லேபிள்கள்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

தொழுகையை சுருக்கித் தொழுதல்

தொழுகையை சுருக்கித் தொழுதல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)

சென்ற இதழில் பயணி சுருக்கித் தொழுவதுதான் சிறந்தது. நவீன கால வசதி வாய்ப்புக்களைக் காரணம் காட்டி தொழுகையை சுருக்குவதைத் தவிர்ப்பது தவறானது என்பதை அவதானித்தோம்.

பயணி முழுமையாகத் தொழும் சந்தர்ப்பம்:
பயணம் செய்யக் கூடியவர் ஊர்வாசிகளைப் பின்பற்றித் தொழ நேர்ந்தால் அவர் முழுமையாகவே தொழ வேண்டும். தொழுகையின் ஆரம்பத்தில் அல்லது இறுதி அத்தஹிய்யாத்தில் இணைந்தால் கூட அவர் எழுந்து 'கஸ்ர்' – சுருக்கித் தொழாமல் முழுமையாகவே தொழ வேண்டும்.

பயணி கட்டாயம் சுருக்கித் தொழ வேண்டும் என்ற கருத்தில் உள்ள சிலர் பயணி ஊர்வாசியைப் பின்பற்றித் தொழுதால் இரண்டாம் ரக்அத்தில் இமாமைவிட்டும் பிரிந்து தனியாக ஸலாம் கொடுத்துவிடலாம் என்று கூறுகின்றனர். இது தவறானதாகும். மற்றும் சிலர் இமாமை விட்டும் பிரியக் கூடாது. எனவே, இரண்டாம் ரக்அத்தில் இமாம் அத்தஹிய்யாத்து முடிந்து மூன்றாம் ரக்அத்துக்காக எழும்பும் போது பயணி அப்படியே இருக்க வேண்டும். இமாம் மூன்றாம் ரக்அத்தைத் தொழுது நான்காம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து அவர் ஸலாம் கொடுத்த பின்னர் பயணி ஸலாம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதுவும் தவறானதாகும்.


அதாவது, முதல் சாரார் இமாமை விட்டும் பிரிந்து இரண்டாம் ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாம் சாரார் பிரியக் கூடாது. ஆனால், நான்கு தொழும் இமாமைப் பின்பற்றித் தொழுதாலும் பயணி இரண்டு மட்டுமே தொழ வேண்டும் என்கின்றனர். இந்த இரு கருத்துக்களும் சுன்னாவுக்கு முரண்பட்டதாகும்.

மூஸா இப்னு ஸலமா(ரஹ்) அறிவிக்கிறார்: '(பயணிகளான) நாம் இப்னு அப்பாஸ்(வ) அவர்களுடன் மக்காவில் இருந்தோம். அப்போது அவரிடம் நாம் உங்களுடன் தொழுதால் நான்கு ரக்அத்துக் களாகத் (சுருக்காமல்) தொழுகின்றோம்? எங்களுடைய தங்குமிடங்களுக்குச் சென்று விட்டால் (சுருக்கி) இரண்டு ரக்அத்துக்களாகத் தொழுகின்றோம்' என்று கூறினேன். அதற்கவர்கள் இதுதான் அபுல் காஸிம் (முஹம்மத்(ச)) அவர்களின் சுன்னாவாகும்' எனப் பதிலளித்தார்கள்.
(அஹ்மத்: 1862, முஸ்னத் அஸ்ஸிராஜ்: 1397,
அல் முஃஜம் அல் அவ்ஸத்: 4294, 4555,
தபரானி: 12985)

பயணி ஒருவர் ஊர்வாசியைப் பின்பற்றித் தொழுதால் கஸ்ரு செய்யாமல் நான்கு ரக் அத்துக்களைத் தொழுவதுதான் சுன்னா என்ற இப்னு அப்பாஸ்(வ) அவர்களின் கூற்று ஊன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.
'இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார் கள்: 'பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு முரண் படாதீர்கள்! அவர் ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! அவர் 'ஸமிஅல் லாஹு லிமன் ஹமிதா' என்று கூறினால் நீங்கள் 'ரப்பனா லகல் ஹம்து' எனக் கூறுங்கள்! அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள்! அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்து தொழுங்கள்! தொழுகையில் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும்' என அபூ ஹுரைரா(ச) அறிவித்தார்.' (புஹாரி: 722)
இமாமுக்கு முரண்படக் கூடாது என்றும் இமாம் நின்று தொழுதால் நின்று தொழு வேண்டும் என்றும் அமர்ந்து தொழுதால் பின்னால் உள்ளவர்களும் அமர்ந்து தொழ வேண்டும் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இப்படியிருக்கும் போது, இமாம் முழுமைப்படுத்தித் தொழும் போது மஃமூம் 'கஸ்ர்' – சுருக்கித் தொழ முடியாது என்றே முடிவெடுக்க வேண்டும்.
'இப்னு உமர்(வ) அவர்கள் இமாமுடன் தொழுதால் நான்கு தொழுவார்கள். தனித்துத் தொழுதால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவராக இருந்தார்கள்.'
ஸஹீஹ் முஸ்லிம்: 694-17

மினாவில் சுருக்கித் தொழுவதுதான் சுன்னாவாகும். உஸ்மான்(வ) அவர்கள் மினாவில் சுருக்கித் தொழாமல் நான்கு ரக்அத்துக்களாகத் தொழுதார்கள். அவர் தன்னை 'முகீம்' – தங்கியிருப்பவராகக் கருதியதால் அல்லது தொழுகை பற்றிய அறிவு அற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாம் என்ற காரணத்தினால் அப்படிச் செய்திருக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் பூரணமாகத் தொழும் இமாமைப் பின்பற்றித் தொழும் போது இப்னு உமர்(வ) அவர்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். தனித்துத் தொழும் போது இரண்டிரண்டு ரக்அத்துக் களாகத் தொழுதுள்ளார்கள்.
பூரணமாகத் தொழும் ஒருவரைப் பின்பற்றித் தொழும் பயணி சுருக்கித் தொழ முடியாது என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.

பின்வரும் ஹதீஸை ஆதாரமாக வைத்து பயணி ஊர்வாசியைப் பின்பற்றித் தொழும் போது இரண்டாம் ரக்அத்தில் தனியாக ஸலாம் கொடுத்து ஜமாஅத்தை விட்டும் பிரிந்து செல்லலாம் என்று சிலர் தவறாக வாதிட்டு வருகின்றனர்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார்: 'முஆத் இப்னு ஜபல்(வ) அவர்கள் நபி(ச) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு (நபி(ச) அவர்களுடன் தொழுத) அதே தொழுகையைத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒருவர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தம் பணியைக் கவனிக்கச் சென்று)விட்டார். இச்செய்தி முஆத்(வ) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்)' என்றார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி(ச) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்களின் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம்.
இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுகை நடத்திய போது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். எனவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்' என்று கூறினார். அப்போது நபி(ச) அவர்கள் (முஆத்(வ) அவர்களிடம்), 'முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?' என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், '(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதும்!' என்றும் சொன்னார்கள்' (புகாரி: 6106)
தேவையுள்ள ஒருவர் ஜமாஅத்தை விட்டும் பிரிந்து சென்றுள்ளார். தேவையுள்ளவரே பிரியலாம் எனும் போது பயணிக்கு இரண்டு ரக்அத்துக்கள்தான் கடமை. எனவே, நான்கு தொழுபவரைப் பின்பற்றித் தொழும் பயணி தனது கடமை முடிந்ததும் தனியாக ஸலாம் கொடுத்து பிரிந்துவிட முடியும் என்கின்றனர். இது தவறாகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ் மற்றும் இப்னு அப்பாஸ்(வ) அவர்களது கூற்று என்பன முழுமையாகத் தொழும் இமாமைப் பின்பற்றித் தொழும் பயணி இமாமுக்கு முரண்படக் கூடாது. இமாமைப் பின்பற்றி நான்கு ரக்அத்துக்கள்தான் தொழ வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
அடுத்து, குறித்த மனிதர் இமாமை விட்டும் பிரிந்து சென்றதை நபியவர்கள் அங்கீகரிக்கவில்லை. அவர் பிரிந்து செல்லக் காரணமாக இருந்த முஆத்(வ) அவர்களை நபியவர்கள் கண்டிக்கின்றார்கள். அத்துடன் அதற்குக் காரணமாக இருந்த நீண்ட நெடிய சூறாக்களை ஓதாமல் சிறிய சூறாக்களை ஓதுமாறும் பணிக்கின்றார்கள்.
எனவே, தற்செயலாகவும் தனிநபர் முடிவாகவும் சந்தர்ப்பவசம் காரணமாகவும் அமைந்த இந்த நிகழ்வை மையமாகக் கொண்டு பயணி ஜமாஅத்துடன் தொழும் போது தொழுகையைப் பாதியுடன் முடித்துக் கொண்டு தனியாகப் பிரிந்து செல்ல முடியாது என்பதே சரியான முடிவாகும்.
பயணத்தின் தூர அளவு:
பயணி தொழுகையை சுருக்கித் தொழ முடியும் என்பதை அறிந்தோம். எவ்வளவு தூரம் கொண்டதாக பயணம் அமைந்தால் சுருக்கித் தொழ முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் நியாயமான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

பெரும்பாலும் பேணுதலின் அடிப்படையில் முடிவு செய்ய அவர்கள் விரும்பியதால்தான் இந்தக் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன என்பதை அவர்களது அபிப்பிராயங்களை ஆராயும் போது அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பில் அறிஞர்களின் அபிப்பிராயங்களையும் சற்று அவற்றுக்கான ஆதாரங்களையும் விரிவாக நோக்குவோம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts