 ஆண் குழந்தைகளில் 17 குழந்தைகளும், பெண் குழந்தைகளில் 11 குழந்தைகளும் இறக்கின்றன. இதிலும் ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதமே அதிகம்.
பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்புத்திறனுடன் இருப்பதற்கு 'ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்' என்ற ஒருவகை ஹார்மோன் தான் காரணம். இது கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் இருக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே போகிறது. இது ஒரு போதும் தாயிடமிருந்து ஆண் குழந்தைகளுக்கு செல்வதில்லை. இந்த அதிசயமான போக்கு எதனால் ஏற்படுகிறது என்று மரபியல், செல்லியல், நுண் செயலியல் அறிஞர்கள் இன்னும் ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்.விடை தெரியவில்லை.
இதைத்தான் அல் குர்ஆன் இப்படிக் கூறுகிறது, "..ஆண், பெண்ணைப் போலல்ல.."  (3:36)
ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கக் கூடிய சில தனித்துவமான ஆற்றலை அல்லாஹ் பெண்களுக்கு கொடுத்துள்ளதால் தான் பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். பெண்கள், பொழுது விடிந்து பொழுது சாயும்வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆண்களுக்கு பெரிய வலுவுள்ள தசைகள் இருந்ததால் விரைவாகவே களைப்படைந்து போனார்கள். ஆணின் உடலில் 40% தசை, 15% கொழுப்பு என்றிருப்பது பெண்ணின் உடலில் 23% தசை, 27% கொழுப்பு என்றிருக்கிறது. பெண்களுக்கு தசையின் அளவு குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது. மூச்சு விடுவதற்குக் கூட ஆண்கள் பெண்களைவிட அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறார்கள்.
ஊனமுற்ற 100 குழந்தைகளில் 70 ஆண் குழந்தைகளாகவும், 30 பெண் குழந்தைகளாகவும் இருக்கிறது. இப்படி நோய்களில் இருந்தும் பெண் குழந்தைகளை காப்பாற்றுவது 'ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்' என்ற ஹார்மோனும் 'இம்முனோ குளோபின்' என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதமும்தான். இது பெண்களின் ரத்தத்தில் மட்டும்தான் அதிகமாக உள்ளது.
இதனால்தான், பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்துவிடுகின்றன. சராசரி ஆயுளை எடுத்துக் கொண்டால் ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள்.
1400 ஆண்டுகளுக்குமுன்பு அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னறிவித்த செய்திகளை; இன்று நவீன அறிவியல் உண்மைப்படுத்தி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! சிந்திக்கும் மக்களுக்கு இதிலும் போதிய சான்றுகள் உள்ளன.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts