நம்மில் பெரும்பாலானோர் மாதச் சம்பளமே கதி என வாழ்கிறோம். ஒவ்வொரு மாத இறுதியிலும், 'எப்போது முதல் தேதி வரும்?!' எனத் தவமாய்த் தவம் இருக்கிறோம். அலுவலகத்தில் ஓரிரு நாள் சம்பளம் தாமதமானால்கூட ஒருசிலர் மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிடுவர்.
தெரிந்தவர், தெரியாதவர், நண்பர்கள் என, பார்க்கும் அனைவரிடமும் கடன் வாங்கிவிடுவர். இதற்குக் காரணம், `குறைவான சம்பளம்' என்று பலரும் சொல்லலாம். ஆனால், அந்தச் சம்பளத்தை வைத்து சரியான நிதி திட்டமிடலுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதுதான் நமது சாமர்த்தியம். இதை வயதுவாரியாகப் பிரித்துப்பார்ப்போமா?
20 வயதினர்
பொதுவாக, 20 வயதுக்கு மேல்தான் கல்லூரி வாழ்க்கையை முடித்து, அலுவலகப் பணிக்குச் சென்று கையில் பணத்தைப் பார்க்கத் தொடங்குவோம். பெறும் சம்பளத்தில், அவர்களுடைய எதிர்காலத் தேவைக்காக எந்த முதலீட்டையும் செய்வதுமில்லை; ஓய்வூதியத்துக்குத் திட்டமிடுவதும் இல்லை. 20 வயதில் இருந்தே குறைந்தபட்சப் பணத்தையாவது மாதந்தோறும் முதலீடு எனும் பெயரில் விதைத்துவந்தால், ஓய்வுபெறும் வயதில் அந்தப் பணம் பெரிய விருட்சமாக வளர்ந்து நமக்கு நிழலாக இருக்கும். ஆகவே, வாங்கும் சம்பளத்தில் நம்முடைய முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
30 வயதினர்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான வயது 30. இந்த வயதில்தான் ஒருவர் தனது எதிர்காலத்தை நிர்ணயித்து, அதற்கு ஏற்றாற்போல் பயணிக்க முடியும். ஆனால், பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்படாத சேமிப்புத் திட்டங்களிலும், தவறான நிதித் திட்டமிடலிலும் பணத்தை முதலீடு செய்து வருமானத்தை இழப்பதோடு, வாழ்க்கையையும் இழக்கின்றனர். மேலும், தேவையில்லாத பொருள்களை அதிக விலைக்கு வாங்கி, பகட்டு வாழ்க்கையைப் பறைசாற்றிக்கொள்ள பணத்தை வீணாக்குகின்றனர். வரும் வருமானத்தில் இப்படியே செலவுகள் செய்துகொண்டிருந்தால், குடும்பப் பொறுப்பு கூடிய பிறகு அதைச் சமாளிக்க வழி தெரியாமல் தவிக்கும் நிலை வந்துவிடும். இதைத் தவிர்க்க, நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஏற்றதொரு முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, நம்மால் முடிந்த அளவுக்கு சேமிப்பது நல்லது.
40 வயதினர்
40 வயதினரைப் பொறுத்தவரை அநேகருக்குத் திருமணமாகி, குழந்தைகளுடன் குதுகலமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பர். ஆனால் ஒருசிலர், பெரும்கடன் சுமையில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பர். ஏனெனில், கல்விக் கடன், திருமணக் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன் என ஏதேனும் ஒரு கடனில் சிக்கித் தவிப்பர். கடன் எதுவும் இல்லையென்றால்கூட, வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழ்ந்திட எந்த ஓர் எதிர்காலத் திட்டமோ எண்ணமோ இருப்பதில்லை. வாழ்க்கையில் குறிக்கொள் வைத்து வாழ்வதே சிறப்பு!
50 வயதினர்
நம்மில் பலர் வாழ்க்கையை ஆண்டு அனுபவித்து வந்தாலும், சிலருக்கு மட்டுமே `நம்முடைய ஓய்வுக்காலத்தில் பணம் தேவைப்படும்' என்ற எண்ணமே வரும். அதே சமயம் 50 வயதில்கூட `ஓய்வூதியம் பற்றிய எண்ணமோ, வாழ்க்கையின் இறுதி நாள்களில் பாதுகாப்பான தருணத்துக்குப் பணம் தேவை. அதற்கு ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்' என்ற எண்ணமோ இருப்பதில்லை. அப்படியே ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதாக இருந்தாலும், அதிகமாகப் பணம் செலவழித்து முதலீடு செய்வதும் தவறு.
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஒவ்வொருவரும் மற்றவர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள். ஒருசிலர் சரியாக உண்ணாமலும் உறங்காமலும் உழைத்துவருகிறார்கள். அதே சமயம் நம்முடைய கனவை நிறைவேற்றுவதற்காக சிறிதளவாவது உழைக்கிறோமோ என்றால், இல்லை என்பதே பதில்.
உழைக்க வேண்டும் என்றால், அலுவலக வேலையை முடித்துவிட்டு ஆறு மணிக்கு மேல் வேறு ஒரு கடையிலோ, அலுவலகத்திலோ சேர்ந்து வேலைசெய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய பணத்தைச் சரியான நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தாலே போதும். நாம் உழைப்பதைப்போல நம்முடைய பணமும் உழைக்கத் தொடங்கி வருமானத்தை வழங்கும். ஆனால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நிதி சார்ந்த பல தவறுகளை அறியாமல் செய்து, வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்கின்றனர்.
--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக