தோல்வியிலிருந்து வெற்றிக்கு, நீங்கள் நிச்சய மாகச் செல்ல முடியும் இந்த நூல் தோல்வியினால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும். மீண்டும் வெற்றியடைய வேண்டிய வழி முறைகளைக் கொடுக்கும். ஊக்கத்தைக் கொடுக்கும்.
எது வெற்றி? எது தோல்வி?
முதலில் எது வெற்றி? எது தோல்வி? நினைத்ததை அடைந்தால் வெற்றி. அடைய முடியாவிட்டால் தோல்வி.
முதலில் புரிந்துகொள்ள வேண்டியது "தோல்வி என்பது நாம் செய்த செயல்கள் சரியில்லை" என்பதை அறிவுறுத்த வந்த நிகழ்வு. இதில் நான் தோற்கவில்லை. நான் செய்த செயல்கள் சரியில்லை என்பதுதான் நிகழ்வு.
எனவே, நம் வாழ்க்கை அகராதியில், 'நான் தோற்றுவிட்டேன்' என்றசொல்லைத் தூக்கிக் கடலில் போட்டு விடுவோம்.
குழந்தை நடக்க முயற்சி செய்யும்பொழுது பலமுறை விழுந்து எழுந்துதான் நடக்கக் கற்றுக்கொள்கிறது. எந்தக் குழந்தையாவது 'நான் நடக்க முயற்றிக்கும் பொழுது 50 முறை விழுந்து விட்டேன். எனவே நடப்பது எனக்கு ஒத்துவராத விஷயம்" என முடிவெடுத்திருக்கிறதா? '50 முறை என்ன, 500 முறை விழுந்தாலும் எழுந்து நடந்தே தீருவேன்' என்ற உற்சாகம் Motivation enthusiasm இருப்பதால் குழந்தை புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளது. தன்னுடைய 5 வயதிற்குள் குழந்தை கிட்டத்தட்ட 93 திறமைகளை வளர்த்துக்கொள்கிறது.
உடனே வெற்றி இல்லை
நாம் சைக்கிளோ, ஸ்கூட்டரோ, காரோ கற்றுக்கொண்ட பொழுது ஒரே முயற்சியில் கற்றுக்கொள்ளவில்லை. பலமுறைவிழுந்தும் அடிபட்டும் கற்றுக்கொண்டோம்.
இப்படி எந்தத் திறமையையும் ஒரே முயற்சியில் நாம் பெற்றதில்லை. ஆனால் தொழிலுக்கு வந்த பிறகு 'தோல்வியே வரக் கூடாது' என்று நினைக்கிறோம்.
நண்பர்களே! ஒரு ஊருக்குக் காரில் போனால் மேடு, பள்ளங்கள், மழை, புயல் டயர்பஞ்சர், கூட்ட நெரிசல் எனப் பல்வேறு தடைகள் வருகின்றன. இவற்றையெல்லாம் கடந்துதான் நாம் அந்த ஊருக்குச் சென்று சேருகிறோம். அதற்காக நாம் பயணத்தை ரத்து செய்து விடுவதில்லை. திரும்பி வந்துவிடுவதும் இல்லை. தடைகளைக் கடந்து அந்த இடத்தை அடைகிறோம்.
அதுபோலத் தொழிலும் பிரச்சனைகள், சங்கடங்கள், போட்டிகள், நஷ்டங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவை ஏற்படத் தான் செய்யும். தொழிலில் வெற்றிபெற அந்தத் தடைகளைக் கடந்துதான், தோல்விகளைச் சந்தித்துத்தான் செல்ல வேண்டி இருக்கிறது.
சாதனையாளர்கள்…
இந்த மனிதனை வாழ்க்கையில் சாதனையாளர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்கள் நிறையத் தோல்விகளைச் சந்தித்து அவற்றை யெல்லாம் கடந்துதான் வெற்றியடைந்திருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தோல்விகளால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள்.
இதனை வள்ளுவர்
"இடைக்கண் முறிந்தார் பலர்!" என்பார்.
வெற்றியார்கள், சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் அவர்கள் அடைந்த பலன்கள் – பயன்கள் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பட்ட கஷ்டங்கள், தோல்விகள், தூக்கம் கெட்ட இரவுகள், அவமானங்கள், சிந்திய வியர்வை இவற்றைப் பற்றிச் சிறிதளவே சொல்லப்பட்டு இருக்கிறது.
எத்தனையோ வெற்றியாளர்களை நான் தனிப்பட்ட முறையில் பேட்டி கண்டபொழுது அவர்கள் சந்தித்த தோல்விகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏராளம், ஏராளம்.
பெரிய வெற்றி வேண்டுமானால்…
வெற்றியின் அளவு பெரியதாக இருக்க இருக்கப் போராட்டங்களும் பெரிதுதான். கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதிகம். அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுதும், அதனுள்ளே சுவர் எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதும் வெளி உலகுக்குத் தெரியாது. அந்தச் சமயத்தில் வெளி உலகம் உங்களைக் கேலி செய்யலாம். அல்லது மதிக்காமல் இருக்கலாம். அவர்கள் பார்வையில் கட்டிடம் மேலே வந்தால்தான் வெற்றி என்று நினைப்பார்கள்.
ஆனால் நண்பர்களே! நீங்கள் இதுவரை சாதிக்காமல் இருந்தால், தோல்வியடைந்து கொண்டிருந்தால் 'அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று அர்த்தம். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். இப் பொழுது நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர் கள். உங்களால் நிச்சயமாக உயர்ந்த கட்டித்தைக் கட்டமுடியும்.
ஒரு விவசாயி நெல் விதைத்தால் 3 மாதத்தில் அறுவடை செய்யலாம். ஆனால் மாமரம், தென்னைமரம் வைத்தால் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பலன் பல வருடங்கள் தொடர்ந்து கிடைக்கும். ஆகவே நீங்கள் பெரிய வெற்றியடையத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள்.
தோல்விக்குக் காரணங்களை ஆய்க
ஒவ்வொரு முறையும் மனிதர்கள் தோல்வியடையும்போது விஞ்ஞானப் பூர்வமாகக் காரண காரியங்களை ஆராய வேண்டும். தோல்விக்குக் காரணம் என்ன? எதில் குறை? என்ன குறை? என்பதைத் தீர்க்கமாகப் பார்க்க வேண்டும்.
அதாவது குறை-தொழில் அறிவிலா? அணுகுமுறையிலா? திறமையிலா? அல்லது எனக்கு வியாபார – விற்பனை உத்திகள் சரியாகத் தெரியவில்லையா? போட்டியா உலக நிலவரம் தெரியவில்லையா? தரமா? விலையா? வாடிக்கையாளர் சேவை போதவில்லையா? தொடர்ச்சியான வளர்ச்சி இல்லையா? கணக்குகளில் சரியில்லையா? தொழில் ஈடுபாடு அல்லது அக்கறையில்லையா? நன்கு கவனிக்கவில்லையா?
இப்படிப் பல கோணங்களில் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களிடமும் ஆலோசகர் களிடமும் ஆலோசனை பெற வேண்டும். குறை களைக் கண்டுபிடித்துச் சரி செய்து, மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
நினைத்த வெற்றி- நினைத்த குறிக்கோளை அடையும் வரை மீண்டும், மீண்டும் தொடர் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். 'எத்தனை தோல்விகள் வந்தாலும் காரணத்தைக் கண்டுபிடித்து வெற்றியடையாமல் விட மாட்டேன்' என்றமன உறுதி உடையவர்களுக்கு வெற்றி நிச்சயம். இதை டாக்டர் Falu தீவிரத்தன்மை Intentness என்று கூறுவார்.
தோல்விகள் – விழிப்புணர்வை உருவாக்கும்
மனித வாழ்க்கையில் தோல்விகள் என்பவை விழிப்புணர்ச்சி ஊட்ட வந்தவை. நமக்கு எச்சரிக்கை உணர்வை உருவாக்க வந்தவை. அதற்குப் பிறகு 'விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்ற நிலை வரும்.
நண்பர்களே! அம்மை ஊசி போடும் போது அம்மை நோயை உண்டாக்கும் கிருமிகளைச் சிறிதளவு உடலில் செலுத்துகிறார்கள். அந்தக் கிருமிகள் உள்ளே போனால் நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அதனை எதிர்த்துப் போராடுகின்றன. நோய்க் கிருமிகள் குறைவாக இருப்பதால், வெள்ளை அணுக்கள் அதிகமாக இருப்பதால் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. அதன் பிறகு வெள்ளையணுக்கள் விழிப்புற்றுத் தயார் நிலையில் இருக்கின்றன. உண்மையான நோய்க் கிருமிகள் வந்தாலும் போரிட்டு வென்று விடுகின்றன.
அம்மை ஊசி போடும்போது வலிதான். வேதனைதான். சிலசமயம் காய்ச்சலும் வந்துவிடுகிறது. ஆனால், அவற்றால் அதன்பிறகு பெரிய நன்மை ஏற்படுகிறது. அதைப்போலவே வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங் களும், தோல்விகளும் வலியை, வேதனையைக் கொடுத்தாலும் பின்னர் விழிப்புணர்ச்சியை ஊட்டி நமக்கு வெற்றி பெறத் துணைபுரிகிறது.
தோல்விக்கு பின் வரும் வெற்றி தரும் நன்மைகள்
இந்த மனித வாழ்க்கைச் சரித்திரத்தில் வெற்றியால் பெற்ற அறிவைவிட, தோல்வியால் பெற்றஅறிவும், விழிப்புணர்வும் அதிகம். எப்படி ஒரு மருத்துவர் உடலில் உள்ள கட்டியை நீக்கி னால், நமக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், அதன் பலனாக நன்மை கிடைக்கிறது. அதேபோலக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி தோல்வியைக் கொடுத்தால் அதனாலும் ஒரு நம்மை கிடைக்கிறது. நாம் மனப்பக்குவம் பெறுகிறோம்.
வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். இப்படித் தோல்வியடைந்து – சங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனிதான்.
மனிதர்கள் ஏன் இமயமலையில் ஏறுகிறார் கள்? அதில் எத்தனை சிக்கல்கள், சோதனைகள், சாதாரண வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தடைகளும் இல்லை. ஆனால் இமய மலை ஏறும்பொழுது எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் கடந்து மலை உச்சிக்குச் சென்றுவிட்டால், அந்தச் சாதனையே சுகமானது, மகிழ்ச்சியானது.
ஆகவே, நண்பர்களே! தோல்விகளைக் கடந்து அந்தச் சாதனைச் சந்தோஷத்தை அடைவோம். அதுவே நமக்குப் பேரானந்தம்.
தோல்வியானால்… அதனால் என்ன?
எது நடந்தாலும் இன்று முதல் ஒரு கேள்வியைக் கேளுங்கள். அந்தக் கேள்வி அதனால் என்ன? (So What?)
அதாவது அந்தத் தோல்வியால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நினைத்து அதனால் என்ன? எதுவும் வரட்டும். அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் நான் சந்திப்பேன்' என்று உறுதியாக நில்லுங்கள். 'அதைத் தாங்கிக்கொள்ள நான் தயார்' என்றமன உறுதியுடன் இருப்பவர் களும் எந்தச் சங்கடங்களும், தோல்விகளும், பிரச்சனைகளும் எந்தத் தீங்கினையும் செய்ய முடியாது.
அதாவது, "மாற்ற முடிந்தவற்றை மாற்றுவோம். மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வோம்". "என்னதான் நடக்கும் நடக் கட்டுமே?" என்று எதையும் எதிர்கொள்வோர்க்கு இந்த உலகில் எதுவும் பிரச்சனை இல்லை.
வள்ளுவர்,
'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.'
என்று கூறுகிறார்.
அதாவது, 'இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுடன் அறிவாளிகள், தங்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும் படி செய்துவிடுகிறார்கள்.'
ஜாதகம், சோதிடம், எண் கணிதம்…
அடுத்துத் தோல்வி அடைந்ததற்கு விஞ்ஞானப் பூர்வமான காரணத்தைக் கண்டு பிடிக்காமல் சிலபேர் அனுமானங்கள் கொள்கிறார்கள். இது காரணமாக இருக்குமோ, அது காரணமாக இருக்குமோ? என்றெல்லாம் தவறாக அங்கும், இங்கும் ஓடுகின்றனர். சிலமுறை தோற்றவுடன் மனதில் குழப்பமடைந்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக மனம் கலங்கிவிடுகிறார்கள். மீண்டும் வெற்றியடைய ஜாதகம், சோதிடம், நியூமராலஜி, அருள் வாக்கு, கைரேகை, அதிர்ஷ்டக்கல், பில்லி சூன்யம், மாந்தரீகம் என்று பல்வேறு அம்சங்களை நாடுகின்றனர். பலர் ஏமாற்றப்படவும் செய்கின்றனர்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 999 முறை தோல்வியுற்றார். 'லேட்டக்ஸ்' என்ற கெமிக்கலைக் கண்டு பிடிக்க 16999 முறைதோல்வியுற்று 17000வது முறைதான் கண்டுபிடித்தார். அவர் ஒவ்வாரு தோல்வியின் போதும் விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து தொடர்ந்ததால் வெற்றியடைய முடிந்தது.
அவர் மட்டும் ஒருசில தோல்விகள் வந்தவுடன் ஜாதகம், சோதிடம் என்று பார்த்திருந்தால், நிலைமை என்ன ஆகியிருக் குமோ தெரியவில்லை.
ஜாதகம், சோதிடம் உண்மையா? பொய்யா? என்று ஆராய்ச்சி செய்ய நாம் வரவில்லை? இவற்றைப் பார்க்கலாமா? வேண்டாமா?
நம் முன்னோர்கள் என்ன சொல்கிறார்கள்? அருணகிரி நாதர் என்ன சொல்கிறார்?
'நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும்' என்கிறார்.
அதாவது, கோள்கள், கிரகங்கள் மற்றதடைகள் என்ன செய்திட முடியும். இறைவனுடைய திருவருள் நமக்குத் துணை செய்யும்பொழுது.
திருநாவுக்கரசர் சொல்கிறார்,
'நாமார்க்கும் குடியல்லோம்
நமனை யஞ்சோம்'
பாரதியார் சொல்கிறார்,
'சோதிடம் தனை இகழ்'
விவேகானந்தர் இதைப்பற்றி விளக்க ஒரு கதை சொல்லியிருக்கிறார்,
'ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தான். அந்த அரசனுடைய அரசவையில் ஒருமுறை ஒரு சோதிடர் வந்தார். அவர் சொன்னார் 'அரசே உங்களுக்கு வாழ்க்கை இன்னும் முப்பது நாட்கள்தான் இருக்கிறது ஜாதகப்படி' என்று சொல்விட்டார். அதற்கு மன்னன் மிகச் சோர்வாகிவிட்டான். இரண்டு நாட்களாக மிகவும் கவலை.
அந்த அரசனால் மதிக்கத்தக்க ஒரு மந்திரி இருந்தார். அவர் அரசரிடம் சென்று 'ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்?' என்றார். அரசர் சொன்னார், சோதிடர் சொன்னதை.
மந்திரி சொன்னார், 'அரசரே நாளைக்கு அரசவையைக் கூட்டுங்கள். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்து விடலாம்.
அடுத்தநாள் அரசவை கூட்டப்பட்டது. மந்திரி கேட்கிறார், சோதிடரிடம் 'சோதிடரே மன்னருக்கு இன்னும் ஆயுள் நாள் எவ்வளவு இருக்கிறது'. 'இன்னும் 28 நாட்கள்தான்; நான் சொல்லி 2 நாட்கள் ஆகிவிட்டன. மந்திரி கேட்கிறார், 'சோதிடரே உனக்கு ஆயுள் எவ்வளவு'. அவர் சொல்கிறார், 'இன்னும் 30 வருடம்'.
மந்திரி உடனே தன்னுடைய வாளை உருவிச் சோதிடர் தலையை வெட்டிவிட்டார். வெட்டிவிட்டு அரசரிடம் சொன்னார், 'அரசரே 30 ஆண்டுகள் இவருடைய ஆயுள் என்று சொன்னார். ஆனால் 30 நிமிடத்தில் இவருடைய ஆயுள் முடிந்துவிட்டது, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் முழுமையாக வாழுங்கள்! நாம் வெற்றி பெறுவோம்' என்று கூறுவதாகக் கதை சொல்கிறது…
நண்பர்களே! இதுவரை கூறிய வற்றிலிருந்து நாம் எடுக்கிற முடிவு என்ன வென்றால், அடிப்படையில் பிரபஞ்ச சக்தி, அல்லது கடவுள் மாபெரும் ஆற்றல்மிக்கது. இந்த உலகம், கிரகங்கள் அனைத்தையும் உருவாக்கியது அந்த பிரபஞ்சப் பேராற்றல்.
நாம் அந்த மாபெரும் சக்தியிடம் ஆற்றலிடம் பொறுப்புகளை விட்டுவிட்டு, நம்முடைய கடமைகளை முழு மனத்துடன் ஈடுபாட்டுடன் செய்து கொண்டே போவோம்.
நல்லதற்கும், கெட்டதற்கும், வெற்றிக்கும், தோல்விக்கும் நாம் பொறுப்புகளை எடுத்துக்கொள்வோம். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
நிச்சயமாகக் கருணைமிக்க அந்தப் பிரபஞ்ச சக்தி எந்த இடையூறும் நமக்குச் செய்யாது; பதிலாகத் துணைபுரியும். தடைகள் வந்தாலும் முயற்சி செய்கின்றமனிதர்களுக்கு அந்தக் கருணைமிக்க பிரபஞ்ச சக்தி, தடைகளை நீக்கிக் கொடுக்கும். வெற்றி பெறத் துணைபுரியும். எனவே, நாம் தொடர்ந்து செயல்புரிவோம். வெற்றி பெறுவோம்.
--