லேபிள்கள்

புதன், 15 பிப்ரவரி, 2017

உங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா? யோசித்து முடிவெடுங்கள்!

உங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா? யோசித்து முடிவெடுங்கள்!
``ரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறுவது இன்றைய தலைமுறையினருக்கு சர்வசாதாரண விஷயமாக மாறிவிட்டது. தற்போது செய்துவரும் வேலையைவிட, இனி மாற விரும்பும் வேலை சிறப்பானது; வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியது என்று நினைத்தால், மாறலாம். அப்படியில்லாமல் சம்பளம் குறைவு, நிறுவனம் சரியில்லை என்கிற காரணங்களுக்காக வேலையை மாற்றுவது தவறு. வேலை மாறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், நிதானமாக யோசித்து நல்லதொரு முடிவினை எடுங்கள்'' என்ற எம்சிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் மேலாளர் ந.பத்மலட்சுமி, நீங்கள் தற்போது செய்துவரும் வேலையிலேயே தொடர்ந்து இருக்கலாமா அல்லது வேறு வேலைக்கு
  மாறலாமா என்கிற முடிவை எடுப்பதற்கான டெஸ்ட் கேள்விகளையும், பதிலையும் தந்தார். கீழே தரப்பட்டுள்ள பத்துக் கேள்விகளுக்கு நீங்கள் உண்மையாகப் பதிலளிக்கும்போது, உங்களால் சரியாக  முடிவெடுக்க முடியும்.
1.காலையில் அலுவலகம் செல்ல ஆயத்தமாகும் போது உங்களின் மனநிலை?
A.மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பேன். சரியான நேரத்துக்குள் அலுவலகத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற பரபரப்பு என் மனதில் இருக்கும்.
B.வேலைக்குச் செல்ல வேண்டுமே என்று அலுத்துக் கொள்வேன். தாமதமாகச் சென்றால் பிரச்னை இல்லை என்பதே எண்ணமாக இருக்கும்.
2.ஒருநாள் அலுவலகத்தில் தங்களின் சக பணியாளரை பார்க்காமல் இருந்தால், எப்படி உணர்வீர்கள்?
A.ஏமாற்றம் மற்றும் வருத்தத்துடன்.
B.நிம்மதியாக மற்றும் மகிழ்ச்சியாக.
3.நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் புதியவர்களை வேலைக்கு எடுக்கும்போது, உங்களின் செயல்பாடு?
A.அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆயத்தமாவேன்.
B.கவலை மற்றும் மன அழுத்தத்துடன் செயல்படுவேன்.
4.அலுவலகத்துக்கு அணிந்து செல்லும் உடையில் உங்களின் அக்கறை?
A.மிகச் சரியான ஆடை அணிந்து செல்வதில் அதிக அக்கறை காட்டுவேன்.
B.அயர்ன் செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், இருப்பதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவேன்.
5.நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தலைமை அல்லது சீனியர் பதவியை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
A.இலக்குகளை அடையும் நோக்கத்தோடு செயல்பட்டால் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.
B.பல வருடங்களானாலும் வாய்ப்புகள் கிடையாது.
6.கடந்த ஆறு மாதங்களில் வேலையின் வளர்ச்சிக்கான புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?
A.ஒவ்வொரு நாளும் ஏதேனுமொரு புது விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்.
B.மிகவும் சோர்வாக இருந்ததால், எந்தவொரு புது விஷயத்திலும் நான் கவனம் செலுத்தவில்லை.
7.உங்களுடன் பணியாற்றுபவர் உங்களுக்கு....
A.நண்பர் மற்றும் சக பணியாளர்.
B.சக பணியாளர் மட்டுமே.
8.சென்ற ஆண்டைவிட நடப்பு ஆண்டில் அலுவலகத்தில் உங்களுக்கான வேலை எப்படி இருக்கிறது?
A.அதிகரித்திருக்கிறது. கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
B.வேலைப்பளு குறைந்துள்ளது. வேலைகள் அதிகமாக இருப்பதில்லை.
9.உங்களின் கருத்தால் நிறுவனம் வளர்ச்சி அடைகிறதா?
A.ஆம். நான் சொல்லும் கருத்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
B.நான் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எந்தக் கருத்தையும் முன்வைப்பதில்லை.
10.முந்தைய சம்பள உயர்வைவிட, சமீபத்திய சம்பள உயர்வு எப்படி இருக்கிறது?
A.முந்தைய சம்பள உயர்வைவிட அதிகம்.
B.முந்தைய சம்பள உயர்வைவிடக் குறைவு.
மேலே குறிப்பிட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டீர்களா? நீங்கள் A மற்றும் B ஆப்ஷன்களில் எதை அதிகமாகப் டிக்
  செய்திருக் கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். இனி உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
அதிக A டிக்!
நீங்கள் தற்போதைய வேலையில் சிறப்புடன், திருப்தியாகப் பணியாற்றி வருகிறீர்கள். வெறும் சம்பள உயர்வுக்காக வேலை மாறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை மாற்றிக்கொள்வது நல்லது. சம்பளம் அவசியம்தான் என்றாலும், வேலையில் திருப்தி மற்றும் வளர்ச்சி என்பது அவசியத்திலும் அவசியமாகும்.

உங்களில் ஒரு சிலர் நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தலைமை அல்லது சீனியர் பதவியை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்கிற கேள்விக்கு, வாய்ப்புகள் இல்லை என்கிற பதிலை தேர்வு செய்திருக்கலாம். இதை வைத்து மட்டுமே வேலையை மாற்றிவிட வேண்டும் என்கிற முடிவுக்குச் சென்றுவிடக் கூடாது. பதவி உயர்வு கிடைக்க இன்னும் கூடுதலாக, உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும். நிறுவனம் வளர்ந்தால்தான் நாம் வளர முடியும். அதனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நாம் பாடுபட வேண்டும் என்கிற எண்ணத்து டன் செயல்படுபவர்களாக இருக்கிறீர்கள்.

நீங்கள் இப்போது செய்துவரும் வேலை நீங்கள் விரும்பிச் செய்யும் வேலை என்பதால், தற்போதைய வேலையையே நீங்கள் தொடரலாம். முயற்சிக்கான முன்னேற்றம் கிடைக்கத் தாமதமானாலும், உங்களுகளுக்கான வளர்ச்சி இந்த அலுவலகத்திலேயே காத்துக் கொண்டிருக்கிறது.

அதிக B டிக்!
நீங்கள் விருப்பமே இல்லாமல் வேலையை செய்துவருகிறீர்கள் என்பதையே உங்கள் பதில் காட்டுகிறது. அதனால் உங்களுக்குப் பிடித்தமான வேலையைத் தேடிப் பிடியுங்கள். அல்லது கிடைத்த வேலையைப் பிடித்த வேலையாக மாற்றிக் கொள்ளுங்கள். வேலையில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு விரைவாகக் கிடைத்து முன்னேற்றப் பாதையை எளிதாகப் பெற முடியும்.

பிடிக்காத வேலையை திருப்தியில்லாமல் நீங்கள் செய்து வந்தால், அதனால் உங்களுக்கும் பலன் கிடையாது. உங்களால் நிறுவனத்துக்கும் பயன் கிடையாது. நீங்களாக வெளியேறுவதற்குள், உங்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு நிர்வாகமே சீக்கிரமாக உங்களை வேலையிலிருந்து நீக்கிவிடும்.

50:50!
தற்போதைய வேலையும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதேசமயம் நிறுவனத்துடன், உடன் வேலை செய்யும் பணியாளர்களுடன் ஒரு சில மனக்கசப்புகள் இருப்பதாக உணர்கிறீர்கள். இந்த வேலை உங்களுக்குப் பிடித்த வேலையாக இருந்தால், இதில் நிலைத்திருக்க செய்யவேண்டிய விஷயங்கள் என்ன என்பதை ஆராய்ந்து, அதன்படி நடக்க ஆயத்த மாகுங்கள். அப்போது மனக்கசப்பாக உணரும் சில விஷயங்கள் எதிர்காலத்தில் காணாமலே போய்விட வாய்ப்புண்டு. அல்லது மனக்கசப்புகள் மறையவில்லை எனில், வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்வது நல்லது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts