உங்கள் குழந்தைகளின் நண்பன் யார்?
உலகில் வாழும் மனிதன் அவரவர் தன் தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் , முதியோர்கள் இப்படி ஒவ்வொரு வரும் தனக்கென்று ஒரு நண்பனை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்த நட்பில் நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் பழகியவரிடம் நற்செயல்களும் தீயவர்களாக இருந்தால் தீமைகள் அவர்களிடம் வெளிப்படுவதையும் பார்க்க முடிகின்றது.
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.
பழகுபவர்கள் நமக்கு தீமைகளை கற்று தராவிட்டாலும் அவர்களிடம் பழகியதால் ஏற்பட்ட விளைவுகள் நண்பனின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன.
இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த SOFTWARE மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசொப்ட(Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (Software ) நிறுவனத்தை உருவாக்க முடிந்தது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மனிதனும் அவன் நன்பணின் மார்க்கத்திலேயே இருக்கின்றான்.எனவே யாரை நண்பராக்குகின்றோம் என்பதை கவனிக்கட்டும் என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத்
சில நேரங்களில் சிலரிடம் இருக்கும் பணத்திற்காகவோ அல்லது பதவி, அதிகாரம் போன்றவற்றிகாக அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்று மனம் துடிக்கின்றது. ஆனால் அவர்களுடன் பழகும் போது அவர்களின் செயலால் நாமும் அவர்களில் ஒருவராக ஆகிவிடுகின்றோம்
இதனால் தான் அல்லாஹ் தன் தூதரை இந்த மக்களோடு தான் நீங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்று கட்டளை இடுகின்றான்.
(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி எவர் காலையிலும் மாலையிலும் அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர் அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால் நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர். அல்குர்ஆன் 6:52
ஒரு நண்பன் மற்ற நண்பனுக்கு தோழனாக இருந்து தக்க நேரத்தில் நல்ல ஆலோசனைகளை வழங்குவான் அவன் காட்டும் வழி நல் வழியாகவும் வெற்றியின் பக்கம் அழைத்து செல்வதாகவும் இருக்கும். இதனால் தான் அல்லாஹ்வின் தூதருக்கும் ஆலோசகரை ஏற்படுத்தி உள்ளான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர் அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார். நூல் : புகாரி
உயிர் காப்பான் தோழன் என்று கூறுவார்கள். நண்பன் தன் தோழனை எந்த நிலையிலும் விட்டு சென்று விடமாட்டான். இன்பமோ துன்பமோ எது குறுக்கிட்டாலும் நண்பனுக்கு தோல் கொடுப்பவனாகவே இருப்பான்.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால் (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது (நம் தூதர்) தம் தோழரிடம் 'கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்' என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன் ஞானமிக்கவன். அல்குர்ஆன் 9:40
நல்ல நண்பர்களை நாம் தேர்வு செய்வது இவ்வுலகில் மட்டும் மல்ல மறுமை நாளிலும் அதன் நன்மைகள் தெரியும்.இந்த உலகில் எப்படி தன் நண்பனை பற்றி கவலை அடைந்தானோ அது போல் மறுமையிலும் தன் கவலையை வெளிப்படுத்தவான்.
íஎன் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன்தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!). அப்போது அவர்களிடம் 'நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று கூறப்படும். மேலும் (நரகத்திலுள்ள அவர்களை இவர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக் கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். உடனே அவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டுவருவார்கள். நூல் :முஸ்லிம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:'நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!' நூல் : புகாரி
தீய நண்பர்களை தோழமை கொண்டதால் மறுமை நாளில் ஏற்படும் தீய விளைவுகள்
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: 'அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?' எனக் கூறுவான்.எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? 'நிச்சயமாக என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!' (என்று புலம்புவான்.) அல்குர்ஆன் 25 : 27 - 29
உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?' (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. அன்றியும் ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். அல்குர்ஆன் 74:42-45
இன்றைய குழந்தைகளின் கலாச்சார சீரழிவிற்கும் தீய பழக்கங்களுக்கும் கெட்ட நண்பர்கள் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றனர். மார்க்க விசயத்தில் ஆர்வங்கள் குறைந்து முகநூல்களில் நேரங்களை செலவு செய்து தன் உடை நடை பாவனை அனைத்திலும் ஒரு நடிகனின் அல்லது ஒரு விளையாட்டு வீரனின் ஸ்டைலே பிரதிபலிப்பது தான் இன்றைய இஞைர்களின் வாழ்க்கை முறையாகும்.
பெற்றோர்கள் தன் குழந்தைகளின் நட்பை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த பொறுப்புகளையும் நாம் தட்டி கழித்து விட்டால் மறுமை நாளில் அல்லாஹ்விடம் பாவிகளாக நிறுத்தப்படுவோம் என்பதை மறந்து விடக்கூடாது.
íநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல் : புகாரி
நன்றி :
source :IDCTAMIL .COM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக