லேபிள்கள்

திங்கள், 5 ஜூன், 2017

சுன்னத்தான தொழுகைகள் – 02

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.
தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்:
'பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி- 626, 1160



'நபி(ச) அவர்கள் சுபஹுடைய (சுன்னத்து) இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னோடு கதைத்துக் கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் (வலப்புறம்) சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி 1168
(இந்த ஹதீஸ்களை வைத்து முடிவெடுப்பதில் அறிஞர்கள் முரண்பட்ட பல நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.)
சுன்னத்து:
மேற்படி ஹதீஸ்களின்படி சுபஹுடைய சுன்னத்துக்குப் பின்னர் வலப்புறம் சாய்ந்து தொழுகை நேரம் வரும் வரை படுத்துக் கொள்வது சுன்னத்து என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அனஸ்(வ), அபூ ஹுரைரா(வ), அபூமூஸா அல் அஷ;அரி(வ) போன்ற நபித்தோழர்கள் இந்தக் கருத்தில் உள்ளனர்.
வாஜிப்:
இமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்) அவர்கள் இவ்வாறு சிறிது படுப்பதை வாஜிப் கட்டாயம் என்று கூறுகின்றார். இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்பதே இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) போன்றோரின் கருத்தாகும்.
மக்ரூஹ்:
சுபஹுடைய சுன்னத்தின் பின் (பள்ளியில்) படுத்துக் கொள்வது மக்ரூஹ் வெறுக்கத்தக்கது என்பது இவர்களின் கருத்தாகும். இவர்களில் இப்னு மஸ்ஊத்(வ), இப்னுல் முஸையப், நகயி, காழி இயாழ்(ரஹ்) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். நபி(ச) அவர்கள் சுபஹுடைய சுன்னத்தின் பின் பள்ளியில் படுத்துக் கொண்டதாக அறியப்படவில்லை. அவ்வாறு நபி(ச) அவர்கள் படுத்திருந்தால் பல வழிகளிலும் அது அறிவிக்கப்பட்டிருக்கும் என்பது இத்தரப்பாரின் வாதமாகும்.
இவற்றைத் தொகுத்து நோக்கும் போது பின்வரும் முடிவை எடுக்கலாம்.
சுபஹுடைய சுன்னத்தின் பின் வலப்புறமாக சாய்ந்து படுத்துக் கொள்வது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுன்னா என்று கூறலாம்.
நபியவர்கள் வீட்டில் சிறிது படுத்ததாகவே வந்துள்ளது. மஸ்ஜிதில் படுத்ததாக வரவில்லை. இந்த அடிப்படையில் வீட்டில் இதை அமுல்படுத்தலாம்.
இந்த சுன்னாவைச் செய்பவர் அப்படியே தூங்கிவிடாமல் சுபஹ் தொழுகைக்கு எழக்கூடியவராக இருக்க வேண்டும். தன்னையும் மீறி தூங்கிவிடுவார் என்றிருந்தால் அவர் இதை நடைமுறைப் படுத்தலாகாது. அத்துடன், நபி(ச) அவர்கள் உறக்க விடயத்தில் எம்மை விட வித்தியாசமானவர்கள். அவர்களின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் உறங்காது என்பதையும் உறக்கம் அவர்களின் வுழூவை முறிக்காது என்பதையும் நபியவர்களின் வீடும், பள்ளியும் அருகருகே இருந்தன என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சுபஹுடைய சுன்னத்தைக் 'கழா' செய்வது:
தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு தொழுகையைத் தொழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அந்தத் தொழுகையை அதற்குரிய நேரம் தாண்டி வேறு நேரத்தில் தொழுவதையே 'கழா' செய்தல் என்பார்கள். நபியவர்கள் இவ்வாறு தவறிப் போன சுன்னத்தான தொழுகைகளைக் கழா செய்துள்ளார்கள். இந்த அடிப்படையில் சுபஹுடைய முன் சுன்னத்து தவறிவிட்டால் அதைக் கழாச் செய்து கொள்ள முடியும்.
'நபி(ச) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். சூரியன் உதித்த பின்னரே அவர்கள் விழித்தார்கள். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் 'இது எங்களிடம் ஷைத்தான் வந்த இடம். உங்கள் கால்நடைகளின் தலைகளைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்திலிருந்து வெளியேறுங்கள் என்றார்கள். பின்னர் வுழூச் செய்து சுபஹுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்னர் இகாமத் கூறப்பட்டது அதன் பின் சுபஹைத் தொழுதார்கள்.' (ஹதீஸின் கருத்து..)
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: முஸ்லிம்- 680-310, நஸாஈ- 623, இப்னு குஸைமா- 988
ஒருவர் பள்ளிக்கு வருகிறார். சுபஹ் தொழுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் ஜமாஅத்துடன் சேர்ந்து சுபஹைத் தொழுதுவிட்டு பின்னர் சுபஹுடைய முன் சுன்னத்தைத் தொழலாம். இதற்கு நபி(ச) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். சுபஹுடைய சுன்னத்தைத் தொழாதவர் சுபஹ் தொழுகைக்குப் பின்னர் சுபஹின் சுன்னத்தைத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இல்லாது சுபஹுக்குப் பின்னர் சுன்னத் தொழுவது தடுக்கப்பட்டதாகும். சுபஹுக்குப் பின்னர் சூரியன் உதித்து சற்று உயரும் வரை உள்ள நேரம் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களில் ஒன்றாகும் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
லுஹருடைய சுன்னத்து:
லுஹருடைய சுன்னத் பின்வரும் மூன்று அடிப்படைகளில் அமையலாம்.
1. முன்னர் இரண்டு ரக்அத்துகள், பின்னர் இரண்டு ரக்அத்துகள்.
'இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். சுபஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி(ச) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும்.'
(
புஹாரி: 1180)
2. முன்னர் நான்கு ரக்அத்துகள், பின்னர் இரண்டு ரக்அத்துகள்.
'ஆயிஷா(ரழி) அறிவித்தார். நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டதில்லை.'
(
புஹாரி: 1182)
'நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன்னர் எனது வீட்டில் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வெளியிறங்கி மக்களுக்குத் தொழுவிப்பார்கள். பின்னர் (வீட்டில் வந்து) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்……'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: முஸ்லிம்-730-105, அபூதாவூத்-1251, திர்மிதி-424, நஸாஈ-874)
03. லுஹருக்கு முன்னர் நான்கு, பின்னர் நான்கு ரக்அத்துக்கள்.
'யார் லுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள், பின்னர் நான்கு ரக்அத்துக் கள் தொழுகின்றாரோ அவரை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கிவிடுவான்' என நபி(ச) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா(ரழி)
ஆதாரம்: நஸாஈ- 1814
(அல்பானி (ரஹ்) அவர்கள் இதை ஸஹீஹ் என்று குறிப்பிடுகின்றார்கள்.)
இந்த மூன்று அடிப்படைகளிலும் லுஹருடைய சுன்னத்தைத் தொழுது கொள்ளலாம்.
லுஹருடைய சுன்னத்தைக் கழா செய்தல்:
ஏதேனும் காரணத்தால் லுஹருடைய முன் சுன்னத்தைத் தொழ முடியாமல் போனால் லுஹர் தொழுத பின்னர் அதைத் தொழுது கொள்ளலாம்.
'நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழாவிட்டால் அவற்றை லுஹருக்குப் பின்னர் தொழுவார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: திர்மிதி 426
(அறிஞர் அல்பானி இதனை ஹஸன் தரத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.)
இவ்வாறே ஏதேனும் காரணத்தால் லுஹருடைய பின் சுன்னத்தை தொழ முடியாது போனால் காரணம் நீங்கிய பின்னர் அதைத் தொழுது கொள்ளலாம்.
'குரைபு அறிவித்தார். அப்பாஸ்(வ), மிஸ்வர் இப்னு மக்ரமா(வ), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(வ) ஆகியோர் என்னிடம் ஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி(ச) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத்தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!' என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ்(வ), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்.
ஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரழி) 'நீர் உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் கேளும்' எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா(ரழி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் சென்று ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி(ச) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ச) அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே! என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ச) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ச) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்' என்றார்கள் என உம்மு ஸலாமா(ரழி) விடையளித்தார்கள்.'
(
புஹாரி: 1233)
இந்த ஹதீஸின் அடிப்படையில் லுஹருடைய பின் சுன்னத்தைத் தொழ முடியாது போய்விட்டால் அஸருக்குப் பின்னர் சரி அதைத் தொழுது கொள்ள முடியும் என்பதை அறியலாம்.
அஸரின் சுன்னத்து:
அஸர் தொழுகைக்கு என்று வலியுறுத்தப்பட்ட சுன்னத்து எதுவும் இல்லை. இருப்பினும் அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்து உண்டு என புஹாரி, முஸ்லிமில் பதிவாகியிருக்கும் பொதுவான ஹதீஸின் அடிப்படையில் அஸருக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்து உண்டு.
'அஸருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(வ)
ஆதாரம்: அபூதாவூத் 1271, திர்மிதி 430
(
அறிஞர் அல்பானி இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.)
இந்த அடிப்படையில் அஸருக்கு முன்னர் நான்கும் தொழலாம்.
அஸருக்குப் பின்னர் நபி(ச) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக அறிவிப்புக்கள் உள்ளன. (புஹாரி: 592)
இருப்பினும் அது நபி(ச) அவர்களுக் கென்று தனித்துவமான தொழுகையாகவே பார்க்கப்படுகின்றது. லுஹருடைய பின் சுன்னத்து தவறிவிட்டால் அஸருக்குப் பின்னர் சரி அதைக் கழா செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக நாம் குறிப்பிட்டுள்ள புஹாரியின் (1233) ஹதீஸ் அஸருக்குப் பின்னர் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மஃரிபின் சுன்னத்து:
மஃரிபுக்கு முன்னர் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது முஸ்தஹப் விரும்பத்தக்கதாகும். இருப்பினும் இது வலியுறுத்தப்படவில்லை.
'மஃரிபுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுங்கள் என்று நபி(ச) அவர்கள் கூறிவிட்டு பின்னர் விரும்பியவர்கள் மஃரிபுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுங்கள் என்று கூறினார்கள். வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக மக்கள் அதை எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சியே அப்படிக் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுல் முஸனீ(வ),
ஆதாரம்: அபூதாவூத் 1281,
இப்னு குஸைமா 1289,
(
அறிஞர் அல்பானி இதனை ஸஹீஹான அறிவிப்பு என்கின்றார்.
மஃரிபின் பின் சுன்னத்து:
மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னாவில் உள்ளதாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட பல ஹதீஸ்களில் இது கூறப்பட்டுள்ளது. இந்தத் தொழுகையில் முதல் ரக்அத்தில் 'குல் யா அய்யுஹல் காபிரூனையும் இரண்டாம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹதையும் ஓதுவது சுன்னாவாகும்.
இஷாவின் சுன்னத்து:
விரும்பியவர்கள் இஷாவுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழலாம். இஷாவுக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸ்கள் இதற்கான ஆதாரங்களாக அமைகின்றன.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts