லேபிள்கள்

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா... இதப் படிங்க முதல்ல!

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா... இதப் படிங்க முதல்ல!
எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள சூழல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அல்லது வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதில்லை. மனதுக்குள் பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மனது ஒட்டாமல் எதோ ஒரு வேலையில் காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டால், `முதலீடு செய்ய பணமில்லை' என்பார்கள். அவர்கள் எல்லாம் சந்தையில் இறங்கியே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உண்மையில் பிசினஸ் செய்ய முதலீடு ஒரு பிரச்னையே இல்லை. ஏராளமான பொது மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள் பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு பணம் தர தயாராக உள்ளன. எனவே துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம்.

அப்படி வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்ய நினப்பவர்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். ஒருபோதும் நாம் எடுத்த முடிவு, தவறான முடிவாகிவிட்டதே என்று நம்மை கவலைப்பட வைத்துவிடக் கூடாது. எனவே பின்வரும் விஷயங்களை பிசினஸ் செய்பவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.



30 வயது!
30 வயது என்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். அந்த வயதில் எடுக்கும் முடிவுகள் தான் இறுதிவரை
 நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும். மேலும் 30 வயதுக்கெல்லாம் நமக்கு வாழ்க்கையைப் பற்றியும் நம்முடைய திறமைகள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும். இந்த வயது வரைக்கும் நாம் பல வேலைகளுக்கு மாறி இருக்கலாம். பல தவறுகளைச் செய்திருக்கலாம். வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் 30 வயதுக்குப் பிறகு நாம் பொறுப்பானவர்களாக மாற வேண்டியிருப்பது, நம்முடைய சமூக கட்டமைப்பில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படியும் பொறுப்பில்லாமல் இருந்தால் காலம் நமக்கு அதற்கான பாடத்தைக் கற்றுத்தந்தே தீரும்.

எனவே நம் வாழ்க்கைக்கான முடிவை 30 வயதில் தீர்மானித்துவிட வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம், வேலையா, பிசினஸா, பிசினஸ் என்றால் என்ன பிசினஸ், எப்படி செய்யப் போகிறோம்? போன்ற கேள்விகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் 30 வயதைக் கடந்த பிறகு குடும்பம், குழந்தைகள், செலவுகள் என்று நம் கையை மீறிதான் வாழ்க்கை இருக்கும். மேலும் வயதான பிறகு ரிஸ்க் எடுக்கவும் முடியாது.
ஆர்வம், திறமை, தேவை!

பிசினஸ் செய்வதற்கு முன் நம்முடைய ஆர்வம் எதில் இருக்கிறது, நம்மிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, நாம் செய்யப்போகும்
 பிசினஸின் தேவை என்ன? என்ற இந்த மூன்று கேள்விகளையும் ஒருவர் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்தால்தான் வெற்றி வசமாகும். ஆர்வம் இருந்து திறமை இல்லையென்றாலும் சரி, நம்முடைய பிசினஸுக்கான தேவையே இல்லாமல் இருந்தாலும் சரி தோல்விதான். எனவே என்ன பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு தேவையான திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த பிசினஸ் குறித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். முக்கியமாக அந்த பிசினஸின் தேவை எந்தளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் வளர்ச்சி இருக்கும்.

துவண்டுபோகக் கூடாது!
தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் பெரிதாக வளர்ச்சி இருக்காது. 'சூரியவம்சம்' படத்தில் வருவது போல ஒரே பாட்டில் ஓஹோ என்றெல்லாம் வளர்ந்துவிட முடியாது என்பதை முதலில் உணருங்கள். ஆரம்பத்தில் வருமானம் குறைவாக இருந்தால், வேலையில் இருந்திருந்தாலே மாத வருமானம் ஒழுங்காகக் கிடைத்திருக்குமே என்று நீங்களும் நினைக்கக்கூடாது;
 அப்படி கூறுபவர்களின் பேச்சையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது. ஆரம்பத்தில் ஏற்படும் இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் மனதைரியம் வேண்டும்.

இருக்கு, ஆனா இல்லை!
வேலையில் இருக்கும்போது நம்முடைய சுதந்திரம் என்பது ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கும். ஆனால் பிசினஸ் செய்வது என்று கிளம்பிவிட்டால் நம் இஷ்டம்தான், நம் சுதந்திரம்தான் என்று நினைக்கலாம். தவறில்லை உண்மைதான். சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் வேலையில் இருந்ததைவிட பிசினஸில் அதிக ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

வேலையில் இருக்கும்போது, எட்டு மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் பிசினஸில் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். 'உழைப்புதான் உன்னை உயர்த்தும்' என்பதை நீங்களே உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்.

போட்டியாளர்களைப் படியுங்கள்!
எல்லா பிசினஸிலும் போட்டி இருக்கிறது. போட்டி என்பது மிக ஆரோக்கியமான ஒரு விஷயம். ஒருவரின் வளர்ச்சியைக் குறைக்கவும், கூட்டவும் போட்டிக்கு வலிமை உண்டு. வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள போட்டியாளர்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவர்களை விட எந்தவிதத்தில் நாம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மாற முடியும் என்பதை அதை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் பிசினஸ் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நடைமுறைகள், அரசு கட்டுப்பாடுகள், தொழில்நுட்பங்கள் ஆகியவைக் குறித்து அப்டேட்டாக இருங்கள்.
வேலையில் சம்பள உயர்வுக்கும், பிசினஸில் லாப வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் பிசினஸ் செய்வதிலுள்ள ப்ளஸ். ஆனால் உண்மையில் பிசினஸ் செய்வது, ஒரு இடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் கடினமானது. அந்த ரிஸ்க்கை எடுப்பவர்களும், ஒருபோதும் முன்வைத்த காலை பின்வைக்காதவர்களும் தான் பிசினஸில் ஜெயிக்க முடியும்.
ஆல் தி பெஸ்ட்...!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts