லேபிள்கள்

வியாழன், 27 அக்டோபர், 2016

அலுவலகத்தில் நீங்கள் யார்? உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்! !

நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன. நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதனை மேம்படுத்தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அனைவருமே சிஇஓ ஆக ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் சிஇஓ ஆகிறார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

முடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!

அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.

புதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்!

எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.

அப்டேட் ஆகுங்கள்!

உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

ரிஸ்க் எடுங்கள்!

சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.

குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்!

ஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.

சுய மதீப்பீடு தேவை!

உங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அலுவலகத்தில் கற்றுக்கொள்ளுங்கள்!

அலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.

குழுவாகச் செயல்படுங்கள்!

நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.

ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.

பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்!

வேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.

நீங்களே தலைவன்!

நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.

இந்தப் பத்து பண்புகளையும் வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இல்லாமல் தலைவராக மட்டுமே இருப்பீர்கள்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

திருமணமான பெண்கள் கவனத்திற்கு: சினைப்பை நீர்க்கட்டி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

பிசிஓடி பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பெல்விக் எக்ஸாமினேஷன் , ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை ...

Popular Posts