லேபிள்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

பெண்ணே பெண்ணே! பொறாமைவேண்டாம்! கண்ணே!

பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.
தனது சகோதரிக்கு அழகிய கணவன் கிடைத்திருக்கிறான் என்று பொறாமை கொள்ளும் பெண்கள் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர். கணவனால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருப்பர். இவர்கள் தங்களது மருமகள்களைப் பார்க்கின்றனர். தமது மகன்கள் அவர்களை அடிப்பதில்லை, தமது மருமகள் தாம் அனுபவித்த கஷடங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போது சில மாமிகளுக்குப் பொறாமை ஏற்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா?
'நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா
'அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?' (4:54)
அல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா? அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்?
நீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா?
உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்காதது உங்கள் தோழிக்கோ உறவுக்காரப் பெண்ணுக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
'இவர்களுக்குப் பின் வருவோர், 'எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்' எனக் கூறுவார்கள்.' (59:10)
இவ்வாறு துஆச் செய்து மனதில் குரோத எண்ணம் தலைகாட்டுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.
உங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள். பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும், மகிமையையும் குறைக்கும் வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள். மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடையலாமா? பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா? எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி, புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங்களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
01. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்
'இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!' (113:5)
என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.
02. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்
'எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்' (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.
03. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்
'எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ' (65:3)
என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
04. பொறாமைக்காரர்கள் என்ன செய்வார்களோ என்று வீணே எண்ணி, எண்ணி கவலை கொள்ளாதீர்கள். அவள் சூனியம் செய்வாளோ, வசியம் செய்வாளோ, எதையாவது மந்திரித்துத் தந்து விடுவாளோ, என் மீது உள்ள பொறாமையில் எனது மாப்பிள்ளையை வளைத்தப் பொட்டு விடுவாளோ, எனக்கும் என் கணவருக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என சும்மா போட்டு மனதை அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக செயற்படுங்கள்.
05. உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்
'நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' (2:153)
என்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள். பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts