லேபிள்கள்

சனி, 17 மார்ச், 2018

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முதஷாபிஹாத்


'ஆல்' என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(ர) அவர்களது தந்தையே 'இம்ரான்' என்பவராவார். ஈஸா(ர) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது.
'நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.' (3:33)
இந்த வகையில் இந்த அத்தியாயம் ஆலு இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) அத்தியாயம் என்று அழைக்கப்படுகின்றது. இது 200 வசனங்களைக் கொண்ட நீண்ட அத்தியாயமாகும். அல்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.


01. முஹ்கம் முதஷாபிஹாத்:
'அவன் தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) 'முஹ்கமாத்' வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) 'முதஷாபிஹாத்'களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப் பத்தை நாடியும், இதன் (தவறான) விளக்கத்தைத் தேடியும் அதில் பல கருத்துக்களுக்கு இடம்பாடான வற்றைப் பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட் டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண் டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே' என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.' (3:7)

இந்த வசனத்தில் குர்ஆனில் மிகத் தெளிவான 'முஹ்கமான' வசனங்களும் இருப்ப தாகவும் அவ்வாறே மூடலான, பல அர்த்தங்களுக்கு இடம்பாடான, முடிவு இதுதான் என அறுதியிட்டுக் கூற முடியாத முதஷாபிஹத்தான வசனங்களும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
குர்ஆனின் சில வசனங்களைப் பார்க்கும் போது முழுக்குர்ஆனும் தெளிவானது என்ற அர்த்தம் தொனிப்பது போல் இருக்கும். உதாரணமாக,
'அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த, ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப் பட்டுள்ளன.' 11:1)

மற்றும் சில வசனங்களைப் பார்க்கும் போது முழுக் குர்ஆனும் முதஷாபிஹத்தானது என்ற அர்த்தம் தொனிப்பது போல் தோன்றும். உதாரணமாக,
'அல்லாஹ் மிக அழகான செய்தியை வேதமாக இறக்கி வைத்துள்ளான். அவை ஒன்றையொன்று ஒத்ததாகவும், திரும்பத் திரும்ப ஓதப்படுபவையாகவும் இருக்கின்றன. தமது இரட்சகனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களது தோல்களும், அவர்களது உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பால் மென்மையடை கின்றன. இது அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம் தான் நாடுவோரை அவன் நேர்வழியில் செலுத்துகின்றான். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகின்றானோ அவனை நேர்வழியில் செலுத்துபவர் எவருமிலர்.' (39:23)
ஆல இம்ரானின் ஏழாம் வசனம் முஹ்கமும் உண்டு, முதஷாபிஹாத்தும் உண்டு என்று கூறுகின்றது. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற குழப்பம் ஏற்படலாம்.
முதல் வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்ட வேதம் என்பது வசனங்களின் ஒழுங்கு உறுதித் தன்மை என்ற வகையில் எடுத்துக் கொண்டால் அல்குர்ஆனின்அனைத்து வசனங்களும் முஹ்கமானதுதான். தெளிவானது, உறுதி யானதுதான்.

இரண்டாம் வசனத்தில் 'கிதாபன் முதஷாபிஹா' என்ற வசனம் ஒட்டுமொத்த குர்ஆனின் கருத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒன்றுக் கொன்று முரண்படாமல் ஒன்றை யொன்று ஒத்துச் செல்வதாக இருக்கும். அந்த வகையில் இந்த குர்ஆன் முதஷாபிஹத்தான வேதம் என்று இங்கே கூறப்படுகின்றது.
குர்ஆனில் முஹ்கமான வசனங்களும் உண்டு. முதஷாபிஹத்தான வசனங்களும் உண்டு எனக் கூறும் இந்த வசனத்தைப் பொறுத்தவரையில் குர்ஆனில் மாற்றுக் கருத்துக் கூற முடியாத முஹ்கமான வசனங்களும் உள்ளன. பல கருத்துக்களுக்கு இடம்பாடான முதஷாபிஹத்தான வசனங்களும் உள்ளன. ஒரு வார்த்தை பல அர்த்தங்களைத் தரக்கூடியதாக அமைந்த வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.
முஹ்கம், முதஷாபிஹாத் என்பனவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளை இப்படிக் கூறலாம்.
01.
முஹ்கமான ஆயத்துக்களின் முடிவு மிகத் தெளிவாக இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் இருக்கும்.

முதஷாபிஹத்தான வசனத்தின் முடிவு மூடலாக இருக்கும். சில அறிஞர்கள் சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் 'அலிப் லாம் மீம்'… போன்ற துண்டிக்கப்பட்ட எழுத்துக்களை அல்லாஹ் மட்டும் அறிந்த முதஷாபிஹத்தான வசனங்களாகக் குறிப்பிடுவர்.
02.
முஹ்கமான ஆயத்துக்களின் அர்த்தம் வெளிப்படையாக இருக்கும். பாவிக்கப்பட்ட வார்த்தை மூலம் அல்லது தஃவீல்-விளக்கத்தின் மூலம் அதை அறியலாம். ஆனால், முதஷாபிஹத் தான வசனங்களின் முடிவான அர்த்தத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். உதாரணமாக துண்டிக்கப்பட்ட எழுத்துக்கள், மறுமை நிகழ்வு, தஜ்ஜாலின் வருகை, மறுமையின் அடையாளமான தாப்பதுல் அர்ழ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

03.
முஹ்கம் என்றால் ஒரு அர்த்தத்தைத்தான் கொடுக்க முடியுமாக இருக்கும். முதஷாபிஹாத் என்றால் பல அர்த்தத்திற்கு இடம்பாடானதாக அமைந்திருக்கும்.

04.
மற்றும் சில அறிஞர்கள் முஹ்கமான ஆயத்துக்கள் தன்னளவில் தெளிவாக இருக்கும். வேறு விளக்கம் அதற்குத் தேவையாக இருக்காது. அல்லாஹ் ஒருவன் என்று கூறுங்கள் என்றால் இதன் பொருளும் முடிவும் தெளிவானது. இதற்கு வேறு விளக்கம் தேவைப்படாது.

முதஷாபிஹத்தான வசனத்தின் விளக்கம் இதுதான் என்று அடித்துக் கூற முடியாது. ஒரு கோணத்தில் பார்த்தால் இப்படியும், மறு கோணத்தில் பார்த்தால் அப்படியும் விளக்கம் கூறக் கூடிய வகையில் அமைந்திருக்கும். ஆனால், அவை வேதத்தின் அடிப்படையாகவும் பின்பற்றத் தக்கதாகவும் இருக்காது!
இவ்வாறு முஹ்கம், முதஷாபிஹாத் என்பவற்றை அறிஞர்கள் பலரும் பலவாறு விளக்கி யுள்ளார்கள். இந்த ஆயத்தில் முஹ்கம்தான் இந்த வேதத்தின் அடிப்படை என்றும் முதஷாபிஹாத் வசனங்களில் வழிகேடர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை செய்யப்படுகின்றது. இந்த எச்சரிக்கை உணர்வும் முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்ற ஈமானும் அவசியம் என்று கூறப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts