லேபிள்கள்

திங்கள், 23 செப்டம்பர், 2019

பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?


ஓய்வுபெற்ற எனக்கு, பி.எஃப்மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு நான் வரி கட்ட வேண்டுமா? ரூ.40,000 வரிவிலக்கு எனக்குப் பொருந்துமா?
சிஏ.ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர் 

''
இ.பி.எஃப்.ஓ மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு வரி கட்ட வேண்டும். ஏனெனில், இது சம்பளம் என்னும் வருமானத் தலைப்பிற்குள் அடங்கும். மேலும், இதற்கு வருமான வரிப் பிரிவு 16-ன்கீழ், நிலைக் கழிவாக ஆண்டுக்கு ரூ.40,000 வரை சலுகை அளிக்கப் படுகிறது. அன்கம்யூட்டட் (Uncommuted) முறையில் ஒவ்வொரு மாதமும் பெறும் ஓய்வூதியத்துக்கு வரி உண்டு.
கம்யூட்டட்(Commuted) முறையில் ஒரே தவணை யாகப் பெறும் ஓய்வூதியத்துக்கு அரசு ஊழியர்களுக்கு முழு வருமான வரி விலக் கும், தனியார் ஊழியர் களுக்குப் பகுதி வரி விலக்கும் (Partial Exemption) அளிக்கப்பட்டுள்ளது.''

என் வயது 79. எனது நீண்ட கால, குறுகிய கால ஆதாயங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் வரி செலுத்துவதற்கான வரம்பிற்கு உட்பட்டே இருக்கிறது. என்றாலும், இந்த ஆதாயங்களுக்காக நான் வரி செலுத்த வேண்டுமா?

என்.பி. இசை அழகன், ஆடிட்டர்
''
உங்கள் வயது 60-க்கு மேல் இருப்பதால், ரூ.3 லட்சம் வரை வருமான வரிவிலக்கு உள்ளது. உங்கள் வருமானம் வரி வரம்புக்குக் கீழே இருப்பதால், நீங்கள் வருமான வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை.''

என் வயது 65. மகனுடன் வசித்துவருவதால், எனது வீட்டை விற்க முடிவெடுத்துள்ளேன். அதை விற்றால் கிடைக்கக்கூடிய 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, மாதமொன்றுக்குக் குறைந்தது ரூ.35,000 வரை வருமானம் ஈட்ட விரும்புகிறேன். அதற்கேற்ற முதலீட்டு ஆலோசனை கூறவும்.

த.முத்துக்கிருஷ்ணன், நிதி ஆலோசகர்
''
உங்களுக்குத் தேவைப்படும் வருமானம், மாதம் 35,000 ரூபாய் எனில், ஆண்டுக்கு 4,20,000 ரூபாய். 50 லட்சம் ரூபாய் முதலீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 4.5 லட்சம் ரூபாய் பெற 8.4% வருமானம் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால், ஓராண்டு முடிந்தவுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.35,000 பெறலாம். ஆண்டுக்கு 12% வரை வருமானம் வர வாய்ப்புள்ள இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 50 லட்சம் ரூபாயை இரண்டாகப் பிரித்து முதலீடு செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி & டெட் ஃபண்ட் மற்றும் எல் அண்டு டி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.''

2017-18-
ம் நிதியாண்டில் சொத்தை விற்றது மூலம் 80 லட்சம் ரூபாயை மூலதன ஆதாயமாகப் பெற்றுள்ளேன். அதே ஆண்டில், மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்குப் பெற ரூ.50 லட்சத்தை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டில் முதலீடு செய்துள்ளேன். மீதி்முள்ள 30 லட்சம் ரூபாயை, இப்போது இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டில் முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்குமா?

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்
''
வரி விலக்குக்காக இரண்டு முறை க்ளெய்ம் செய்ய முடியாது. எனவே, 50 லட்சம் ரூபாய் மட்டுமே வரி விலக்குக்கு ஏற்கப்படும். மீதமுள்ள 30 லட்சம் ரூபாய்க்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.''

நான் வீடு வாங்கவுள்ள லே-அவுட்டுக்கு அருகிலுள்ள சாலையின் ஓரத்தில் 'AF' என்று எழுதிய அளவைக் கற்கள் ஆங்காங்கே நடப் பட்டுள்ளன. அது விமானப்படைக்குச் சொந்தமாக அகலப்படுத்தப்படவுள்ள சாலை என்று கூறுகிறார்கள். இதுகுறித்த விவரத்தை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?
த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

''
நீங்கள் வீடு வாங்கவுள்ள பகுதியின் கிராம நிர்வாக அலுவலரை அணுகி விசாரிக்கலாம். அவரிடம் இதுகுறித்த தகவல்கள் இருக்கும். ஒருவேளை, இதுகுறித்த சரியான விவரம் அவரிடம் இல்லையென்றால், நகர் திட்டமிடல் அலுவலர் (Town planning officer) அல்லது நில அளவையாளர்மூலம் அதுகுறித்த விவரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.''

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கமுடியுமா? ஏதேனும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும்போது க்ளெய்ம் செய்யலாமா?

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
''
வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். இந்தியாவில் சிகிச்சை எடுத்தால் மட்டுமே இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளெய்ம் செய்ய முடியும். அதேபோல், இந்தியர் அல்லாதவராக இருந்தாலும், முறையான பணி அனுமதியுடன், இந்திய ரூபாயில் சம்பளம் பெறுபவராக இருந்தால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க அனுமதியுண்டு.''

எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ரிலையன்ஸ் லார்ஜ்கேப் ஃபண்ட், மிர்ரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் மற்றும் எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்டுகள் ஒவ்வொன்றிலும் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறேன். இது சரியா?

அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர்
''
உங்களின் போர்ட்ஃபோலி யோவைப் பார்க்கும்போது, நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாள ராகத் தெரிகிறீர்கள். குறுகிய காலத்தில் இந்த முதலீட்டில் பெரிய பலனை எதிர்பார்க்க இயலாது. 7-10 ஆண்டுகள் முதலீட்டை எஸ்.ஐ.பி முறையில் தொடர்வதாக இருந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.''

இந்துக் குடும்பத்தில் இரண்டாவது மனைவியின் வாரிசுகளுக்குச் சொத்தில் சட்டப்படி பங்கு உண்டா?

என்.ரமேஷ், வழக்கறிஞர்
''
இந்து சட்டப்படி, இரண்டாம் திருமணம் என்பது சட்டத்திற்கு முரணானதாக இருக்கலாம். ஆனால், அந்தத் திருமணத்தின் காரணமாகப் பிறக்கும் குழந்தைகள் சட்டப் படியான வாரிசுகள்தான். எனவே, இரண்டாவது மனைவியின் வாரிசுகளுக்குச் சொத்தில் சட்டப்படி பங்கு உண்டு.''
Courtesy: vikatan.con/nanayamvikatan
http://pettagum.blogspot.com/2019/04/blog-post_25.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 19 செப்டம்பர், 2019

வரிச் சேமிப்பு... கூடுதல் வழிகள்!


வருமான வரியைச் செலுத்தி முடிக்கும் நேரம் இது. வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின், ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் முழுவதையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்களா? 'யெஸ்' எனில், உங்களுக்கான அடுத்த கேள்வி, 80டி பிரிவின்படி மெடிக்கல் இன்ஷூரன்ஸ், மருத்துவச் செலவுகளுக்கான வரிச் சலுகையும் பயன்படுத்தி முடித்துவிட்டீர்களா என்பதுதான்.
வரிச் சலுகை பெறும் விஷயத்தில், பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த வரிச் சலுகைப் பிரிவுகளின் வரம்புகள் அனைத்தையும் பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், வருமான வரிச் சேமிப்புக்காக, சட்டத்துக்கு உட்பட்டு மேலும் சில வழிமுறைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வழிமுறைகளை இனி உங்களுக்கு விளக்குகிறேன்.

மூலதன இழப்பை ஈடுகட்டுதல்

நீங்கள் வாங்கிய ஒரு மூலதனச் சொத்தை, வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கு விற்கும்போது அதில் பண இழப்பு ஏற்படுகிறது. நீங்கள் வாங்கிய விலையைவிட அதிக விலைக்கு விற்றிருந் தால் அதில் கிடைக்கும் லாபத்துக்கு வரிச் செலுத்த வேண்டும்.

அந்த மூலதனச் சொத்தின் வகை, அது நீண்ட கால மூலதனமா அல்லது குறுகிய கால மூலதனமா, இண்டெக்ஸேஷன் சலுகைகள் மற்றும் வருமானவரி வரம்பு போன்றவற்றின் அடிப்படையில் நீங்கள் கட்ட வேண்டிய வரி கணக்கிடப்படும்.
மூலதன இழப்பை ஈடுகட்ட மூலதன ஆதாயத்தைப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் கட்ட வேண்டிய வரியைக் குறைக்க முடியும். குறுகியகால மூலதன இழப்புகளை, நீண்ட கால மற்றும் குறுகியகால மூலதன ஆதாயத்தில் ஈடு கட்டலாம். நீண்டகால மூலதன இழப்பை, நீண்டகால மூலதன ஆதாயத்துடன் மட்டுமே ஈடுகட்ட முடியும். இதர வருமானத்துடன் ஈடுகட்ட முடியாது.

பெற்றோருக்கு வீட்டு வாடகை

சொந்த ஊரிலேயே அலுவலகம் அல்லது பெற்றோரின் வீட்டருகே இருக்கும்பட்சத்தில் பலர் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து வசிக்கிறார்கள். அந்த வீடு, உங்களுடைய பெற்றோருக்குச் சொந்தமானதாக அல்லது பெற்றோர் இணை உரிமையாளர்களாக இருந்தால், அந்த வீட்டுக்காக உங்களுடைய பெற்றோருக்கு வாடகை செலுத்தியதை வரிச் சலுகைக்குக் காட்டலாம். அந்த வீட்டு வாடகை, உங்களுடைய வரிக் கட்டும் வருமானத்திலிருந்து கழிக்கப்படும்.
இதில், உங்களுடைய பெற்றோர், தங்களுடைய வருமான வரிக் கணக்கில் இந்த வாடகையை வருமானமாகக் காட்ட வேண்டும். பெற்றோர், அவர்களுடைய வருமான வரி வரம்புக்கேற்ப அதற்கு வரி செலுத்தவேண்டும்.

நன்கொடை வழங்குதல்

பலர், தங்களது வருமானத்தில் ஒரு பகுதி யையோ அல்லது ஒருநாள் சம்பளத்தையோ நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தருகிறார்கள். ஆனால், அவற்றை தங்களது வருமானவரிக் கழிவுக்குக் காட்டுவதில்லை. நீங்கள் நற்காரியத்துக்காக அளிக்கும் தொகைக்கு வரிக்கழிவு உண்டு. குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு அளிக்கும் தொகைக்கு 50 - 100% வரை வரிக்கழிவு அளிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, தேசியப் பாதுகாப்பு நிதியத்துக்கு அளிக்கும் தொகைக்கு 100% முழுமையான வரிவிலக்கு உண்டு. அப்படிச் செலுத்தும் தொகையை வருமானவரிக் கழிவுக்குப் பயன்படுத்துவதற்கு, மறக்காமல் ரசீது பெற்றுக்கொள்ளவும்.

கூட்டுக் குடும்ப வரிச் சேமிப்பு

கூட்டுக் குடும்பம் என்பது, தனக்கென தனித்த பான் கார்டு கொண்டிருக்கும். இப்படிக் கூட்டுக் குடும்பத்தை உருவாக்குவது, அதில் உள்ள தனிநபர்களின் வரிச் சேமிப்புக்கு உதவும். ஒரு தனிநபர் பெறக்கூடிய அனைத்து வரிச் சலுகைகளையும் இவர்களால் பெற இயலும். கூட்டுக் குடும்ப முறையில் இருப்பவர்களின் வருமானம், அனைத்து உறுப்பினர்களாலும் பகிரப்படுவதால், வரிச்சுமை குறைய வாய்ப்புண்டு.

பெற்றோரின்மூலம் முதலீடு செய்தல்

மூத்த குடிமக்களாக இருக்கும் உங்கள் பெற்றோரின் ஆண்டு வருமானத்துக்கு ரூ.3 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. எனவே, உங்களுடைய பெற்றோருக்கு முதலீடு அல்லது சொத்தை அன்பளிப்பாகத் தருவதன்மூலம் வரிச் சலுகை பெறலாம். இந்தச் சொத்து அல்லது முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ரூ.3 லட்சம் வரை வரி ஏதும் கட்ட தேவையில்லை. உங்களுடைய பெற்றோருக்கு ரூ.37.5 லட்சம் அன்பளிப்பாகத் தரும்பட்சத்தில், அதை அவர்கள் ஆண்டுக்கு 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால், இதன்மூலம் வட்டி / வருமானம் அல்லது லாபமாக ரூ.3 லட்சம் கிடைத்தால் அவர்கள் வரி கட்டத் தேவையில்லை. இதை உங்களுடைய தாய், தந்தை என இருவரின் வங்கிக் கணக்கிலும் செய்யலாம் என்பதால், மொத்தம் ரூ.75 லட்சம் வரை அவர்களுக்குக் கொடுத்து வரியை மிச்சப்படுத்தலாம்.

பங்கு முதலீட்டில் லாபம்

நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நிதியாண்டில் உங்களுடைய நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டால் 10.4% வரி செலுத்த வேண்டும். அதனால் நீங்கள் ஓராண்டு காலம் வரை முதலீடு செய்து, அதைத் திரும்ப எடுத்து மீண்டும் முதலீடு செய்வதன்மூலம் வரிச் சேமிப்பு செய்யலாம்.

உதாரணமாக, ஓராண்டுக்குமுன் பங்குச் சந்தையில் ரூ.2 லட்சம் முதலீடு செய்திருந்து, அதன் மதிப்பு தற்போது ரூ.2.8 லட்சமாக இருக்கும்பட்சத்தில், அந்தப் பங்குகளை விற்பனை செய்தால், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்காது. இந்த ரூ.2.8 லட்சத்தை மீண்டும் முதலீடு செய்து, ஓராண்டுக்குப்பிறகு, அதன் மதிப்பு ரூ.3.5 லட்சமாக உயர்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தப் பங்குகளை விற்பனை செய்து, மீண்டும் வாங்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்வதன் மூலம் பங்கு முதலீட்டில் நீண்டகால ஆதாய வரியைச் சேமிக்கலாம். இதைச் செயல்படுத்தும்போது பங்குத் தரகுக் கட்டணத்தைக் கணக்கில்கொள்ளவும்.
http://pettagum.blogspot.com/2019/03/blog-post_21.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 16 செப்டம்பர், 2019

சொத்து ஆவணங்களைத் தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?


முதலில், வழக்கறிஞர் (Advocate) மூலம் ஒரு தமிழ் மற்றும் ஓர் ஆங்கில நாளிதழில் பத்திரம் காணாமல் போனது பற்றிய பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதில், சொத்து சம்பந்தமான முழு விவரங்கள், சர்வே எண், விஸ்தீரணம் (Area), பட்டா எண், அதன் நான்கு எல்லைகள், பத்திரப்பதிவு எண் உட்பட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும். அந்த அசல் பத்திரத்தை வைத்துக்கொண்டு யாரும் தவறான வழியில் அடமானம் வைத்து கடன் பெறுதல் போன்றவை செய்யக் கூடாது என்றும், இது சம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஏழு நாள்களுக்குள் தெரிவிக்குமாறும் அதில் குறிப்பிட வேண்டும்.

பொது அறிவிப்பு வெளியான ஏழு நாள்களுக்குப் பிறகு, ஒரு 20 ரூபாய் பத்திரத் தாளில் (Stamp paper) உறுதிமொழிப்பத்திரம் (Affidavit) தயார் செய்ய வேண்டும். அதில், அந்தப் பத்திரம் எங்கு எப்படித் தொலைந்தது என்கிற தகவலையும் சொத்து விவரங்களையும் முழுவதுமாகக் குறிப்பிட்டு, பத்திர எண், பதிவுசெய்த சார்பதிவாளர் அலுவலகத்தின் விவரம், யாரிடமிருந்து வாங்கினோமோ அவருடைய பெயர் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும். அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் நாம் கையொப்பமிடுவதோடு, நோட்டரி (Notary) ஒருவரிடமும் கையொப்பம் பெற வேண்டும். பிறகு, நாம் எந்தப் பகுதியில் ஒரிஜினல் பத்திரத்தைத் தொலைத்தோமோ அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு (Inspector - Crime Branch) அவர்களிடம் பின்வரும் ஆவணங்களின் நகல்களை இரண்டு தொகுப்பு (Set) இணைத்துப் புகார் அளிக்க வேண்டும்.

 1. பத்திர நகல், 2. புகைப்பட அடையாளச் சான்று (Id Proof) மற்றும் இருப்பு முகவரி சான்று (Residential Proof) - ஆதார் அட்டை போதுமானது, 3. நாளிதழ்களில் வெளியான பொது அறிவிப்பு (Paper advertisement), 4. வில்லங்கச் சான்றிதழ் (E.C-அன்றைய தேதி வரை), 5. உறுதிமொழிப்பத்திரம்.

நாம் புகார் கொடுக்கும் இடம் மாநகராட்சி யின் எல்லைக்குள் அமைந்தால், அது குற்ற ஆவணக் காப்பகம் (CRB - Crime Record Bureau)-க்கும், மற்ற இடங்களில் அமைந்தால், அது மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் (DCRB District Crime Record Bureau) அலுவலகத்துக்கும் அனுப்பப்படும். நாம் அனுப்பிய ஆவணங்களை மேற்கண்ட துறையில் பரிசீலனைசெய்து, அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, அத்துறையால் பராமரிக்கப்படும் குற்றம் மற்றும் நிகழ்வுத்தாள் (C&O sheet - Crime and occurance sheet)-ல் பதிவுசெய்து, அதற்கு ஓர் இலக்கம் கொடுத்து, திரும்பவும் நாம் புகார் கொடுத்த காவல் நிலையத்துக்கு அனுப்புவார்கள்.

அந்த காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் நமக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார். அதில் நாம் பத்திரத்தை எங்கு தொலைத்தோம், சொத்தின் முழு விவரங்கள், பத்திர எண் முதலியவற்றைக் குறிப்பிட்டு, crime & occurance sheet-ல் வெளியிடப்பட்டது என்றும், அதற்குக் கொடுக்கப்பட்ட இலக்கத்தையும் குறிப்பிட்டு, மேலும் அந்தப் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தச் சான்றிதழ் பெற்ற பிறகு, சொத்து பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகத்தில் நாம் தொலைத்த / தவறவிட்ட பத்திரத்தின் நகலுக்கு (Copy of document) விண்ணப்பம் செய்து, நகலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக பத்திரம் தொலைந்துவிட்டாலும் நகலைப் பெறுவதற்கு சொத்து சம்பந்தமான விவரங்கள் நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு, சொத்துப் பத்திரத்தின் நகல் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் சொத்துப் பத்திரங்களை ஒரு நகல் எடுத்து, அதை ஒரிஜினல் பத்திரங்களுடன் வைக்காமல் தனியாக வைக்க வேண்டும்.
http://pettagum.blogspot.com/2019/02/blog-post.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

வரியைச் சேமிக்கும் 30 வழிகள்..!


ம்மில் பலருக்கு எந்த முதலீட்டுக்கு அல்லது எந்தச் செலவுக்கு எவ்வளவு வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்கிற விவரம் தெரியாமலே இருக்கிறது. இதனால் வரிச் சலுகை தரும் திட்டங்களில் முதலீடு செய்யாமல், ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போடுகிறார்கள். இங்கே நாம் சொல்லியிருக்கிற வருமான வரியைச் சேமிக்கும் 30 வழிகளின்படி நீங்கள் நடந்தால், வருமான வரியைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்!

பொதுவாக, 60 வயதுக்கு உட்பட்டவர்களின் நிதி ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது, வருமான வரி கட்ட வேண்டிவரும். 60 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உள்ளது.

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5%, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%, அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30% வருமான வரி கட்ட வேண்டும். இந்த வரி விகிதத்தின்மீது ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை 4% சேர்த்து வரி கட்ட வேண்டும்.

* 80
சி பிரிவு

வரிச் சேமிப்பு என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வருமான வரிப் பிரிவான 80சிதான். அதன்கீழ் வரிச் சலுகை கிடைக்கும் முதலீடுகள் மற்றும் செலவுகளைப் பார்ப்போம்.

1.
ஆயுள் காப்பீடு

வரிதாரர், ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. ஆயுள் காப்பீடு என்கிறபோது, காப்பீடு மட்டும் அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பது நல்லது. ஒருவரது ஆண்டுச் சம்பளத்தைப்போல் 10-12 மடங்கு தொகைக்கு இந்த பாலிசியை எடுப்பது அவசியம்.

2.
பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்ட் (EPF)

சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. பொதுவாக, இந்த முதலீட்டின் மூலமான பணத்தை பணி ஓய்வுக்காலம் வரை எடுக்காமல் இருப்பது நல்லது.

இந்தத் தொகையிலிருந்து இடையே கல்வி, மருத்துவம், திருமணச் செலவு, மனை, வீடு வாங்குவது போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ள லாம். இந்தத் தொகையைத் திரும்பக் கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. பணியில் சேர்ந்து ஐந்தாண்டுகளுக்குள் எடுக்கப்படும் தொகைக்கு வரி கட்டவேண்டும். இதில் சேர்க்கும் தொகைக்கு தற்போது ஆண்டுக்கு 8.55% வட்டி தரப்படுகிறது. இதில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை.

3.
விருப்ப பிராவிடெண்ட் ஃபண்ட் (VPF)

வி.பி.எஃப் என்கிற விருப்ப பிராவிடெண்ட் ஃபண்ட் மூலம் பி.எஃப் தொகையுடன் கூடுதலாக முதலீடு செய்யலாம். இந்தத் தொகைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இந்தத் தொகை ஒருவரின் பி.எஃப் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த முதலீட்டுக்கும் ஆண்டுக்கு 8.55% வட்டி தரப்படு கிறது. இதன் மூலமான வருமானத்துக்கும் வரி இல்லை.

4.
பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (PPF)

சுயதொழில் செய்பவர்கள், அதிக ஓய்வூதியம் வேண்டும் என்கிறவர்கள், சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்படாதவர்கள் எனப் பலரும் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். தபால் அலுவலகம், வங்கிகள்மூலம் முதலீடு செய்து வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்.

இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 8% வட்டி தரப்படுகிறது. முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாக இருக்கிறது.

பி.எஃப் போல், இதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி இல்லை. ஆறாவது ஆண்டிலிருந்து கடன் பெறும் வசதி இருக்கிறது. இதற்கான வட்டி, முதலீட்டுக்கு அளிக்கப்படும் வட்டியைவிட 2% அதிகமாக இருக்கும்.

5.
வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் (ELSS)

பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (இ.எல்.எஸ்.எஸ்) மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். இதே அளவு தொகையை எஸ்.ஐ.பி மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது. இதன் வருமானம் பங்குச் சந்தையைச் சார்ந்துள்ளது (கடந்த 3 - 5 ஆண்டுகளில் சராசரி வருமானம் 13-15% தந்துள்ளது. இதில் செய்யப்படும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. (கூடுதல் விவரங்களுக்கு 30-ம் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்)

6.
ஐந்தாண்டு வங்கி எஃப்.டி

வங்கிகள் வழங்கும் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. இதில் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆகவும், வருமானம் 7.6 - 8.25 சதவிகிதமாகவும் உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி உண்டு.

ரிஸ்க் வேண்டாம் என்கிறவர்களுக்கும் அடிப்படை வருமான வரம்பு 5 சதவிகிதத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்றது. வட்டியானது முதிர்வுக் காலம் வரை மாறாது. வருமானத்துக்கு வரி கட்டவேண்டும் என்பது பாதகமான அம்சம். வட்டி வருமானம் ஓராண்டில் ரூ.10,000-க்கு மேல் செல்லும்போது டி.டி.எஸ் பிடிக்கப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த முதலீட்டை நாடலாம்.

7.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)

தபால் அலுவலகத்தின் ஐந்தாண்டு முதலீட்டுத் திட்டமான தேசிய சேமிப்புச் சான்றிதழில் (என்.எஸ்.சி) செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. வட்டி வருமானம் ஆண்டுக்கு 8%. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது. இது பாதுகாப்பான முதலீடு என்றாலும், இதன்மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும். அடிப்படை வருமான வரம்பு 5 சதவிகிதத்தில் இருப்பவர்களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கும் ஏற்றது.

8.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

60
வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரியைச் சேமிக்கும் திட்டம். தபால் அலுவலகம், வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000.

இந்தத் திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 8.7%. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது. முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகளாகும். வருமானத்துக்கு வரி உண்டு. ரிஸ்க்கே வேண்டாம் என்று நினைக்கிறவர்களுக்கு ஏற்றது. ரூ.15 லட்சம் வரை இதில் முதலீடு செய்ய லாம். என்றாலும், ரூ.1.5 லட்சத்துக்கு மட்டுமே நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும்.

9.
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS)

ஓய்வூதிய சலுகை இல்லாதவர்கள் கூடுதலாக பென்ஷன் தேவை என்கிறவர்கள், மத்திய அரசின் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம்.இதில் சொல்லப்படும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500. வருமானம் என்பது (தற்போதைய நிலையில் ஆண்டுக்கு) 10-11% ஆகும். 60 வயதுக்கு பிறகே முதலீட்டை எடுக்க முடியும். ஓய்வூதியத் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டிவரும்.

10.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள்

ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் (80 சிசிசி) பென்ஷன் திட்டங்களின் முதலீட்டுக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

11.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பென்ஷன் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் (80 சிசிடி) பென்ஷன் திட்டங்களின் முதலீட்டுக்கும் வரிச் சலுகை உண்டு.

12.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்

சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள்தான் சேர முடியும். தற்போது ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை உண்டு.

13.
தபால் அலுவலக டைம் டெபாசிட்

ஐந்தாண்டு தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இதில் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 ஆகும். தற்போது ஆண்டுக்கு 7.8% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டும்.

14.
பிள்ளைகளின் கல்விக் கட்டணம்

பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரி சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. இரு பிள்ளைகளுக்குத்தான் இந்த வரிச் சலுகை கிடைக்கும்.

15.
வீட்டுக் கடன் அசல்

சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதற்கு வாங்கும் வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலில் ரூ. 1.5 லட்சம் ரூபாய் வரை நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து முதலீடுகள் மற்றும் செலவுகளைச் சேர்ந்து 80சி பிரிவின் கீழ் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

16.
என்.பி.எஸ் கூடுதல் வரிச் சலுகை 80CCD1(b)

ஓய்வூதியச் சலுகை இல்லாத வர்கள், கூடுதலாக பென்ஷன் தேவை என்கிறவர்கள் என்.பி.எஸ் திட்டத்தில் 80சி பிரிவைத் தாண்டி 80CCD(1)b-யின் கீழ் ரூ.50,000 வரைக்கும் செய்யும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. 80சி மூலம் ரூ.1.5 லட்சம், இந்தப் பிரிவின் மூலம் ரூ.50,000-ஆக மொத்தம் ரூ.2 லட்சம் வரைக்கும் ஒருவர் நிதியாண்டில் என்.பி.எஸ் முதலீடு மூலம் வரிச் சலுகை பெற முடியும்.

17.
வீட்டுக் கடன் வட்டி (24(b))

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி சொந்த உபயோகம் மற்றும் வாடகைக்கு விட்டிருந்தால், திரும்பக்கட்டும் வட்டியில் நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

18.
வீட்டு வாடகைப் படி (10(13A))

*
வசிக்கும் வீட்டுக்குத் கொடுக்கப்படும் வாடகைக்கு வரிவிலக்குச் சலுகை உண்டு. இதற்கு மொத்தச் சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் வாடகை யாகத் தந்திருக்க வேண்டும். வசிக்கும் நகரம், பணியாளர் சம்பளத்தில் பெறும் வீட்டு வாடகைப் படி ஆகியவற்றைப் பொறுத்துக் கழிவு இருக்கிறது.

வீட்டு வாடகை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேலே என்றால், வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை வீட்டு வாடகை ரசீதில் குறிப்பிடுவது கட்டாயம்.

19
வீட்டு வாடகைக்கு வரிச் சலுகை (80GG)

சம்பளத்துடன் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கவில்லை என்றால், நிபந்தனைக்கு உட்பட்டு மாதம் அதிகபட்சம் ரூ.5,000 வரை வீட்டு வாடகையை வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

20.
கல்விக் கடன் வட்டி (80E)

வரிதாரர் வாங்கிய கல்விக் கடனுக்கான வட்டியைத் திரும்பக் கட்டுவதில் வரிச் சலுகை இருக்கிறது. நிதியாண்டில் செலுத்தும் வட்டிக்குக் கிடைக்கும் வரிச் சலுகைக்கு வரம்பு இல்லை. வட்டி கட்ட ஆரம்பித்து, எட்டு ஆண்டுகள் வரை தான் வரிச் சலுகை கிடைக்கும்.

21.
மருத்துவக் காப்பீடு (80D)

60
வயதுக்கு உட்பட்ட வரிதாரர் மற்றும் குடும்பத்தினருக்கு எடுக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுக்கு கட்டும் பிரீமியத்தில் ரூ.25,000 வரை வரிச் சலுகை இருக்கிறது. இதில், உடல் பரிசோதனைக்கு அளிக்கப்படும் ரூ.5,000 சேரும்.

வரிதாரர் அவரின் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோருக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி எடுத்தால் கூடுதலாக ரூ.25,000-ஆக மொத்தம் ரூ.50,000 பீரிமியம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் அல்லது மூத்த குடிமக்கள் என்றால், அவர்களுக்கு ரூ.50,000 பிரீமியம் வரைக்கும் வரிச் சலுகை அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், வரிதாரர் அவரின் மூத்த குடிமகனாக இருக்கும் பெற்றோருக்கும் ஹெல்த் பாலிசி எடுத்தால் ரூ. 75,000 பீரிமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. மேலும், மூத்த குடிமக்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துவச் செலவு மற்றும் ஹெல்த் பாலிசி பிரீமியம் சேர்த்து நிதியாண்டில் அவர்களுக்கு ரூ.50,000 வரை வரிச் சலுகை உண்டு.

22.
உடல் ஊனமுற்ற வரிதாரர் (80U)

வருமான வரிகட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.75,000 வரிச் சலுகை உண்டு. இதுவே தீவிரமான உடல் ஊனம் என்றால், ரூ.1.25 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது.

23.
மருத்துவச் சிகிச்சைக்கான செலவு (80DD)

வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள, செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.75,000 (தீவிரப் பாதிப்புக்கு ரூ.1.25 லட்சம்) வரை வருமான வரிச் சலுகை இருக்கிறது.

24.
தீவிர நோய்களுக்கான சிகிச்சை (80DDB)

எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரிச் சலுகை உள்ளது.

25.
நன்கொடை (80G)

பிரதமர் நிவாரண நிதி, கல்லூரிக்குக் கொடுக்கும் நன்கொடை எனப் பல நன்கொடை களுக்கு 50% - 100% வரை வரிச் சலுகை இருக்கிறது.

26.
விடுமுறை சுற்றுலா படி {10(5)}

விடுமுறை சுற்றுலா படி (Leave travel allowance) என்பது ஒரு நிறுவனத்தால், பணிபுரிபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கக்கூடிய தொகையாகும். இது ஒருவர் வாங்கும் அடிப்படை சம்பளத்தைவிட அதிகமாக இருக்கும். சுற்றுலா சென்றதற்கான ஆதாரங்களை நிறுவனத்திடம் தந்தால் வரிச் சலுகை பெற முடியும்.

27.
கிராஜூவிட்டி (10(10))

ஒரு நிறுவனத்தில் ஐந்தாண்டுக்குமேல் பணியாற்றுபவர்களுக்கு கிராஜூவிட்டி அளிக்கப் படுகிறது. இதில் ரூ.10 லட்சம் வரை வரி இல்லை.

28.
உணவு கூப்பன்கள் (17(2)(viii))

சில நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு சொடக்ஸோ (Sodexo) போன்ற உணவு கூப்பன் களை வழங்குகின்றன. இப்படி ஒரு மாதத்துக்கு வழங்கப்படும் ரூ.2,600 மதிப்புள்ள கூப்பன்களுக்கு வரி கிடையாது.

29.
இணையம் மற்றும் தொலைபேசிக் கட்டணம் (10(14))

நிறுவனங்கள் பணியாளர்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் இணையம் மற்றும் தொலைபேசிக் கட்டணத்துக்கு வழங்கப்படும் தொகைக்கு வரி இல்லை. மாதம் ரூ.2,000 வரிச் சலுகை பெறலாம்.

30.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை (80GGC)

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.
-
சி.சரவணன்
பிள்ளைகளின் கல்விக் கட்டணம் - டிப்ஸ்

தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் எனில் ஒரு பிள்ளைக்கு தாயும், இன்னொரு பிள்ளைக்கு தந்தையும் வரி சலுகை பெறுவதன் மூலம் அதிகமான வரியைச் சேமிக்க முடியும்.
இவற்றுக்கும் வரிச் சலுகை!

நிலைக்கழிவு (STANDARD DEDUCTION) ரூ.40,000, சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொழில் வரி (Professional Tax), நிறுவனம் வழங்கும் இரு குழந்தைகளின் கல்விபடி (Child educataion Allowance) ரூ.2,400 ஆகியவற்றுக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

தேவை, கூடுதல் கவனம்!

முதலீட்டுக்கான திட்டங்களைத் தேர்வு செய்யும்முன் வருமானம், மூலதனம் மீதான பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் தன்மை, வருமானம் மீதான வரி, முதலீட்டுக்கான செலவு போன்றவற்றைக் கவனிப்பது அவசியம். இவை ஒருவரின் தேவை மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து அமைவது நல்லது.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts