லேபிள்கள்

சனி, 7 மார்ச், 2020

இழப்பதால் நஷ்டமில்லை

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை அடைய முடியும் என்பது விதி
மனித வாழ்க்கையில் இழப்பு என்பது, பிறப்பு முதல் இறப்பு வரை ஓர் அங்கமாகவே மாறி விட்டது. அது, உறவினர்களின் மரணங்களால் ஏற்படும் இழப்புகள், உறவுகள் முறிவால் ஏற்படும் இழப்புகள், வேலையை இழப்பது, இட மாற்றத்தால், பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தை இழப்பது என்பது போன்ற பல வகையில் இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது.
கூலித் தொழிலாளி முதல் முதலாளிகள் வரை, சாதாரண அலுவலர் முதல் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் இழப்பைச் சந்திக்கத்தான் நேரிடுகிறது. அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும். இன்று, நாட்டில் உள்ள சாதனையாளர்கள் எத்தனை பேர் எதையெல்லாம் இழந்து வெற்றி எனும் சிகரத்தை எட்டியிருக்கிறார்கள் என்பதை அவர்களே ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறியுள்ளனர். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை அடைய முடியும்.
பள்ளிக்குச் செல்லும்போது, தனது வீட்டில் குழந்தையாக துருதுருவென ஓடி விளையாடிய பருவத்தை இழந்து "படிப்பு' என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அதன்பிறகு, மேல் படிப்பு என்று வரும்போது தனது இளம் வயதில் விளையாடிய பொருள்களையும், சில நண்பர்களையும் இழந்து புதிய உறவுகளைத் தேடிச் செல்கின்றனர்.
இப்படி, புதியதோர் உலகம் படைக்கச் செல்லும்போது அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்ட நண்பர்களை குடும்பப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இழக்கின்றனர். அதன்பிறகு, தனக்கென்று தனிப் பாதையை தேடிச் செல்வோர் வருமானத்தை ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, அதனை நோக்கி நகர்கின்றனர். அதன் பிறகு கால மாற்றத்தால் இளமையை இழந்து, குடும்பப் பொறுப்பு என்ற சுமை நம்மை மேலோங்கச் செய்கிறது. இதற்காக பலர் உள்நாட்டிலேயே, சொந்த ஊரைவிட்டு வேறு ஊரிலோ, பலர் வெளிநாட்டிற்கோ வருவாயைத் தேடிச் செல்கின்றனர். இதனால் அவர்கள் தாய், தந்தை, சகோதர பாசம் ஆகியவற்றை இழந்து பரிதவிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கவும், கேட்கவும் முடிகிறது.
இதனையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும்போது திருமணம் என்ற புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கிறோம். அப்போது தாய், தந்தையரிடம் அன்பைப் பகிர்வதில் சிறிய அளவிலான இழப்பு ஏற்படுகிறது. அதனை மனைவி, குழந்தைகளிடம் ஈடு செய்துவிடலாம்.
அதன் பிறகு, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதற்காக பெரும்பாலானோர் வெளியூர்களுக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்ல நேரிடுகிறது. அச் சமயம் மனைவி, குழந்தைகளின் நெருக்கத்தை இழந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இது வெளிநாட்டுக்குச் செல்வோருக்கு மட்டுமல்ல, அலுவலகத்தின் விதிமுறைக்குக் கட்டுப்பட்டு வெளியூருக்கு பணியிட மாற்றம் செய்யும்போதும் குடும்பத்தின் நெருக்கத்தில் (அன்பு, பொருளாதாரம்) சிறிய இடைவெளி விழத்தான் செய்யும். இந்த இழப்புகளைத் தனது முன்னேற்றத்துக்கான பாதை என்பதை உணர்ந்து அடியெடுத்து வைக்க வேண்டும்.
இத்தனை இழப்புகளையும் தாங்கிக் கொண்டு, தனது மகன் அல்லது மகளின் படிப்பு, திருமணத்துக்காக தான் சேர்த்து வைத்த பொருளாதாரத்தையும் இழக்க நேரிடுகிறது. ஆனால், அதனை இழப்பு என்று கூறாமல்ஓர் இனிமையான செலவு என்றே கூறலாம்.
பின்னர், குடும்பத் தலைவர் என்ற நிலைமாறி, முதுமையடைந்த பின் பேரக் குழந்தைகள் என்று வரும்போது அவர்களிடம் அன்பை பகிர்வதில், மகன் அல்லது மகள் மீதான அன்பில் சரிபாதியை இழக்க வேண்டியுள்ளது. இறுதியாக, தான் சேர்த்து வைத்த அன்புச் செல்வங்கள் (குடும்பத்தார், பணம், பொருள் அனைத்தையும் விட்டுவிட்டு இழப்பதற்கு இனி என் உயிரைத் தவிர வேறில்லை என்று இவ்வுலகைவிட்டுச் செல்கின்றனர்.
இப்படி, நம்முடைய வாழ்க்கை ஒரு பக்கம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் அதற்கான இழப்புகள் என்பது கவலையுறதான் செய்கின்றன.
இதுபோன்ற, இழப்புகள் தனிமனித வாழ்க்கையில் மட்டுமல்ல.. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் காணப்படுகிறது. பொருளாதாரத்தில் இழப்பு, இயற்கையால் பேரிழப்பு, கலாசார சீரழிவால் இழப்பு என நாடே ஏதோ ஒருவகையில் நாள்தோறும் இழப்பைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது.
ஆகவே, மனித வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் இழப்பைச் சந்திக்கும் நாம், நம்பிக்கை என்ற வேரை மட்டும் இழக்க வேண்டாம். இன்றைய jஇழப்பு நாளைய வாழ்வின் அடித்தளம் என்பதை மட்டும் நினைவில் கொள்வோம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts