லேபிள்கள்

புதன், 25 ஜனவரி, 2017

பொறுமையின் பெறுமை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
குர்ஆன் கூறும் பொன்னான போதனைகளில் பொறுமையும் ஒன்றாகும். பொறுமையைப் போதிப்பது எளிதானது. ஆனால், நடைமுறையில் அதை கடைப்பிடித்துக் காட்டுவதே கடினமானதாகும். நபியவர்கள் பொறுமையின் பொக்கிஷமாக வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பொறுமையின் பெருமை குறித்தும் அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சற்று நோக்குவோம்.

பொறுமையின் பெருமை:
அல்குர்ஆனில் பல வசனங்கள் நபி(ச) அவர்களை விளித்து பொறுமையைப் போதிக்கின்றது.

'(நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! உமது பொறுமை அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் சூழ்ச்சி செய்வதன் காரணமாக நீர் (மன) நெருக்கடிக் குள்ளாக வேண்டாம்.' (16:127)
'(நமது) தூதர்களில் உறுதிமிக்கோர் பொறுமையாக இருந்தது போல் (நபியே!) நீரும் பொறுமையாக இருப்பீராக! அவர்களுக்காக நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் நாளில் (பூமியில்) பகலின் ஒரு கணப்பொழுதேயன்றி தாம் தங்கியிருக்கவில்லை என்பது போன்று (உணர்வார்கள். இது) எடுத்துரைக்க வேண்டியதாகும். பாவிகளான இக்கூட்டத்தாரைத் தவிர வேறெவரும் அழிக்கப்படுவார்களா?' (46:35)
இவ்வாறே முஃமின்களை விளித்தும் பொறுமை போதிக்கப்படுகின்றது
'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள். (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைப்பிடியுங்கள். இன்னும் உறுதியாக இருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.' (3:200)
பொறுமையுடையோரை அல்லாஹ் போற்றுகின்றான்
'கிழக்கு, மேற்குத் திசைப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாகாது. மாறாக அல்லாஹ்வையும் இறுதி நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் நம்புவோரும், தாம் விரும்புகின்ற செல்வத்தை (அல்லாஹ்வுக்காக) நெருங்கிய உறவினர், அநாதைகள், வறியோர், வழிப்போக்கர், யாசிப்போர் (ஆகியோருக்கும்) அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வழங்கி, தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தைக் கொடுப்போரும், வாக்குறுதி அளித்தால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், வறுமை, துன்பம், போர் என்பவற்றின் போது சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்களாவர். அவர்கள்தாம் உண்மை உரைத்தவர்கள்; பயபக்தியாளர்கள்.' (2:177)
அவர்களை அல்லாஹ் நேசிப்பதாகக் கூறுகின்றான்
'மேலும் எத்தனையோ நபிமார்களுடன் இணைந்து அவர்களைப் பின்பற்றிய பலரும் போர் புரிந்துள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் மனம் தளரவோ, பலவீனப்படவோ, அசத்தியத்திற்கு அடிபணியவோ இல்லை. மேலும், பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.' (3:146)
பொறுமையாளர்களுக்கு உதவுவதாக அறிவிக்கின்றான்
'மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழந்து, பலமிழந்துவிடுவீர்கள். பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.' (8:46)
பொறுமை பொறுப்பவர்களுக்கே நல்லது என்று போற்றுகின்றான்
'நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத் தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமை யுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும்.' (16:126)
அவர்களுக்கு அளவற்ற நற்கூலி வழங்குவதாக வாக்களிக்கின்றான்
'உங்களிடம் உள்ளவை முடிந்து விடக் கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையான வையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.' (16:96)
'நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இரட்சகனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையுண்டு. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர் களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும் என (நபியே!) நீர் கூறுவீராக!' (39:10)
அவர்களுக்கு சுவனத்தை அருளுவதாக கூறுகின்றான்
'மேலும், அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால், சுவர்க்கத்தையும், பட்டாடையையும் அவர்களுக்குக் கூலியாக வழங்குவான்.' (76:12)
பொறுமை பல வகை:
01. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடித்தல்:
அல்லாஹ்வின் ஏவல்களைச் செயற்படுத்தும் போது பல கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றைச் சகித்துக் கொள்வது முதல் வகை.

02. தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வதில் பொறுமை.
அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் நாம் ஒதுங்கி வாழ்வதும் பொறுமையே! iஷத்தானிய சக்திகளும் மனோ இச்சையும் தவறின்பால் அழைக்கும். அந்தத் தவறைச் செய்வதில் தற்காலிக இன்பம் கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருந்தால்தான் தவறை விட்டும் ஒதுங்கி வாழ முடியும்.

03. தனக்கு ஏற்படும் சோதனைகள், இழப்புக்கள் என்பவற்றைப் பொறுத்துக் கொள்ளல்:
தனது தேர்வு இல்லாமலேயே ஏற்படும் இழப்புக்களை மனிதன் இலகுவில் சகித்துக் கொள்கின்றான். எல்லாம் விதிப்படி நடந்தது என்று நம்பிவிட்டும் போகின்றான். இவற்றை விரும்பியோ விரும்பாமலோ அவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

சோதனைகள், இழப்புக்களில் இன்னுமொரு வகை உள்ளது. அதுதான் அடுத்த மனிதர்களால் எமக்கு ஏற்படுத்தப்படும் இழப்புக்கள், கஷ;டங்கள். இவற்றை மனம் இலகுவாக மன்னிப்பதில்லை. இதற்குப் பழி தீர்க்க வேண்டும் என மனம் வெறி கொள்ளும். இவற்றையும் மன்னிப்பதுதான் உயர்ந்த உள்ளத்திற்கான அடையாளமாகும். நபி(ச) அவர்கள் இப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். நபி(ச) அவர்கள் இதில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். தீங்கு செய்தவர்களை மன்னித்தது மட்டுமன்றி அவர்களுக்கு நல்லுபகாரமும் செய்தார்கள்.
'நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகிவிடுவார்.'
'பொறுமையாக இருப்போரைத் தவிர வேறு எவருக்கும் இ(ப் பண்பான)து கொடுக்கப்படமாட்டாது. மேலும், மகத்தான பாக்கியமுடையோரைத் தவிர வேறு எவருக்கும் இது கொடுக்கப்பட மாட்டாது.'
(41:34-35)

இந்த மூன்று வகைப் பொறுமையும் தலைமைத்துவப் பண்பிற்கு அவசியமானதாகும்
'அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, எமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தபோது எமது கட்டளைப் பிரகாரம் நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து நாம் உருவாக்கினோம்.'
(32:24)

பொறுமையும் உறுதியும் இணையும் போது தலைமைத்துவத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த உயரிய பண்பை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று வினா இப்போது எழலாம்.
உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது! உங்களுக்கு எவராவது ஒரு தீங்கை செய்துவிட்டால் அது அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று உறுதியாக நம்பினால் செய்தவன் இவன் என்றாலும் செய்வித்தவன் அல்லாஹ் என்று எண்ணும் போது பழிவாங்கும் வெறி அடங்கி மனம் கொஞ்சம் பக்குவம் பெறும்.
நான் செய்த ஏதோ ஒரு தவறுக்காக அல்லாஹ் இவனை என்மீது ஏவி விட்டிருக்கலாம். எனவே, நான் என்ன தவறு செய்தேன் எனச் சிந்தித்து தவறைத் திருத்த முனைய வேண்டும். இப்படி சிந்திக்கும் போது அவன் தவறு செய்ததற்கு ஒரு வகையில் நானும் காரணம் என மனம் கோபத்தைத் தணிக்கும்.
'உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், அது உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டதினாலேயாகும். மேலும், அவன் அதிகமானவற்றை மன்னித்து விடுகின்றான்.'
(42:30)

இச்சந்தர்ப்பத்தில் தவ்பா செய்ய வேண்டும். அலி(வ) அவர்கள் இது பற்றிக் கூறும் போது,
'ஒரு அடியான் அல்லாஹ்வின் மீதே நல்லெண்ணம் வைக்கட்டும். தான் செய்த தவறுகளுக்காக அச்சப்படட்டும்' என்பார்கள். மற்றும் சிலர்,
'எந்த பலாய் முஸிபத்து இறங்குவ தென்றாலும் பாவம்தான் காரணமாக இருக்கும். தவ்பாவின் மூலமாகவே அது நீக்கப்டும்' என்று கூறுவர்.
தனக்குப் பிறரால் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்வதில் கிடைக்கும் நன்மைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது உள்ளம் அமைதிபெறும்.
'தீமையின் கூலி அது போன்ற தீமையேயாகும். எனினும் எவர் மன்னித்து, (உறவை) சீர் செய்து கொள்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ் விடமே இருக்கின்றது. நிச்சயமாக அவன் அநியாயக் காரர்களை நேசிக்கமாட்டான்.' (42:40)
ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதில் மூன்று வகையினர் உள்ளனர்
1. தனக்கு அநீதி இழைத்தவனுக்கு அதே அளவு பதிலடி கொடுப்பவர்.
2. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக தவறு செய்தவனுக்கு பதிலடி கொடுப்பவர். (இவர் அநியாயக்காரர்)
3. மன்னித்து பொறுமை காப்பவர்:
இவருக்கு அல்லாஹ் நற்கூலிகளை வழங்குகின்றான். அநியாயக்காரரை அல்லாஹ் நேசிப்பதில்லை. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அதேயளவு பதிலடி கொடுப்பவரை அல்லாஹ் விரும்புவதாகவும் சொல்லவில்லை. தண்டிப்பதாகவும் கூறவில்லை.

எனவே, அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து மன்னித்துவிட்டுப் போகலாம் என உள்ளத்தை ஆறுதல் படுத்தினால் கொந்தளித்து வரும் கோபத்தைத் தணித்துவிடும். கொதிக்கும் உள்ளம் அடங்கிவிடும்.
உங்களுக்குத் தீங்கு செய்தவரைப் பழி தீர்ப்பதை விட மன்னித்துவிடுவது உங்கள் உள்ளத்தில் கோபம், ஏமாற்றும் எண்ணம், பழிதீர்க்கும் வஞ்சகம் போன்ற கெட்ட எண்ணங்களை அகற்றிவிடும். உள்ளம் உடனே அமைதி பெற்றுவிடும். பழிதீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பழிதீர்க்கும் வரை அது அமைதி பெறாது. அதற்காக நேரத்தை, சக்தியை, பணத்தையெல்லாம் செலவு செய்து சிரமப்பட வேண்டியும் இருக்கும். மன்னித்துவிட்டால் மனம் அமைதி பெற்று விடும். இது ஒரு வகையில் இலாபமாகும்.
தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிப்பது உள்ளத்திற்கு ஒரு இழிவாகும். மன்னிப்பது உள்ளத்திற்கு ஒரு கண்ணியமாகும். இதையே நபி(ச) அவர்கள், 'மன்னிப்ப தால் அல்லாஹ் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகரிப்பதில்லை.' (முஸ்லிம்) என்றும் கூறினார்கள். தண்டிப்பது வெளிப்படையில் கௌரவ மாகத் தெரிந்தாலும் அந்தரங்கத்தில் அது இழிவாகும். மன்னிப்பது வெளிப்படையில் இழிவாகத் தெரிந்தாலும் அந்த்ரங்கத்தில் அது கண்ணியமாகும்.
தன்னைத் தாக்கியவனைத் தான் மன்னித்து தாராளமாக நடந்து கொண்டால் தான் செய்த தவறுகளையும் அல்லாஹ் மன்னித்து தன்னுடன் தாராளமாக நடந்து கொள்வான் என்று எண்ணினால் மனம் அடங்கிப் போகும்.
தனக்கு தீங்கிழைத்தவனுக்கு பதிலடி கொடுக்க திட்டம் தீட்டி அதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பழி தீர்க்கும் போது அது வெற்றி பெறாவிட்டால் அனைத்துமே நஷ;டமாகிப் போகும். அத்துடன் மனம் ஆறுதல் அடையவே மாட்டாது. அதே வேளை, பழி தீர்க்கும் பணியில் நமக்கே மீண்டும் அதில் பாதிப்பு ஏற்பட்டால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிடும். இதைவிட மன்னித்துவிட்டால் மனம் நிம்மதி பெறுவதுடன் அல்லாஹ்விடத்தில் கூலியைப் பெறுவது இலாபமானதாகும்.
நபி(ச) அவர்கள் தனக்காக யாரையும் பழிதீர்த்ததில்லை. நபி(ச)அவர்களே எமக்கு அழகிய முன்மாதிரியாவார்கள். அவர்கள் உயர்ந்த குணநலன்மிக்கவர்கள். அப்படியென்றால் பழிக்குப் பழி வாங்குவது உயர்ந்த பண்போ அழகிய முன்மாதிரியோ அல்ல. இதை சிந்தித்துப் பார்த்தால் பழிதீர்த்தல் என்பது சிறந்த வழி அல்ல என்பதைப் புரியலாம்.
அல்லாஹ்வின் ஏவலைச் செய்யும் விடயத்தில் அல்லது தடையை விட்டும் ஒதுங்கும் விடயத்தில் அல்லது நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் விடயத்தில் எமக்கு எதிராகச் செயற்பட்டவரிடத்தில் பழிவாங்கும் விதத்தில் நடக்காமல் மன்னிப்பது கட்டாயமாகும். ஏனெனில், அல்லாஹ் முஃமின்களின் உயிரையும் உடைமைகளையும் விலை கொடுத்து வாங்கிவிட்டான்.
'நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர் களிடமிருந்து அவர்களது உயிர்களையும், அவர்களது செல்வங்களையும் அவர்களுக்கு சுவர்க்கம் உண்டென விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்; அவர்கள் (எதிரி களைக்) கொல்வார்கள்; (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். (இது) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) தன்மீது கடமையாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும். அல்லாஹ்வை விட, தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் வேறு யார்? எனவே, நீங்கள் செய்த உங்களது இவ்வியாபாரம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.'
(9:111)

எனவே, இதற்கான கூலியை அல்லாஹ்விடமே எதிர்பார்க்க வேண்டும்.
நாம் ஏதாவது தவறு செய்து அதனால் பாதிப்பைச் சந்தித்திருந்தால் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது கோபப்படுவதை விட்டு விட்டு எம்மையே நாம் நொந்து கொள்ள வேண்டியதுதான். நம்மை நாம் திருத்தியாக வேண்டும்.
உலக விவகாரங்களில் எதையேனும் அடைந்து கொள்ளும் விடயத்தில் நாம் பிறரால் சிரமங்களைச் சந்தித்தால் சிரமங்கள், இழப்புக்கள் இன்றி இந்த உலகில் எதையும் பெற முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.
பொறுமையாளிகளுடன் அல்லாஹ் இருப்பதாகவும் பொறுமையாளிகளை அல்லாஹ் நேசிப்பதாகவும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நாம் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். அல்லாஹ்வின் உதவி கிடைத்தால் பல்வேறு பட்ட தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். இந்த வகையில் நாம் எதிர் நடவடிக்கை எடுப்பதை விட மன்னிப்பது பெரிதும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தால் பழி தீர்க்கும் வெறிநிலையை ஒழிக்கலாம்.
பொறுமை ஈமானின் பாதி என்று கூறப்படுகின்றது. ஈமானின் பாதியை இழக்க மனம் இடம் தரக் கூடாது.
நாம் பொறுத்துக் கொண்டால் எமக்கு அல்லாஹ் உதவி செய்வான். நாம் பழி தீர்க்கச் சென்றால் அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைக்காது. பொறுப்பவன் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றான். பழி தீர்ப்பவன் தன்னையே நம்பி களத்தில் இறங்குகின்றான். அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைப்பதே அனைத்துவித வெற்றிக்கும் வழியாகும். இதை உணர்ந்தால் பழிதீர்ப்பதை விட மன்னிப்பதே மகத்தான வெற்றி என்பதை அறியலாம்.
சில வேளை பழிதீர்ப்பதில் நாம் வெற்றி பெற்றால் கூட பின்னர் மனம் நோகலாம். ஏன் இப்படிச் செய்தோம் என்று எம்மை நாமே நொந்து கொள்ள நேரிடலாம். அல்லது எம்மை மக்கள் சபிக்கலாம். அப்போது மனம் நொந்தாலும் தீர்வு பெற மாற்று வழி இருக்காது.
சில வேளை நாம் பழி தீர்த்த பின்னர் மீண்டும் அவன் எம்மைப் பழி தீர்க்க முனையலாம். முன்னரை விட தீவிரமாக நமக்கு எதிராகச் செயற்பட முனையலாம். பின்னர் நம்மை நாம் தற்காத்துக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அல்லது இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இதை விட மன்னித்து விடுவது இலகுவான தல்லவா?
பழிதீர்க்க நினைப்பவன் பழிதீர்க்கும் போது கோபம், ஆத்திரம் காரணமாக வரம்பு மீறிவிடலாம். அதனால் அவன் அநியாயக்காரன் எனும் பட்டியலில் அடங்கிவிடுவான். அல்லாஹ்வின் நேசத்தை இழந்து கோபத்தைப் பெற்றுத் தரும் செயல் இதுவாகும். இதனாலும் பழிவாங்கும் எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்.
பிறரால் ஏற்படும் தீங்குகளை மன்னிப்பதால் எமது பாவங்கள் மன்னிக்கப்படும்; அந்தஸ்து உயர்த்தப் படும். ஆனால், பழிவாங்கினால் பாவம் மன்னிக்கப்படுவதையும், அந்தஸ்து உயர்த்தப்படுவதையும் நாம் இழந்துவிடுவோம். எனவே, மன்னிப்பதே மேலானதாகும்.
எனவே, மன்னிப்பதால் ஏற்படும் இது போன்ற நன்மைகளை மனதிற் கொண்டு மன்னிக்கும் மனதைப் பெறலாம். பழிவாங்கும் உணர்வையும் கோபத்தையும் அடக்கலாம். இந்த வகையில் மூன்று வகைப் பொறுமையிலும் உறுதியாக இருப்பதுதான் ஏற்கனவே நாம் கூறிய பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வசனங்கள் கூறிய பயன்களைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஆகவே, பொறுமை மூலம் உயர்வு பெற முயல்வோமாக!.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்தபாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts