லேபிள்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2019

வரிச் சேமிப்பு... கூடுதல் வழிகள்!


வருமான வரியைச் செலுத்தி முடிக்கும் நேரம் இது. வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின், ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் முழுவதையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்களா? 'யெஸ்' எனில், உங்களுக்கான அடுத்த கேள்வி, 80டி பிரிவின்படி மெடிக்கல் இன்ஷூரன்ஸ், மருத்துவச் செலவுகளுக்கான வரிச் சலுகையும் பயன்படுத்தி முடித்துவிட்டீர்களா என்பதுதான்.
வரிச் சலுகை பெறும் விஷயத்தில், பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த வரிச் சலுகைப் பிரிவுகளின் வரம்புகள் அனைத்தையும் பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், வருமான வரிச் சேமிப்புக்காக, சட்டத்துக்கு உட்பட்டு மேலும் சில வழிமுறைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வழிமுறைகளை இனி உங்களுக்கு விளக்குகிறேன்.

மூலதன இழப்பை ஈடுகட்டுதல்

நீங்கள் வாங்கிய ஒரு மூலதனச் சொத்தை, வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கு விற்கும்போது அதில் பண இழப்பு ஏற்படுகிறது. நீங்கள் வாங்கிய விலையைவிட அதிக விலைக்கு விற்றிருந் தால் அதில் கிடைக்கும் லாபத்துக்கு வரிச் செலுத்த வேண்டும்.

அந்த மூலதனச் சொத்தின் வகை, அது நீண்ட கால மூலதனமா அல்லது குறுகிய கால மூலதனமா, இண்டெக்ஸேஷன் சலுகைகள் மற்றும் வருமானவரி வரம்பு போன்றவற்றின் அடிப்படையில் நீங்கள் கட்ட வேண்டிய வரி கணக்கிடப்படும்.
மூலதன இழப்பை ஈடுகட்ட மூலதன ஆதாயத்தைப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் கட்ட வேண்டிய வரியைக் குறைக்க முடியும். குறுகியகால மூலதன இழப்புகளை, நீண்ட கால மற்றும் குறுகியகால மூலதன ஆதாயத்தில் ஈடு கட்டலாம். நீண்டகால மூலதன இழப்பை, நீண்டகால மூலதன ஆதாயத்துடன் மட்டுமே ஈடுகட்ட முடியும். இதர வருமானத்துடன் ஈடுகட்ட முடியாது.

பெற்றோருக்கு வீட்டு வாடகை

சொந்த ஊரிலேயே அலுவலகம் அல்லது பெற்றோரின் வீட்டருகே இருக்கும்பட்சத்தில் பலர் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து வசிக்கிறார்கள். அந்த வீடு, உங்களுடைய பெற்றோருக்குச் சொந்தமானதாக அல்லது பெற்றோர் இணை உரிமையாளர்களாக இருந்தால், அந்த வீட்டுக்காக உங்களுடைய பெற்றோருக்கு வாடகை செலுத்தியதை வரிச் சலுகைக்குக் காட்டலாம். அந்த வீட்டு வாடகை, உங்களுடைய வரிக் கட்டும் வருமானத்திலிருந்து கழிக்கப்படும்.
இதில், உங்களுடைய பெற்றோர், தங்களுடைய வருமான வரிக் கணக்கில் இந்த வாடகையை வருமானமாகக் காட்ட வேண்டும். பெற்றோர், அவர்களுடைய வருமான வரி வரம்புக்கேற்ப அதற்கு வரி செலுத்தவேண்டும்.

நன்கொடை வழங்குதல்

பலர், தங்களது வருமானத்தில் ஒரு பகுதி யையோ அல்லது ஒருநாள் சம்பளத்தையோ நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தருகிறார்கள். ஆனால், அவற்றை தங்களது வருமானவரிக் கழிவுக்குக் காட்டுவதில்லை. நீங்கள் நற்காரியத்துக்காக அளிக்கும் தொகைக்கு வரிக்கழிவு உண்டு. குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு அளிக்கும் தொகைக்கு 50 - 100% வரை வரிக்கழிவு அளிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, தேசியப் பாதுகாப்பு நிதியத்துக்கு அளிக்கும் தொகைக்கு 100% முழுமையான வரிவிலக்கு உண்டு. அப்படிச் செலுத்தும் தொகையை வருமானவரிக் கழிவுக்குப் பயன்படுத்துவதற்கு, மறக்காமல் ரசீது பெற்றுக்கொள்ளவும்.

கூட்டுக் குடும்ப வரிச் சேமிப்பு

கூட்டுக் குடும்பம் என்பது, தனக்கென தனித்த பான் கார்டு கொண்டிருக்கும். இப்படிக் கூட்டுக் குடும்பத்தை உருவாக்குவது, அதில் உள்ள தனிநபர்களின் வரிச் சேமிப்புக்கு உதவும். ஒரு தனிநபர் பெறக்கூடிய அனைத்து வரிச் சலுகைகளையும் இவர்களால் பெற இயலும். கூட்டுக் குடும்ப முறையில் இருப்பவர்களின் வருமானம், அனைத்து உறுப்பினர்களாலும் பகிரப்படுவதால், வரிச்சுமை குறைய வாய்ப்புண்டு.

பெற்றோரின்மூலம் முதலீடு செய்தல்

மூத்த குடிமக்களாக இருக்கும் உங்கள் பெற்றோரின் ஆண்டு வருமானத்துக்கு ரூ.3 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. எனவே, உங்களுடைய பெற்றோருக்கு முதலீடு அல்லது சொத்தை அன்பளிப்பாகத் தருவதன்மூலம் வரிச் சலுகை பெறலாம். இந்தச் சொத்து அல்லது முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ரூ.3 லட்சம் வரை வரி ஏதும் கட்ட தேவையில்லை. உங்களுடைய பெற்றோருக்கு ரூ.37.5 லட்சம் அன்பளிப்பாகத் தரும்பட்சத்தில், அதை அவர்கள் ஆண்டுக்கு 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால், இதன்மூலம் வட்டி / வருமானம் அல்லது லாபமாக ரூ.3 லட்சம் கிடைத்தால் அவர்கள் வரி கட்டத் தேவையில்லை. இதை உங்களுடைய தாய், தந்தை என இருவரின் வங்கிக் கணக்கிலும் செய்யலாம் என்பதால், மொத்தம் ரூ.75 லட்சம் வரை அவர்களுக்குக் கொடுத்து வரியை மிச்சப்படுத்தலாம்.

பங்கு முதலீட்டில் லாபம்

நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நிதியாண்டில் உங்களுடைய நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டால் 10.4% வரி செலுத்த வேண்டும். அதனால் நீங்கள் ஓராண்டு காலம் வரை முதலீடு செய்து, அதைத் திரும்ப எடுத்து மீண்டும் முதலீடு செய்வதன்மூலம் வரிச் சேமிப்பு செய்யலாம்.

உதாரணமாக, ஓராண்டுக்குமுன் பங்குச் சந்தையில் ரூ.2 லட்சம் முதலீடு செய்திருந்து, அதன் மதிப்பு தற்போது ரூ.2.8 லட்சமாக இருக்கும்பட்சத்தில், அந்தப் பங்குகளை விற்பனை செய்தால், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்காது. இந்த ரூ.2.8 லட்சத்தை மீண்டும் முதலீடு செய்து, ஓராண்டுக்குப்பிறகு, அதன் மதிப்பு ரூ.3.5 லட்சமாக உயர்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தப் பங்குகளை விற்பனை செய்து, மீண்டும் வாங்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்வதன் மூலம் பங்கு முதலீட்டில் நீண்டகால ஆதாய வரியைச் சேமிக்கலாம். இதைச் செயல்படுத்தும்போது பங்குத் தரகுக் கட்டணத்தைக் கணக்கில்கொள்ளவும்.
http://pettagum.blogspot.com/2019/03/blog-post_21.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts