லேபிள்கள்

சனி, 19 டிசம்பர், 2020

உலகத்தையே ஒன்றுதிரட்டி வழங்கப்பட்டவன்..!

"தன் சுற்றத்தார் குறித்து அச்சமற்றும், உடல் நலமோடு இருந்தும், அன்றைய நாளின் உணவும் ஒருவனிடம் இருந்து விட்டால் அவன் உலகத்தையே ஒன்று திரட்டி வழங்கப்பட்டவனைப் போலாவான்" என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உபைதுல்லாஹ் பின் மிஹஸனுல் அன்ஸாரி (ரலி) நூல்: அல்அதபுல் முஃப்ரத், திர்மிதி)
رواه البخاري في الأدب المفرد والإمام الترمذي في سننه من حديث عبيدالله بن محصن الخطمي: أن النبي صلى الله عليه وسلم قال: من أصبح منكم آمنًا في سربه، معافى في جسده، عنده قوت يومه، فكأنما حيزت له الدنيا
மனிதன் ஒவ்வொரு நாளையும் நிம்மதியாகக் கழிப்பதற்கு அவனுக்கு மூன்று விஷயங்களில் எந்த குறைபாடும் இல்லாதவனாக இருக்கவேண்டும்.


முதலாவது: பாதுகாப்பு (அச்சமற்ற நிலை)
இஸ்லாம், ஈமான் என்ற அல்லாஹுவின் இரண்டு அருளுக்குப் பிறகு மிகப்பெரிய இறைவனின் அருள் "பாதுகாப்பு'' என்ற அச்சமற்ற நிலையாகும்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ
எவர் ஈமான் கொண்டு, பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன்:06:82)
மனிதன் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிப்பதற்கு அவனுக்குப் பாதுகாப்பு (அச்சமற்ற நிலை) மிகவும் அவசியமானதாகும். இன்று உலகம் முழுவதும் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் தேவையான பாதுகாப்புதான் மிகப்பெரிய கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் அதிகாரிகள் பாதுகாப்பைப் பலப்படுத்தும்போதும், அல்லது அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்போதும் மனிதன் அச்ச நிலையை உணருகின்றான்.
பூமியில் நிகழும் குழப்பம் மற்றும் கொடுமைகள் மூலம்தான் அச்சநிலை ஏற்படுகின்றது. அச்சநிலை என்றால் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம். மரணத்திற்கு அவர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும். வெளியில் சென்ற மனைவி, மக்கள் வீட்டிற்குத் திரும்பலாம் அல்லது சென்ற இடத்தில் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படலாம். அல்லது முற்றிலும் அழிக்கப்படலாம். சொத்து சுகங்கள் சூறையாடப்படலாம். இதுபோன்ற பாதுகாப்பற்ற, நிம்மதியற்ற வாழ்க்கை நிலைதான் அச்ச நிலையாகும்.
ஒருவனுக்கு தன் எதிரியால் அல்லது பகைவனால் அச்ச நிலை ஏற்படலாம். ஆனால் தன் சுற்றத்தாரால் அச்ச நிலை ஏற்பட்டால்? அவன் நிம்மதியாக வாழ முடியுமா?
ஒருவனைச் சுற்றியுள்ளவர்களில் உற்றார், உறவினர், நண்பர்கள், தெரிந்தவர், அறிந்தவர் எனப் பலரும் இருப்பர். எல்லா வளங்களும் ஒருவனுக்கு வழங்கப்பட்டு, கேடு விளைவிக்கும் சுற்றத்தார்கள் அவனுக்கு அமைந்துவிட்டால் அவனால் நிம்மதியாக வாழ முடியாது. அவனுக்கு வழங்கப்பட்ட அந்த அத்தனை வளங்களையும், மிகவும் இக்கட்டான சிரமங்களுக்கு மத்தியில்தான் அவன் அனுபவிப்பான்.
ஒருவன் ஒரு அரசு அதிகார பொறுப்பிலிருந்தால், இவன் பெயரைப் பயன்படுத்தி இவனது சுற்றத்தார்கள் நிகழ்த்தும் கொடுமைகள் ஏராளம். சில சமயம் நற்காரியங்களுக்கு அழைக்கும்போது சுற்றம் சூழ வருகைதந்து…, என்று அழைப்பார்கள். அவனோடு சுற்றம் சூழ இருப்பவர்கள்தான் சிலசமயம் இவனைத் தீர்த்தும் கட்டுவார்கள், சில சுற்றத்தாரோ அவனுக்கு எதிராகச் சதிசெய்து ஆள் வைத்து அவன் கதையை முடிப்பார்கள். ஆகவே அன்றைய பொழுதை நிம்மதியாக ஒருவன் கழிப்பதற்கு இதுபோன்ற கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் சுற்றத்தார்கள் மனிதனுக்கு அமைந்திருக்க வேண்டும்.
இரண்டாவது: உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் உள்ளதாகும். எவனுக்கு நோயற்ற வாழ்வு வழங்கப்பட்டதோ, அவன் குறைவற்ற செல்வம் வழங்கப்பட்டவன் என்ற அளவுக்கு நோயில்லாதவனைச் சிறப்பித்து சொல்லப்படுவதுண்டு.
நோய்க்கு மருத்துவம் பார்த்தே செல்வங்களை இழந்தவர்களும் உண்டு. நோயை நீக்கி ஆரோக்கியத்தைப் பெற அன்றாடம் மனிதன் படாத பாடுபட்டுக்கொண்டிருக்கின்றான். ஆரோக்கியம் அற்ற மனிதன் அவன் விரும்பினாலும் அவனால் நிம்மதியாக வாழ முடியாது. அவன் தானும் துன்புற்று தன் கூட இருக்கும் பிறரையும் துன்புறுத்துவான் ஆக அன்றைய நாளை நிம்மதியாகக் கழிப்பதற்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் உடல் ஆரோக்கியம் நிறைந்தவனாக அவன் இருக்கவேண்டும்.
மூன்றாவது: உண்ண உணவு
அன்றைய நாளை பசி இல்லாமல் நல்லமுறையில் கழிப்பதற்கு அவனது தேக சக்திக்குத் தேவையான உணவு இருக்கவேண்டும். எவ்வளவு பெரிய வளர்ந்த நாடாக (இந்தியா) இருந்தாலும் இன்னமும் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் பசிக்கொடுமையை அனுபவித்து வருகின்றனர். 2030 க்குள் இந்த பசிக்கொடுமைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என்றெல்லாம் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புகள் சொல்லிக் கொண்டுள்ளன.
இன்றுவரை மனிதன் பசிக்கொடுமையால் பூமியில் செத்து மடிந்து கொண்டுதான் இருக்கின்றான். காரணம் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டிய உணவு பதுக்கப்படுகின்றது! சில நாடுகளில் உணவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. ஆக ஒருவன் அன்றைய நாளை நல்ல முறையில் கழிப்பதற்கு அவனுக்கு உண்ண உணவு இருக்கவேண்டும்.
இந்த மூன்று அம்சங்களும் எவ்வித சிரமங்களும் இல்லாமல் யாருக்கு வழங்கப்பட்டுவிட்டதோ அவன் இந்த "உலகம் முழுவதும் வழங்கப்பட்டவனைப் போலாவான்". இது சாதாரண ஒருவர் சொன்ன சொல்லல்ல! தன் வாழ்நாளில் பொய்யே சொல்லாத ஒருவர் சொன்ன சொல் இது.
1- பாதுகாப்பற்ற நிலை (அதுவும் தன் சுற்றத்தாரால்), 2- உண்ண உணவு, 3- ஆரோக்கியம்,
பொதுவாகவே உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே இந்த மூன்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் குறைபாடு உள்ளவர்களாகத்தான் இருக்கின்றனர். தன் சுற்றத்தாரால் நல்ல நெருங்கிய பாதுகாப்பில் இருப்பான், அவனுக்கு உணவுக்கும் பஞ்சம் இருக்காது ஆனால் மிகப்பெரும் நோயைச் சுமந்துகொண்டிருப்பான். அல்லது உடல் ஆரோக்கியமாக இருப்பான், உண்ண உணவும் இருக்கும் ஆனால் தன் சுற்றத்தார் அனைவரும் இவனுக்கு எதிரியாக இருப்பார்கள். இப்படி இந்த விஷயத்தில் மனிதன் குறை உள்ளவனாகத்தான் இருக்கின்றான்.
ஆனால் இதில் எவ்வித குறையும் இல்லாமல் இந்த மூன்று அம்சங்களும் யாருக்கு வழங்கப்பட்டதோ அவன்தான் இந்த "உலகம் முழுவதையும் ஒன்றுதிரட்டி வழங்கப்பட்டவனைப் போலாவான்"

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts