லேபிள்கள்

வியாழன், 29 நவம்பர், 2018

பயணியின் வாழ்க்கை –


 பேரா. ஹஸனீ

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் என் இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக கூறினார்கள் " நீங்கள் இந்த உலகில் ஒரு ஏழையைப்போன்றோ அல்லது ஒரு பிரயாணியைப்போன்றோ இருங்கள் என்று கூறினார்கள் என்று நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
இந்த ஹதீஸ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது போன்று தோன்றினாலும், இது அனைவரும் சொல்லப்பட்ட ஒன்று. இன்னும் ஒரு அற்புதமான ஒரு செய்தி இந்த ஹதீஸிலிருந்து நமக்கு கிடைக்கிறது.
இப்னு உமர் அவர்கள் இந்த ஹதீஸை நபியவர்கள் தனக்கு எவ்வாறு கூறினார்கள் என்ற நிலையையும் ( இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக )சேர்த்து வர்ணித்தே கூறியுள்ளார்கள்.
ஹதீஸ்கலை வல்லுனர்கள் இந்த சமுதாயத்திற்கு செய்த மிகப்பெரிய சேவை, ஹதீஸ்களை மட்டும் இந்த சமுதாயத்திற்கு கொடுக்காமல் அது நடைபெற்ற சூழல், அதை அறிவித்தவர்களின் வரலாறு என்று மிகப்பெரும் பொக்கிஷங்களை விட்டுச்சென்றுள்ளனர்.
அல்லாஹ் அவர்கள் அத்துணை பேரின் சிறிய, பெரிய பாவங்களை மன்னித்து, அவர்களின் தரஜாக்களை உயர்த்தி, அவர்களின் மண்ணறையை சுவனத்தின் உயர்ந்த பகுதியாக ஆக்கித்தருவானாக.
இந்த ஹதீஸில் நபிகளார் இந்த செய்தியை கூறும் போது நடந்துகொண்ட விதம் அவர்களின் leadership quality யைக் காட்டுகிறது. இப்படி நபிகளார் எந்தந்த மனோநிலையில் இருந்தார்களோ அவற்றையும் முழுவதுமாக ஹதீஸில் பதிவுசெய்கின்றனர்.
தான் செல்லவந்த செய்தியின் முக்கியத்துவதை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உணர்த்துவதற்காக நபியவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.
இந்த உலகைப்பற்றி உண்டான செய்தி இது ஒரு நிலையான பொருள் இல்லை, இன்னும் இதன் வெளிரங்கம் ஆடம்பரமாகவும், அழகானதாகவும் இருப்பினும் இதன் உள்ரங்கமோ அழிந்து போகக்கூடியது.
அது மனிதர்களை தன் வெளிரங்க அழகால் கட்டிப்போட்டுள்ளது. அதனால் இதன் அழகில் மயங்கிய மனிதன் மறுமைச் சிந்தனைவிட்டும் வெகு தூரம் சென்று விடுகிறான்.
இது குறித்து குர் ஆன் கூறும் வார்த்தை எவ்வளவு நிதர்சனமானது, நிச்சயமானது " இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை (3:185)
இதில் இன்பம் இல்லை என்று சொல்லவில்லை, மறுமையை நிலைநிறுத்தும் போது இது அற்ப இன்பம். ஆனால் அந்த இன்பம் கழிந்து அவன் உணர்வு பெறுவதற்கு முன்பே அவனை மரணம் அள்ளிச்செல்கிறது.
எல்லா விஷயத்திற்கும் வழிகாட்டியாக வந்த நபிகளார் மனித வாழ்வோடு இரண்டுர கலந்த இந்த உலக வாழ்வை குறித்து சொல்லாமல் சென்றிருப்பர்களா?
அவர்கள் தான் நமக்கு நிதமான வழிகாட்டியாயிற்றே, சரியான உபதேசிப்பாளர் ஆயிற்றே.
ஆகையால் தான் தேவையான நேரத்தில், தேவையான அளவில், உதாரணங்களோடு தங்கள் தோழர்களுக்கு சொல்லுவது போன்று உலகம் அழியும் நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்தார்கள்.
ஒரு ஏழையைப்போன்று அல்லது ஒரு வழிப்போக்கன் போன்று என்ற அழகிய உவமானத்தோடு கூறினார்கள். இந்த இருவருக்கும் எங்கும் நிலையான இடம் இருக்காது, அவன் எண்ணம் முழுவதும் தன் சென்றடய் வேண்டிய இடம் நோக்கி இருக்கும். தன்னிடம் இருக்கும் நிலைகொண்டு பொருந்திக்கொள்வான்.
இன்று நாம் பார்க்கிறோம், எத்தணையோ பணக்கார்கள் கூட பயணம் என்று வந்துவிட்டால் பயணத்திற்க்கு தோதுவான தன் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
என்ன ஒரு அற்புதமான ஒப்பீட்டை கூறியுள்ளார்கள் மனிதரகளாகி நாம் அனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ மறுமை என்ற ஊர் நோக்கியல்லவா பயணத்தில் இருக்கிறோம்.
பயணம், அது தானே மனிதர்களின் வாழ்கையை புரட்டிப்போடுகிறது. எத்தணையோ நபர்களின் பயணம் அவர்களை கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு கொண்டு செல்கிறது. இன்னும் சிலரோ மேல் நிலையிருந்து கீழ் நிலைக்கு வருபவரும் உண்டு
பயணங்களில் தானே மனிதன் பொறாமை, கோள், பொய், அடுத்தவர்களுக்கு காட்டுதல் போன்ற கீழ் குணங்களிருந்து விலகிநிற்கிறான்.
இன்னும், ஒருவனைப் பற்றி சாட்சி சொல்லுவதற்க்கு கூட அவரோடு பயணத்தில் இருந்ததயோ அளவுகோல் ஆக்குகிறது இஸ்லாம்.
இப்படி தொடர்கிற செய்திகள் எத்தணையோ.......
ஆகையால் இந்த ஹதீஸை வைத்து மக்களை விட்டு தனித்து சென்று விடலாமா? என்றால் இஸ்லாம் அதையும் அனுமதி அளிக்கவில்லை.
நபிகளாரின் வார்த்தைகளை தீர்மிதி என்ற ஹதீஸ் புத்தகத்தின் ஆசிரியர் பதிவு செய்திருப்பதை கவனியுங்கள்.
மக்களோடு கலந்து அவர்களின் சிரமங்களை பொறுத்துக்கொள்கிற முஸ்லிம், மக்களைவிட்டு தனித்திருந்து அவர்களின் சிரமங்களை பொறுக்காதவரை விட சிறந்தவர் ஆவார்.
இந்த ஹதீஸைக்கொண்டு பொதுவாக நமக்கு இவ்வுலகம் வேண்டாம், இவ்வுலக வாழ்கை ஏமாற்றுதல், ஆகையால் அனைத்தையும் விட்டு ஒதுங்கிவிடவேண்டும் என்ற கருத்து இல்லை.
இந்த ஹதீஸ் வெளிரங்கத்தை குறித்து பேசவில்லை மாறாக மனோநிலைக்குறித்து பேசுகிறது.
சஹாபக்களின் மிகப்பெரும் செல்வந்தர்கள் இருந்தார்கள். செல்வம் அவர்கள் கையில் இருந்ததே தவிர மனதில் இருக்கவில்லை. இது தான் இங்குள்ள core point.
கோடிகளின் வரவும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. கோடிகளின் நஷ்டமும் அவர்களிடம் எவ்வித கலக்கத்தையும் அளிக்கவில்லை.
ஏனெனில், அவர்களின் நபிகளின் சகவாசத்தால் அறிந்திருந்தார்கள், கோடிகளை கொண்டு (பிறக்கும் போது) வந்தவர்களுமில்லை. கோடிகோடியாய் இருதததும் (இறந்தபின்) கொண்டுபோனவர்களும். ஆகையால் இல்லாத சொத்துக்கு செந்தம் கொண்டாட என்ன இருக்கிறது.
பிர்அவ்னின் வல்லரசு செத்துக்களேல்லாம் இன்று ஏதோ ஒரு குடிமகன் கையில். செந்தம் கொண்டாட கூட ஆட்களில்லை. நாம் என்னதான் கோடீஸ்வரர்களாக இருப்பினும் இவ்வுலகைவிட்டு செல்லும் போது விரலில் இருக்கிற இரும்பு மோதிரத்தைக்கூட கழட்ட மறக்காது இந்த உலகு.
இப்படி உள்ள உலகில் வாழ நபிகளாரின் வாக்கு அற்புதம் வழிகாட்டியன்றோ.
அதன் அடிப்படையில் வாழ்தால், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் வெல்பவர்கள் நாமாக இருப்போம். வாழ்கையில் பல பயணங்கள் உண்டு .. ஆனால் நம் வாழ்வே பயணமாகட்டும்....



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 27 நவம்பர், 2018

வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!


மரவேர்களின் மிக முக்கியமான தன்மை நீரைத் தேடி நகர்வது. இத் தேடலில் அவை என்றுமே சளைத்ததில்லை; பின் வாங்கியதில்லை.
மரம் நிற்கும் இடத்திலிருந்து மண்ணுக்குள்ளே பல அடி தூரம் நகர்ந்து, நீரை உறிஞ்சி மரத்துக்கு அளிக்கின்றன.
தடைகள் இருந்தாலும் வேர்கள் தயங்கி நிற்பதில்லை. வளைந்தும் நெளிந்தும் விடாமுயற்சி செய்து தங்கள் இலக்குகளை எட்டிப் பிடிக்கும். தேடல் என்ற பண்பை, இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் மர வேர்களிடமிருந்து பெறவேண்டும். அவை நீரைத் தேடுவதுபோல நாம்,  நமக்கான இம்மை - மறுமை வெற்றி வாய்ப்புகளைத்  தேடவேண்டும்.
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்.
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசி இருக்கும்.'
ஒரு செருப்பு நிறுவனம் தனது புதிய கிளையை ஆதிவாசிகள் அதிகம் வாழும் ஒரு தீவில் திறக்க எண்ணியது. அந்த நிறுவனத்திடம் வேலை கேட்டு வந்த இரு இளைஞர்களை அந்தத் தீவுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருமாறு ஒருவருக்கொரு வரைத் தெரியப்படுத்தாமல் அனுப்பி வைத்தது.
முதலில் சென்றவர், 'அந்தத் தீவில் செருப்புக் கடை வைப்பதும், பணத்தைக் கடலில் கொட்டுவதும் ஒண்ணுதான். ஏனெனில், அங்குள்ள யாருக்கும் செருப்பு என்றால் என்னவென்றே தெரிய வில்லை. எனவே, அவர்கள் செருப்புகளை வாங்கமாட்டார்கள்' என தனது அறிக்கையைக் கொடுத்தார்.
அடுத்ததாகச் சென்றவர், 'வேறு கம்பெனிகள் அங்கு சென்று, கிளை தொடங்கும் முன் நாம்  வேகமாக அத் தீவில் செருப்புக் கடையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், அங்கே யாருமே செருப்பு பயன்படுத்துவதில்லை. செருப்பின் பயன்பாட்டை எடுத்துச் சொன்னால் விற்பனை மளமளவென நடக்கும்' என்று தனது அறிக்கையைக் கொடுத்தார்.
இருவரில் யாருக்கு வேலை கிடைத்திருக்கும் என்பதை நீங்களே சொல்லுங்களேன்...!
இறைவன் எனக்கு வழங்கிய நேர்வழி, பூமியில் விழும் மழைநீர் போல. பூமியில் ஒரு சில நிலம் அந்த மழைநீரை உள்வாங்கி  புற்பூண்டுகளை முளைக்கச்செய்து தன்னையும் வளப்படுத்திக் கொள்ளும்.
வேறு சில தரிசு நிலம், தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும். அது தன்னளவில் பயன்பெறாது. ஆனால் மக்கள் அதன் மூலம்  பயனடைவர். அதனை அருந்துவர்; தங்களது  கால்நடைகளுக்கும் புகட்டுவர்; விவசாயமும் செய்வர்.
இன்னொரு வகை நிலம், அது ஒன்றுக்கும் உதவாத கட்டாந்தரை. அது நீரைத் தேக்கி வைத்துத் தானும் பயன்பெறாது; புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்யாது.
இது, நான் கொண்டு வந்த தூதைத் தேடி அடைந்து, தாமும் பயனடைந்து, பிறருக்கும் கற்பித்தவர், நான் கொண்டு வந்த தூதை - இறைநெறியை ஏற்றுக்கொள்ளாதவர் இருவருக்குமான உவமை. [புகாரி - 79]
ஆரம்பத்தில் மிகப்பெரும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையாக இருந்து, பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் வறுமையில் வாடிய, பெற்றோரைப் பிரிந்து சோகத்தில் மூழ்கிய முஸ்அப் பின் உமைரை (ரளி) நபி (ஸல்), மதீனா மாநகருக்கு  இஸ்லாமிய அழைப்பியல் பணி பிரதிநிதியாக - செயலராக அனுப்பி வைத்தார்கள்.
இஸ்லாமிய வரலாற்றுப் பாதையில் ஹிஜ்ரத் ஒரு முக்கிய மைல்கல். நபியவர்கள் மதீனாவுக்குச் செல்வதற்கு முன்பே அங்கே நபியவர்களின் வருகைக்கும் இஸ்லாமுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் இந்தப் பணி மிகப்பெரிய பணி.
முஸ்அப், பார்வையற்ற அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரளி) இருவரும் மதீனா சென்று இஸ்லாமிய பரப்புரைப் பணியில் ஈடுபட்டனர். இதனால் மதீனாவில் உள்ள ஒவ்வொரு இல்லக் கதவையும் இஸ்லாமின் தூதுச்செய்தி சென்றடைந்தது. இவர்களது தீவிர பிரச்சாரத்தின் பயனை நபியவர்கள் அடுத்த ஆண்டிலேயே கண்டு கொண்டார்கள்.
முதல் வருடத்தில் பன்னிரெண்டு பேர் நபியவர்களிடம் கலிமாச் சொல்லி இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர். அடுத்த வருடத்தில் மதீனாவின் தூதுக்குழுவில் எழுபதுக்கும் மேற்பட்டோர் வந்து இஸ்லாமை இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டனர்.
நபியவர்களின் பிரதிநிதியாகச் சென்ற முஸ்அபும் அவருடன் தொடராக இணைந்து கொண்ட அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம், ஸஃத் பின் அபீ வக்காஸ், அம்மார் பின் யாஸிர் (ரளியல்லாஹு அன்ஹும்) போன்றோரின், 'வாய்ப்புகளை நழுவ விடாத தன்மையால்' நபியவர்கள் மதீனாவுக்குச் செல்லும் போது அவர்களை வரவேற்க அங்கே ஒரு மிகப்பெரும் கூட்டமே திரண்டிருந்தது.
மதீனத்து அன்ஸாரி முஸ்லிம்கள் முஸ்அப் (ரளி) மூலமே 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' போன்ற பல அத்தியாயங்களை மனனம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகுதான் நபியவர்களே மதீனா சென்றார்கள். [புகாரி 3925]
ஆக, மரம், இறைவரமான மழைநீரை உள்வாங்கித் தன்னை வளமாக்கிக் கொள்வது போல ஓர் இறை நம்பிக்கையாளன் இறைவன் தனக்கு வழங்கியுள்ள இறையருட்கொடைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இது மரம் வழங்கும் மூன்றாவது படிப்பினை.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 25 நவம்பர், 2018

தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...


பள்ளிவாசல்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாற்காலிகள்...!
அலட்சியத்தில் ஆலிம்கள்...
இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நவீன கலாச்சாரம்..நாற்காலி தொழுகை கலாச்சாரம்...!
நின்று தொழமுடியாவிட்டால் உட்கார்ந்து தொழலாம் என்பதை தவறுதலாக புரிந்துகொண்டதின் விளைவு...நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாற்காலி தொழுகை கலாச்சாரம்...!
கடந்த 5 வருடங்கள் அல்லது அதற்கு சற்று கால முன்பாகத்தான் இந்த நாற்காலி தொழுகை கலாச்சாரம் நமது தமிழகத்தில் காலூன்றியது...இப்பொழுது நல்ல விளைச்சலில் நாற்காலி தொழுகை அமோகமாய் பெருகிக் கொண்டிருக்கின்றது.
இந்த ஜமாத் பள்ளிவாசல், அந்த ஜமாத் பள்ளிவாசல் என்று எல்லா ஜமாத் பள்ளிவாசல்களிலும் இந்த கலாச்சாரம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுகின்றது.
சேலத்தில் உள்ள பிரபல மதரஸாவிலிருந்து ஃபத்வா கொடுத்தும் கண்டுகொள்ளாத உலமா பெருமக்கள்...!
கண்மணி நாயகம் உத்தம திருநபிகளார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபியாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பள்ளிவாசல்களுக்குள் நுழையாத நாற்காலி கலாச்சாரம் திடீரென உருவாகியது எப்படி...?
மரத்திலான நாற்காலிகள் பழங்காலத்திலிருந்து இருந்தும் ஏன் கடந்த கி.பி. 2000 மாவது ஆண்டு வரை பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை...?
ஊனமுற்றோர், உடல் பெருத்தோர், முதுகில், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தோர், தடுமாறும் முதியோர் ஆகியோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள கஃபத்துல்லாஹ் வரும்பொழுது வீல்ச்சேர் என்ற சக்கர நாற்காலிகளில் உட்கார வைக்கப்பட்டு அதன் மூலம் தவாஃப் செய்தல் மற்றும் அதில் உட்கார்ந்து கொண்டே தொழுதல் போன்றவற்றை பார்த்த சில முஸ்லீம்கள், அடுத்த கட்டமாக இலகுவாக மடித்துக்கொள்ளும் வகையிலான ஷேர்களை கொண்டுவந்து கஃபத்துல்லாஹ்வில் தொழ, இதை கண்ட பல்வேறு நாட்டு முஸ்லீம்கள் காஃபத்துல்லாஹ்விலேயே நாற்காலி போட்டு தொழும் பொழுது நாம் ஏன் நமதூர் பள்ளிவாசல்களில் இப்படி நாற்காலி போட்டு தொழக்கூடாது என்று அறிவீலித்தனமாக சிந்தித்ததன் விளைவு இன்று பல்கி பெருகி தமிழகத்தின் அனைத்து பள்ளிவாசல்களிலும் பிளாஸ்டிக் ஷேர்கள் கம்பல்சரி என்று ஆகிவிட்டது.
வீட்டிலிருந்து நன்றாக நடந்து பள்ளிவாசல் வருவார்கள். பள்ளிவாசலில் எத்தனை உயரமான படிக்கட்டுகள் இருந்தாலும் ஏறி உள்ளே வருவார்கள். வீட்டில் சம்மணம் போட்டு சாப்பாடு சாப்பிடுவார்கள். தரையில் தாம் விரும்பியதுபோல் உட்கார்வார்கள்.
இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்பார்கள், ஆதார் கார்டு எடுக்க, வாக்காளர் அடையாள அட்டை எடுக்க, இன்னும் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வரிசையில் மணிக்கணக்கில் நிற்பார்கள், கீழே எது விழுந்தாலும் குனிந்து எடுப்பார்கள். விரும்பியதுபோல் உடலை அங்குமிங்கும் திருப்பி திருப்பி படுப்பார்கள்.
ஆனால் பள்ளிவாசலில் தொழ வந்தால் மட்டும் நாற்காலி போட்டுதான் தொழுவார்கள்...???
இவர்கள் யார்...???
நிச்சயம் இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உண்மையிலேயே அவர்களால் நடப்பது சிரமம், குனிவது சிரமம், தரையில் உட்காருவது சிரமம் என்றால் அவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதே சிரமம். அப்படியே அவர்கள் அங்கு வந்தால் அவர்கள் நாற்காலிகளில் தொழ வேண்டி கட்டாயம் ஏற்பாட்டால் அதை அவர்கள் வீட்டிலிருந்தே கொண்டு வந்து தொழ வேண்டும். அதுவும் நின்று தொழுபவர்களுக்கு இடையூறு இல்லாமல் எங்காவது ஒரு ஓரத்தில் இருந்துகொண்டு தொழ வேண்டும். இப்படி தொழக்கூட பள்ளிவாசலில் அனுமதியில்லை என்று ஒரு சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். பள்ளிவாசலில் நாற்காலி என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆனால் பிறரின் துணையின்றி உயரமான பள்ளிவாசலில் படிக்கட்டுகள் ஏறி நடந்து தொழக்கூடிய இடத்திற்கு தன்னால் வரமுடியும் என்றால் அவருக்கு நாற்காலியில் தொழ அனுமதியில்லை.
இது ஒரு பிரபல மதரஸாவின் ஃபத்வா...!
நாற்காலியில் உட்கார்ந்து தொழுபவர்கள் ஏன் தரையில் உட்கார்ந்து தொழ மறுக்கிறார்கள்? ஏனென்றால் அது ப்ரெஸ்டிஜ் ப்ராப்ளம்...! அல்லாஹ்வின் இல்லத்தில் ப்ரெஸ்டிஜ் பார்க்கிறார்கள்...?
நான் சொல்கிறேன்...ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல்களிலும் நாற்காலியில் உட்கார்ந்து தொழுபவர்களால் தரையில் அமர்ந்து தொழ முடியாது என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்...?
முடியும்...ஆனால் அவர்கள் தங்களின் வெட்டிக் கௌரவத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.
இமாம் இதை தப்பென்று சொல்லவில்லை...அந்தந்த ஊர் ஜமாத் தலைகளுக்கு இதைபற்றி விளக்கமே கொஞ்சமேனும் தெரியவில்லை. தெரிய விரும்பவுமில்லை.
இன்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...
அல்லாஹ்வின் இறையில்லத்தில் அல்லாஹ்விற்கு அஞ்சி ஒடுங்கி இறையச்சத்தோடு நின்று குனிந்து தொழக்கூடிய அல்லாஹ்வின் அடியார்களுக்கு இடையூறாக ஒவ்வொரு வரிசைகளிலும் ஆங்காங்கே நாற்காலிகளை போட்டு வரிசைகளின் ஒழுங்கமைப்பை கெடுத்து நாற்காலில் உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு ஆண்வத்தோடு இருப்பவர்களே நிச்சயம் நீங்கள் அல்லாஹ்வால் அதிகம் விசாரிக்கப்படுவீர்கள்.
இன்றைய சிலர் செய்யும் தவறுகள் இன்றைய இளம் தலைமுறைகளை தொற்றிக்கொண்டு அடுத்த தலைமுறையும் இதை தவறு என்று உணராமல் தைரியமாக செய்யும் சூழல் ஏற்படும். அப்பொழுது பள்ளிவாசல்கள் இன்றைய கிறிஸ்துவ தேவாலயங்கள் போல் காட்சியளிக்கும்.
அப்பொழுது கைசேதப்பட்டவர்களாக நமது தலைமுறைகள் வாழ நேர்ந்தால் அதற்கு அடித்தளமிட்ட இன்றைய பெருசுகளை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
அல்லாஹ்வின் இல்லத்தை கேளிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறீர்களா?
சஹாபாக்களுக்கு மத்தியில் தரையில் அமந்து உரையாற்றிக் கொண்டிருந்த நமது திருநபிகளாரை எங்கே ரஸூலுல்லாஹ் என்று ஒரு வெளியூர்க்காரர் கேட்ட சரித்திரம் அறிந்தவர்களே...நமது ரஸூலுல்லாஹ் எப்படி வாழ்ந்தார்கள்...நாம் எப்படி இருக்கின்றோம்...சிந்திக்க வேண்டாமா?
பள்ளிவாசலில் இமாம் மெம்பர் படியேறி குத்பா பேருரை நிகழ்த்தும் பொழுது, முதல் உரைக்கும், இரண்டாம் உரைக்கும் இடையே சற்று அமர்ந்து கொள்வதற்கு மட்டுமே மெம்பர் படிக்கட்டுகள் பயன்படுமே தவிர வேறெதற்காகவும் அல்ல.
தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...!
பேணுவோம் அல்லாஹ்வின் கட்டளைகளை...!
மதிப்போம் நபிகளாரின் வழிமுறைகளை...!
ஒரு உண்மை முஸ்லிம்கள் ஆக வாழ்வோம்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 நவம்பர், 2018

பெண்களிடம் மாற்றம் வேண்டும்


சமூக இயக்கங்களில் நிலவும் சண்டை சச்சரவுகள் போல உம்மத்தின்  குடும்பங்களிலும் உறவுகள் சிதைந்து அமைதி தொலைந்து வருகிறது
கூடி....கூட்டம் கூட்டமாக வாழ்வதையும்... தன் கணவனிடம் கூட பகிராத சில அந்தரங்க ரகசியங்களை சக தோழியிடம் பகிர்ந்து உள்ளத்தின் சுமைகளை இறக்கி  நிம்மதி அடையும் இயல்பை கொண்ட படைப்பு பெண் இனம்.
பெண்களாக அடம்பிடித்து அல்லது ஆண்களின் வேலை சூழல் காரணமாக அமைத்துக் கொள்ளும் தனிக்குடித்தனம் என்ற தனிமை சிறை பெண்களின் வாழ்வில் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.
கூட்டாக வாழ்வதில் உள்ள சங்கடங்களை காட்டிலும் தனித்து வாழ்வதில் ஆபத்துகள் அதிகம் உள்ளன என்பதை வயதானபிறகு தான் உணர்கின்றனர்.
தன் கணவன் தன் கூடவே இருந்து தன்னை முழுமையாக கவனித்துக் கொள்வான் என்று எதார்த்த சூழலை அறியாமல் அப்பாவித்தனமாக.....
ஆண்களின் படைப்பு இயல்பு அறியாமல் அதிகப்படியான எதிர்பார்ப்பில்  அவனையே முழுமையாக நம்பி புலம் பெயர்ந்து செல்கின்றனர்.சென்றபிறகு அதிகமான துன்பங்களை சந்திக்கின்றனர். பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர்.தனிமை வாட்டி வதைக்கிறது
சிலருக்கு விரும்பத்தகாத விபரீதங்கள் ஏற்படுகின்றன.
அது சந்ததியை பாதித்து சமூகத்தின் கலாச்சார கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது.
காலம் கைமீறி போய்விட்டது. மனதில் சுயநலம் மிகைத்துவிட்டது. இனி கூட்டாக இணைந்து வாழ்வது  இயலாத காரியம்.
தனித்தனி வீடுகளில் வாழ்ந்தாலும் குடும்பத்து பெண்கள் குறிப்பிட்ட நேரம் கூடி அமர்ந்து எண்ணங்களை ஏக்கங்களை கலாச்சார மரபுகளை பேசி பகிர்ந்து கொள்வது உள்ளத்திற்கு உயிரூட்டி மன நோய்களிலிருந்து பாதுகாக்கும்
மேலும்....
கற்றுக்கொள்வது சிந்திப்பது கற்றுக் கொடுப்பது  போன்ற இஸ்லாமிய அறிவுசார் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தி அவர்கள் தனிமை சூழலில் சிக்காத வகையில் அவர்களின் அறிவாற்றலை அல்லாஹ்வுடைய பாதையில் பயன்படுத்திட ஆண்கள் வழிவகை செய்திட வேண்டும்.
இப்படிப்பட்ட அமைதியான இயற்கையான எளிமையான இஸ்லாமிய வாழ்வு வேண்டும் என்றால் முதலில் முஸ்லிம்களிடம் மன மாற்றம் ஏற்பட வேண்டும்.....
சென்னை போன்ற பெரு நகரங்களின் நரக வாழ்விலிருந்து தப்பித்து பிறந்த மண்ணிற்கு திரும்ப வேண்டும் என்ற உறுதியான முடிவிற்கு வர வேண்டும்.
சிக்கிக்கொண்ட சூழலுக்கேற்ற இஸ்லாமிய வழிகாட்டுதலை தேடாமல் இஸ்லாம் வகுத்தளிக்கும் பாதையில் வாழ்வை அமைத்துக் கொள்வது நிரந்தர தீர்வாக அமையும்.
குறை நிறைகள் இருந்தாலும் முஹல்லா வாழ்வே அமைதியான ஆன்மீகமான நமது சந்ததிகளுக்கு பாதுகாப்பான வாழ்வாக அமையும்.
ஆட்டுப் பண்ணை மாட்டுப் பண்ணை போல மனிதப் பண்ணையான இந்த நகர வாழ்வு நம்மை அடிமைகளாக்கி குடும்பங்களின் அமைதியை குலைத்து ஈமானிற்கு வேட்டு வைக்கும் இயல்பை கொண்டது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 21 நவம்பர், 2018

சளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை நிவாரணி


சளி மற்றும் இருமல் போன்றவை பெரிய பிரச்சனைகளாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் அது பெரும் தொந்தரவாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கும். ஒருவருக்கு சளி அதிகமாகிவிட்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாது.

இந்த சளிக்கு பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் சளி மருந்தைப் பயன்படுத்துவார்கள். சளி மருந்துகளை அதிகமாக சாப்பிட்டால், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் விரைவான இதயத்துடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். இதற்கு அதில் உள்ள கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெத்ரோஃபேன் தான்.
ஆனால், இந்த சளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை நிவாரணி உள்ளது. அது தான் தேன் உறை (Honey Wrap). இது உடனடி நிவாரணத்தை வழங்கக்கூடியது. சரி, இப்போது அந்த தேன் உறையை எப்படி செய்வதென்றும், எப்படி பயன்படுத்துவது என்றும் காண்போம்.
தேன்
தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் உள்ளன. இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும்.தேவையான பொருட்கள்:
*
சுத்தமான மலைத் தேன்
*
தேங்காய் எண்ணெய்
*
அரிசி மாவு
*
நேப்கின்
*
கட்டுத் துணி
*
ஒட்டக்கூடிய மருத்துவ டேப் (Adhesive Medical Tape)
IMG_256
செய்முறை
முதலில் ஒரு பௌலில் தேன் மற்றும் அரிசி மாவை போட்டு கையில் ஒட்டாதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் சறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
IMG_257
பயன்படுத்தும் முறை:
பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை நேப்கின் மீது வைத்து, மார்பு பகுதியில் வைத்து, அதன் மேல் அடிப்படும் போதும் பயன்படுத்தும் கட்டுத் துணியை போர்த்தி, ஒட்டக்கூடிய மருத்துவ டேப்பால் ஒட்ட வேண்டும்.
IMG_258
குழந்தைகள்
குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இந்த தேன் உறையை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் மார்பு பகுதியில் ஒட்டி எடுத்து விட வேண்டும்.
IMG_259
பெரியவர்கள்
ஒருவேளை பெரியவர்களுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இரவு முழுவதும் இந்த தேன் உறையை வைத்திருக்கலாம். குறிப்பு
சளி அளவுக்கு அதிகமாக இருந்தால், தொடர்ந்து 2-3 நாட்கள் பின்பற்றுங்கள். இதனால் சளி முற்றிலும் வெளியேறிவிடும்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts