லேபிள்கள்

வியாழன், 16 ஜனவரி, 2020

நேர்ச்சை

ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி
மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.

நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது
அல்லாஹ் கூறுகிறான்
அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். 76:7
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள் 22:29
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்)
பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நூல்:ஸஹீஹுல் புஹாரி 6695

மொத்தத்தில் நேர்ச்சை செய்வது ஆகுமானது அதனை நிறைவேற்றவது அவசியம் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் அதில் யாரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.
நேர்ச்சை எவ்வாறு செய்வது
நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் ஏதுமில்லை ஒருவர் நான் அல்லாஹுக்காக நோன்பை நோற்க நேர்ச்சை செய்துகொண்டேன்.அல்லது இன்ன விஷயத்தைச் செய்வதற்கு நான் நேர்ச்சை செய்துகொண்டேன் என்று கூறுவதாகும் .
இமாம் அல் ஜஸீரீ கூறினார்கள் நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் எதுவுமில்லை நேர்ச்சையை அவசியமாக்கிக்கொள்ளக்கூடிய எந்த வாசகத்தையும் பயன்படுத்தலாம் அதில் நேர்ச்சை செய்தேன் என்று குறிப்பிடாவிட்டாலும் சரியே. நேர்ச்சையின் வாசகத்தை மொழியாமல் நிய்யத் கொண்டால் மட்டும் போதுமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் உறுதியான கருத்து வாசகத்தை மொழியவேண்டும் நிய்யத் மட்டும் போதுமானதல்ல என்பதாகும்.அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/131
நேர்ச்சையின் நிபந்தனைகள்
நேர்ச்சையின் நிபந்தனைகள் இரண்டுவகையாகும் ஒன்று நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடையது மற்றொன்று நேர்ச்சை செய்யப்படுபவற்றுடன் தொடர்புடையது.
நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடைய நிபந்தனைகள்
இஸ்லாம் காஃபிர் நேர்ச்சையை நிறைவேற்றினால் அது சரியாகாது
விரும்பி தேர்வு செய்வது நிர்பந்தத்தினால் செய்தால் அது சரியாகாது
நேர்ச்சையை செயல் படுத்த ஆற்றல் இருக்கவேண்டும் சிறுவரோ,பைத்தியமோ நேர்ச்சை செய்தால் அது சரியாகாது
கடமை சுமத்தப்பட்டவராக இருக்கவேண்டும் கடமை சுமத்தப்படாத சிறுவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படாது
நேர்ச்சையை மொழியவேண்டும் சமிஞ்னை போதுமானதல்ல ஊமையாக இருந்தாலேத் தவிற அவரது சமிஞ்னையும் விளங்குமாறு இருக்கவேண்டும். அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/130
நேர்ச்சை செய்யப்படுகின்றவற்றின் நிபந்தனைகள்

1, நேர்ச்சையின் மூலம் கடமையானதாக அல்லாமல் சுயமாகவே கடமையானதாக இல்லாத அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடிச்செய்யக்கூடிய அமலாகவும் அது இருக்கவேண்டும்
2, நேர்ச்சையாக செய்யப்படும் செயல் இபாதத் ஆக இருக்கவேண்டும் உளூ, குளிப்பு, குர்ஆனை தொடுவது,அதான் சொல்வது, ஜனாஸாவில் பங்கெடுப்பது, நோயாளியை நலம் விசாரிக்கச்செல்வது, போன்ற வஸீலாவாக இருக்கக்கூடிய காரியங்களை நேர்ச்சையாக செய்யமுடியாது. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/132
3, நேர்ச்சை செய்யப்படும் விஷயம் மார்க்கத்தில் உள்ள செயலாக இருக்கவேண்டும் மார்க்கத்திலேயே இல்லாத விஷயத்தை நேர்ச்சையாக நிறைவேற்ற முடியாது உதாரணமாக ஒருவர் நான் இரவு முழுக்க நோன்பு நோற்கிறேன் அல்லது ஒரு பெண் நான் என்னுடைய ஹைளு காலத்தில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கபோறேன் என்று கூறுவது தவறாகும் ஏனெனில் இரவு நேரம் நோன்பு நோற்பதற்குறிய நேரமல்ல,ஹைளிலிருந்தும் நிஃபாஸிலிருந்தும் தூய்மையாக இருக்கும் போது தான் நோற்க முடியும் தூய்மையாக இருக்கவேண்டுமென்பது இபாதத்திற்குரிய நிபந்தனையாகும் .அல் ஃபிக்ஹுல் இஸ்லாமி வ அதில்லதுஹு 4/111
நேர்ச்சை அல்லாஹுக்கு மாறு செய்யும் காரியமாக இருக்கக்கூடாது,நேர்ச்சை செய்வதற்கு முன்னரே ஃபர்ளான இபாதத்தாகவும் இருக்கக்கூடாது உதாரணமாக ஒருவர் ஹஜ்ஜு செய்ய நேர்ச்சை செய்தால் அது நேர்ச்சையாகாது.அதே போன்று சக்திக்கு மீறிய செயலாக,சாத்தியமற்ற செயலாகவோ இருக்கக் கூடாது.இவை அனைத்தையும் நேர்ச்சையை நிறைவேற்றும் போது கவனிக்கவேண்டும்
நேர்ச்சையின் வகைகள்
இமாம் இப்னு தகீகுல் ஈத் அவர்கள் கூறினார்கள் நேர்ச்சை மூன்று வகைப்படும்
ஒன்று: அருட்கொடை கிடைப்பதற்காக அல்லது தண்டனை பெறாமல் போனதற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய சூழலில் நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும்.
இரண்டு: ஒன்றை தடுப்பதற்கோ அல்லது செய்ய தூண்டுவதற்காகவோ நேர்ச்சை செய்வது உதாரணமாக ஒரு மனிதர் நான் வீட்டிற்குள் நூழைந்து விட்டால் அல்லாஹுக்காக இதை செய்கிறேன் என்று கூறி நேர்ச்சை செய்வதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் இமாம் ஷாஃபியி அவர்களுக்கு இரு கருத்துள்ளது ஒன்று அவர் நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் பரிகாரம் செய்வதற்கும் தேர்வு உரிமை வழங்கப்பட்டவர் ஆவார் என்பதாகும் இதற்கு கோபத்தின் போதும் விவாதத்தின் போதும் செய்யும் நேர்சை என்று சொல்லப்படும்.
மூன்றாவதாக: எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாமல் அல்லாஹ்விற்கு கட்டுப்படும் நோக்கில் அல்லாஹுக்காக நான் இதை செய்கிறேன் என்று நேர்ச்சை செய்வதாகும் அவ்வாறு செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகும் இதற்குத் தான் பொதுவான நேர்ச்சை என்று கூறுகிறோம். இஹ்காமுல் அஹ்காம் 2/265
ொதுவான நேர்ச்சையின் வகைகள்
மூடலான நேர்ச்சை
தர்க்கம், கோபம் ஆகிய வற்றின் போது செய்யும் நேர்ச்சை
அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை
வெறுக்கத்தக்க நேர்ச்சை
பாவமான நேர்ச்சை
நன்மையான நேர்ச்சை
கடமையான நேர்ச்சை
சாத்தியமில்லாத நேர்ச்சை
மேற்கூறிய விளக்கமும் அவற்றிற்கான சட்டமும்
1, மூடலான நேர்ச்சை எதை நேர்ச்சை செய்கிறோம் என்பதைக் குறிப்பிடாமல் அல்லாஹ்விற்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன் என்று கூறுவதாகும்
அவ்வாறு கூறிய நேர்ச்சையில் சத்தியத்திற்கான பரிகாரம் செய்ய வேண்டுமென்று அதிகமான உலமாக்கள் கூறியுள்ளார்கள் என்று இமாம் இப்னு குதாமா அவர்கள் கூறினார்கள். அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ
உஸ்பத் பின் ஆமிர் அவர்கள் அறிவித்தார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3379
இது பெரும்பான்மை ஸஹாபாக்களின் கருத்தாகும் அவர்களின் காலத்தில் இதில் கருத்துவேறுபாட்டை அறியவில்லை எனவே இது இஜ்மாவாகும். .அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ

இந்த நேர்ச்சையுடன் தொடர்புடைய நிபந்தனை அனுமதிக்கப்பட்டதாக, அல்லது பாவமாக இருந்தாலும் சரியே உதாரணமாக ஒருவர் நான் நோன்பு நோற்றால் அல்லது தொழுதால் அது அல்லாஹ்விர்காக என் மீது நேர்ச்சையாகிவிடும் என்று கூறினால் அதனை முறிப்பது அவர் மீது கடமையாகிவிடும் இன்னும் அதற்கு சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரமும் செய்யவேண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3392
மூடலான நேர்ச்சையில் ஒருவர் நோன்பு நோற்பதாக நிய்யத் வைத்தார் ஆனால் எத்தனை என்று நிய்யத் வைக்கவில்லை எனில் அவர் பரிகாரத்திற்கான நோன்பை மூன்று நாட்கள் நோற்க வேண்டும் .
அதே போன்று உணவளிப்பதாக நேர்ச்சை செய்து அதிலும் எண்ணிக்கையை குறிப்பிடாவிட்டால் அவர் பத்து ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் ஏனெனில் இதிலும் அவர் சத்தியத்திற்கான பரிகாரத்தையே கடைபிடிக்க வேண்டும்
2, கோபம் மற்றும் தர்க்கத்தின் போது செய்யும் நேர்ச்சையைப்பொருத்தவரை ஒருவர் நான் இவரிடம் பேசமாட்டேன் அப்படி பேசினால் நான் இதை செய்வேன் என்றோ அதே போன்று ஒருவரது வீட்டிற்கு நான் செல்லமாட்டேன், நான் சொல்வது போன்று நடக்காவிட்டால் நான் இதைச்செய்வேன் என்றெல்லாம் கூறுவதாகும் அவர் ஒருசெயலைச் செய்யாமலிருக்க இவ்வாறு நேர்ச்சை செய்கிறார் இப்படி நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/129
3, அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை என்பது உண்பது, குடிப்பது, பயணம் செய்வது போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்வதாகும் இதிலும் நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
நபி அவர்களிடம் ஒரு பெண் வந்து நான் உங்களுக்கு முன்பாக தஃப்ஃபு அடிப்பதாக நேர்ச்சை செய்தேன் என்று கூறினார் அப்போது நபி அவர்கள் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று கூறினார்கள். அம்ருபின் ஷுஐப் தனது தந்தை மற்றும் பாட்டனார் மூலமாக அறிவிக்கிறார் .நூல்: சுனன் அபீதாவூத் 3312
4, வெறுக்கத்தக்க நேர்ச்சை என்பது மார்க்கம் விரும்பாத ஒன்றை ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக ஒருவர் நான் பூண்டு,வெங்காயம்,போன்ற வற்றை உண்பேன் என்பதாக நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் சத்தியத்திற்கான பரிகாரம் செய்வது விரும்பத்தக்கதாகும் அதே வேளை அவர் தனது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டால் பரிகாரம் செய்யதேவையில்லை. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
5, பாவமான நேர்ச்சை என்பது ஒரு நான் மது அருந்துவேன்,கப்ரை தவாஃப் செய்வேன், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக அறுத்துப் பலியிடுவேன்,திருடுவேன், உறவைத் துண்டித்து வாழ்வேன் என்றெல்லாம் மார்க்கம் பாவமென்றும்,ஹராமாக்கப்பட்டதென்றும் கூறிய பாவமான காரியத்தை நேர்ச்சை செய்வதாகும் .
இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த கருத்தாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
நாம் எந்நிலையிலும் அல்லாஹுக்கு மாறு செய்யக்கூடாது அப்படி நேர்ச்சை செய்தவர் சத்தியத்திற்கான பரிகாரம் செய்யவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்விர்க்கு மாறு செய்வதில் நேர்ச்சை என்பதில்லை அதற்கான பரிகாரம் சத்தியத்திற்கான பரிகாரமாகும் ,அறிவிப்பாளர் ஆயிஷா அவர்கள் நூல்:சுனன் திர்மிதி 1524
6, நன்மையான நேர்ச்சை என்பது அல்லாவிற்குக் கட்டுப்படுவதாகும் நன்மை என்பதற்கு அரபியில் அல்பிர்ரு என்று கூறுவார்கள் அல்பிர்ரு என்பதற்கு இத்தாஅத் என்று தான் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது அதாவது கட்டுப்படுதல் இவ்வாறு தான் பின் வரும் வசனத்திற்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்த அறியமாட்டீர்களா.2:44

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ' பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!' என்று கூறினார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 1946
நன்மையான நேர்ச்சை மூன்று வகையாகும்
அ) ஒரு அருளை அடையவேண்டு மென்பதற்கு பகரமாகவோ அல்லது வேதனையை தடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு பகரமாகவோ நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக நோயாளியாக இருப்பவர் அல்லாஹ் எனக்கு நிவாரணத்தைத் தந்தால் நான் அவனுக்காக நோன்புவைப்பேன் என்று கூறுவதாகும் இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும் என்பதில் அறிஞர்களிடம் இஜ்மா உள்ளது.
ஆ) எவ்வித நிபந்தனையுமில்லாமல் அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய நேர்ச்சை நிறைவேற்றவேண்டும் என்று தான் பெரும்பான்மை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்
இ) கட்டுப்படுதலுக்குரிய நேர்ச்சை அது கடமை என்பதில் எவ்வித ஆதாரவுமில்லை உதாரணமாக நோயாளியைச் சந்திப்பது இதனை நிறைவேற்றுவது அவசியமாகும்
7, கடமையான நேர்ச்சை என்பது மார்க்கம் நம்மீது கடமையாக்கிய இபாதத்துகளை செய்ய ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு செய்வது கூடாது .
8, சாத்தியமில்லாத விஷயத்தை நேர்ச்சை செய்யக்கூடாது அவ்வாறு செய்திருந்தால் அதனை நிறைவேற்றத் தேவையில்லை .அல்முக்னி 13/381
நேர்ச்சையின் சட்டங்கள்
நேர்ச்சை செய்வது குறித்துப் பல வசனங்கள் உள்ளன நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களை குர்ஆன் பாராட்டவும் செய்கிறது மரியம் அவர்கள் நேர்ச்சை செய்தது பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது
ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்" என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார்.19:26

அல்லாஹ் கூறுகிறான்
நிச்சயமாக நல்லவர்கள் கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.
அது அல்லாஹ்வினுடைய அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.76:5-7
மறுமையின் அமளி துமளியைக்குறித்த அச்சமும் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் நல்லோர்களின் மறுமை வெற்றிக்கும் சுவனத்தில் நுழைந்ததற்கும் காரணமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
அதே வேளையில் பல்வேறு ஹதீஸ்ள் நேர்ச்சையை தடைசெய்தும் அது விரும்பத்தக்கதல்ல என்றும் தெரிவிக்கிறது
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் " நேர்ச்சை (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்ச்சையின் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)" என்று சொன்னார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 3368
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள்.  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்3369
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி 6608
ஒருபுறம் நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களைப் புகழ்ந்தும் மறுபுறம் அதனைச் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடையும் விதிக்கிறது புகழுக்குரிய நேர்ச்சை என்பது கட்டுப்படுவதில் நிறைவேற்றுவதாகும் அதில் வேறு எதுவும் காரணமும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படியிருந்தால் அது அனுமதிக்கப்பட்ட நேர்ச்சையாகும்

அதுவல்லாத நேர்ச்சைகள் தடுக்கப்பட்டதும் விரும்பத்தகாததுமாகும்
நேர்ச்சைகள் அல்லாஹுக்கு கட்டுப்படும் விதத்தில் செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் அவ்வாறல்லாத நேர்ச்சைகளைச் செய்தவர்கள் அதற்குப் பகரமாக நேர்ச்சையைச் செய்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் ஒருவர் சத்தியத்தை முறித்தால் அதற்கு என்ன பரிகாரமோ அதைத்தான் இதற்கும் பரிகாரமாகும்
அல்லாஹ் கூறுகிறான்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான் 5:89
பரிகாரம் மூன்று விதமாக உள்ளது
1, பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது உடை அளிப்பது
2, ஒரு அடிமையை விடுதலைச்செய்வது
3, மூன்று நாட்கள் நோன்பு நோற்பது
மார்க்கம் கடமையாக்கிய விஷயங்களிலும் வழிகாட்டியவற்றிலும் மார்க்கத்தின் வரம்பைப்பேணி வாழ்வோம் அல்லாஹ்விடம் கூலியை பெறுவோமாக.
– பஷீர் பிர்தவ்ஸி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

வீட்டிற்கு ஏர்கூலர் வாங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஏ.சி வங்க முடியாத அல்லது ஏ.சியை பயன்படுத்த முடியாத வீடுகளுக்கு ஏர் கூலர் தான் பயனுள்ளதாக இருக்கிறது. இது ஏ.சி அளவிற்கு அறையை குளிர்...

Popular Posts