லேபிள்கள்

புதன், 27 மார்ச், 2019

சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்


சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
பர்ளான தொழுகை மொத்தமாக பதினேழு ரக்அத்துகள் உள்ளன என்பதும், சுப்ஹூ தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை எத்தனை ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
அதே நேரம் இரவிலும், பகலிலும் என்னென்ன சுன்னத்தான தொழுகைகள் தொழ வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம்.
வீட்டில் தொழுதல்
பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை (ஆண்கள்) தனது வீட்டில் தொழுவது தான் மிகவும் சிறப்புக்குரியதாகும். நபி (ஸல்) அவர்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் சுன்னத்தான தொழுகைகளை வீட்டிலே தொழுவார்கள். ஒரு முறை நபியவர்களின் பின்னால் இரவு தொழுகையை ஸஹாபாக்கள் தொழுதார்கள். அவர்களுக்கு நபியவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.(புகாரி-731,-6113,- 7290)
மேலும் " உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என அப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 432,- 1187)
பாங்கு, இகாமத்திற்கு இடையில் தொழுகை
ஐந்து நேர பர்ளான தொழுகையின் முன், பின் சுன்னத்துகளை நபியவர்கள் நமக்கு நேரடியாகவே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
அதே போல பொதுவான அமைப்பிலும் சில தொழுகைகளை சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை பின் வரும் ஹதீஸில் காணலாம். "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒவ்வொரு பாங்கிற்கும், இகாமத்திற்கும், இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.' என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார். (புகாரி 624)
பர்ளான தொழுகையின் முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பதை ஒரே ஹதீஸில் நபியவர்கள் பின் வருமாறு நமக்கு விளங்கப் படுத்துவதை காணலாம்.
பன்னிரெண்டு ரக்அத்துகள்
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
  இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1319)
"அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (ஃபர்ள் அல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹரு(டைய ஃபர்ளு)க்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (ஃபர்ள்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு மஃக்ரிப் (உடைய ஃபர்ள்) தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்;மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்;இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் சஜ்தாச் செய்வார்கள்; ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (முஸ்லிம் 1323)
மேற்ச் சென்ற ஹதீஸ்களில் பன்னிரெண்டு ரக்அத்துகள் தொழுதால் சுவனம் கிடைக்கும். அந்த பன்னிரெண்டு ரக்அத்துகள் எவை என்பதையும் ஹதீஸில் கண்டு கொண்டீர்கள். அதாவது சுப்ஹூடைய பர்ளுக்கு முன் இரண்டு (2) ரக்அத்துகளும், ளுஹருடைய பர்ளுக்கு முன் நான்கு (4) ரக்அத்துகளும், ளுஹருடைய பர்ளுக்குப் பின் இரண்டு (2) ரக்அத்துகளும், மஃரிபுடைய பர்ளுக்குப் பின் இரண்டு(2) ரக்அத்துகளும், இஷாவுடைய பர்ளுக்குப் பின் இரண்டு(2) ரக்அத்துகளாகும்.
பத்து ரக்அத்துகள்
மற்றொரு ஹதீஸில் ஒரு நாளைக்கு பத்து ரக்அத்கள் (சுன்னத்துகள்) தொழுதால் சுவனம் கிடைக்கும் என்பதையும் காணலாம்.
எனவே பத்து ரக்அத்துகள் என்றால் சுப்ஹூடை முன் சுன்னத் இரண்டு ரக்அத்துகளும்,ளுஹருடைய பர்ளுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகளும், பின்னால் இரண்டு ரக்அத்துகளும், மஃரிபுடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்துகளும், இஷாவுடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்துகளாகும்.
ஒரு நாளைக்கு பன்னிரெண்டு ரக்அத்துகள் என்றால் ளுஹருக்கு முன் நான்கு(4) ரக்அத்துகளும், ஒரு நாளைக்கு பத்து ரக்அத்துகள் என்றால் ளுஹருக்கு முன் இரண்டு (2) ரக்அத்துகளாகும் என்ற சிறிய எண்ணிக்கை மாற்றத்தை விளங்கிக் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் ளுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுததிற்கான ஆதாரத்தை பின் வரும் ஹதீஸில் காணலாம்.
"அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். (புகாரி 937)
எனவே ஒரு நாளைக்கு பன்னிரெண்டு ரக்அத்துகள் என்றால் எண்ணிக்கைகள் எப்படி,அல்லது ஒரு நாளைக்கு பத்து ரக்அத்துகள் என்றால் எண்ணிக்கைகள் எப்படி என்பதை விளங்கிக் கொண்டீர்கள் அல்ஹம்து லில்லாஹ் !
மேலும் ளுஹருடைய பர்ளுக்குப் பின்னால் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்ற ஹதீஸ் பலகீனமாகும். எனவே இரண்டு தொழுதால் போதுமானதாகும்.
அஸருக்கு முன் சுன்னத்கள்
அஸருக்கு முன் வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகை கிடையாது. என்றாலும் பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளலாம் என்ற பொது ஹதீஸின் அடிப்படையில் அஸருடைய பர்ளுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுது கொள்ளலாம்.
மஃரிபுடைய முன், பின் சுன்னத்கள்
மஃரிப் தொழுகைக்கு முன் வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகை கிடையாது. என்றாலும் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளலாம் என்று நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
"அப்துல்லாஹ் அல் முஸ்னி(ரலி) அறிவித்தார்.
மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு ஸுன்னத்தாகக் கருதக்கூடாது. என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள். (புகாரி 1183)
மஃரிபுடைய பின் சுன்னத்தைப் பொருத்த வரை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.
இஷாவுடைய முன்,பின் சுன்னத்கள்
இஷாவுக்கு முன் வலியுறுத்தப்பட்ட சுன்னத் கிடையாது. என்றாலும் பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளலாம் என்ற பொது ஹதீஸின் அடிப்படையில் இஷாவுடைய பர்ளுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுது கொள்ளலாம்.
அதே நேரம்" இஷாவுடைய பர்ளுக்குப் பின்னால் வலியுறுத்தப்பட்ட இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுது கொள்ள வேண்டும். . அதை மேற்ச் சென்ற ஹதீஸிலே சுட்டிக் காட்டியுள்ளேன்.
ஜூம்மாவிற்கு முன், பின், சுன்னத்கள்
ஜூம்மாவுடைய பர்ளுக்கு முன்னால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் கிடையாது, என்றாலும் பள்ளியுடைய காணிக்கை (தஹ்யத்துல் மஸ்ஜித்) அல்லது நபில் என்றடிப்படையில் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ள முடியும். என்றாலும் ஜூம்மாவுடைய பர்ளுக்கு பின் இரண்டு ரக்அத்துகளும் தொழலாம் அல்லது நான்கு ரக்அத்துகளும் தொழலாம். அது சம்பந்தமான ஹதீஸ்களை பின் வருமாறு கவனியுங்கள்.
ஜூம்மாவிற்கு பின் இரண்டு ரக்அத்துகள்
" நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தொழுதுவிட்டு தமது இல்லத்திற்குச் சென்று, அங்கு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்து வந்ததாகவும் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் 1600)
மேலும் "நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த கூடுதலான தொழுகைகள் குறித்துக் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்" என்று குறிப்பிட்டார்கள். (புகாரி 1601)
ஜூம்மாவிற்கு பின் நான்கு ரக்அத்துகள்
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1597)
மேலே ஐந்து நேர பர்ளுக்கு முன், பின் சுன்னத்துகளை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை படித்துக் கொண்டீர்கள்.
காணிக்கை தொழுகை….
பகல் நேரத்திலோ,அல்லது இரவு நேரத்திலோ ஒருவர் பள்ளிக்கு வரும் போது அவர் உட்காருவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தஹ்ய்யத்துல் மஸ்ஜித்(பள்ளி காணிக்கை) என்ற தொழுகையை தொழுது கொள்ள வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ் வழிக்காட்டுகிறது.
"உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் (பள்ளியில்) உட்கார வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ கதாதா (ரலி), ஆதாரம் -முஸ்லிம்.
எனவே பர்ளான தொழுகைக்காக பள்ளிக்குச் சென்றாலும் சரி, அல்லது சில விசேட கூட்டங்களுக்காக பள்ளிக்கு சென்றாலும் சரி, அல்லது விசேட பயானுக்காக பள்ளிக்குள் சென்றாலும் சரி இந்த தொழுகையை தொழுது விட்டு தான் உட்கார வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
http://www.islamkalvi.com/?p=115628

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts