லேபிள்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2020

இல்லற வாழ்வில் புரியாத பாஷை

இதைப் புரிந்துகொள்ளப் பின்வரும் ஹதீஸை முழுமையாகப் படியுங்கள்!
அபூபக்கர்(ரலி) அவர்களது மகன் காசிம் (ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரர்) அறிவிக்கின்றார்கள்;


(ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), "என் தலை(வலி)யே!" என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரிப்) பிரார்த்திப்பேன்" என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), "அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்து விட்டு) "இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது.) நான்தான் (இப்போது) "என் தலை(வலி)யே!" என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூபக்ருக்கும், அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரைக் கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)" என்று கூறினார்கள். (புகாரி 5666)
மேற்படி நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள், "நீ மரணித்தால் உனக்காக நான் பிரார்த்திப்பேன்" என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறுகின்றார்கள். இது கேட்டுச் சந்தோசப்பட வேண்டிய ஆயிஷா(ரலி) அவர்கள் "அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)" என்று கூறுகின்றார்கள். அவர்கள் தலைவலி என்று தனது வருத்தத்தைக் கூறிய போது நபி(ஸல்) அவர்கள் கூறிய சந்தோசமான வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை அவர்கள் கற்பிக்கின்றார்கள்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ஆத்திரமடையாமல் அமைதியாகத் தனது கூற்றின் அர்த்தத்தையும், அதற்கான காரணத்தையும் விளக்குகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களது வார்த்தையை நூலுக்கு நூல் சட்டப்படி அணுகினால் ஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது இயல்பிலும், குணத்திலும் குறை கூறி விட்டார்கள் என அவர்களுக்கு "வழிகேட்டு" அல்லது "முர்த்தத்" பட்டம் கொடுத்திருக்கலாம்.
ஆத்திரத்திலோ, அவசரத்திலோ அல்லது உள்ளமும், உடலும் நலிந்து போகின்ற சூழ்நிலையிலோ பேசக்கூடிய பேச்சுக்களுக்கெல்லாம் சட்டரீதியான தீர்வு காணமுடியாது.
அதேநேரம், அசாதாரணமான சூழ்நிலையில் ஒருவர் பேசிய பேச்சை வைத்து நாட்கணக்கு-மாதக் கணக்குகளுக்கு வியாக்கியாணம் செய்து விரிசலை ஏற்படுத்தவும் முடியாது. இதை இல்லற வாழ்வில் புரிந்துகொள்வது மிக மிக முக்கியமாகும்.
ஆண்கள் சிலபோது பெண்களைச் சீண்டிப் பார்ப்பதற்காக சில வார்த்தைகளை அல்லது செய்திகளை அல்லது வர்ணனைகளைச் செய்யலாம். அதில் விளையாட்டுணர்வுதான் காரணமாக இருக்கும். ஆண்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்று பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் அதிகம் சென்டிமென்ட் (உணர்ச்சிபூர்வமாகப்) பார்ப்பார்கள்.
எனவே, வேடிக்கையாகப் பேசிய பேச்சுக்கள் அவர்களது நாவில் வேம்பாகவும், நெஞ்சில் வேலாகவும் பாய்ந்து வேதனையை உண்டுபண்ணலாம். எனவே விளையாட்டு விபரீதமாகி விடக்கூடாது என்பதில் கணவனும் கரிசனையாக இருக்க வேண்டும். இதையெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற விரிந்த மனதும் மனைவியிடம் இருந்தாக வேண்டும்.
பேசும் பேச்சு மட்டுமன்றி மௌனம் கூடச் சிலபோது தவறான விளக்கத்தைக் கொடுக்கலாம். கணவனோ, மனைவியோ ஏதோ சில காரணங்களாலோ, கஷ்டங்களாலோ மௌனமாக இருக்கலாம். இந்த மௌனத்திற்குக் கூட பல அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. என்னோடு கோபித்துக் கொண்டுதான் அவர் பேசாமல் இருக்கின்றார். காலையில் தேனீர் கொடுக்கத் தாமதமானதற்குத்தான் உம்முண்டு இருக்கிறார். இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி முகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டுமா? இப்படி ஏதோ ஒரு அர்த்தத்தை தானே கற்பித்துக்கொண்டு கற்பனையில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பார்கள். இது கூட இல்லறத்தில் சில பிரச்சினைகள் தோன்றக் காரணமாக அமைந்து விடுகின்றது.
சிலபோது பெண்கள் உள்ளத்தில் ஒன்றை எதிர்பார்த்து ஏதோ சில வார்த்தைகளைப் பேசுவார்கள். இது கேட்ட ஆண்கள் அவர்கள் பேசிய பேச்சை தர்க்கரீதியாகச் சிந்தித்து எதிர்க்கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்வி எடக்கு-முடக்காகக் கூட அமைந்து விடுவதுண்டு.
சிலபோது மனைவி வேலை செய்து அலுத்துக்கொண்டு அந்த அலுப்பில் கணவனைப் பார்த்து, "நீங்களும் கொஞ்சம் வீட்டு விடயங்களில் கவனம் செலுத்துங்கள்!" என்று கூறலாம் அல்லது வேலைப் பழுவோடு இருக்கும் போது குழந்தைகள் குறும்புத்தனம் செய்தால், "பிள்ளைகள் விஷயத்தில் நான் மட்டுமா கஷ்டப்பட வேண்டும்? நீங்களும் பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்!" என்று கூறலாம்.
இதைக் கேட்ட கணவன் வார்த்தைக்கு வார்த்தை அகராதியைப் பார்த்து அர்த்தம் பார்த்தால் வாழ்க்கை வண்டி சீராக ஓடாது. ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கணவன், எடுத்த எடுப்பில் "அப்ப நான் வீட்டு விஷயத்தில, புள்ள விஷயத்தில கவனம் எடுக்கல்லண்டு சொல்றியா?" எனக் கேட்கும் போது மனைவியும், "என்னத்தப் பெரிசா செஞ்சி கிழிச்சிட்டீங்க?" என்று தொடரும் போது தொல்லைகள் தொடர் கதையாவது தவிர்க்க முடியாததாகும்.
உண்மையில் வீட்டுப் பணிகளில் கணவனும் கூட இருந்து ஒத்துழைத்தால் உதவியாக இருக்கும் அல்லது நான் வீட்டு வேலை செய்துகொண்டிருக்கும் போது கணவன் குழந்தைகளைக் கொஞ்சம் கவனித்துக்கொண்டால் உதவியாக இருக்குமே! என்ற ஏக்கத்தைக் கணவன் புரிந்துகொள்ள வேண்டும். தனது உணர்வை இந்த மறமண்டை புரிந்து கொள்ளவில்லையே! என்று கோபம் கொந்தளிக்கும் போது அடுத்த கட்டமாக அவளிடமிருந்து வரும் பதில் பாரதூரமாக அமைந்து விடுகின்றது.
சிலபோது மனைவி வேலை செய்து கொண்டிருப்பாள்; கணவன் ஓய்வாக இருப்பார் அல்லது பத்திரிகை வாசித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் மனைவி அலுத்துப் போய், "தனியாக இருந்து என்னால மாடு மாதிரி சாகமுடியாது!" என்ற தொணியில் தொணதொணப்பாள். சிலபோது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில விளையாட்டுக் கணவர்கள், "ஓ! வயசு போனால் அப்படித்தான்!" என்று ஏதாவது சொல்லும் போது மனைவிக்குப் பத்திக்கொண்டு வரும். அவளும், "நான் மட்டுந்தானே கிழவி? இவர் மட்டும் பெரிய பொடியண்டு நினைப்பாக்கும்!.." என்று தொடரலாம். இதை விளையாட்டாகவோ எடுத்துக் கொண்டால் வினையில்லை.
சில கணவர்கள் இதுபோன்ற சந்தர்ப்பத்தில் விளையாட்டுக்காக "ஒனக்குத் தனியாக வேல செய்ய இயலாது என்பதற்காக என்னை இன்னொரு கலியாணமா கட்டச் சொல்றாய்?" என்று கேட்பார்கள். எரியும் நெருப்பில் எண்ணைய் வார்ப்பது போல் இப்படிப் பேசும் போது, "ஒரு பொண்டாட்டிய வெச்சி ஒழுங்காப் பாக்கத் தெரியாத ஒங்களுக்கெல்லாம் ரெண்டாம் பொண்டாட்டி கேக்குதோ!?" என்ற தொணியில் தொடரலாம். இது கணவனை உசுப்பேற்றி விட்டால், "ஒனக்கு நான் என்ன கொற வெச்சேன் சொல்லு!" என விளையாட்டு வெற்றியை நோக்கி நகரத் துவங்கி விடும்.
சிலபோது மனைவி வீட்டை ஒழுங்குபடுத்தி அழுத்துப் போனால், "வீடு குப்பையாக இருக்குது. இங்கால சரியாக்கும் போது அங்கால குழம்பியிருக்குதே!" என அலுத்துக்கொள்வாள். சில கணவர்கள் நான் வீட்டைக் குழப்பியடிப்பதைத்தான் இவள் இப்படிச் சொல்கிறாள் என்ற தொணியில் பேசுவர். சில வேளைகளில் இதே விஷயத்தை மனைவியர் கொஞ்சம் உப்பு-புளி சேர்ந்துச் சொல்வர். அது கணவனை உசுப்பேற்றி விட, "இந்த வீட்ட நானா குழப்பியடித்தேன்?" என்ற தொணியில் பேசும் போது பிரச்சினையாகின்றது.
இப்படி ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். இதற்கெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பார்க்காமல் அடுத்தவரது உடல்-உள நிலவரங்களைப் புரிந்து விட்டுக் கொடுத்து அல்லது விலகிச் சென்று பழகவேண்டும்.
இதற்கான சில வழிகாட்டல்களை வழங்குவது நல்லது என நினைக்கின்றேன்.
(1) கணவன் – மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரின் இயல்பான குணங்களையும், தமது வாழ்க்கைத் துணையின் இயல்புகள், குணங்கள், பழக்க-வழக்கங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
(2) ஆண் சிந்திக்கும் விதமும், பேசும் முறையும் பெண்ணினது சிந்தனை, பேச்சு என்பவற்றை விட மாறுபட்டதாகும். இதையும் இரு சாராரும் இதயத்தில் இறுத்திக்கொள்ள வேண்டும்.
(3) இருவரும் இருவரது பேச்சையும் முறையாகப் புரிந்துகொள்ள முற்பட வேண்டும். தவறாகப் புரிந்துகொண்டு அந்தத் தவறான புரிதலின் அடிப்படையில் தப்பான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
(4) கணவனைப் பொறுத்தவரை மனைவியின் பேச்சுக்குச் செவிகொடுக்க வேண்டும். ஏனெனில் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கும் ஒரே ஊடகம் பேச்சுத்தான். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்கின்றீர்கள் என்பதை அவளின் பேச்சுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே அவள் அறியமுடியும். எனவே நீங்கள் கொஞ்சம் செவிகொடுங்கள்!
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் சுமார் 300 வார்த்தைகள் அடங்கிய நீண்ட ஒரு சம்பவத்தைக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை அப்படியே கேட்டு விட்டு ஆயிஷா(ரலி) அவர்கள் திருப்திப்படும் அளவுக்கு ஒரு செய்தியையும் முடிவுரையாகக் கூறினார்கள்.
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 26 டிசம்பர், 2020

ஸகாத்தின் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.
அடிப்படைக் கடமை:
'இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
(1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்.
(2) தொழுகையை நிலைநாட்டுதல்.
(3) ஸகாத்தைக் கொடுத்தல்.
(4) ஹஜ் செய்தல்.
(5) ரமழானில் நோன்பு நோற்றல். என்பனவே அவை யாகும் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்' (புகாரி).
இந்தக் கருத்தில் வரக்கூடிய ஏராள மான அல்குர்ஆன் வசனங்களும்; ஹதீஸ்களும் ஸகாத் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை என்பதை உணர்த்துகின்றன.


ஸகாத் தூய்மைப்படுத்தும்:
ஸகாத் என்றால், தூய்மை, வளர்த்தல் என்ற அர்த்தங்களைத் தரும்.
'இன்னும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும், (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்கக்கூடிய ஒரு மகனை, அவ்விருவருடைய இறைவன் கொலை யுண்டவனுக்குப் பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம்' (18:81).
இங்கே 'சகாதன்' என்ற சொல் பரிசுத்தமான என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'அவர்களின் செல்வங்களிலிருந்து, ஸகாத்தை நீர் எடுத்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக' (9:103)
என்ற வசனமும் ஸகாத் தூய்மையை வழங்கும் என்று கூறுகின்றது.
ஸகாத் வழங்கும் தூய்மை
'ஸகாத்' அதைக் கொடுப்போரிடம் பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. அவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
1- பொருள்வெறி நீங்கல்
மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடராக ஸகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும்.
2- கஞ்சத்தனம் நீங்கல்
தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.
'அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும் படி தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம் ' (4:37).
'நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்' (புகாரி).
இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்தை நீக்கும் மருந்தாக ஸகாத் அமைந்துள்ளது.
3- பொறாமை நீங்குதல்
'தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்' என்ற உணர்வே பொறாமையாகும். ஸகாத் கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் எடுபட்டு விடுகின்றது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஸகாத் மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஸகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.
4- கர்வம் அற்றுப்போதல்
சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஸகாத் நடைமுறை செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும்.
5- சமூக உணர்வு அதிகரித்தல்:
செல்வந்தர்களில் அதிகமானோர் சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஸகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் விடயத்தில் கரிசனை காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் விடயத் தில் அக்கறை செலுத்தும் போது, இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஸகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.
ஸகாத்தின் பயன்கள்:
ஸகாத் வழங்குவதால் பல்வேறு பட்ட
பயன்களை அடையலாம் எனக் குர்ஆன் குறிப் பிடுகின்றது. ஸக்காத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்காக அதன் பயன்கள் குறித்து நோக்குவோம்.
1- ஸகாத் வளரும்
ஸக்காத் வழங்குபவரின் பொருளாதாரத் தில் அபிவிருத்தி ஏற்படும் என்பதைச்
'அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை' (2:276)
என்ற வசனம் உணர்த்துகின்றது.
2- மறுமைக்கான சேமிப்பு
இங்கு வழங்கப்படும் ஸக்காத் மறுமைக்கான சேமிப்பு என்பதை,
'இன்னும், தொழுகையை முறையாகக் கடைபிடித்தும் ஸகாத்தைக் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில், உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கி யவனாகவே இருக்கிறான்' (2:110).
3- அச்சமற்ற வாழ்வு:
'யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களையும் செய்து, தொழுகையையும் நிலையாகக் கடைபிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்' (2:277).
ஸக்காத் மூலம் இம்மை, மறுமை அச்சமும் துக்கமும் அற்ற வாழ்வைப் பெறலாம்.
4- தண்டனையிலிருந்து பாதுகாப்பு:
தர்மம் தலைகாக்கும் என்பர். ஸகாத் வழங்குவது தண்டனைகளில் இருந்து நம்மைக் காக்கும் செயல்பாடாகும்.
'என்னுடைய வேதனையைக் கொண்டு நான் நாடியவரைப் பிடிப்பேன். ஆனால், என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனைப் பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஸகாத்து கொடுத்து வருவோருக் கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக் கும் நான் விதித்தருள் செய்வேன்" என்று (அல்லாஹ்) கூறினான்' (7:156).
என்ற வசனம் இதனை உணர்த்து கின்றது.
'செல்வந்தர்கள் தமது செல்வங்களுக் கான ஸகாத்தை வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள். கால்நடைகள் மட்டும் இல்லையென்றால் மழையே பொழியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : இப்னு மாஜா
5- அல்லாஹ்வின் அருள்:
'முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார் கள். தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். (ஏழை வரியாகிய) ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்' (9:71).
அல்லாஹ்வின் அருளைப் பெற்றவரால் தான் சுவனம் செல்ல முடியும். அல்லாஹ்வின் அருளைப் பெற ஸகாத் ஒரு வழியாகும்.
6- அல்லாஹ்வின் உதவி:
'நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்' (5:12)
'அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்குத் திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான்' (22:40).
இந்த வசனங்கள், தொழுகையும் ஸகாத்தும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிட்டும் என்பதை உணர்த்துகின்றன.
7- இஸ்லாமிய சகோதரத்துவம்:
ஸக்காத் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அடிப்படையாகும்.
'
ஆயினும், அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து வருவார்களா னால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்' (9:11).
இவ்வசனம், ஸக்காத்தை வழங்க மறுப்பவர்கள் காபிர்கள் என்ற கருத்தைத் தருகின்றது.
'அவர்கள்தாம் ஸகாத்தைக் கொடுக்காதவர்கள். மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!'
(41:7).
என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றது.
8. வெற்றியாளர்கள்:
'இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றியாளர்கள்' (2:5).
இந்த வசனம் ஸகாத் வழங்குவது நேர்வழி என்பதையும், அதை நிறைவேற்றுவோர்தான் வெற்றியாளர்கள் என்ற கருத்தையும் தருகின்றது.
எப்போது கொடுக்க வேண்டும்?
'நிஸாப்' எனப்படும் குறிப்பிட்ட அளவையுடைய பணமோ பொருளோ ஒருவரிடம் ஒரு வருடம் இருந்தால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
ரமழானில்தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ரமழானில் 'ஸதகா' வலியுறுத்தப்படுகின்றது. எனினும், ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும் எனும் போது, இந்த ஜனவரிக்குக் கொடுத்தவர் அடுத்த ஜனவரிக்கு மறுமுறை கணக்குப்பார்க்க வேண்டும் என்று கூற முடியாது. ஏனெனில், நாள், மாத, வருட கணிப்பு அனைத்தும் 'சந்திர' கணக்கு அடிப்படையில் கணித்தே இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சூரிய வருடத்திற்கும், சந்திர வருடத்திற்கும் இடையே நாட்கள் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. எனவே, சந்திர கணக்கு அடிப்படையில் வருடத்தைக் கணித்து கொடுக்க வேண்டும். இன்று பலருக்கு இது சாத்தியப்படாததாக இருப்பதனால், ரமழான் மாதத்தை வருடத்தைத் தீர்மானிப்பதற்கான அளவீடாகக் கொள்வது அவரவர் கணக்கு வைத்துக்கொள்ள வசதியாக அமையலாம். எனினும் ரமழானில் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து தவறானதாகும்.
கூட்டு நடைமுறையின் அவசியம்:
ஸகாத்தைத் அவரவர் தனித்தனியாக வழங்காது கூட்டாக சேகரித்து வழங்குவது அவசியமாகும்.
'(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..' (9:103).
என்ற வசனம் ஸகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து எடுங்கள் என்று கூறப்படுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,
'அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்' எனக் கூறியுள்ளார்கள்'
அறிவிப்பவர்: முஆத் (ரலி).,
நூல்: முஸ்லிம்
இந்த நபிமொழி ஸகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
ஸகாத் பெற தகுதியான எட்டு கூட்டம் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது ஸகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.
'(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,..' (9:60).
என்று கூறுகின்றது. இதுவும் ஸக்காத்தைச் சேகரிக்க ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இந்த அடிப்படையில் ஸகாத்தை ஒரு குழு சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
1) அதிக மூலதனம்:
ஒரு ஊரில் ஸகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் ஐம்பது பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஸகாதும் ஒன்று திரட்டப்பட்டால் ஸகாத்தின் தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள பத்துப் பேருடைய பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
2) திட்டமிட்ட பகிர்ந்தளிப்பு:
கூட்டுமுறையில் ஸகாத் சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
3) அனைவரையும் சென்றடையும்:
கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஸகாத் சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.
4) சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:
தேவையுடையோர் தனித்தனி நபர்களையணுகி ஸகாத் பெற முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய கௌரவம் பாதிக்கப்படுகின்றது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயகௌரவம் பாதுகாக்கப்படுகின்றது.
5) தற்பெருமைக்கு இடமிருக்காது
தனித்தனியாக ஸகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமை எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஸகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் ஸலாம் சொல்லவேண்டும்; பல்லிளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் எடுபட்டு செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.
6) ஸகாத்தின் நோக்கம் நிறைவேறும்:
தனித்தனியாய் 100, 200 என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது அல்லது தொழில் செய்வதற் கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஸகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.
7) கணக்குப் பார்க்காத ஸகாத்:
நூற்றுக்கு இரண்டரை வீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஸகாத்தை நிறைவேற்றிவிட்டதாக எண்ணுகின்றனர். கூட்டு நடைமுறையூடாக இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.
8) பிச்சைக்கார சமூகத்தை உருவாக்கல்:
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஹதியா, பித்ரா என்ற பெயரில் படையெடுக்கும் பிச்சைக்காரக் கூட்டம் இதற்கு நிதர்சன சான்றாகும்.
9) சுய கௌரவமுள்ள ஏழைகள் பாதுகாக்கப்படல்:
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையால் சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள ஏழை கள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும்; தாழ்ந்து செல்லும் துர்ப்பாக்கியம் நிகழ்கின்றது. கூட்டு முறையில் வழங்கும் போது இவர்களும் அப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
10) குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை:
கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் நாடு பூராகச் சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று கொள்ளை லாபம் பெற, இப்பழக்கமற்ற நல்லோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
11) சொந்தப் பகுதிக்கு ஸகாத் செல்லாமை:
ஒரு ஊரிலுள்ள ஸகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஸகாத் பெறுகின்றான். இது ஸகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும்.
12) பரஸ்பரம் புரிந்துணர்வு:
கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர் கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஸகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் தூய எண்ணத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
உண்மை உதயம் மாதஇதழ் 2007

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 23 டிசம்பர், 2020

கொலைக் குற்றத்திற்கும்மன்னிப்புண்டு

(அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்,
உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். "இல்லை!" என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான்.
பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். 'தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு "தவ்பா" (பாவமன்னிப்பு) உண்டா?' என்றும் கேட்டான். "உண்டு, உனக்கும், தவ்பாவுக்குமிடையே தடையாக இருப்பவர் யார்? நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்" என்று கூறினார்.


அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், 'தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்' என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, 'அவன் நன்மையை அறவே செய்ததில்லை' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள்.
அவர் கூறினார்; 'அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!' என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
இந்த நபிமொழி, ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உட்பட பல்வேறு ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் மூலம் பல நல்ல படிப்பினைகளை நாம் பெறமுடிகின்றது.
1) முதலாவதாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் விசாலமானது என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது! 100 கொலைகள் செய்தவன் கூட தனது பாவத்தை உணர்ந்து தௌபாச் செய்து பாவமன்னிப்புக் கோரினால் அந்த அளவற்ற அருளாளன் – நிகரற்ற அன்புடையவன் அதை அங்கீகரித்து கருணை காட்டக்கூடியவனாக இருக்கின்றான்.
2) தௌபாவின் சிறப்பை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
'(நபியே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாக வேண்டுகின்றனர். குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் வேதனை அவர்களிடம் வந்திருக்கும். நிச்சயமாக அது அவர்கள் உணர்ந்துகொள்ளாத நிலையில் திடீரென அவர்களிடம் வரும்.' (29:53)
இந்த வசனத்தில் பாவத்தில் வரம்பு மீறிச் சென்றவர்களைக் கூட, 'என்னுடைய அடியார்களே! நீங்கள் என் ரஹ்மத்தில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நான் கொலை உட்பட அனைத்துத் தவறுகளையும் மன்னிக்கக்கூடியவன் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.
ஒரு ஹதீஸுல் குத்ஸியில்,
'எனது அடியார்களே! நீங்கள் இரவு-பகலாக பாவம் செய்பவர்கள்தான். நானோ, அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கக்கூடியவன். என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கின்றேன்' என கூறுகின்றான்.
(முஸ்லிம்)
எனவே தௌபா என்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கக்கூடியது. ஷிர்க் உட்பட அனைத்துப் தவறுகளுக்கும் தௌபாவின் மூலம் மன்னிப்புப் பெறலாம். ஷிர்க்கைப் பொறுத்தவரையில் அதே நிலையில் மரணித்து விட்டால், மன்னிப்பே இல்லை. ஏனைய தவறுகளைப் பொறுத்தவரையில் உலகத்தில் மன்னிப்புக் கேட்டால் மன்னிப்புக் கிடைக்கும். மன்னிப்புக் கேட்காமல் மரணித்து விட்டால், அல்லாஹ் நாடினால் மன்னிப்பான்; நடினால் தண்டிப்பான். தண்டித்த பின் ஈமான் இருப்பதால், இணை வைக்காது வாழ்ந்ததால் என்றாவது ஒரு நாள் நரகத்திலிருந்து அவரை அல்லாஹ் வெளியேற்றுவான். எனவே, எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்புண்டு. செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டு அதன் பின்பு தவறு செய்யாது வாழவேண்டும்.
3) அறிவின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
மார்க்க அறிவு அற்ற, வணக்க-வழிபாட்டில் அதிக ஆர்வம் கொண்டவரிடம் "பத்வா" கேட்ட போது, அவர் அறிவுடன் பதில் கூறாது உணர்ச்சி வசப்பட்டு 'உனக்கு மன்னிப்பு இல்லை' என்கிறார். இதனால், ஆத்திரமுற்ற அம்மனிதர் மீண்டும் அதே தவறைச் செய்யும் நிலைக்குள்ளானார்.
ஆனால், அறிஞரிடம் கேட்ட போது 'மன்னிப்பு உண்டு' என்று பதில் கூறியதுடன், நல்ல மனிதராகத் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டுகின்றார். இதன் மூலம் அறிவற்ற வணக்கவாளியை விட அறிஞனின் அந்தஸ்த்துத் தெளிவுபடுத்தப்படுகின்றது! எனவே, நாம் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்வது அவசியமாகும்.
4) அடுத்து, இந்த ஹதீஸ் பத்வா-மார்க்கத் தீர்ப்புக் கேட்கும் போது தகுதியானவரை அறிந்து கேட்க வேண்டும் எனக் கற்றுத் தருகின்றது. இபாதத்தில் ஈடுபடும் அனைவரும் மார்க்கத் தீர்ப்புக் கூறுவதற்குத் தகுதியானவர்களல்ல. எனவே, கற்றறிந்த ஆலிம்களிடம் மார்க்க விளக்கங்களை, தீர்ப்புக்களைப் பெற முயலவேண்டும். "ஆலிம்" என்ற போர்வையில் இருக்கக்கூடிய குர்ஆன்-ஸுன்னா பற்றிய ஆழமான அறிவு அற்றவர்களிடமோ அல்லது போலியான உருவமைப்பையும் வெளி அடையாளங்களையும் கொண்டு திகழ்பவர்களிடமோ மார்க்க பத்வாக்களைப் பெற்று நம்மை நாமே அழித்துக்கொள்ளாது ஆலிம்களிடம் மார்க்கத் தீர்வைப் பெறவேண்டும்.
5) தமக்கு ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த, சரியான விளக்கம் தெரியாத விஷயத்தில் எவரும் தீர்ப்புக் கூற முனையக்கூடாது என்பதையும் இந்த ஹதீஸ் மூலம் அறியலாம். முதலாவதாகப் பதில் கூறியவர் உணர்ச்சி வசப்பட்டுப் பதில் கூறியதால் அநியாயமாகக் கேள்வி கேட்டவர் மீண்டும் அதே தவறைச் செய்யும் நிலை தோன்றியுள்ளது!
6) இரண்டாவதாக, "பத்வா" கூறியவர் கேள்விக்குப் பதில் மட்டும் கூறாமல் 'நீ இந்த ஊரில் இருக்காதே! அருகில் நல்ல ஊர் இருக்கின்றது. அங்கே போய் அந்த மக்களுடன் சேர்ந்து வாழ்' என அவர் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டுகின்றார். மக்களுக்கு மார்க்கம் கூறுபவர்கள் வெறுமனே பதில் கூறுபவர்களாக மட்டும் இருக்காது, அந்தப் பதிலுக்கு ஏற்ப வாழ்வதற்கான வழியையும் காட்ட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
'வட்டி எடுக்காதே' என்று சொன்னால் மட்டும் போதாது, வட்டியை விட்டும் விலகி வாழ வழிகாட்ட வேண்டும். "பித்அத்" செய்யாதே என்று கூறினால் மட்டும் போதாது, அதற்குண்டான "ஸுன்னா"வையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை இந்த ஹதீஸ் மூலம் பெறமுடியும்.
7) அடுத்து, நல்ல சூழலில் வாழ்வதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது! அந்த "ஆலிம்" திருந்தி வாழ விரும்பிய மனிதனுருக்கு அவன் இருக்கும் கெட்ட ஊரை விட்டும் விலகி, நல்ல மக்கள் வாழும் இடத்திற்குப் போகுமாறு கூறுகின்றார். எனவே, சூழல் மனிதனிடம் தாக்கம் செலுத்தும். இந்த வகையில் நாம் வாழும் சூழலை நல்ல சூழலாக மாற்றுவது அல்லது நல்ல சூழலுக்கு இடம்மாறுவது அவசியமாகும்.
குறிப்பாக, அநாச்சாரங்களும் ஒழுக்கச் சீர்கேடுகளும் மலிந்து போன இக்காலத்தில் நாமும் நமது குழந்தைகளும் கெட்டு விடாத நல்ல சூழலை நமது வாழ்விடமாக மாற்றிக்கொள்வது அவசியமாகும். நாம் "தக்வா"வுடையவர்களுடன் சேர்ந்தும் இருக்க வேண்டும். இந்த வகையில் நாம் வாழும் சூழல் குறித்துக் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
8) "கொலைக் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டு" என்பதையும் இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.
"கொலை" என்பது மிகக் கொடிய குற்றமாகும். அடுத்த மனிதனின் உரிமைகள் விடயத்தில் இழைக்கப்படும் கொடிய அத்துமீறலாகவும் அது திகழ்கின்றது. கொலைக்கு இஸ்லாம் மரண தண்டனையை விதித்துள்ளது. இருப்பினும் 'கொலை செய்தவன் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டால் மன்னிப்புக் கிடைக்குமா? கிடைக்காதா?' என்று கேட்டால், "கிடைக்கும்" என்ற கருத்தைத்தான் இஸ்லாம் கூறுகின்றது.
9) "ஒரு முஃமினை வேண்டுமென்றே கொன்றவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான்" என பின்வரும் வசனம் கூறுகின்றது.
'நம்பிக்கையாளரான ஒருவரை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ, அவனுக்குரிய கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனைச் சபித்தும் விட்டான். அவனுக்கு மகத்தான வேதனையையும் அவன் தயார் செய்து வைத்துள்ளான்.' (4:93)
இந்த வசனத்தை வைத்து கொலை செய்தவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஏனைய ஸஹாபாக்கள் மாற்றுக் கருத்தில் இருக்கின்றனர்.
"இபாதுர் ரஹ்மான்" எனும் அல்லாஹ்வின் அடியார்கள் பற்றி அல்குர்ஆன் கூறும் போது, 'அவர்கள் இணை வைக்க மாட்டார்கள், கொலை செய்ய மாட்டார்கள், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இவற்றைச் செய்பவருக்குக் கடுமையான தண்டனை உண்டு' என்று கூறுகின்றது. (பார்க்க 25:63-69)
இவற்றைச் செய்து விட்டு, முறையாக தௌபாச் செய்து நல்லவர்களாக மாறுபவர்களுக்கு மாவமன்னிப்பு மட்டுமன்றி அவர்கள் செய்த பாவங்களே நன்மைகளாக மாற்றப்படும் என அதற்கு அடுத்த வசனம் கூறுகின்றது.
'எனினும், யார் பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நல்லறமும் புரிகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.' (25:70)
இந்த வசனம் மிகத் தெளிவாகவே "கொலைகாரன் தௌபாச் செய்தால், மன்னிப்பு உண்டு" என்று கூறுகிறது!
அடுத்து, நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களிடம் "பைஅத்" வாங்கும் போது, "இணை வைக்கக்கூடாது, திருடக்கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது, கொலை செய்யக்கூடாது" என்றெல்லாம் கூறி விட்டு, "யார் இவற்றைச் செய்கிறாரோ, அவர் உலகில் தண்டிக்கப்படுவார். யார் இவற்றைச் செய்து அல்லாஹ் அதை மறைத்து விட்டானோ, அவனை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்|" என்று கூறினார்கள். (உப்பாததிப்னு ஸாமித் – புகாரி)
மேற்படி ஹதீஸும் "கொலை செய்தவனை அவன் தௌபாச் செய்யாமல் மரணித்திருந்தாலும், அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்" என மன்னிப்பு-தண்டிப்பு இரண்டையுமே அல்லாஹ்வின் நாட்டத்தில் விட்டுள்ளது. அல்லாஹ் யாரை மன்னிப்பான்? யாரைத் தண்டிப்பான்? என்பது அவனது அதிகாரத்திற்குட்பட்டது. அதில் யாரும் தலையிட முடியாது!
கொலைகாரனுக்கு மன்னிப்பே இல்லையென்றால் பல ஸஹாபாக்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்து விடுவர். ஹம்ஸாவைக் கொன்ற வஹ்ஷி. இவ்வாறே, முஸ்லிம்களுக்கு எதிராக போர்க் களங்களில் யுத்தம் செய்து விட்டுப் பின்னர் இஸ்லாத்தில் இணைந்த இக்ரிமா(ரலி), துமாமா(ரலி), காலித் பின் வலீத்(ரலி) போன்ற பலரும் மன்னிப்பு அற்றவர் பட்டியலில் சேர நேரிடும். எனவே, கொலை செய்தவன் மரணிப்பதற்கு முன்னரே தௌபாச் செய்தால் அவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால், இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருந்தால் இஸ்லாமிய சட்டப் பிரகாரம் அவர் குற்றவியல் சட்டப்படி கொல்லப்படுவார் அல்லது கொல்லப்பட்டவரின் குடும்பம் மன்னித்தால் மன்னிக்கப்படுவார்.
மரணித்த பின் அவர் தண்டிக்கப்பட்டால், நரகில் நீண்ட காலம் இருப்பார். ஆனால், "ஷிர்க்"குடன் மரணித்தவர் போன்று என்றென்றும் நரகிலேயே இருக்க மாட்டார். என்றாவது ஒரு நாள் அவர் நரகத்தை விட்டும் மீட்கப்பட்டுச் சுவனத்தில் நுழைவிக்கப்படுவார் என்பதே சரியான கருத்தாகும்.
"முஃதஸிலாக்கள்" எனும் வழிகெட்ட பிரிவினரும், "கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை, அவன் நீடித்து நிலையாக நரகத்தில் இருப்பான்" என்ற கருத்தில் இருக்கின்றனர்.
இக்கொள்கையைச் சார்ந்த ஒருவன்,
'கொலைகாரன் நரகத்தில் நிலையாக இருப்பான் என்று நீ ஏன் கூறினாய்?' என அல்லாஹ் மறுமையில் என்னிடம் கேட்டால், 'யா அல்லாஹ்! நீதான் (4:93) இப்படிக் கூறினாயே! அதனால்தான் நான் அப்படிக் கூறினேன்' எனப் பதில் கூறுவேன்' என தன் வாதத்தை நியாயப்படுத்தி கூறினான்.
அப்போது அச்சபையில் இருந்த ஒரு சிறுவர் 'இணை வைத்தலைத் தவிர ஏனைய பாவங்களை நான் நாடினால் மன்னிப்பேன் என்று கூறினேனே! கொலை என் நாட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று உனக்குக் கூறியது யார்? என்று அல்லாஹ் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்ட போது, அந்த வழிகேடன் வாயடைத்துப் போனான்.
எனவே, தௌபாச் செய்தால் கொலைக்கும் மன்னிப்பு உண்டு என்பதே சரியான கருத்தாகும். இதைத்தான் குர்ஆனும் கூறுகின்றது! அந்தக் குர்ஆனின் கூற்றை உறுதி செய்வதாக இந்த ஹதீஸும் அமைந்துள்ளது.
10) அடுத்து இந்த ஹதீஸ் கொலைகாரனுக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுவதன் மூலம் கொலைக் குற்றம் பெருகுவதைத் தடுக்கின்றது! "கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை" என்று கூறினால், ஒரு கொலை செய்தாலும் நரகம்-நரகம்தான். பத்துக் கொலை செய்தாலும் நரகம்தானே என்ற அடிப்படையில் செயற்பட ஆரம்பித்து விடுவான். "கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை" என்று கூறுவது கொலைக் குற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. 'மன்னிப்பு இல்லை' என்று கூறியவனையே அவன் கொன்றுள்ளான்.
எனவே, கெட்டவனுக்கும் திருந்தி வாழ வழி விடவேண்டும். அல்லாஹ்வின் அன்பை விடக் கோபத்தை முதன்மைப்படுத்திப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானாலும் கொலையை எப்படி மன்னிப்பது என்பது கேள்வியாக இருக்கலாம். ஆனால், அல்லாஹ்வின் அன்பையும், விசாலமான அவனது மன்னிப்பையும் முதன்மைப்படுத்திப் பார்ப்பவர்களுக்கு கொலைகாரனுக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான் என்பது மறுப்பதற்குரிய ஒன்றாகத் திகழாது!
எனவே இந்த ஹதீஸ் கொலைக்கு மன்னிப்பு உண்டு எனக் கூறி, இன்னும் இன்னும் கொலை செய்! என்று தூண்டவில்லை. கொலை செய்தால் மன்னிப்பு உண்டு! திருந்தி வாழ்! என வழிகாட்டுகின்றது.
11) அடுத்தது, மார்க்க விடயங்களில் கேள்வி கேட்பது இன்று அதிகரித்துள்ளது! ஆனால், சொந்த வாழ்வில் அமல் செய்வதற்காகக் கேள்வி கேட்காமல் சும்மா கேட்பதற்காக அல்லது பரீட்சித்துப் பார்ப்பதற்காக, 'என்ன சொல்றார் என்று பார்ப்போமே!' என்ற எண்ணத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்வி கேட்பவர் தகுந்த பதில் கிடைத்தால், அதை அமல் செய்ய வேண்டும். இந்த மனிதர் அந்த ஆலிம் கூறியபடி தனது சொந்த ஊரை விட்டு விட்டு நல்ல ஊரை நோக்கி "ஹிஜ்ரத்" செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே, அமல் செய்வதற்காக இஸ்லாத்தை அறிந்துகொள்ள முற்படவேண்டும்.
12) நல்ல விடயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.
'உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள மன்னிப்பின் பக்கமும், வானங்கள் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவர்க்கத்தின் பக்கமும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அது பயபக்தியாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.' (3:133)
எனக் குர்ஆன் கூறுகின்றது. எனவே, நல்ல விடயங்களைத் தாமதப்படுத்தாது அவசரமாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் குறுக்கிட்டு நல்லதைச் செய்ய விடாமல் தடுத்து விடுவான். இந்த ஹதீஸ் அவர் நல்ல ஊரை நோக்கி ஒரு அடி அதிகமாகச் சென்றதால் இவர் நன்மையின் பக்கம் சற்று விரைவாகச் சென்றுள்ளார் என்ற அடிப்படையில் அவரது "ரூஹ்" ரஹ்மத்துடைய மலக்குகளால் எடுத்துச் செல்லப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது.
இவ்வாறு, பல்வேறுபட்ட நல்ல பாடங்களையும் படிப்பினைகளையும் இந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. இந்தப் பாடங்களைப் படிப்பினையாகக் கொண்டு செயற்பட முனைவோமாக!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts