லேபிள்கள்

சனி, 15 ஏப்ரல், 2017

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
ஒருவர் திடீரென மரணித்து விட்டால் நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே "போஸ்ட்மாட்டம்" (postmortem) பிரேதப் பரிசோதனை என கூறுவோம்.
எவருடைய மரணத்தில் சந்தேகம் எழுகின்றதோ அல்லது கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றதோ அந்த மரணத்தின் உண்மைத்தன்மையை கண்டுப்பிடிக்கவும் குற்றவாளியை கைது செய்யவும் போஸ்மாட்டம் செய்யப்படுகின்றது. இதன் நோக்கம் சடலத்தை சல்லடை போடுவதல்ல மாறாக குற்றவாளியை சட்டத்திற்கு முன் நிறுத்துவதாகும்.
யாருடைய மரணமாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.
இதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம் என்ன வெனில் "யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" இதனடிப்படையில் தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என வாதிடுகின்றனர். இந்த வாதம்; தவறானதாகும்.
யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது மற்றும் சிதைப்பது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபிமானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறுப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச்சூழலில் பிரேதப் பரிசோதனை என்பது இறந்தவரின் உடல் உறுப்புக்களை வீணாக அறுத்து வெட்டி வீசுவதல்ல. இறந்தவரின் மீதுள்ள கோபத்தின் காரணமாக கீறிகிழிப்பதுமல்ல.
இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நன்றாகப் புரிந்துகொண்டால் பிரேதப் பரிசோதனையின் உண்மையையும் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்வார்கள்.
இன்னும் சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். அல்லது மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தவிடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும் தவறாகும்.
இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.
பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.
முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்து கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும். எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.
இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸீஸரின்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள்.
இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்யகிறார்கள்.
கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள்.
இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகள் மனிதனின் நலன் கருதி செய்யப்படுகின்றன.
நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும் போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மூஸா நபியின் சமூகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். கொலையாளி யார் என்று தெரியவில்லை. அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் ஒருமாடு அறுக்கப்பட்டு அதன் பாகத்தினால் கொலையாளியின் மீது அடிக்கப்பட்டது. கொலையுண்டவர் உயிர் பெற்றெழுந்து தன்னை கொன்றவர் இன்னார் தான் என அடையாளம் காட்டி விட்டு மரணிக்கிறார். இச்செய்தியை குர்ஆன் மிகத் தெளிவாக விபரிக்கிறது. (பார்க்க:2:72.73.)
ஆயிரம் நிரபராதிகள் தப்பினாலும் ஒரு குற்றவாளி தப்பிவிடக் கூடாது என்பது போல் கொலையாளி தப்பிவிடக் கூடாது என்ற விடயத்தில் இஸ்லாம் காட்டும் ஆர்வத்தை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை மூலம் குற்றம் நிரூபிக்கப்படுகிறது உண்மைத்தன்மை நிலை நாட்டப்படுகின்றது என்பது தான் சுருக்கமான செய்தி.
எனவே நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. ஆகவே பிரேதப் பரிசோதனையும் நிர்ப்பந்தம் காரணமாகத் தான் செய்யப்படுகின்றது. அது கூடாது என்ற சொல்வது தவறான வாதமாகும்.
இதனுடன் தொடரப்பான இன்னுமொரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வது பொருத்தமென கருதுகின்றேன். அதாவது பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மையத்தை குளிப்பாட்டுவதா இல்லையா என்ற சந்தேகமும் பலரிடம் உண்டு.
மையத்தை குளிப்பாட்டுவது அதனது அசுத்தங்களை நீக்கி சுத்தப்படுத்துவதற்காகத்தான். ஆனால், பிரேதப் பரிசோதனைக்கு உட்பட்ட மையத்தை குளிப்பாட்டும்போது மேலும் அசுத்தங்கள் ஏற்படுவதற்கோ, இரத்தங்கள் வடிந்து ஓடுவதற்கோ இடம்பாடுண்டு. அதன் காரணமாக கபன் ஆடை கூட அசுத்தமாகி விடலாம். எனவே குளிப்பாட்டுவதற்கு பொருத்தமானதாக இல்லை எனக் கண்டால் குளிப்பாட்டுவதற்கு பதிலாக தயம்மும் செய்துவிடுவதே சிறந்த செயலாக இருக்கும்.
உயிரோடு இருக்கும்போது குளிக்க முடியாத அளவுக்கு காயம் அல்லது வேறு காரணங்கள் இருந்தால் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்யுமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது. அதுபோல் இறந்த உடலும் (மையத்தும்) குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் தயம்மும் செய்து விடுவதே சிறந்த வழிமுறையாகும்.
இதுபோல் விபத்தில் இறந்தவர்கள், உடல் சிதைந்து இறந்தவர்கள் தீயில் கருகி இறந்தவர்கள், ஆகியோர்களது உடல்கள் பிடிக்க முடியாத அளவுக்கு நசுங்கிப் போயிருக்கும்;. அப்போது குளிப்பாட்டாமலோ தயம்மும் செய்யாமலோ விட்டுவிட வேண்டியிருக்கும். சிலநேரம் அப்படியான மையத்துக்களை அரசாங்கம் சீல் குத்தி| தரும். அந்த மையத்தை யாரும் தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது மாதிரியான சூழ்நிலையில் குளிப்பாட்டாமலும் தயம்மும் செய்யாமலும் விடுவதால் குற்றமாகாது.
உங்களுக்கு நான் ஒரு கட்டளையிட்டிருந்தால் அதனை உங்களால் முடிந்தவரைச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக் கேற்ப நம்மால் முடியாத காரியத்தில் இவ்வாறு செய்வதால் அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts