லேபிள்கள்

திங்கள், 3 ஜூன், 2019

பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்


அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே மிக விருப்பமான இடமாகிய பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல வழிகாட்டல்களை கற்றுத் தந்துள்ளார்கள். பள்ளிவாசலில் கடைபிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்கு முறைகளை இங்கு நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.
1. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலது காலை எடுத்து வைத்து நுழைய வேண்டும்.
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து நுழைவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும், ஸஹாபாக்களுடைய வழிமுறையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பொறுத்தவரையில் சிறப்பான காரியங்களில் ஈடுபடும் போது வலதையே முற்படுத்துவார்கள். பள்ளிவாசலுக்குள் நுழைவது சிறப்பான காரியம் என்ற அடிப்படையில் வலது காலை வைத்து நுழைவதை அறிஞர்கள் விரும்பத்தக்க ஒரு காரியமாகக் கருதியிருக்கின்றார்கள்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: 'நீ பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உனது வலது காலால் ஆரம்பிப்பதும், நீ வெளியேறினால் உனது இடது காலால் ஆரம்பிப்பதும் சுன்னாவைச் சேர்ந்த அம்சமாகும்." இச்செய்தி ஹாகிம் என்ற கிரந்தத்தில் ஹஸன் என்ற தரத்தில் பதிவாகியிருக்கின்றது.
புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவருடைய ஹதீஸ் கிரந்தத்தில் 'பள்ளிவாசலுக்குள் நுழையும்போதும் அதுவல்லாத காரியங்களிலும் வலதை முற்படுத்துதல்" என்று தலைப்பிட்டிருக்கின்றார்கள். பின்பு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது தனது வலது காலால் ஆரம்பிப்பார்கள், வெளியேறும் போது தனது இடது காலால் ஆரம்பிப்பார்கள் என்ற செய்தியை பதிய வைத்திருக்கின்றார்கள்.
எனவே, பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலதை முற்படுத்துவதை ஸஹாபாக்கள் சிறப்பான ஒரு காரியமாகக் கண்டிருக்கின்றார்கள் என்பதை இச்செய்திகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம். நாமும் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது எமது வலது காலை எடுத்து வைத்து நுழையக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
2. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓத வேண்டிய துஆவை ஒத வேண்டும்.
பள்ளிவாசலுக்குள் நுழையும்போது ஓதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு துஆக்களைக் கற்றுத்தந்துள்ளார்கள்.
முதலாவது துஆ: اللهم افتح لي أبواب رحمتك
இந்த துஆ முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
இரண்டாவது துஆ: أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم
இந்த துஆ அபூதாவுத் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அவருடைய அஸ்ஸஹீஹுல் முஸ்னத் என்ற நூலில் ஹஸன் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இந்த துஆ குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் சிறப்பம்சத்தைக் கூறியிருக்கின்றார்கள். 'யார் இந்த துஆவைக் கூறுகிறாரோ, அப்போது ஷைத்தான்: 'அவர் ஏனைய நாட்களில் என்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டார்' என்று கூறுவான்."
ஆகவே, மிகச்சிறிய இந்த துஆக்களை நாம் மனனம் செய்து பள்ளிவாசலுக்குள் நுழையும்போது ஓதக்கூடியவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக இரண்டாவது துஆவை நாம் ஓதுபவர்களாக இருந்தால் ஷைத்தானிடமிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
3. பள்ளிவாசலுக்குச் சென்று நாம் உட்கார விரும்பினால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்காரக்கூடாது.
இது விடயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்தாதவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்." (புஹாரீ, முஸ்லிம்)
இந்த சுன்னாவை நாம் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பின் கடைபிடிப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஏவப்பட்ட ஒரு விடயம் என்பதை இந்த ஹதீஸின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
4. பள்ளிவாசலில் நாம் உட்காரும்போது உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒருவரை எழுப்பிவிட்டு நாம் அவ்விடத்தில் உட்காரக்கூடாது.
பள்ளிவாசல் அல்லது, ஏனைய சபைகளில் இவ்வொழுங்கு முறையை நாம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, ஜுமுஆத் தினத்தில் சிலர் சிலரை எழுப்பிவிட்டு அல்லது, முன்னால் நகர்த்திவிட்டு அல்லது, பின்னால் நகர்த்திவிட்டு அவ்விடத்தில் உட்கார்ந்து கொள்வதை நாம் கண்டிருக்கின்றோம். இவ்வாறான செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். 'ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவருடைய இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அவர் அந்த இடத்தில் உட்கார வேண்டாம்" என்று அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய ஸஹாபி இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம் நாபிஃ என்பவர் 'இது ஜும்ஆவிலா?" என்று வினவினார். அதற்கு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் 'ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத ஏனைய இடங்களிலும்" என்று பதிலளித்தார்கள். (புஹாரீ, முஸ்லிம்)
ஒருவர் தன்னுடைய ஒரு தேவைக்காக எழும்பிச் சென்றுவிட்டு மீண்டும் அவருடைய இடத்திற்கு வரும்போது அவருடைய இடத்தில் யாராவது உட்கார்ந்திருந்தால் அவரை எழுப்பிவிட முடியும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் தன்னுடைய இடத்திலிருந்து எழும்பிச் சென்றுவிட்டு பின்பு மீண்டும் அவருடைய இடத்திற்கு வந்தால் அவ்விடத்திற்கு அவரே மிகத் தகுதியானவராவார்."
இந்த ஹதீஸை ஆதராமாகக் கொண்டே அறிஞர்கள் தனது இடத்தில் உட்கார்ந்த ஒருவரை எழுப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார முடியும் என்று கூறியிருக்கின்றார்கள். ஏனென்றால், அவ்விடம் அவருக்குச் சொந்தமானது என்பதை குறித்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகின்றது.
5. பள்ளிவாசலில் காணாமல்போன பொருட்களைப்பற்றி விசாரிக்கக்கூடாது.
காணாமல்போன பொருட்களை பள்ளிவாசலில் விசாரித்துக் கொண்டிருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். 'யாராவது ஒருவர் காணமால்போன பொருளைப்பற்றி விசாரித்துக் கொண்டிருப்பதை செவிமடுக்கிறாரோ அவர் 'அப்பொருளை உமக்கு அல்லாஹ் திருப்பித்தராமல் இருக்கட்டும்' என்று கூறட்டும். ஏனென்றால், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பள்ளிவாசலில் இவ்வாறான செயலில் ஈடுபடக்கூடாது என்பதை மேற்குறித்த ஹதீஸ் விளக்குகின்றது. யாராவது ஒருவர் இச்செயலில் ஈடுபட்டால் அவரைப் பார்த்து நாம்: 'அல்லாஹ் அப்பொருளை உமக்குத் திருப்பித்தராமல் இருக்கட்டும்" என்று கூற வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. பள்ளிவாசல்களைப் பொறுத்தவரையில் அவை அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கும், தொழுகை, குர்ஆன் ஓதுதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதற்குமே கட்டப்பட்டுள்ளன. மாறாக, காணாமல்போன பொருளைப்பற்றி விசாரிப்பது பள்ளிவாசலுக்குரிய செயலல்ல என்பதையும் நாம் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
காணாமல் போனவை எங்களுடைய பொருளாக இருந்தாலும் அல்லது, மிருகமாக இருந்தாலும் அல்லது, ஒரு மனிதராக இருந்தாலும் அவைபற்றி பள்ளிவாசலில் விசாரிக்கக்கூடாது என்பதை சஊதி அல்லஜ்னதுத் தாஇமாவைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
மேலும், காணாமல்போன பொருளை அடையாளப்படுத்தி அது குறித்து மக்களுக்கு பள்ளிவாசலில் அறிவிப்பதையும் அறிஞர்கள் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் காணாமல்போன பொருட்களை பிறருக்கு அறியப்படுத்துவதாக இருந்தால் பள்ளியின் வாசலிடத்தில் சென்று அறியப்படுத்தலாம் என்று கூறியிருக்கின்றார்கள்.
ஆகவே, காணமால்போன பொருட்களை பள்ளிவாசலில் விசாரிப்பதோ அதனைப் பிறருக்கு அறியப்படுத்த முற்படுவதோ கூடாத காரியம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
6. பள்ளிவாசலில் வியாபாரம் செய்யக்கூடாது.
பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். "பள்ளிவாசலில் விற்பனை செய்யக்கூடிய ஒருவரை அல்லது வாங்கக்கூடிய ஒருவரை நீங்கள் கண்டால், 'அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமடையச் செய்யாமல் இருக்கட்டும்' என்று நீங்கள் கூறுங்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
இச்செய்தியை அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஸஹீஹ் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதைத் தடை செய்யும் விதத்தில் இந்த ஹதீஸ் அமைந்திருக்கின்றது. பள்ளிவாசலில் வியாபாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் வெறுக்கத்தக்கது என்று ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். இது சரியான ஒரு கருத்தாகவும் காணப்படுகின்றது.
7. பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்தக்கூடாது.
பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்திப் பேசிக்கொள்வதும் தடை செய்யப்பட்ட ஒரு காரியமாகும். அஸ்ஸாஇப் இப்னு யஸீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் பள்ளிவாசலில் நின்றவனாக இருந்தேன், அப்போது என்னை நோக்கி ஒரு மனிதர் சிறிய கற்களை எறிந்தார். நான் திரும்பிப் பார்க்க அங்கே உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள். 'நீ சென்று அங்கிருக்கின்ற இருவரையும் என்னிடத்தில் அழைத்து வா' என்று அவர்கள் கூறினார்கள். நான் அவ்விருவரையும் அவர்களிடத்தில் கூட்டிச் சென்றேன். 'நீங்கள் இருவரும் யாவர்?' அல்லது 'நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகின்றீர்கள்?' என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும்: 'நாம் தாஇபிலிருந்து வருகிறோம்' எனக் கூறினார்கள். அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: 'நீங்கள் இருவரும் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் உங்களிருவரையும் தண்டித்திருப்பேன். ஏனெனில், நீங்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்திப் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்!" என்று கூறினார்கள். (முஸ்லிம்)
பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்திப் பேசுவது பாரிய குற்றம் என்பதும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இச்செயலை கண்டித்துள்ளார்கள் என்பதும் மேற்குறித்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளிவாசலில் உயர்ந்த சத்தத்தில் கதைத்துக்கொண்டிருப்பதை நாம் கட்டாயம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
அறிவு சார்ந்த விடயங்கள், பயான் நிகழ்ச்சிகள், குத்பா பிரசங்கங்கள், அவசியமான விடயங்கள் போன்றவற்றில் சத்தங்களை உயர்த்துவதில் தடையில்லை என்பதையும் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் உட்பட பல அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். மாறாக, அவசியமற்ற வீணான பயனற்ற விடயங்களிலேயே சத்தங்களை உயர்த்திப் பேசக்கூடாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
8. தொழுகையாளிகளுக்கும், பிற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் தொந்தரவாக அமையும் விதத்தில் அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதக்கூடாது.
மேற்குறிப்பிடப்பட்ட செயல் ஜுமுஆ நேரங்களில் அதிகமாகப் பள்ளிவாசல்களில் இடம்பெறக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு பள்ளிவாசலில் தொழக் கூடியவருக்கும், திக்ர் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் தொந்தரவாக அமையும் விதத்தில் அல்குர்ஆனை ஓதுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.
அபூஸஈத் அல்ஹுத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். மனிதர்கள் குர்ஆனை சத்தமிட்டு ஓதுவதை அவர்கள் செவிமடுத்தார்கள். அவர்கள் தனது திறையை அகற்றி உங்களில் ஒவ்வொருவரும் தனது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார். எனவே, உங்களில் சிலர் சிலரை நோவினைப்படுத்த வேண்டாம். உங்களில் சிலர் சிலரைவிட அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதவும் வேண்டாம்" என்று கூறினார்கள். (அபூதாவூத்) அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
பிறருக்குத் தொந்தரவாக அமையாவிட்டால் குர்ஆனை சத்தமிட்டு ஓதுவதில் தவறில்லை என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம்.
9. அதான் கூறப்பட்ட பின்பு பள்ளிவாசலில் இருந்து அவசியத் தேவையின்றி வெளியேறக்கூடாது.
அதான் கூறப்பட்ட பின்பு பள்ளிவாசலில் இருந்து வெளியேறுவதும் தடுக்கப்பட்ட ஒரு காரியமாகும்.
அபுஷ்ஷஃஷாஃ என்பவர் கூறுகிறார்: "நாம் பள்ளிவாசலில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அமர்ந்தவர்களாக இருந்தோம். அப்போது அதான் சொல்பவர் அதான் கூறினார். ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழும்பி நடக்க ஆரம்பித்தார். அவர் வெளியேறிச் செல்லும் வரை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மனிதரை நோட்டமிட்டார். பின்பு 'இம்மனிதர் அபுல்காசிம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்' என்று அவர்கள் கூறினார்கள்." (முஸ்லிம்)
அதான் கூறப்பட்ட பின்பு பள்ளிவாசலில் இருந்து வெளியேறுவதை ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்யும் செயலாகக் கண்டிருக்கின்றார்கள். அதன் காரணமாகவே இச்செயலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட ஒரு காரியம் என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவருடைய வுழூ நீங்கினால் அல்லது அவசியத் தேவையிருந்தால் அவர் வெளியேறிக் கொள்ள முடியும் என்றும் அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.
10. பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது இடது காலை வைத்து வெளியேற வேண்டும்.
இதற்குச் சான்றாக ஆரம்பமாகக் குறிப்பிடப்பட்ட அனஸ், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் செய்திகள் அமைந்திருக்கின்றன.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "நீ பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உனது வலது காலால் ஆரம்பிப்பதும், வெளியேறினால் உனது இடது காலால் ஆரம்பிப்பதும் சுன்னாவைச் சேர்ந்த அம்சங்களாகும்." இச்செய்தி ஹாகிம் என்ற கிரந்தத்தில் ஹஸன் என்ற தரத்தில் பதிவாகியிருக்கின்றது.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது தனது வலது காலால் ஆரம்பிப்பார்கள். வெளியேறும்போது தனது இடது காலால் ஆரம்பிப்பார்கள்.
பள்ளிவாசலுக்குள் நுழையும்போது வலது காலை வைத்து நுழைவது விரும்பத்தக்கது போன்று வெளியேறும்போது இடது காலை வைத்து வெளியேறுவதை அறிஞர்கள் விரும்பத்தக்கதாகக் கருதியிருக்கின்றார்கள்.
11. பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது கூறப்பட வேண்டிய துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்.
பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது ஓதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் சிறிய ஒரு துஆவைக் கற்றுத்தந்துள்ளார்கள்.
اللهم إني أسألك من فضلك என்பதே அந்த துஆவாகும். இந்த துஆவையும் மனனம் செய்து நாம் பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது ஓதிக்கொள்ள வேண்டும்.
இங்கு பள்ளிவாசலில் நடந்துகொள்ள வேண்டிய சில ஒழுங்கு முறைகளை ஆதாரங்களுடன் இடம்பெறச் செய்திருக்கின்றோம். பள்ளிவாசலில் இவைகளைக் கடைபிடிப்பதும், இவைபற்றி அறியாத ஏனைய சகோதரர்களுக்கு இதனை எத்திவைப்பதும் நாம் செய்ய வேண்டிய கடமையாகும். நாம் பிற வீடுகளுக்குச் சென்றால் ஒழுக்கமாகவும் பண்பாடுடனும் நடந்து கொள்கின்றோம். அல்லாஹ்வின் வீடுகளாகிய பள்ளிவாசல்களுக்குச் சென்றால் அதைவிட அதிகமாகப் பண்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள், நடத்தைகள் குறித்து கவனமெடுப்பது எங்கள் அனைவரினதும் பொறுப்பாக இருந்து கொண்டிருக்கின்றது.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
தொகுப்பு: அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு)

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts