லேபிள்கள்

செவ்வாய், 27 ஜூன், 2017

நிதி... மதி... நிம்மதி –

குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

திருமணம் என்னும் திருப்புமுனை!
'நீங்க போயிட்டு வாங்கடா, நான் வரலை. ஏற்கெனவே நான் 'கமிட்'ஆன செலவுக்கே என்ன பண்றதுன்னு தெரியல. இதுல, பார்ட்டி, ட்ரீட்ன்னு வேற நிறைய இருக்கு. கொஞ்ச நாளைக்கு என்னை விட்டுருங்க, ப்ளீஸ்!'


'அப்பா, ஆஃபிஸ்ல வேலை ரொம்ப இருக்குப்பா. அதனால நான் அடுத்த மாசமே வர்றேனே. இந்தச் செலவெல்லாம் அப்பவே வச்சிக்கலாமே!'
'சார்.. நம்ம கோபி, லீவு கேட்டானே. எனக்கு 'ஓவர்-டைம்' போட்டுக் குடுத்தீங்கன்னா, நான் வேணுமானா அவனோட வேலையெல்லாம் முடிச்சுக் குடுக்கட்டுமா?'
'முரளி... உனக்குப் பதிலா நான் பெங்களூரு போயிட்டு வர்றேனே... வேற ஒண்ணும் இல்லை... டூர் அலவன்ஸ் கிடைக்குமே! கொஞ்சம் பணம் தேவையா இருக்குடா...'
இன்றைய இளைஞர்களுக்கு மேற்சொன்ன உரையாடல்களின் 'அர்த்தம்' நன்றாகப் புரியும். ஆம், இ்வன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறான்.
நல்லதுதான். மனம் திறந்து வாழ்த்துவோம்.

மிக நிச்சயமாக, ஒரு விஷயத்தில் இளைஞர்களிடம் நல்ல தெளிவு பிறந்து இருக்கிறது. அதுதான், கல்யாண வாழ்க்கைக்குப் பிறகான  திட்டமிடல். குறிப்பாக, செலவு செய்யும் போக்கில் ஒரு மாற்றம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து 'கும்பலாக'த் திரியும் நிலை, குறுகிய காலத்திலேயே மறைந்துவிடுகிறது. பதிலுக்கு, 'இரண்டு பேர்' மட்டுமே ஊர் சுற்றுகின்றனர்!
எண்ணிக்கை குறைந்து போனது மட்டுமே இல்லை. எதற்காக, எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதிலும் ஒரு மாற்றம். தனக்கான கேளிக்கை, விருப்பம் என்பது பின்னுக்குப் போய், தம் இருவருக்கும் பொது வான செலவு; அல்லது 'மற்றவருக்கான' தேவை முன்னுக்கு வந்துவிடுகிறது. அதனால் செலவிடுதலில் 'தரம் சார்ந்த மாற்றம்'
  (Qualitative change) பரிணமித்து விடுகிறது.
அன்றைய, அப்போதைய தேவையைவிடவும், சற்றே நீண்ட காலத்துக்குத் தேவை யானதை வாங்குவதில் அக்கறை பிறக்கிறது. நல்ல உடைகள், காலணிகள், அணிகலன்கள், அழகுப் பொருட்கள், கேளிக்கைச் செலவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன.

இவையெல்லாம், சொத்துக்கள் (Assets) வகையைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், சமீபத்தில் இருக்கும் எதிர்காலத்துக்கு (Near Future) பயன்படக் கூடியன என்பதில் சந்தேகம் இல்லை. ஆக, 'இன்று' என்பதில் இருந்து, 'நாளை' என்று யோசிக்கத் தொடங்குகிற இந்த வயதுதான், வாழ்க்கையில் பணத்தின் அருமையை உணர ஆரம்பிக்கிற  பருவம்.

யாரும் சொல்லித் தராம லேயே, 'நம்' இருவரின் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் பணத்தைச் செலவிடக் கூடாது என்கிற எண்ணம் உதயமா கிறது. இதுதான் என்று அறியா மலேயே, 'நிதி திட்டமிடல்' நடை முறைக்கு வந்துவிடுகிறது!
எவையெல்லாம் வேண்டாத செலவுகள் என்று நாம் பட்டியல் இடுகிறோமோ, அவற்றை யெல்லாம் இவர்கள் இருவரும் 'பேசிப் பேசி' தாமாகவே விலக்கி விடுகிறார்கள். அநேகமாக அத்தனை பேர் வாழ்க்கையிலும் இது நடைபெறத்தான் செய்கிறது.

மற்ற நாடுகளில் எப்படியோ தெரியவில்லை; நம் நாட்டைப் பொறுத்தவரை, 'கல்யாணம் பண்ணிட்டா... பொறுப்பு தானா வந்துரும்...' காரணம், நமது சமுதாயத்தில், திருமணம் என்பது இன்னமும்கூட, ஒரு 'பந்தம்', ஒரு 'கட்டு', ஒரு 'மைல் கல்', வாழ்க்கையில் முக்கியமான 'திருப்புமுனை' என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்து இருக்கிறது.
திருமணம் என்கிற புள்ளியில் இருந்துதான் 'குடும்பம்' என்கிற நிறுவனம் எழுகிறது. இவ்வகை இந்தியக் குடும்பங்கள், உலக அளவில் யாராலும், அசைக்க முடியாத பொருளாதார அலகுகள் (Unassailable Units of Economy) என்பதுதான் நமது வலிமை; நமது வரம். (பலரது கண்களை இதுதான் உறுத்திக் கொண்டு இருக்கிறது.)

கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் படும் பாட்டை நாம் நன்கு அறிவோம். ஆனானப்பட்ட ஐரோப்பிய நாடுகளே, அதிர்ச்சியில் விழி பிதுங்கி நிற்கின்றன. ஆனால், இத்தனை 'களேபரங்களுக்கு' மத்தியிலும், இந்தியா என்னும் யானை, கம்பீரமாக நடை போட்டுக்கொண்டு இருக்கிறதே... காரணம், நம் குடும்பங்கள் பின்பற்றி வரும் 'பொறுப்புத்தன்மை'யின் விளைவாக முகிழ்ந்தது இந்தச் சாதனை.
செலவு மேலாண்மைக்கு வருவோம். இப்போதெல்லாம், ஆண், பெண் இரு சாராருமே பணிக்குச் செல்பவர்கள்தாம். ஆகவே, 'ரெண்டு வருமானம்' என்பது சாதாரணம் ஆகிவிட் டது. இதற்கேற்ப, திட்டமிடல் வேண்டும்.

எல்லாரும் சொல்கிற எளிய விதிமுறைதான் முதலில். ஒருவரின் வருமானத்தில்       குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்; மற்றதை 'அப்படியே' சேமியுங்கள்.
'உன் சம்பளம் உனக்கு; என் சம்பளம் எனக்கு.
  சுதந்திரமாகச் செலவு செய்வோம்' என்று நடந்துகொள்ளுதல் சரியல்ல. அதுதான் 'முற்போக்குத்தனம்' என்று தவறாகப் பொருள் கொண்டுவிட வேண்டாம். உண்மையில் அது  முட்டாள் தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உடனடிச் செலவுகள் என்று இரண்டை வகுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1. இருவரும் அலுவலகம் சென்று வர ஏதேனும் ஒரு வண்டி (அல்லது, இரண்டு வண்டிகள்) 2. சொந்தமாக ஒரு வீடு.
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் வசிப்பவர்கள், சொந்த வண்டியில் பணிக்குச் சென்று வருவதில் சில சௌகரியங்கள் உண்டு. எல்லா நாட்களிலும், பொதுப் போக்குவரத்தில் மட்டுமே போய்க்கொண்டு இருக்க முடியாது. ஆகவே, சொந்தமாக ஏதேனும் ஒரு வண்டி, கட்டாயம் வேண்டியதுதான். இருந்தாலும், இயன்றவரை, பேருந்துப் பயணத்தை மேற்கொள்வது நல்லது.
சொந்த வீடு. மொத்தப் பணத்தையும் ரொக்கமாகத் தந்து வீடு வாங்குவது இயலவே இயலாத காரியம். நம் முன் உள்ள ஒரே வழி வீட்டுக் கடன். திருமணம் ஆன உடனேயே, வீட்டுக்காக திட்டமிடுதலே மிக நல்லது.

குறைந்த வயதில் வீட்டுக் கடன் வாங்கும்போது, திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு அதிகம் கிடைக்கிறது; அதனால் கூடுதலாகக் கடன் தொகை பெற முடிகிறது; நம் விருப்பத் துக்கு ஏற்றாற்போல், வீடு வாங்குவது சாத்தியம் ஆகிறது.
அனைத்துக்கும் மேலாய், நாளுக்கு நாள் வீட்டின் விலை அதிகமாகிக் கொண்டுதான் செல்லும். ஆகவே, உடனடியாக வீட்டின் மீது முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம். வாடகையாகத் தரும் பணத்தின் ஒரு பகுதியை, வீட்டுக் கடன் தவணையாய்ச் செலுத்தினால், சில ஆண்டுகளில் நமக்கென்று சொந்தமாக வீடு இருக்குமே!
ஆயுள் காப்பீட்டுத் தொகை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றையும், திருமணம் ஆன முதல் சில மாதங்களிலேயே, தொடங்கிவிட வேண்டும்.
பிள்ளைகளுக்கான கல்விக்காகத் தனியே சேமித்தே ஆக வேண்டும். கல்விக் கடன், உதவித் தொகை எல்லாம் கிடைக்கும்தான். இருந்தாலும், குழந்தைகளின் எதிர்காலத்துக் காக இப்போது இருந்தே சேமிப்பதே நல்ல வழிமுறை ஆகும். மிக முக்கியமாக, பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பிற முதியோர்களின் நலனுக்காக, தம் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தே ஆகவேண்டும். இது, நமது குடும்பம், உறவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; மனிதம் சார்ந்த, சமூகம் சார்ந்த கடமையும் கூட. மறந்துவிட வேண்டாம்.

ஒரு நினைவூட்டல். 'உன் உறவுக்காரங்க...' 'என் சொந்தம்...' என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். 'வேண்டிய வர்களுக்கு' உதவுவதே இல்லறத்தின் பண்பும் பயனும் ஆகும்.
நிறைவாக, அனேகமாக இருவருக்கும் சேர்ந்தேதான் வருமானம் அவ்வப்போது உயர்ந்துகொண்டே போகும். அதற்கேற்ப, இருவரின் திட்டமிடலும் மாற வேண்டும். 'அதுதான் நீ சேர்த்து வைக்கிறே இல்லை..? அப்புறம் என்ன..? என்னோட பணத்தை 'ஜாலியா' செலவு பண்ணலாமே...' என்கிற மெத்தனம் தோன்றிவிடாமல் கவனமாகச் செயல்படல் வேண்டும்.
'சீரான செலவு - சிறப்பான வாழ்க்கை.' இதுதான் இளம் தம்பதியினர் மனதில் கொள்ள வேண்டிய ஒரே வாசகம்.
இனி நாம் காண இருப்பது 'கடன்'! அதை நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோமே என்கிறீர்களா?
இல்லை. இது மற்றொரு கோணம். கடனின் மறுபக்கம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts