லேபிள்கள்

ஞாயிறு, 15 மார்ச், 2020

அலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்

எம்..ஹபீழ் ஸலபி M.A.
நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம். மனிதன், அவன் பெற்றுள்ள நவீன அறிவைப் பயன்படுத்தி, பல வியத்தகு சாதங்களைப் படைத்து, பெரும் புரட்சிகளைப் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மனிதர்களுக்கு நன்மை தரும் அதேவேளை, பெருமளவு தீமையும் ஏற்படுத்துகிறது.
மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் ஈர்க்கப்படுவதால், அவன், நவீன சாதனங்களை நன்மைகளைவிட, தீமையான காரியங்களுக்கு அதிகம் பயன்படுத்திக்கொள்கிறான். ஆக்க சக்தியாக பரிணமிக்க வேண்டிய அரிய அறிவியல் கண்டுபிடிப்புச் சாதனங்கள், இன்று மிகப் பெரும் அழிவு சக்தியாக மாறி பெரும் நாசத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த நூற்றாண்டில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் அவனால் தவிர்க்க டிமுயாத. மிக முக்கிய ஒன்று தான் செல்போன்கள் (Cell Phones). நமது நாட்டில் (இலங்கையில்) கையடக்கத் தொலைபேசி சேவையை 1990ம் ஆண்டின் ஆரம்பத்தில் Celtel நிறுவனம் முதல் தடவையாக அறிமுகம் செய்துவைத்தது.
அப்போது, செல்வந்தர்களும், இலட்சாதிபதிகளும் மாத்திரமே இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தினர். ஏழைகள் அதைப்பார்த்து ஏங்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அன்றை நிலை இன்றில்லை. இன்று இலங்கை குடிமகனிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் உள்ளன.
celltel அறிமுக நாட்களில், இலங்கையில் தொலைபேசி கருவி ஒன்று 75ஆயிரம் ரூபா முதல் ஓர் இலட்சம் ரூபா வரையில் விலை போனது. அதனால், அன்று கையடக்கத் தொலைபேசியை வாங்கிப் பயன்படுத்தியவர்கள். அது ஒரு செங்கல்லைவிட பெரிதாக இருந்ததும் அதனை கையில் ஏந்தியவாறு பொது இடங்களில் நடமாடுவது ஓர் அந்தஸ்துடைய சின்னமாக விளங்கியது.
இப்போது, பல கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் கையடக்கத் தொலைபேசி சேவையை கொடுப்பதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் பெற்றுள்ளன. பல கம்பனிகள் பல்வேறு வடிவங்களில் மொபைல் போன்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தவுடன் படிப்படியாக கையடக்கத் தொலைபேசிகளின் விலை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனினும், 2G, 3G, 4G, LTE, 5G ஆகிய சேவைகளைக் கொண்ட கையடக்கத் தொலைபேசி இணைப்புகளை கொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசிகள் ஓர் இலட்சம் ரூபாவைவிட அதிக விலை போகிறது.
ஆனால், இன்று நம் நாட்டு சந்தைகளில் சாதாரண மக்கள் வாங்கக்கூடிய 2500 ரூபாவில் இருந்து அவர்களின் பண வசதிக்கு ஏற்றாற்போல் வாங்கக்கூடிய விலைக்கு Smart Phone கள் விற்கப்படுகின்றன. முன்னர் கையடக்கத் தொலைபேசி மூலம் பேசுவதற்கு மாத்திரமே முடிந்தது. இன்று இந்த கையடக்கத் தொலைபேசிகளின் முன்னால் ஒருவர் பேசும் போது, மறுபக்கத்தில் உள்ளவரின் வீடியோவை பார்த்துக் கொண்டே பேச முடியும் .
இலங்கையில் 2000 த்திற்கு முன்னைய கால கட்டத்தில் நிலையான தொலைபேசி (Land lines) இணைப்புகளை எடுப்பதற்கு இருந்த பெரும் கஷ்டத்தின் காரணமாக, கையடக்கத் தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்ட போது, அதிக பிரச்சினையின்றி அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தமையினால் இந்த சேவை மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டது.
நாடெங்கிலும் 2005திற்குப் பின்னர் கையடக்கத் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று ஒரு வீட்டில் இரண்டுக்கு அதிகமான கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன. அதனால், நிலையான தொலைபேசி இணைப்புகளுக்கு இருந்த மவுசு பெருமளவு குறைந்துவிட்டது. கையடக்கத் தொலைபேசிகள் இன்று மனிதனுடைய வாழ்க்கையில் ஒன்றிணைந்து விட்டதனால், அதனை நாம் தூக்கியெறிய முடியாதிருக்கிறது. அதனால், நாம் அவற்றை அவதானமாக பயன்படுத்திட வேண்டும்.இல்லையேல் அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும்.
கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் ஆரம்பத்தில் மக்களுக்கு மிகவும் சவுகரியமான முறையில் சேவையை பெற்றுக் கொடுப்பதாக இருந்தாலும், இன்று அதுவொரு மனிதகுலத்திற்கு ஏற்பட்ட சாபமாக கூட நன்மக்களால் வெறுக்கப்படும் அளவுக்கு, அதனால் ஏற்படும் தீமைகள் அதிகரித்துவருகின்றன.
இன்று கையடக்கத் தொலைபேசிகள் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளன. 2011ம் ஆண்டில் இலங்கையில் எல்லாமாக ஒரு கோடியே 80இலட் சத்து 3ஆயிரத்து 447 கையடக்கத் தொலைபேசிகள் இருந்தன. 2012 டிசம்பர் மாத முடிவில் இரண்டு கோடியே 3இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் இருந்தன. நமது நாட்டின் இரண்டு கோடி 8 இலட்சம் மக்கள் தொகைக்கு இந்தளவு கையடக்கத் தொலை பேசிகள் இருப்பதனால் கையடக்கத் தொலைபேசிகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை நாம் புரிந்து கொள்ளலாம். அண்மைய கணக்கெடுப்பின்படி இப்பாவனை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
மிகவும் கவலையை ஏற்படுத்தும் விடயம் என்னவென்றால். இன்று அவை பாடசாலை பிள்ளைகளின் கைகளிலும் இருக்கின்றன. பெற்றோர், பாடசாலையில் கற்கும் தமது மாணவச் செல்வங்களுக்கு, ஸ்மாட் போன்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம் சமூக சீரழிவுகளுக்கு வழியைத் திறந்து விட்டுள்ளனர் என்ற விமர்சினம் தவிர்க்க முடியாதது.
மாணவர்களின் கைகளில் ஸ்மாட் போன்களை பெற்றோர் ஏன் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதற்கான காரணம் என்ன என்பதை அறிய முடியாதிருப்பதாக கல்விச் சமூகத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இன்று, கையில் 'ஸ்மாட்போன்' இல்லாத மாணவர்களை காண்பது அரிது. ஒரு கையில் பாடப்புத்தகமும், மறுகையில் ஸ்மாட் போனுமாக அவர்கள் வீதியில் நடமாடுவது சாதாரண காட்சியாகிவிட்டது.
இதனால், பாடசாலை பிள்ளைகளின் ஒழுக்கம் சீர்குலைந்து போயுள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பாலியல் தொடர்புடைய கேவலமான படங்கள், மற்றும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பார்க்கப்படுகின்றன. இதனால், எங்கள் நாட்டின் இளம் சந்ததியினரின் ஒழுக்கம் பாரிய சீர்குலைவை நோக்கி வேகமாக நகர்கிறது. விலைமதிக்க முடியாத கல்விப் பருவம், ஒழுக்கம் என்பனவற்றை மாணவன் இழப்பதற்கு செல்போன்கள் தான் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
படிப்பிலும் அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய பருவத்தில் இருக்கும் பாடசாலை மாணவ மாணவிகள் இன்றைக்கு திருமணமானவர்கள் கூட அறிந்திராத அளவிற்கு ஆபாச அந்தரங்கங்களை சலனப் படங்களாகப் பார்த்து அறிந்து வைத்திருக்கிறார்கள். புத்தகங்களை சுமந்து செல்லும் இளம் வயது சிறுமிகள் தந்தை யார் என்று சமூகம் எள்ளி நகையாடும் நிலையில் முறையற்ற கருவை சுமக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுளளனர். பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் முறையற்ற முறையில் பெற்றோராக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இளம் வயதிலேயே தங்களது பெறுமதிமிக்க எதிர்காலத்தை தொலைபேசிகளுக்குள் தொலைத்து, இலட்சியமற்றவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். செழித்து வளர வேண்டிய இந்தக் கதிர்கள் சீக்கிரமே சீரழிந்து போவதற்கு செல்போன்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாலிபர்களின் இதை விடவும் மோசமாக உள்ளது. நல்ல பல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ சமூகம் ஆபாச SMSகளையும், வீடியோக்களையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
படிக்கும் பருவத்திலுள்ள இவர்கள் எத்தகைய உயர்ந்த இலட்சியமும் குறிக்கோளுமின்றி, தட்டுத்தடுமாறி, whatsapp,Facebook, twitter, viber, line, camera என்று இவைகளில் மூழ்கி வெளிவரமுடியாமல், உளவியல் பாதிப்புக்குள்ளாகி, போதைப் பொருள்களிலும் சினிமா, முறைகேடான பாலியல் இன்பம் என்பவற்றில் தஞ்சமடையும் இழிநிலை ஏற்பட்டுவருகிறது. அத்தோடு. இளசுகளை பிஞ்சிலேயே பழுக்கவைத்துவிடுகிறது.
இதனை மேலும் புரிந்து கொள்ள ஒரு கவிஞனின் பின்வரும் சில வரிகள் துணைபுரிகின்றன.
"இளைஞனே! உன்னைப்பற்றி எனக்கு வருகிற தகவல்கள் என் குதூகலத்திற்கே குழி தோண்டுகின்றன.
ஒரு கல்லூரி விடுதிக்கு இரவில் விலை மகளிர் வருவதாய் என் காதுக்கு வருகிறது.
பாவிகளே! அது கல்விச்சாலையா? கலவிச்சாலையா?
வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப்பையில் போதை மாத்திரைகளும், கர்ப்பத்தடை மாத்திரைகளும் சரி விகிதத்தில் இருந்ததாய்ச் சாட்சி கிடைத்திருக்கிறது.
அடி பாவிப் பெண்ணே! நீ மனதை நிரப்ப வந்தாயா? மடியை நிரப்ப வந்தாயா?"
(சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன். 2010 பக்கம் : 11)
கையடக்கத் தொலைபேசிகள் ஒரு வகையில் இன்று பாலியல் ரீதியில் விடலைப் பருவத்தைச் சேர்ந்தவர்களையும் மாணவர்களையும் துன்புறுத்தப்படுவதற்கு பிரதான காரணமாகவும் அமைகின்றன. கையடக்கத் தொலைபேசிகள் இளம் சந்ததியினர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் உதவியாக அமைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விடலைப் பருவத்தைச் சேர்ந்தவர்கள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் காதல், திருட்டுக் கல்யாணம், கொலை, கொள்ளை, போன்ற பல தீய செயற்பாடுகளிலும் சமூக விரோத நடவடிக்கைகளிலும் இறங்குவதற்கு வழியமைத்துள்ளது.
இன்றைய இளைஞர்களில் பலர் இதன் காரணமாக பிற மனிதர்களுடன் நேருக்குநேர் பேசுவதை அதிகளவில் தவிர்த்து வருகின்றனர். Mobile, Tab, Laptop போன்றவைகளுடன்தான் அவர்கள் அதிகம் பேசுகின்றனர்; பழகுகின்றனர். மக்களுடனான நேரடித் தொடர்பு இல்லாமல் போன நிலையில், இவ்வாறான கருவியென்பதே அவர்களுக்குத் துணையாகிப் போயுள்ளது. இதனால், மனிதன் இயந்திர நிலைக்குச் சென்று, விரக்தி, மனநிலைப் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளான். சிலபோது, போன்களால் பெறுமதியான பல உயிர்களும் குடிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் இளைய தலைமுறையின் கல்வியையும் எதிர்காலத்தையும் சீரழிக்கின்ற கைத்தொலைபேசிப் பாவனையிலிருந்து அவர்களை விலக்கி வைக்கின்ற காரியத்தையே பெற்றோர் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டியிருக்கின்றது. மாணவர்கள் கணினி மொபைல் பொன்கள் மூலம் முகநூலுக்கும் மற்றுமுள்ள சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாகிப் போவது ஆரோக்கியமான அறிகுறியல்ல. இது கட்டுப்படுத்தப்பட வேண்டியதாகும்.
மனிதனின் இயல்பு தீமைகளின் பக்கமே அதிக நாட்டம் கொள்கிறது. எனவே, செல்போன்களையும் தீமையான காரியங்களுக்கு அதிகம் பயன்படுத்திக்கொள்கின்றான். இன்று இக்கருவிகளால் பெரும் சமூக அவலங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. கற்றுத்தேற வேண்டிய பாடசாலைப் பருவத்தியேயே மாணவர்கள் செல்போன்களுக்கு அடிமையாகி, நேரத்தை வீணாக்கி, வாலிபத்தையும் வீணாக்கி, கல்லூரியைவிட்டு வெளியேறும் போது, பரிதாபத்திற்குரியோராக இவர்கள் மாறுகிறார்கள். செழித்து வளர வேண்டிய இவர்களது இளமை சீரழிந்து போவதற்கு செல்போன்கள் முக்கிய காரணியாகத் திகழ்வதாக சமூக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஆபாசமும் வன்முறைகளும் நிறைந்த சினிமாப் படக்காட்சிகளும் இரட்டை அர்த்தங்கள் நிறைந்த பாடல் வரிகளும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் இசையும் மனிதனுடைய சிந்தனையை மழுங்கச் செய்து, பாவச் செயல்களின் பக்கம் விரைவாக இழுத்துச் செல்கிறது. பல்வேறு சமூகத் தீமைகளுக்கு பலரை கூட்டணி சேர்க்க செல்போன் மிகவும் பயன்படுகிறது.
தினமும் பாடசாலையில், மதுரசாக்களில் படித்த பாடங்களை மீட்டுவதற்குப் பதிலாக மாணவர்களில் பலர் பொன்னான நேரத்தை செல்போனில் Games விளையாடி வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதற்கு செல்போன்கள் தான் மிக முக்கியமான காரணமாக அமைகின்றன. காதல், கள்ளத் தொடர்பு, தற்கொலை, கொலை கொள்ளை. கற்றபழிப்பு. வன்முறை என்று இதன் தீமைப் பட்டியல் தொடர்கிறது.
இன்று எந்த மனிதனையும் விட்டுவைக்காத அளவு இதன் தாக்கம் விரவி நிற்கிறது. அலை பேசியா? அல்லது அவதூறுக் கருவியா என்று அங்கலாய்க்கும் அளவு அடுத்தவர்களின் மானத்தின் புனிதம் செல்போன்களால் சேதப்படுத்தப்பட்டு மாசுபடுத்தப்படுகிறது.
பெரும்பாவங்களில் ஒன்றான பிறரைப் பற்றி அவதூறு பேசுவது. இப்பாவத்தை மிக இலகுவாக செல்போன்கள் நமக்கு சம்பாதித்து தந்துகொண்டிருக்கின்றன. சமூக வலைத் தளங்களில் வரும் செய்திகள் உண்மையானதா? பொய்யானதா? என்றெல்லாம் இன்று நம்மில் பலர் பகுப்பாய்வு செய்து பார்ப்பதில்லை. தனக்கு வந்த மாத்திரத்திலேயே பொய்யை போன்கள் மூலம் அடுத்தவர்களுக்குப் பரப்பி, தானும் பாவியாகி மற்றவர்களையும் பாவியாக்குகின்றார்கள்.
கைத்தொலைபேசி மேற்குலக ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்மாட்போன் உட்பட பல நவீன சாதனங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால், ஸ்மாட்போன் போன்ற நவீன சாதனங்களுக்கு மேற்கு நாட்டவர்கள் இன்னுமே நமது நாட்டிலுள்ளோர் அளவிற்கு அடிமையாகி விடவில்லை. போன் பேசியபடி மேற்கு நாடுகளின் வீதியில் அம்மக்கள் நடமாடுவதை காண முடிவதில்லை. கைத்தொலைபேசியில் உரையாடியபடி சென்றதால், வீதியில் செல்லும் வாகனங்களில் அவர்கள் மோதுண்ட செய்தியும் வெளிவரக் காணவில்லை. தொலைபேசியில் உரையாடியபடி ரயில் பாதையினால் சென்று ரயிலில் மோதுண்டு இறந்த செய்தியும் மேற்கு நாடுகளில் இருந்து வருவதில்லை.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலேயே இவ்விதமான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. வீதிவிபத்துகள், ரயிலால் மோதுண்டு மரணமடையும் சம்பவங்கள், சமூக சீர்கேடுகள் போன்ற அத்தனை காரியங்களும் இங்குதான் பாரியளவு இடம்பெறுகின்றன. கட்டுப்படுத்த முடியாத இந்த நிலையினால் மிகப் பெருமாதியான, ஈடு செய்ய முடியாத பல மனித உயிர்களை நமது நாடு இழந்துள்ளது.
'ஸ்மாட்போன்' மூலம் ஏற்படுகின்ற அவலங்கள் நமது நாட்டில் அண்மைக்காலமாக பெருகித்தான் போய் விட்டன. இன்று இது அனைவரையும் குறிப்பாக இளைய தலைமுறையை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் பயங்கரமான அறைகூவலாக தலையெடுத்துள்ளது. எனவே, இது தொடர்பாக இளைஞர், யுவதிகளை அறிவுறுத்தும் ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும், அவலங்கள் தொடரவே செய்கின்றன.
'ஸ்மாட்போன்' சீர்கேட்டுக்கான நுழைவாயில் ஆகிவிட்டதால், எமது சமூகம் விழிப்படைய வேண்டியது தருணம் வந்துவிட்டது. எனவே, தீமையும், நன்மையும் கலந்த கையடக்கத் தொலைபேசியை நல்ல விடயங்களுக்கு மாத்திரமே பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts