– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்;த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர்.
சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது பொதுவாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சமாகும்.
தபூக் போரில் பின்தங்கிய கஃப் இப்னு மாலிக்(வ) அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய போது நபித்தோழர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். (புஹாரி: 4418)
எனவே, மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சமாகும்.
பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறும் பழக்கமும் காலா காலமாக இருந்து வந்துள்ளது.
முஹம்மத் இப்னு ஸியாத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.' நான் அபூ உமாமதுல் பாஹிலீ மற்றும் சில நபித்தோழர்களுடன் இருந்தேன். அவர்கள் பெருநாள் திடலில் இருந்து வந்தால் ஒருவர் மற்றவருக்கு 'தகப்பல்லாஹு மின்னா வமின்கும்' என்று கூறுவார்கள். என்று குறிப்பிடுகின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடர் 'ஜையி' நல்லது என இமாம் அஹ்மத் குறிப்பிடுகின்றார்கள். அல்பானி அவர்களும் மற்றுமொரு வாழ்த்துக் கூறும் செய்தியை உறுதிப்படுத்த இந்த செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.' (தமாமுல் மின்னா: 1ஃ355)
பெருநாள் தினத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்து 'தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்' என்று கூறுவதில் பிரச்சினையில்லை என இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் இப்னு குதாமா(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (முக்னீ: 2ஃ295)
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் இப்படி வாழ்த்துக் கூறுதல் பற்றிக் கேட்ட போது நான் அதை அறியவும் மாட்டேன், அதை மறுக்கவும் மாட்டேன் என்று பதில் கூறினார்கள். இது குறித்து இப்னு ஹபீப் அல் மாலிகி அவர்கள் விளக்கம் கூறும் போது நான் அறியமாட்டேன் என்றால் அது ஸுன்னா என அறியவில்லை. அதைச் சொல்பவரை நான் எதிர்க்கவும் மாட்டேன். ஏனென்றால், அது ஒரு நல்ல வார்த்தை. அத்துடன் அது துஆவாகவும் அமைந்துள்ளது என்பதனாலாகும் என்று கூறுகின்றார்கள்.
எனவே, பெருநாள் தினத்தில் 'ஈத் முபாரக்' என்ற வாழ்த்துக் கூறலாம். வாழ்த்துக் கூறும் போது இந்த வார்த்தையைத்தான் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வதில் தப்பும் இல்லை.
மக்கள் இந்த வார்த்தையைக் கூறித்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளனர். எனவே, இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது பித்அத்தாகும் என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். இப்படி வாதிடுபவர்கள், தொப்பி அணிகின்றனர். தொப்பி அணிவது மார்க்க விதி என்று மக்கள் நினைக்கின்றனர். சிலர் அதை வலியுறுத்துகின்றனர். இப்படி இருக்கும் போது தொப்பி போடுவது மார்க்கம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே, தொப்பி போடுவது பித்அத் என அவர்கள் கூறவில்லை. இது அவர்களின் வாதத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே, இந்த வாதத்தை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
அல்லாஹு அஃலம்!
http://www.islamkalvi.com
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக