லேபிள்கள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

வரியைச் சேமிக்கும் 30 வழிகள்..!


ம்மில் பலருக்கு எந்த முதலீட்டுக்கு அல்லது எந்தச் செலவுக்கு எவ்வளவு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்கிற விவரம் தெரியாமலே இருக்கிறது. இதனால் வரிச் சலுகை தரும் திட்டங்களில் முதலீடு செய்யாமல், ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போடுகிறார்கள். இங்கே நாம் சொல்லியிருக்கிற வருமான வரியைச் சேமிக்கும் 30 வழிகளின்படி நீங்கள் நடந்தால், வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்!

பொதுவாக, 60 வயதுக்கு உட்பட்டவர்களின் நிதி ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது, வருமான வரி கட்ட வேண்டிவரும். 60 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உள்ளது.

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5%, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%, அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30% வருமான வரி கட்ட வேண்டும். இந்த வரி விகிதத்தின்மீது ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை 4% சேர்த்து வரி கட்ட வேண்டும்.

* 80
சி பிரிவு

வரிச் சேமிப்பு என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வருமான வரிப் பிரிவான 80சிதான். அதன்கீழ் வரிச் சலுகை கிடைக்கும் முதலீடுகள் மற்றும் செலவுகளைப் பார்ப்போம்.

1.
ஆயுள் காப்பீடு

வரிதாரர், ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. ஆயுள் காப்பீடு என்கிறபோது, காப்பீடு மட்டும் அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பது நல்லது. ஒருவரது ஆண்டுச் சம்பளத்தைப்போல் 10-12 மடங்கு தொகைக்கு இந்த பாலிசியை எடுப்பது அவசியம்.

2.
பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்ட் (EPF)

சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. பொதுவாக, இந்த முதலீட்டின் மூலமான பணத்தை பணி ஓய்வுக்காலம் வரை எடுக்காமல் இருப்பது நல்லது.

இந்தத் தொகையிலிருந்து இடையே கல்வி, மருத்துவம், திருமணச் செலவு, மனை, வீடு வாங்குவது போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ள லாம். இந்தத் தொகையைத் திரும்பக் கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகளுக்குள் எடுக்கப்படும் தொகைக்கு வரி கட்டவேண்டும். இதில் சேர்க்கும் தொகைக்கு தற்போது ஆண்டுக்கு 8.55% வட்டி தரப்படுகிறது. இதில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை.

3.
விருப்ப பிராவிடெண்ட் ஃபண்ட் (VPF)

வி.பி.எஃப் என்கிற விருப்ப பிராவிடெண்ட் ஃபண்ட் மூலம் பி.எஃப் தொகையுடன் கூடுதலாக முதலீடு செய்யலாம். இந்தத் தொகைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இந்தத் தொகை ஒருவரின் பி.எஃப் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த முதலீட்டுக்கும் ஆண்டுக்கு 8.55% வட்டி தரப்படு கிறது. இதன் மூலமான வருமானத்துக்கும் வரி இல்லை.

4.
பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (PPF)

சுயதொழில் செய்பவர்கள், அதிக ஓய்வூதியம் வேண்டும் என்கிறவர்கள், சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்படாதவர்கள் எனப் பலரும் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். தபால் அலுவலகம், வங்கிகள்மூலம் முதலீடு செய்து வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்.

இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 8% வட்டி தரப்படுகிறது. முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாக இருக்கிறது.

பி.எஃப் போல், இதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி இல்லை. ஆறாவது ஆண்டிலிருந்து கடன் பெறும் வசதி இருக்கிறது. இதற்கான வட்டி, முதலீட்டுக்கு அளிக்கப்படும் வட்டியைவிட 2% அதிகமாக இருக்கும்.

5.
வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் (ELSS)

பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (இ.எல்.எஸ்.எஸ்) மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். இதே அளவு தொகையை எஸ்.ஐ.பி மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது. இதன் வருமானம் பங்குச் சந்தையைச் சார்ந்துள்ளது (கடந்த 3 - 5 ஆண்டுகளில் சராசரி வருமானம் 13-15% தந்துள்ளது. இதில் செய்யப்படும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. (கூடுதல் விவரங்களுக்கு 30-ம் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்)

6.
ஐந்தாண்டு வங்கி எஃப்.டி

வங்கிகள் வழங்கும் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. இதில் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆகவும், வருமானம் 7.6 - 8.25 சதவிகிதமாகவும் உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி உண்டு.

ரிஸ்க் வேண்டாம் என்கிறவர்களுக்கும் அடிப்படை வருமான வரம்பு 5 சதவிகிதத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்றது. வட்டியானது முதிர்வுக் காலம் வரை மாறாது. வருமானத்துக்கு வரி கட்டவேண்டும் என்பது பாதகமான அம்சம். வட்டி வருமானம் ஓராண்டில் ரூ.10,000-க்கு மேல் செல்லும்போது டி.டி.எஸ் பிடிக்கப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த முதலீட்டை நாடலாம்.

7.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)

தபால் அலுவலகத்தின் ஐந்தாண்டு முதலீட்டுத் திட்டமான தேசிய சேமிப்புச் சான்றிதழில் (என்.எஸ்.சி) செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. வட்டி வருமானம் ஆண்டுக்கு 8%. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது. இது பாதுகாப்பான முதலீடு என்றாலும், இதன்மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும். அடிப்படை வருமான வரம்பு 5 சதவிகிதத்தில் இருப்பவர்களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கும் ஏற்றது.

8.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

60
வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரியைச் சேமிக்கும் திட்டம். தபால் அலுவலகம், வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000.

இந்தத் திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 8.7%. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது. முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகளாகும். வருமானத்துக்கு வரி உண்டு. ரிஸ்க்கே வேண்டாம் என்று நினைக்கிறவர்களுக்கு ஏற்றது. ரூ.15 லட்சம் வரை இதில் முதலீடு செய்ய லாம். என்றாலும், ரூ.1.5 லட்சத்துக்கு மட்டுமே நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும்.

9.
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS)

ஓய்வூதிய சலுகை இல்லாதவர்கள் கூடுதலாக பென்ஷன் தேவை என்கிறவர்கள், மத்திய அரசின் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம்.இதில் சொல்லப்படும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500. வருமானம் என்பது (தற்போதைய நிலையில் ஆண்டுக்கு) 10-11% ஆகும். 60 வயதுக்கு பிறகே முதலீட்டை எடுக்க முடியும். ஓய்வூதியத் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டிவரும்.

10.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள்

ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் (80 சிசிசி) பென்ஷன் திட்டங்களின் முதலீட்டுக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

11.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் (80 சிசிடி) பென்ஷன் திட்டங்களின் முதலீட்டுக்கும் வரிச் சலுகை உண்டு.

12.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்

சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள்தான் சேர முடியும். தற்போது ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை உண்டு.

13.
தபால் அலுவலக டைம் டெபாசிட்

ஐந்தாண்டு தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இதில் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 ஆகும். தற்போது ஆண்டுக்கு 7.8% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டும்.

14.
பிள்ளைகளின் கல்விக் கட்டணம்

பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரி சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. இரு பிள்ளைகளுக்குத்தான் இந்த வரிச் சலுகை கிடைக்கும்.

15.
வீட்டுக் கடன் அசல்

சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதற்கு வாங்கும் வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலில் ரூ. 1.5 லட்சம் ரூபாய் வரை நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து முதலீடுகள் மற்றும் செலவுகளைச் சேர்ந்து 80சி பிரிவின் கீழ் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

16.
என்.பி.எஸ் கூடுதல் வரிச் சலுகை 80CCD1(b)

ஓய்வூதியச் சலுகை இல்லாத வர்கள், கூடுதலாக பென்ஷன் தேவை என்கிறவர்கள் என்.பி.எஸ் திட்டத்தில் 80சி பிரிவைத் தாண்டி 80CCD(1)b-யின் கீழ் ரூ.50,000 வரைக்கும் செய்யும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. 80சி மூலம் ரூ.1.5 லட்சம், இந்தப் பிரிவின் மூலம் ரூ.50,000-ஆக மொத்தம் ரூ.2 லட்சம் வரைக்கும் ஒருவர் நிதியாண்டில் என்.பி.எஸ் முதலீடு மூலம் வரிச் சலுகை பெற முடியும்.

17.
வீட்டுக் கடன் வட்டி (24(b))

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி சொந்த உபயோகம் மற்றும் வாடகைக்கு விட்டிருந்தால், திரும்பக்கட்டும் வட்டியில் நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

18.
வீட்டு வாடகைப் படி (10(13A))

*
வசிக்கும் வீட்டுக்குத் கொடுக்கப்படும் வாடகைக்கு வரிவிலக்குச் சலுகை உண்டு. இதற்கு மொத்தச் சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் வாடகை யாகத் தந்திருக்க வேண்டும். வசிக்கும் நகரம், பணியாளர் சம்பளத்தில் பெறும் வீட்டு வாடகைப் படி ஆகியவற்றைப் பொறுத்துக் கழிவு இருக்கிறது.

வீட்டு வாடகை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேலே என்றால், வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை வீட்டு வாடகை ரசீதில் குறிப்பிடுவது கட்டாயம்.

19
வீட்டு வாடகைக்கு வரிச் சலுகை (80GG)

சம்பளத்துடன் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கவில்லை என்றால், நிபந்தனைக்கு உட்பட்டு மாதம் அதிகபட்சம் ரூ.5,000 வரை வீட்டு வாடகையை வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

20.
கல்விக் கடன் வட்டி (80E)

வரிதாரர் வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியைத் திரும்பக் கட்டுவதில் வரிச் சலுகை இருக்கிறது. நிதியாண்டில் செலுத்தும் வட்டிக்குக் கிடைக்கும் வரிச் சலுகைக்கு வரம்பு இல்லை. வட்டி கட்ட ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் வரை தான் வரிச் சலுகை கிடைக்கும்.

21.
மருத்துவக் காப்பீடு (80D)

60
வயதுக்கு உட்பட்ட வரிதாரர் மற்றும் குடும்பத்தினருக்கு எடுக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுக்கு கட்டும் பிரீமியத்தில் ரூ.25,000 வரை வரிச் சலுகை இருக்கிறது. இதில், உடல் பரிசோதனைக்கு அளிக்கப்படும் ரூ.5,000 சேரும்.

வரிதாரர் அவரின் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோருக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி எடுத்தால் கூடுதலாக ரூ.25,000-ஆக மொத்தம் ரூ.50,000 பீரிமியம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் என்றால், அவர்களுக்கு ரூ.50,000 பிரீமியம் வரைக்கும் வரிச் சலுகை அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், வரிதாரர் அவரின் மூத்த குடிமகனாக இருக்கும் பெற்றோருக்கும் ஹெல்த் பாலிசி எடுத்தால் ரூ. 75,000 பீரிமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. மேலும், மூத்த குடிமக்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவச் செலவு மற்றும் ஹெல்த் பாலிசி பிரீமியம் சேர்த்து நிதியாண்டில் அவர்களுக்கு ரூ.50,000 வரை வரிச் சலுகை உண்டு.

22.
உடல் ஊனமுற்ற வரிதாரர் (80U)

வருமான வரிகட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.75,000 வரிச் சலுகை உண்டு. இதுவே தீவிரமான உடல் ஊனம் என்றால், ரூ.1.25 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது.

23.
மருத்துவச் சிகிச்சைக்கான செலவு (80DD)

வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள, செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.75,000 (தீவிரப் பாதிப்புக்கு ரூ.1.25 லட்சம்) வரை வருமான வரிச் சலுகை இருக்கிறது.

24.
தீவிர நோய்களுக்கான சிகிச்சை (80DDB)

எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரிச் சலுகை உள்ளது.

25.
நன்கொடை (80G)

பிரதமர் நிவாரண நிதி, கல்லூரிக்குக் கொடுக்கும் நன்கொடை எனப் பல நன்கொடை களுக்கு 50% - 100% வரை வரிச் சலுகை இருக்கிறது.

26.
விடுமுறை சுற்றுலா படி {10(5)}

விடுமுறை சுற்றுலா படி (Leave travel allowance) என்பது ஒரு நிறுவனத்தால், பணிபுரிபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கக்கூடிய தொகையாகும். இது ஒருவர் வாங்கும் அடிப்படை சம்பளத்தைவிட அதிகமாக இருக்கும். சுற்றுலா சென்றதற்கான ஆதாரங்களை நிறுவனத்திடம் தந்தால் வரிச் சலுகை பெற முடியும்.

27.
கிராஜூவிட்டி (10(10))

ஒரு நிறுவனத்தில் ஐந்தாண்டுக்குமேல் பணியாற்றுபவர்களுக்கு கிராஜூவிட்டி அளிக்கப் படுகிறது. இதில் ரூ.10 லட்சம் வரை வரி இல்லை.

28.
உணவு கூப்பன்கள் (17(2)(viii))

சில நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு சொடக்ஸோ (Sodexo) போன்ற உணவு கூப்பன் களை வழங்குகின்றன. இப்படி ஒரு மாதத்துக்கு வழங்கப்படும் ரூ.2,600 மதிப்புள்ள கூப்பன்களுக்கு வரி கிடையாது.

29.
இணையம் மற்றும் தொலைபேசிக் கட்டணம் (10(14))

நிறுவனங்கள் பணியாளர்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் இணையம் மற்றும் தொலைபேசிக் கட்டணத்துக்கு வழங்கப்படும் தொகைக்கு வரி இல்லை. மாதம் ரூ.2,000 வரிச் சலுகை பெறலாம்.

30.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை (80GGC)

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.
-
சி.சரவணன்
பிள்ளைகளின் கல்விக் கட்டணம் - டிப்ஸ்

தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் எனில் ஒரு பிள்ளைக்கு தாயும், இன்னொரு பிள்ளைக்கு தந்தையும் வரி சலுகை பெறுவதன் மூலம் அதிகமான வரியைச் சேமிக்க முடியும்.
இவற்றுக்கும் வரிச் சலுகை!

நிலைக்கழிவு (STANDARD DEDUCTION) ரூ.40,000, சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொழில் வரி (Professional Tax), நிறுவனம் வழங்கும் இரு குழந்தைகளின் கல்விபடி (Child educataion Allowance) ரூ.2,400 ஆகியவற்றுக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

தேவை, கூடுதல் கவனம்!

முதலீட்டுக்கான திட்டங்களைத் தேர்வு செய்யும்முன் வருமானம், மூலதனம் மீதான பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் தன்மை, வருமானம் மீதான வரி, முதலீட்டுக்கான செலவு போன்றவற்றைக் கவனிப்பது அவசியம். இவை ஒருவரின் தேவை மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து அமைவது நல்லது.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஏ.சி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மறந்து விடாதீர்கள்!

உடலை சுட்டெரிக்கும் வகையில் வெயில் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் அதை சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஏ.சிதான். அதை நாம் சரியான ம...

Popular Posts