லேபிள்கள்

சனி, 23 பிப்ரவரி, 2019

ஆதரவற்ற அநாதைகளை அரவணைப்போம்!

மவ்லவி M.I. அன்வர் (ஸலபி)  

-எம்.ஐ அன்வர் (ஸலபி)-
சமூக கட்டமைப்பில் குடும்பம் என்ற அலகு நற்பிரஜைகளை உருவாக்கும் முக்கிய நிறுவனமாக காணப்படுகிறது. கணவன் மனைவி எனும் இரு அச்சாணிகளே குடும்பம் என்ற சக்கரம் தொழிற்பட காரணமாக உள்ளனர். தந்தை , தாய் , பிள்ளைகள் எனும் தனிநபர்கள் பலரின் கூட்டு வாழ்க்கை குடும்பம் என்ற அலகு தோற்றம் பெற வழிகோலுகிறது.
அந்தவகையில் ஒரு குடும்பத்தின் சீரான இயக்கத்திற்கு தந்தையின் வகிபாகம் முக்கியமானதாகும். குடும்பத்தின் பொருளாதார கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை ஈடுசெய்யும் பொறுப்பு தாயை விட தந்தையையே அதிகளவில் சேரும். எனவேதான் அந்தக் குடும்பம் தந்தையை இழக்கும் போது தாய் விதவை என்றும் பிள்ளைகள் அநாதைகள் என்றும் சமூகத்தால் நோக்கப்படும் நிலை தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது.
உலகில் இன்று 14.4 கோடி அநாதைகள் உள்ளனர். இவர்களுல் ஆசியாக் கண்டத்தில் மாத்திரம் 8.76 கோடி அநாதைகள் வாழ்கின்றனர். அதே நேரம் ஒவ்வொரு 14 ஆவது நொடியிலும் புதிதாக ஒரு அநாதைக் குழைந்தை உருவாகுவதாகவும் 2 நிமிடத்திற்கு ஒரு அநாதை வீதம் பராமரிப்பின்றியும் போதிய ஊட்டச் சத்தின்றியும் இறப்பதாகவும் ஐ.நா சபையின் கீழ் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு பிரிவான யுனிசெப் அறிவித்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைவான 50 லட்சம் அநாதைக் குழந்தைகள் இவ்வகையில் இறப்பதாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் அன்பும், பாசமும், பொருளாதார உதவிகளும் இல்லாமல் தவிக்கும் நபர்களில் அநாதைக் குழந்தைகள் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். தமது தந்தையை அல்லது தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகள் கவனிப்பாரற்று பெரும் துயரத்தில் வாழ்கிறார்கள். இவ்வாறு ஆதரவற்ற நிலையில் வாழும் அநாதைக் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பும் கடமையும் முஸ்லிம் சமுகத்துக்குண்டு என்பதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாத்தின் பார்வையில் பருவ வயதை அடைய முன் தந்தையை இழந்தவர் அநாதை எனப்படுவார். இவர்கள் வாழ்க்கையில் முகவரியை இழந்தவர்களை போன்றவர்கள் எனவேதான் இவர்களை கண்காணித்து அரவனைக்கும் படி இஸ்லாம் அழைக்கின்றது. இவர்களை பராமரிப்பதை இஸ்லாம் ஓர் சமூக பொறுப்பாக கருதுகிறது.
அநாதைகள் கவனிப்பாரற்று விடப்பட்டால் எதிர்காலத்தில் கொலை , கொள்ளை கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதனால் சமூகமே ஏன் ஒட்டுமொத்த தேசமே பல அழிவுகளைச் சந்திக்க நேரிடும்.
முறையான கண்காணிப்பு , ஆரோக்கியமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தான்தோன்றித்தனமாக அவர்கள் விடப்படும் போது இது போன்ற நிலைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது போய்விடும். எனவே இவ்வாறான குழந்தைகள் தவறான வழிக்குச் சென்று விடாமல் அவர்களை நற் பிரஜைகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது
நீங்கள் அநாதைகளை சீர்படுத்துவது மிகவும் நன்றே. நீங்கள் அநாதைகளோடு கலந்து வசிக்க நேரிட்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே'. (2:220)
அகிலத்திற்கே அருட்கொடையாய் உதித்த நபி (ஸல்) அவர்கள் உலகில் பிறக்கும்போதே தந்தையை இழந்த அநாதையாய் தான் வந்து உதித்தார்கள். ஆறு வயதில் அன்னையையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்தார்கள். அவர்களின் துன்பங்கள் மேலோங்கிய கால கட்டத்தில் அமைதி இழந்து நின்ற அண்ணலாரை அல்லாஹூத்தஆலா ஆதரவான வார்த்தைகளால் அமைதிப்படுத்தும்போது அவர்களின் அநாதை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் மனதை தேற்றுகிறான்.
'நபியே! உங்களை இறைவன் கை விடவும் இல்லை, உங்களை வெறுக்கவும் இல்லை. உங்களை அநாதையாகக் கண்டு அவன் உங்களுக்கு தங்கும் இடம் அளித்து ஆதரிக்கவில்லையா?. எனவே நீங்கள் அநாதைகளைக் கண்டால் கடுகடுக்காதீர்கள், (93:3,6)
இஸ்லாத்துக்கு முன்னர் அநாதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கென உரிமைகள் கிடையாது அவர்களது சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு அநாதையாக பிறக்கின்றார்கள். அல்லாஹ் அவர்கள் மூலமாகவே அநாதைகளுக்குரிய உரிமைகள் கடமைகள் என்ன என்பதை முழு மனித குலத்துக்கும் தெளிவுபடுத்துகிறான்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நபித் தோழர்கள், குறிப்பாக பெண்கள் கூட அநாதைகளை வளர்த்து வந்துள்ளனர். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு அநாதைப் பெண்ணை வளர்த்து வந்துள்ளார்கள்.
எனவே ஒருவர் அநாதை எனும் நிலையை அடைவது ஒரு சமூகத்தின் பார்வையில் குறையல்ல அது அல்லாஹ்வின் ஏறபாடு. மாற்றமாக அவர்கள் சமூகத்தால் பராமரிக்கப்படமாமையே ஒரு குறையாகும். அவ்வாறே அநாதைகள் என்போர் தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல அந்தஸ்தால் அறிவால் குறைந்தவர்களும் அல்ல. மாறாக அவர்களை பராமரிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் சமூகம் பல நன்மைகளை அவர்கள் மூலமாக அடையலாம்.
அதனால் தான் அநாதைகள் ஆதரிக்கப் படவேண்டும். சமூகத்தில் அவர்களுக்கும் சம அந்தஷ்து கிடைக்கவேண்டும் என்ற உற்சாகமூட்டுகையில் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு என்ன பயன் கிட்டும் என்று சொல்ல முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள்
'அநாதைகளை ஆதரிப்பவர்கள் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருவிரல்கள் இணைந்தது போல மிக நெருக்கமாக இருப்பார்கள், என்று கூறிவிட்டு தனது இரு விரல்களையும் இணைத்து தூக்கி காண்பித்தார்கள்' (புஹாரி)
திருமறைக் குர்ஆன், அநாதைகளுக்கு செலவழிப்பதை மிகத் தெளிவாக ஊக்கப்படுத்துகிறது.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்" எனக் கூறுவீராக! (2:215)
அநாதை பிள்ளைகளை வளர்த்து வரும் போது அவர்களுக்கு சொத்துக்கள் இருந்தால், அவர்கள் விபரமான பருவத்தை அடைந்த பின் அந்த சொத்துக்களை சரியாக கொடுத்து விட வேண்டும். தட்டிக் கேட்க யாருமில்லை என்பதற்காக அவர்களுடைய சொத்துக்களை அநியாயமாக எடுத்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் கண்டிப்பாக உள்ளது.
மேலும் "அநாதைகளின் சொத்துக்களை அழகிய முறையிலே தவிர நீங்கள் நெருங்காதீர்கள். ( 17 – 34 )
மேலும் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி)
" எவர் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுகிறாரோ அவர் வயிறுகளில் நெருப்பைத்தான் சாப்பிடுகிறார். மேலும் அவர் நரகத்தில் நுழைவிக்கப் படுவார். (04- 10)
மேலும்
நீங்கள் அநாதைகளின் சொத்துக்களை ( பருவ வயதை அடைந்த பின் குறைவின்றி ) கொடுத்து விடுங்கள், ( அதிலுள்ள ) நல்லவற்றிக்கு பகரமாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். ( 04 -02 )
மேலும் அநாதைகளை பராமரிப்போர் ஏழைகளாக இருந்தால் நியாயமான முறையில் தேவையான அளவு அநாதைகளின் பொருளாதாரத்திலிருந்து எடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதிக்கிறான். அதை பின்வரும் வசனம் தெளிவுப் படுத்துகிறது
… "அநாதையை பராமறிப்பவர் செல்வந்தராக இருந்தால் ( அநாதையின் சொத்துகளை சாப்பிடும் விடயத்தில் ) தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏழைகளாக இருந்தால் நியாயமான அளவு புசிக்கலாம். அநாதைகளின் பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கும் போது அதற்கான சாட்சிகளை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன். ( 04 –06 )
அநாதைகளை பராமரிப்பதற்காக பராமரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறான ஏற்பாடுகள் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழல் கிடைக்கப்பெறுகிறது. இந்த அநாதை பிள்ளைகளுக்காக தாராள மனம் படைத்த செல்வந்தர்கள் தனது செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். இது வரவேற்கக் கூடிய விடயம் தான். இந்த ஏற்பாடு முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்லாமல் பிற மத சமூகங்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தில் அநாதை பராமரிப்பு நிலையங்கள் அதிகளவில் இயங்கி வருவது எமது அவதானிப்புக்குறியதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டின் பல பாகங்களிலும் அநாதைகளுக்கான பராமரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் இந்தப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் மாக்கொலையில் 1962 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முஸ்லிம் அநாதை நிலையம் எமது நாட்டில் அமையப்பெற்றிருக்கும் அநாதைகளை பரிமாரிப்பதற்கான பழமையான ஒரு நிறுவனமாகும். இங்கு மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலைக் கல்வி , சன்மார்க்க கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்படுகின்றன. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் க.பொ. சாதாரண மற்றும் க.பொ. உயர்தரம் உள்ளிட்ட பரீட்சைகளுக்கு தயார்படுத்தப்படுவதோடு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கலைகளும் அவர்களுக்கு போதிக்கப்படுகின்றன. தவிர பேருவளை தர்கா நகரத்தில் இஷாஅதுல் இஸ்லாம் என்ற பெயரில் ஓர் அநாதை காப்பகமும் காத்தான்குடியில் முஸ்லிம் அநாதைக் காப்பகம் என்ற பெயரில் ஒரு அநாதை பராமரிப்பு நிலையமும் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அது தவிர தலை நகர் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் அநாதை சிறுவர்களை பரிமாரிப்பதற்கான நிலையங்கள் இயங்கி வருவதும் நோக்கத்தக்கது. அந்தவகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமய , சமூக பணிகளின் முன்னோடி நிறுவனமான கு/பறகஹதெனியா கிராமத்தை வாசஸ்தலமாக கொண்டு இயங்கும் அகில இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் ஸூன்னத்துல் முஹம்மதிய்யாவின் அணுசரணையில் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி மற்றும் சம்மாந்துறை ஆகிய நகரங்களில் இரு வெவ்வேறு அநாதை பராமரிப்பு நிலையங்கள் இயங்கிவருகின்றன. இங்கு மாணவர்களுக்கு ஷரீஆ மற்றும் உலகியல் கல்வி , மருத்துவம் , உணவு , தங்குமிடம் போன்ற அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதே போன்று கல்எளியவில் அமையப்பெற்றிருக்கும் முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரியானது இலங்கை இஸ்லாமிய கலைக்கூட வரலாற்றில் மகளிருக்காக பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட மூத்த கல்வி நிலையமாகும். குறித்த கல்வி வளாகத்தில் அநாதை சிறுமிகளை பராமரிப்பதற்கான ஒரு பிரத்தியேக பகுதி இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு தாய், தந்தையரை இழந்த நாட்டின் நாலா பகுதிதியையும் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு ஆன்மீக சூழலில் இலவசமாக கல்வி வழங்கப்பட்டுவருகிறது.
தவிர அநாதை சிறுவர்களின் குடும்பங்களின் பொருளாதார தேவைகளை ஈடுசெய்வதற்காக நிறுவனங்களினால் மாதாந்தம் நிதிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிதி உதவிகளினால் அவர்களின் அன்றாட உணவு, உடை கல்வி மற்றும் மருத்துவ தேவைகள் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றப்படுகின்றன.
தவிர இலங்கையில் இயங்கும் மேற்போந்த அநாதை பராமரிப்பு நிலையங்களை பொருத்தமட்டில் தமது நிதி, நிர்வாக செலவீனங்களை பூர்த்தி செய்வதற்கு பாரியளவிலான பணத் தேவைகள் அவசியமானதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவ்வாறான நிறுவனங்களின் சேவைகள் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவிகளிலேயே தங்கியிருக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக எமது முஸ்லிம் சமூகத்தில் இப்படியான பணிகளுக்கு செலவு செய்யும் அளவுக்கு செல்லவநிலையில உள்ள பலர் இருந்த போதும் இது குறித்து சிந்திக்கும் நிலை இல்லாமலிருப்பது கவலைக்குறியதாகும். இஸ்லாம் அதிகளவில் ஊக்கப்படுத்தும் அநாதைப் பராமரிப்பு விடயத்தில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள செல்வந்தர்கள் , பரோபகாரிகள் அக்கறை செலுத்தவேண்டிய தேவை உள்ளது. இது குறித்து சிந்திப்போமாக!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்னீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும் , இதைச் செய்பவர்கள் எ...

Popular Posts