லேபிள்கள்

செவ்வாய், 29 ஜனவரி, 2019

தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…!


உங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்?
அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்?
சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா?
இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான் ! அது தோள்பட்டை மூட்டு. அதனோடு இணைந்த எலும்பு, தசைகள்.
சரி, இன்னொரு கேள்வி!. மனித உடம்பில் அவ்வப்போது தொந்தரவு தரும் உறுப்புகளில் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள் ?
இந்தக் கேள்விக்கும் மேலே சொன்ன அந்த உறுப்புதான் பதில். அதாவது தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது.
`சரி ரொம்ப உழைக்கிற உறுப்பு அடிக்கடி, மக்கர் பண்ணுவது இயல்புதானே' என்று யாராலும் ஆறுதல்பட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் தோள்பட்டை வலி வந்தவர்களுக்குதான் அது தரும் வேதனை புரியும். அது மட்டுமன்றி இடது பக்க தோள்பட்டை மற்றும் புஜ பகுதியில் வலி வந்தாலே.. `அய்யோ உடனே ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.. இதயத்தில் பிரச்சினை வந்தால்தான், இடது புற தோள்பட்டை வலி ஏற்படும்.' என்று சொல்லி பயப்படும் மனிதர்களும், – அந்த பயத்திற்கு பச்சை கொடி காட்டி, `ஆமாங்க,.. அது சரிதாங்க.. என்று கூறி, `ஐ.சி.யூ' வில் சேர்ந்து, 2,3 நாட்கள் கழித்து, அதே தோள் பட்டை வலியுடன் நொந்துபோய் மருத்துவமனையைவிட்டு வெளியேறியவர்கள் பலர் உண்டு. இதனால் இத்தோள் மூட்டு வலி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மனித உடலில் உள்ள மூட்டுகளில், அதிக அளவில் பல திசைகளிலும் அசைந்து, முக்கியமாக, நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி "தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா" என்று நம்மை உசுப்பி விடுவதற்கு இந்த தோள்பட்டை மூட்டு தேவை.
பல வகைகளில் இந்த மூட்டை செயல்படுத்த முடியும் என்பதால்தான், ஸ்கிப்பிங் விளையாடவும், சமையல் கட்டின் மேலே உள்ள கடுகு டப்பாவை கரெக்டாக எடுக்கவும், காபி, டீ பருகவும், தெரியாமல் தப்பு செய்து விட்டால் தலையை சொரியவும், நினைவில் இல்லாததை நினைவுபடுத்த நெற்றியை தடவவும், பெண்கள் முதுகுப்பகுதி பிரா ஹூக்கை சுயமாக மாட்டிக் கொள்ளவும், பேனா பிடித்து எழுதவும், கம்ப்யூட்டரில் எழுத்துக்களை டைப் செய்யவும் நம்மால் முடிகிறது.
தோள்பட்டை மூட்டை, `பந்துக்கிண்ண மூட்டு' என்று நாம் படித்திருப்போம். இந்த தோள்பட்டை மூட்டு இத்தனை வேலைகளையும் சிறப்பாக செய்ய, புஜ எலும்பின் தலைப் பாகமும்(பந்து), அது பொருந்தி இருக்கும் தோள்பட்டை எலும்பின் கிண்ணமும் சீரான அமைப்பில் இருப்பது முக்கியம். இது போலவே அவசியமானது, இந்த மூட்டை பல திசைகளில் திருப்ப உதவும் தசைகளின் ஒருங்கிணைந்த சேவை.
தோள் மூட்டில் பல திசைகளில் அசைவுகள் ஏற்படும்போது, அதிலுள்ள பந்து போன்ற புஜ எலும்பின் தலைப்பாகத்தை கிண்ணம் போன்ற எலும்புப் பகுதியில் ஒழுங்காக பொருந்தி உள் பக்கமும் வெளிப்பக்கமும் நம் கையைச் சுழலச் செய்ய, சுழல் தசைகளின் கோர்வை (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) எனும் தசை நாண்களின் சேவை மிக அவசியமாகிறது. இந்த தசைகளின் கோர்வை புஜ எலும்பின் தலைப்பாகத்தை தோள்பட்டை பந்து மூட்டை, கிண்ணத்தில் சரியாகப் பொருந்தி வைத்து, முறையாக இயங்க வைக்கும் வேலையைச் சரியாகப் பார்த்துக் கொள்கிறது.
மனித உழைப்பில், நுட்பமான செயல்பாடுகளில் மூட்டுப்பகுதிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதால், அதில் எப்போது வேண்டுமானாலும், பிரச்சினை ஏற்படலாம். திடீரென்று ஏற்படும் சாதாரண வலிகூட அதிக தொந்தரவும், கவலையும் தரலாம்.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.
இந்த வலியை பெரும்பாலானவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம், தேவையற்ற பயம். இதய நோயின் அறிகுறியாக, 100 பேரில் ஒருவருக்கு நெஞ்சுபகுதியில் வலி உருவாகி, அது கழுத்துக்குப்போய் இடது பக்க தோளுக்குப் பரவ வாய்ப்புண்டு. மீதமுள்ள 99 பேருக்கு ஏற்படுவது, தோள்பட்டை அல்லது கழுத்து பாதிப்பால் ஏற்பட்ட வலிதான். ஆனால் பலரும் மேற்கண்ட வலியை அனுபவிக்கும் போது, தனக்கு இதய நோய் பாதிப்பு வந்துவிட்டதாக மிரண்டு விடுகிறார்கள்.
தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன்.
மேலே கையை தூக்கி வேலை பார்ப்பவர்களுக்கு, 45 வயதுக்கு மேல் தோள்பட்டை மூட்டு தசை, இணையும் இடத்தில் தசைகளுக்கு மேல் அழுத்தம் ஏற்படுகிறது. எலும்பின் அடர்த்தி குறைந்து, ரத்த ஓட்டத்திறன் மந்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது வலி தோன்றும். தோள்பட்டை பகுதியில் வலி ஏற்படும் போது, கையைத் தூக்கினாலும், கழுத்தை அசைத்தாலும், வலி அதிகரிக்கும். (இதய நோயின் அறிகுறியாக தோள்பட்டைப் பகுதியில் பரவும் வலியாக இருந்தால், கையைத் தூக்கினாலும், தலையை அசைத்தாலும் வலிக்காது.)
தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில் (அசுஙுசூ) வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும். சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று `சுருக்` என வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.
தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்' தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம். மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.
மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும். இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.
இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.
"தோள்பட்டை எலும்பு வலுவாக, ஒரு நல்ல சாப்பாடு இருந்தா சொல்லுங்க டாக்டர்" என்று பலரும் கேட்பார்கள். நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு கொடுக்கப்படும் டானிக் போல அமைந்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.
விளக்கம் : டாக்டர் எம். பார்த்தசாரதி
M.B., D.Orth, M.S., F.R.C.S



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts