லேபிள்கள்

திங்கள், 11 செப்டம்பர், 2017

அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை

அல்குர்ஆன் விளக்கம் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை

'இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) 'தாகூத்'தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ' (2:256)
'லா இக்ராஹ பித்தீன்' மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
'உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.' (109:6)
உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.


'லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:'
'எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு!' (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.

'சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக! அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.' (18:29)
விரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.
இஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.
வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.
சிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உளத்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்பந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது! இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா? முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா? போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts