தொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-தொழுகையைப் பொருத்தவரை மிகவும் பரிசுத்தமான நிலையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நோய்க்கு ஆளாக்கப்பட்டால் குறிப்பாக சிறுநீரை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் தன்னை அறியாமல் சொட்டு, சொட்டாக வெளியேறிக் கொண்டிருக்கும். இவர்கள் தொழுகையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு தொடர் வாய்வு (காற்றுப்பிரிதல்) நிலை இருக்கும் இவர்களுக்காகவும், சிலருக்கு வுளு செய்த பின் ஏதோ ஓரிரு சிறுநீர் சொட்டு வெளியாவதைப் போல உணர்வு ஏற்ப்படும் இவர்களுக்காகவும் இன்னும் சிலருக்கு காற்று பிரிவதைப் போல ஓர் உணர்வு ஏற்ப்படும் இவர்களுக்காகவும் இந்த கட்டுரை ஒரு தெளிவுரையாக வருகிறது.
இஸ்லாம் எளிமையான, இனிமையான, வாழ்க்கைக்கு நடைமுறைப்படுத்த ஏற்ற மார்க்கம் ஆகும். அந்த அடிப்படையில் அனைவரின் நிலையை கவனித்து சட்டங்களை இலகுவாக்கியுள்ளது.
தொடர் உதிரப்போக்கும் தொழுகையும்:
மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தொழக் கூடாது. அதே நேரம் சில பெண்களுக்கு வழமையான மாதவிடாய் காலத்தையும் தாண்டி தொடராக உதிரப் போக்கு இருக்கும். இப்படிப் பட்ட பெண்கள் எப்படி தொழ வேண்டும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ்கள் வழிக் காட்டுகின்றன.
'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' என்று கேட்டதற்கு, 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 306)
மேலும் 'மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை' என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். (புகாரி 326)
மேலும் 'உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, 'இது ஒரு நோய்' என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். ( புகாரி 327)
இந்த இடத்தில் இரண்டு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்க வேணடும். முதலாவது பொதுவாக சிலர் தொழுகையில் இரத்தம் வெளியானல் தொழுகை முறிந்து விட்டது என்று கூறுவார்கள். அது பிழையான கருத்து என்பதை மேல் சென்ற ஹதீஸிலிருந்து காணலாம்.
இரண்டாவது மாதவிடாய் முடிந்தும் தொடராக உதிரப் போக்கு ஏற்படுமேயானால் அது மாதவிடாய் அல்ல ஒரு விதமான நரம்பு நோய் என்பதை நபியவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். எனவே அந்த அந்த நேரத்தில் குளித்துக் கொண்டு தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகை வக்துக்கும் குளித்தால் நோய் வரும், அல்லது உடம்புக்கு ஏதாவது ஏற்ப்பட்டு விடும் என்று பயந்தால் அந்த உதிரப் போக்குடன் அந்த அந்த நேரத்தில் வுளு செய்து கொண்டு தொழ வேண்டும்.
இதே போன்று தான் ஒருவருக்கு தொழுகையில் அடிக்கடி சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறினால் அவர் தொழுகைக்கு முன் வுளு செய்து கொண்டு வெளியேறக் கூடிய சிறுநீர் ஆடையிலேயோ,அல்லது கீழே படாதவாறு ஒரு துணியையோ, அல்லது பம்பஸ் போன்ற பாதுகாப்பான ஏதாவது ஒன்றை சிறுநீர் வெளியாகக் கூடிய இடத்தில் வைத்து தொழுது கொண்டால் போதுமானதாகும்.
மேலும் சிலருக்கு வுளு செய்து முடித்தவுடன், அல்லது தொழுது கொண்டிருக்கும் போது ஒரு சொட்டு சிறுநீர் வெளியேறுவதைப் போல ஓர் உணர்வு ஏற்ப்படும். இது ஷைத்தானின் துாண்டுதலாகும். நாம் நன்றாக சிறுநீர் கழித்து சுத்தம் செய்து விட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது. நமது உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தவே இப்படியான உணர்வுகளை ஷைத்தான் நமக்குள் ஏற்ப்படுத்துவான்.
இப்படி ஏற்படுவதைப்பற்றி நபியவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது வயிற்றில் ஏதோ ஏற்படுவதைப் போன்று உணர்ந்து, அதிலிருந்து ஏதேனும் வெளியேறிவிட்டதா இல்லையா என்று சந்தேகப்பட்டால், அவர் (வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்துவிட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 590)
சில நேரங்களில் நாம் தொழும் போது வயிற்க்குள் ஏதாவது குழப்பம் என்றால் காற்று பிரிவதைப் போல ஒரு விதமான சப்தம் வயிற்றுக்குள் கேட்கும். காற்று பிரிந்தால் வுளு முறிந்து விடும். ஆனால் பிரிவதைப் போல ஓர் உணர்வு என்றால் இரண்டில் ஒன்றை கவனிக்க வேண்டும். முதலாவது காற்றுப்பிரியும் சப்தம். இரண்டாவது அந்த காற்றுப் பிரிதலின் நாற்றமாகும். இந்த இரண்டும் ஏற்ப்படாத வரை நாம் தொழுகையை விடத் தேவை கிடையாது.
அதே போல சிலர் வைத்திய சாலையில் படுத்த படுக்கையிலேயே இருப்பார்கள். சிலருக்கு சிறுநீர் கழிப்பதற்கு (வயர்) பட்டையை போட்டிருப்பார்கள், இன்னும் சிலர் அழுக்கடனும், சிலர் நாற்றத்துடனும் இருப்பார்கள். இவர்களுக்கு இஸ்லாம் விதிவிலக்களித்துள்ளது. தொழுகையை விட முடியாது. என்றாலும் அதே நிலையிலேயே தொழுது கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக