ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி
[ இன்று பொய், அவதூறு என்பதெல்லாம் மக்களால் ஒரு பாவமான செயலாகவே பார்க்கப்படுவதில்லை. சர்வ சாதாரணமாக அவதூறு கூறும் பழக்கம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டுள்ளது.
பொய்யான தகவல்களை மக்களிடையே கூறுவதும், அதை பேஸ்புக் போன்ற இணையதள ஊடகங்கள் மூலம் பரப்புவதும் பலருக்கும் அன்றாட பழக்கமாகி விட்டது.
பிற மனிதர்கள் மீது அவதூறு பரப்புவதை ஏதோ சாதாரண ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல.
ஒருவர் பரப்பிய அவதூறு ஓராயிரம் பேருக்கும் ஓராயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரையிலும் என வரைமுறையற்ற வகையில் அவதூறு பரவிடும் காலம் இது.
''உறுதி செய்யப்படாத யூகங்கள் அனைத்தும் பொய்யே'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்துள்ளார்கள்.]
இறைத்தூதர்கள் காலம் முதல் இன்று வரை சத்தியத்திற்கு எதிராக அசத்தியவாதிகள் கையிலெடுக்கும் ஆயுதமாக அவதூறுப் பிரச்சாரம் எனும் ஆயுதம் இருந்து வருகிறது.
சத்தியத்திற்கு முன் அடிபணிந்து விட்ட, பதிலளிக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து, அதற்கு ஓர் அணைபோட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இறைத்தூதர்கள் குறித்துப் பல அவதூறுகளை மக்களிடையே அள்ளி வீசினார்கள்.
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 51:52)
அன்று இறைத்தூதர்களுக்கு எதிராக இஸ்லாத்தின் எதிரிகள் கையிலெடுத்த அதே அவதூறு எனும் ஆயுதத்தை இன்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அசத்தியவாதிகள் அனைவரும் கையிலெடுத்துள்ளனர். உண்மையில் அவதூறு பரப்புவது என்பது மாபெரும் விளைவை ஏற்படுத்தும் ஓர் பெரிய பாவமாகும்.
கற்பொழுக்கமுள்ள நல்ல பெண்கள் விஷயத்தில் அவதூறு பரப்புவதை அழித்தொழிக்கும் பெரும் பாவம் என்று மார்க்கம் கற்பித்துள்ளது. "அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி 2766)
நல்லொழுக்கமுள்ள பெண்ணொருத்தியின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்து அதை நிரூபிக்கும் வகையில் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில் குற்றச்சாட்டுச் சொன்னவர்களை எண்பது கசையடி அடிக்க வேண்டும் என்பதே இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டமாகும்.
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 24:4)
இதிலிருந்தே இஸ்லாம் அவதூறு பரப்புவதை எத்தகைய ஒழுக்கக்கேடான குற்றமாகப் பார்க்கிறது என்பதை எவரும் அறியலாம்.
இன்றைய நிலை
இன்று பொய், அவதூறு என்பதெல்லாம் மக்களால் ஒரு பாவமான செயலாகவே பார்க்கப்படுவதில்லை. சர்வ சாதாரணமாக அவதூறு கூறும் பழக்கம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டுள்ளது. பொய்யான தகவல்களை மக்களிடையே கூறுவதும், அதை பேஸ்புக் போன்ற இணையதள ஊடகங்கள் மூலம் பரப்புவதும் பலருக்கும் அன்றாட பழக்கமாகி விட்டது.
உறுதி செய்யப்படாத யூகங்கள் அனைத்தும் பொய்யே என்று நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள்.
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6064)
உறுதி செய்யப்படாத எத்தனையோ செய்திகளை, தங்களுக்குப் பிடிக்காதவர்கள் விஷயத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அதை மக்களிடையே பரப்பிடும் சீர்கெட்ட கலாச்சாரம் இக்காலகட்டத்தில் மலிந்து விட்டது.
ஒரு காலத்தில் ஒருவர் மீது அவதூறு சொல்வதாக இருந்தால் நான்கு பேருக்கு மத்தியில் மட்டும் பேசிக் கொள்ளும் நிலையில் இருந்தது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. இருக்கவே இருக்கிறது பேஸ்புக், ட்விட்டர் போன்ற நவீன இணைய ஊடகங்கள். யாரும் எவர் மீதும் எதையும் ஆதாரமின்றி எழுதலாம், அதை ஆயிரக்கணக்கான மக்களிடையே பரப்பலாம். வாயளவில் பேசிக் கொள்ளும் காலத்தில் அந்தச் சபையோடு அவதூறு முடிவுபெறும் என்று இருந்த நிலை மாறி, நவீன ஊடகங்களோ காலம் முழுக்க அந்த அவதூறை அழியாமல் தாங்கி, பாதுகாத்துக் கொள்ளும் சூழல் தற்போது உள்ளது.
ஒருவர் பரப்பிய அவதூறு ஓராயிரம் பேருக்கும் ஓராயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரையிலும் என வரைமுறையற்ற வகையில் அவதூறு பரவிடும் காலம் இது.
பிற மனிதர்கள் மீது அவதூறு பரப்புவதை ஏதோ சாதாரண ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல. தன் சகோதரி, மனைவி, மகள் சொந்தபந்தங்கள் ஆகியோர் விஷயத்தில் அவதூறு பரப்பினால் அதை இவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்களா? என்ற கேள்வியோடு நல்லோர் மீது அவதூறு பரப்பி ரசிக்கும் சைக்கோகளுக்கு மார்க்கத்தின் எச்சரிக்கையை நினைவூட்டுகிறோம்.
அவதூறு தரும் மண்ணறை வேதனை
பிறர் மீது பொய், மற்றும் அவதூறு கூறுவது கப்ரில் தண்டனையைப் பெற்றுத் தரும் பாவச் செயலாகும். பொய் மற்றும் அவதூறு பேசுபவருக்கு மண்ணறையில் இரும்பாலான கொக்கிகளால் முகம் முழுவதும் சிதைக்கப்படும்படியான தண்டனை வழங்கப்படுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, "இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை'' என்று சொல்லிவிட்டு, "ஆம்! இவ்விருவரில் ஒருவரோ, தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்'' என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்''என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 216)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி "இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், "அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள். இவ்வாறே ஒரு நாள், "உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?'' என்று கேட்டதும் நாங்கள் "இல்லை' என்றோம்.
அவர்கள், "நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது.
உடனே நான் "இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் "நடங்கள்' என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே "இவர் யார்?' என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் "நடங்கள்' என்றனர். எனவே நடந்தோம். ....
(இறுதியில்) நான் இருவரிடமும் "இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!'' எனக் கேட்டேன்.
அதற்கு இருவரும் "ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும்.
அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். (அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜூன்துப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1386)
உலகம் முழுவதும் பரவும் வகையில் பொய் பேசியவருக்கு வழங்கப்படும் தண்டனை என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தண்டனையைக் குறிப்பிடுகிறார்கள். இது முழுக்க முழுக்க இணையத்தில் அவதூறு பரப்புவர்களுக்கு நூறு சதவிகிதம் பொருந்திப் போவதைக் காண்கிறோம். அவர் கூறும் பொய், அவதூறு விநாடியில் உலகம் முழுவதையும் அடைந்து விடுகிறது. அந்த அவதூறு மக்களிடையே நிலைபெற்றிடும் காலமெல்லாம் அதற்குரிய இறைத்தண்டனையையும் இறைசாபத்தையும் அவர் பெற்றுக் கொண்டே இருக்கிறார் என்பதை அவதூறு பரப்புவோர் மறந்து விடக்கூடாது.
பறிக்கப்படும் மானம்! கிழிக்கப்படும் முகம்!
இஸ்லாத்தில் பிறர் மானம் காப்பது மிகவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. (சமூகத்திற்கு தீங்கிழைக்கும் கெட்டவர்களுக்கு இது பொருந்தாது) ஒரு முஸ்லிம் பிறர் மான விவகாரத்தில் தலையிட்டு அவனது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபவதை வன்மையாகக் கண்டிக்கின்றது. பிறர் மானம் புனிதமாக்கப்பட்டுள்ளது எனும் பின்வரும் நபிமொழியிலிருந்து இக்கருத்தை அறியலாம்.
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம்.
"இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 67)
அவதூறு கூறுவதன் மூலம் பிறர் மான விவகாரத்தில் விளையாடியவர்களுக்கு மறுமையில் செம்பு உலோகத்தினாலான நகத்தால் உடல் முழுவதும் கீறிக்கிழிக்கப்படும் வகையில் தண்டனை அளிக்கப்படும். நான் மிஃராஜிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்தினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்கள் முகங்களையும், உடம்பையும் கீறிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரீல் அவர்களிடம் வினவினேன். இவர்கள் தான் (புறம் பேசுவதின் மூலம்) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 4235)
பறிபோகும் நன்மைகள்
இன்னும் சிலர் பிறர் மானத்தைப் பறித்து அவதூறு பரப்புவதற்கென்றே சில இணைய தளங்களையும், பேஸ்புக் முகவரிகளையும் வைத்துக் கொண்டு சர்வ நேரமும் ஏதாவது ஒரு அவதூறை மக்களிடையே பரப்பி வருகிறார்கள். ஒரு நாள் அவதூறு கூறாவிட்டால் கூட இத்தகையவர்களுக்கு பொழுது புலராது; சரியாய் தூக்கம் வராது எனுமளவு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா? அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஏதும் குறை வைத்தால் அல்லாஹ் நாடினால் மன்னித்து விடுவான். ஆனால் அடியார்கள் விஷயத்தில் குறை வைத்தால் அவர்களை அவ்வடியார் மன்னிக்காமல் அல்லாஹ் மன்னிப்பதில்லை. பிறர் மீது அவதூறு பரப்புவது அடியார்கள் விஷயத்தில் செய்யும் குற்றமாகும்.
தொடர்புடைய அவர் மன்னிக்காத போது மறுமை நாளில் கண்டிப்பாக இது தொடர்பாகப் பழி தீர்க்கப்படும். அவதூறு கூறியவரிடமிருந்து நன்மைகள் பிடுங்கப்பட்டு அவதூறு கூறப்பட்டவருக்கு வழங்கப்படும், நன்மைகள் தீர்ந்து போகும் போது அவதூறால் பாதிக்கப்பட்ட நபர்களின் தீமைகள் அவதூறு கூறியவர்கள் மற்றும் அதில் பங்கெடுத்தவர்கள் மீது சுமத்தப்படும். இந்த எச்சரிக்கையை அல்லாஹ்வின் தூதர் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்களிடம்), "திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்'' என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவர் இருக்கிறார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5037)
அவதூறு கூறுபவர்கள் மார்க்கத்தின் இந்த எச்சரிக்கைகளை மனதில் கொண்டு அதுபோன்ற தீமைகளிலிருந்து விலகிட வேண்டும் என்று வாஞ்சையோடு கூறிக் கொள்கிறோம். அவ்வளவு எளிதில் நாங்கள் திருந்துவோமா என்று கேட்பவர்களாக இருந்தால் அவதூறு கூறுவதால் பாதிக்கப்படுவோர்க்கு நன்மைகள் தானே தவிர ஒரு பாதிப்பும் இல்லை தவிர அவதூறு கூறுவோர் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஒரு போதும் தப்ப இயலாது.
இப்படித்தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன் 68:33)
அல்லாஹ்வின் வேதனை கடுமையானது. அல்குர்ஆன் 22:2
உமது இறைவனின் பிடி கடுமையானது. (அல்குர்ஆன் 85:12)
அவதூறுக்கு ஆதரவு ஏன்?
மனிதர்களில் பெரும்பாலானோர் தாங்கள் தீமையைச் செய்யாவிடிலும், பிறர் செய்கின்ற தீமையில் பங்கெடுக்கத் தவறுவதில்லை. பிறர் ஏதேனும் தீமையைச் செய்தால் அதை ரசித்துப் பார்க்கின்ற மிக மோசமான மனநிலையில் மக்கள் ஊறித் திளைத்து விட்டனர். ஒருவர் புறம் பேசினால் அதை எத்தனை மணி நேரம் ஆனாலும் காது கொடுத்து கேட்கத் தயார் என்ற பாணியில் இவர்கள் பரப்பும் அவதூறை, இது அவதூறு என்று தெரிந்த பின்னரும், அதைப் படிப்பதிலும், பரப்புவதிலும் சில மக்கள் ஈடுபடுகின்றனர்.
அவதூறைப் பரப்புவதற்கென்றே உள்ள இணைய தளங்களை இந்த வாரம் என்ன தான் கூறியிருக்கின்றார்கள் என்று பார்ப்போமே என்பது போல வலிந்து படித்து ரசிக்கின்றனர். இது போன்று தீமையை ரசிப்பவர்கள் இருக்கும் வரையிலும் அந்தத் தீமை மக்களிடையே மென்மேலும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும். இந்த வகையில் அந்தத் தீமை வளர்வதற்கு இவர்களும் காரணமாக இருப்பதின் மூலம் துணை போகின்றனர். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)
அவதூறுக்கு மறுப்பளிக்கிறேன் பேர்வழிகளால் மக்களிடையே அது மேலும் பரவ பலரது செயல்பாடுகள் காரணமாக அமைந்து விடுகின்றது. ஜமாஅத் தொடர்பான எந்த அவதூறாக இருந்தாலும் மாநிலத் தலைமை அதன் காரண காரியங்களை அலசி மக்களுக்குத் தெளிவுபடுத்தும். அதை விடுத்து அவதூறு செய்தியை ஒவ்வொரிடமும் பரப்பி அந்தக் கயவர்களுக்கு நாம் தீனி போட்டு விடக் கூடாது. அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அவதூறு பரப்பிய போது முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கூறும் அறிவுரை இது தான். இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா? (அல்குர்ஆன் 24:12)
அவதூறில் பங்கெடுப்பதை நாம் சாதாரணமாகக் கருதுகிறோம். உண்மையில் அதுவும் பயங்கரமானதே! உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. இதைக் கேள்விப்பட்டபோது "இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு'' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? (அல்குர்ஆன் 24:15,16)
இன்ன அவதூறு செய்தியை மக்களுக்கு அறியச் செய்வது தான் நமது நோக்கம் என்று கூறிக் கொண்டே பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அவதூறு செய்தியைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் அவதூறில் பங்கெடுப்பதாகவே அமையும். அவதூறு பரப்புவது மட்டுமின்றி அதில் பங்கெடுப்பதும் தீமையான காரியம் என்பதை அறிந்து செயல்படுவோமாக!
EGATHUVAM MAY 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக