லேபிள்கள்

சனி, 29 ஏப்ரல், 2017

சுன்னத்தான தொழுகைகள் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஐவேளை பர்ழான தொழுகைகள் தவிர ஏராளமான சுன்னத்தான தொழுகைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இத்தொழுகை களுக்குப் பொதுவாக சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். அரபியில் 'ஸலாதுத் ததவ்வுஃ' என்று இதனைக் கூறுவார்கள். 'ததவ்வுஃ' என்றால் கட்டுப்படுதல், வழிப்படுதல் என்று அர்த்தம் கூறலாம். இஸ்லாமிய பரிபாiஷயில் ஸலாதுத் ததவ்வுஃ என்றால் பர்ழாக்கப்பட்ட ஐவேளை தொழுகைகள் தவிர்ந்த ஏனைய தொழுகை களைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை என்று கூறலாம்.
நஜ்த் தேசத்தைச் சேர்ந்த ஒருவர் நபி(ச) அவர்களிடம் வந்து இஸ்லாம் பற்றிக் கேட்ட போது 'இஸ்லாம் என்றால் இரவும் பகலும் ஐவேளை தொழுகைகள் என்றார்கள். உடனே அவர் அத்தொழுகைகள் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது கடமையா? என்றார். அதற்கு நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை' என நபியவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்
ஆதாரம்: புஹாரி: 46, முஸ்லிம்:11-8
நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு தொழுகை கடமை இல்லை என்பதைக் கூற நபி(ச) அவர்கள் 'இல்லா அன்ததவ்வஅ' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்கள்.
இவ்வகையில் சுன்னத்தான தொழுகை என்றால் பர்ழான ஐவேளைத் தொழுகை, ஜும்ஆ தொழுகை தவிர்ந்த கடமை இல்லாத தொழுகைகளைக் குறிக்கும். தொழுபவர் இவற்றை விரும்பிச் செய்வார் என்றால் அவரவர் விரும்பிய பிரகாரம் விரும்பிய எண்ணிக்கை தொழுவார் என்பது அர்த்தம் அல்ல. அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டி யிருப்பார்கள். தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் இத்தொழுகைகளை ஒருவர் தொழுவார்.
சுன்னத்தான தொழுகைகளின் முக்கியத்துவம்:
சுன்னத்தான தொழுகைகளை சிறப்பித்துக் கூறும் ஏராளமான நபிமொழிகளைக் காணலாம். அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
1. செயல்களில் சிறந்தது தொழுகை:
'
உறுதியாக இருங்கள். சடைவடையா தீர்கள். அமல் செய்யுங்கள். உங்களது அமல்களில் சிறந்தது தொழுகையாகும்….' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தவ்பான்(வ)
ஆதாரம்: இப்னு மாஜா: 277, முஅத்தா: 81, தாரமி: 714-715, இப்னு ஹிப்பான்.
சுன்னத்தான தொழுகைகளும் அமல்களில் சிறந்தவை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.
2. சுவனத்தில் அந்தஸ்த்தை உயர்த்தும்:
சுன்னத்தான தொழுகைகள் சுவனத்தில் அந்தஸ்தை உயர்த்தக்கூடியவையாகும்.
'ரபீஅதுப்னு கஃபுல் அஸ்லமீ(வ) அவர்கள் நபி(ச) அவர்களுடன் இரவு தங்கி அவருக்குப் பணிவிடை செய்தார்கள். நபி(ச) அவர்கள் அவரிடம், 'என்னிடம் எதையாவது கேள்' என்றார்கள். அவர் 'நான் சுவனத்தில் உங்களுடன் இருக்க வேண்டும்' என்றார். 'வேறு ஒன்றும் இல்லையா?' என்று நபியவர்கள் கேட்டார்கள். 'அதுதான் வேண்டும்' என்றார். அதற்கு நபியவர்கள், 'அதிகமாக சுஜுது செய்வதன் மூலம் உனது வேண்டுதலை நிறைவு செய்ய எனக்கு உதவி செய்' என்றார்கள்.'
அறிவிப்பவர்: அபூ ஸலமா(வ)
ஆதாரம்: முஸ்லிம்: 226-489, நஸாஈ: 1138, அபூதாவூத்: 1320
'சுவனத்தில் என்னை நுழைவிக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என தவ்பான்(வ) அவர்கள் நபி(ச) அவர்களிடம் கேட்ட போது,
'அல்லாஹ்வுக்காக நீ அதிகம் சுஜூது செய்! அல்லாஹ்வுக்காக நீ ஒரு ஸஜதா செய்தாலும் அதன் மூலமாக உன் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தாமல் விடுவதில்லை. உனது ஒரு பாவத்தை அழிக்காமல் விடுவதில்லை' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா அல் யஃமரீ
ஆதாரம்: முஸ்லிம்: 488-225
அதிகமாக சுஜூது செய்வதென்றால் சுன்னத்தான தொழுகைகளை அதிகம் தொழுதாக வேண்டும். இதன் மூலம் சுவனத்தின் அதிகூடிய அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்த நபிமொழிகள் கூறுகின்றன.
3. குறைகள் நீங்குகின்றன:
எவ்வளவு பக்குவமான மனிதன் என்றாலும் அவன் தனது கடமையான தொழுகைகளில் அதிகமான குறைகள் விட வாய்ப்புள்ளது. பர்ழான தொழுகைகளில் நாம் விடும் குறைகள் எமது சுன்னத்தான தொழுகைகள் மூலமாக நிவர்த்தி செய்யப் படுகின்றன.
'
நாளை மறுமையில் மனிதர்களின் அமல்களில் தொழுகை பற்றித்தான் முதலில் விசாரிக்கப்படும். அல்லாஹ் மலக்குகளிடம் 'எனது அடியான் தொழுகையைப் பூரணப்படுத்தியுள்ளானா? அல்லது குறை விட்டுள்ளானா? எனப் பாருங்கள்' என்று -அவன் உண்மை நிலை அறிந்த நிலையிலேயே- கூறுவான். தொழுகை குறைவின்றி இருந்தால் பூரணமான கூலி வழங்கப்படும். அதில் குறைபாடுகள் இருந்தால் 'எனது அடியானுக்கு சுன்னத்தான தொழுகை உண்டா? என்று பாருங்கள்' என்று கூறுவான். சுன்னத்தான தொழுகைகள் இருந்தால் பர்ழில் விடுபட்ட குறைகள் சுன்னத்தான தொழுகைகள் மூலமாக அடைக்கப்படும்…'
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத்:864, தாரமி: 1494, திர்மிதி: 413, நஸாஈ: 465
பர்ழில் விடுபடும் குறைகள் சுன்னத்தான தொழுகைகள் மூலமாக நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதை இதன் மூலம் அறியலாம்.
இஃதல்லாமல் தனித்தனியாக ஒவ்வொரு சுன்னத்தான தொழுகைகள் குறித்தும் சிறப்பித்து நபியவர்கள் பேசியுள்ளார்கள். குறித்த தொழுகைகள் பற்றி நோக்கும் போது அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.
சுன்னத்தான தொழுகைகளின் வகைகள்:
1.
பொதுவான சுன்னத்துத் தொழுகைகள்:
தொழுவது தடை செய்யப்பட்ட நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் விரும்பும் போது விரும்பும் அளவில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகளை இது குறிக்கும். அவரவர் சக்திக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்ப இதைத் தொழுது கொள்ளலாம்.
2. சுன்னதுர் ராதிப்:
ராதிபான சுன்னத்தான தொழுகைகள் என்பன ஐவேளைத் தொழுகைகளுக்கு முன்பின் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகளைக் குறிக்கும்.
ராதிபான- முன் பின் சுன்னத்துத் தொழுகைகளிலும் சுன்னா முஅக்கதா- கட்டாய சுன்னத்துக்கள், சுன்னா கைரு முஅக்கதா- அதிகம் வலியுறுத்தப்படாத சுன்னத்துக்கள் என்று இரு வகையாகப் பிரித்து நோக்கப்படும்.
3. சுனன் கைரு ரவாதிப் என்றால் ஐவேளை தொழுகையுடன் சம்பந்தப்படாத ஏனைய சுன்னத்தான தொழுகைகள் குறித்துக் கூறப்படும்.
ராதிபான சுன்னத்தான தொழுகைகள்:


இது குறித்து விரிவாக நோக்குவோம்.
தொழுகையுடன் தொடர்புபட்ட முன்-பின் சுன்னத்தான தொழுகைகளில் சில தொழுகைகளை நபி(ச) அவர்கள் தொடராகக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். அல்லது அதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அப்படியான தொழுகைகளையே சுன்னா முஅக்கதாகட்டாய சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். மற்றும் சிலவற்றை நபி(ச) அவர்கள் வலியுறுத்தாமல் விட்டிருப்பார்கள். அவை கட்டாயம் இல்லாத சுன்னத்துக்கள் என்று கூறப்படும்.
'நபி(ச) அவர்களிடமிருந்து 10 ரக்அத்துக்கள் தொழுகைகளை நான் பேணி வந்தேன். அவையாவன,
1. சுஹுக்கு முன்னர் 2.
2.
ழுஹருக்கு முன்னர் 2, பின்னர் 2.
3.
மஃரிபுக்குப் பின்னர் இரண்டு.
4.
இஷாவுக்குப் பின்னர் 2.
என்பனவே அவையாகும்' என இப்னு உமர்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(
புஹாரி: 1180, அஹ்மத்: 5758)
இந்த அடிப்படையில் ராதிபான கட்டாய சுன்னத்துக்கள் 10 ரக்அத்துக்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலர் ழுஹருக்கு முன்னர் 04 ரக்அத்துக்கள் என்ற அடிப்படையில் 12 ரக்அத்துக்கள் என்று கூறுகின்றனர். இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
'முஸ்லிமான ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் 12 ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை வழங்கப்படாமல் இருப்பதில்லை. அல்லது அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்' என நபி(ச) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவி உம்மு ஹபீபா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(
முஸ்லிம்: 728-103, அபூதாவூத்:1250,
இப்னு குஸைமா:1185)
இதே ஹதீஸ் ஆயிஷா(ரழி) அவர்கள் மூலமும் (இப்னு மாஜா: 1140), அபூஹுரைரா(வ) மூலமும் (இப்னு மாஜா: 1142) அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சுபஹுடைய முன் சுன்னத்து:
கட்டாய சுன்னத்துத் தொழுகைகளில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
இது குறித்து அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
'நபி(ச) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.'
(
புஹாரி: 1169)
'நபி(ச) அவர்கள் இஷாத் தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸுப்{ஹடைய பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றை நபி(ச) அவர்கள் ஒருபோதும்விட்டது இல்லை.'
(
புஹாரி: 1159)
இது குறித்து இமாம் இப்னுல் கையிம் தனது ஸாதுல் மஆதில் குறிப்பிடும் போது,
'நபியவர்கள் சுபஹுடைய சுன்னத்தையும் வித்ரையும் பயணத்திலும் விட்டதில்லை. ஊரில் இருக்கும் போதும் விட்டதில்லை. பயணத்தில் இருக்கும் போது ஏனைய சுன்னத்தான தொழுகைகளை விட சுபஹுடைய சுன்னத்தையும் வித்ரையும் விடாது பேணி வந்துள்ளார்கள். இவ்விரு சுன்னத்துக்களைத் தவிர வேறு சுன்னத்துத் தொழுகைகளை அவர்கள் பயணத்தில் தொழுது வந்ததாக எந்த செய்தியும் எமக்குக் கிடைக்கவில்லை' என்று குறிப்பிடுகின்றார்கள்.
(
ஸாதுல் மஆத்' 1315)
இந்தவகையில் சுபஹுடைய முன் சுன்னத்து கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும்.
இலேசாகத் தொழுதல்:
சுபஹுடைய சுன்னத்தை நீட்டி நிதானித்துத் தொழாமல் கடமைக்குக் குறைவு ஏற்படாத வண்ணம் விரைவாகத் தொழ வேண்டும்.
'நபி(ச) அவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி:1170
'நபியவர்கள் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்துக்களில் அல்ஹம்து ஓதினார்களா என நான் நினைக்கும் அளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள்' என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி: 1171)
பாத்திஹா ஓதாமல் தொழுதார்கள் என்பது இதன் அர்த்தமன்று. ஏனைய தொழுகைகளுடன் ஒப்பிடும் போது ஆயிஷா(ரழி) அவர்களுக்கு இப்படித் தோன்றியது என்பதே இதன் அர்த்தமாகும்.
'நபி(ச) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத்துத் தொழுகையில் குல்யா அய்யுஹல் காபிரூன் மற்றும் குல்ஹுவல்லாஹு அஹத் ஆகிய சூறாக்களை ஓதுவார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.' (முஸ்லிம்: 726-98, தாரமி: 1584,
இப்னு குஸைமா: 1114, அபூதாவூத்: 1256)
வேறு சில ஆயத்துக்களை ஓதியதாகவும் அறிவிப்புக்கள் வந்துள்ளன.
இந்த வகையில் பஜ்ர் தொழுகைக்கு முன்னர் இலேசாக இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான தொழுகைகளில் ஒன்றாகும் என்பதை அறியலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts