லேபிள்கள்

சனி, 29 அக்டோபர், 2016

வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்!

இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி...

இந்தியாவில் வருமான வரிச் செலுத்துபவர்களில் பாதிக்கு மேலானவர்கள், வருமான வரிச் சலுகையை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என ஆன்லைன் மூலம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவும் டாக்ஸ்ஸ்பானர் டாட் காம் (Taxspanner.com) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவும், அனைவருக்கும் அதிகம் தெரிந்த 80சி பிரிவில்கூட முழுமையாக வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

வருமான வரிச் சலுகையை அதிகமாகப் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நம் இளைஞர்கள்தான். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள் கடந்த நிதி ஆண்டில் சராசரியாக 12% வருமான வரி கட்டி இருக்கிறார்கள். இதுவே, 35 வயதானவர்கள் 6% மட்டுமே வரி கட்டி இருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள், படித்தவர் களாக, கைநிறையச் சம்பளம் வாங்குப வர்களாக இருக்கிறார்கள். பணியில் பிஸியாக இருக்கும் இந்த இளைஞர்கள் வருமான வரியைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க பல காரணங்கள்.

இன்றைய இளைஞர்களில் பலருக்கு
  பணத்தின் அருமை புரிவதில்லை. லேட்டஸ்ட் செல்போன், புதுப்புது ஆடைகள், பொழுதுபோக்கு, வாகனங்கள் என ஜாலியாக இருப்பது தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். இதனால் சேமிப்பையும் முதலீட்டைப் பற்றியும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.
தவிர, வருமான வரிச் சலுகை பற்றி அவர்களுக்கு யாரும் தெளிவாகச் சொல்லித் தருவதில்லை. வருமான வரிச் சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள தவறமாட்டார்கள்.

இன்னும் சில இளைஞர்கள் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல், வரி கட்டுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். வரி கட்டுவது நமது கடமைதான். ஆனால், அரசாங்கமே நமக்கு அளித்த வரிச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, அதுபோக உள்ள வரியைக் கட்டுவதே புத்திசாலித்தனம். இனியாவது இன்றைய இளைஞர்கள் தங்களுக்கான வரிச் சலுகைகளை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

 பி.எஃப்!
வருமான வரிச் சேமிப்புக்கான முதலீடு ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. அது இரண்டாம் வகுப்பு வாய்ப்பாடு தான். கீழே சொல்லப்போகிற விஷயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால் போதும், உங்களுக்கான வருமான வரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓர் இளைஞன் முதல் மாதத்தில் வாங்கும் சம்பளத்தில் இருந்தே எதிர்கால சேமிப்புக்கான தொகை
  பிடிக்கப்படு கிறது. அதாவது, வாங்கும் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் பஞ்சப்படி) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) ஆகப் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை  நிறுவனமும் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தும்.

அதிகச் சம்பளம் வாங்கும் சிலர், நிறுவனத்தில் பிஎஃப் பிடிக்க வேண்டாம்; நிறுவனம் தன் பங்களிப்பாகப் போடும் தொகையையும் சேர்த்துச் சம்பளமாகத் தந்துவிடுங்கள் என்று எழுதித் தந்துவிடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. பிஎஃப் என்பது ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு என்பதால், அந்த முதலீட்டை தவிர்ப்பது நல்லதல்ல.

பிஎஃப். முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைப்பதோடு, அதில் சேரும் தொகைக்குக் கூட்டு வட்டியும் வழங்கப் படுகிறது. மேலும், பிஎஃப் பிடிக்கத் தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திருமணம், கல்வி, வீடு வாங்க எனப் பல தேவைக்கு இதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். மேலும், பணி நிறைவுக்குப் பிறகு, கோடி ரூபாய்க் கிடைத்தாலும் அதற்கு வரி கட்டத் தேவை இல்லை. ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்த்தால், பிஎஃப் தொகை எப்படிப் பெருகுகிறது என்பதைப் பார்க்கலாம்.

25 வயதான ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.25,000-க்கு 12% பிஎஃப் பிடிக்கப்படுகிறது. நிறுவனம் தன் பங்காக 12% தொகை போடுகிறது. ஆண்டுக்கு 10 சதவிகித சம்பள உயர்வு என்கிற அடிப்டையில் ஒருவருக்கு 58 வயது வரை பிஎஃப் பிடிக்கப்படுகிறது. இதற்கு 8.75% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது என்றால், பணி ஓய்வுபெறும்போது மொத்தம் ரூ.4.10 கோடி கிடைக்கும். இந்தத் தொகைக்கு நீங்கள் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. இளைஞர்களே இனி பிஎஃப் முதலீடு வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள்தானே?

அடுத்து, இளைஞர்கள் வருமான வரி முதலீட்டுக்கான சேமிப்பை ஆரம்பிக்கும்முன் வரிச் சலுகை கிடைக்கும் இரு செலவுகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டும். அவை, லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான செலவாகும்.

 அதிக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வேண்டாம்..!
இளைஞர்கள் வரிச் சேமிப்புக்காக அதிகமாக முதலீடு செய்யவில்லை என்கிற அதேநேரத்தில், தேவை இல்லாமல் அதிக எண்ணிக்கையில் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்து வைத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நண்பர்களில் பலர் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளாக வேலை பார்க்கிறார்கள் அல்லது பகுதி நேர ஏஜென்ட்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள், 'மச்சி டார்கெட் கம்ப்ளீட் பண்ணனும், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி போடேன்" என்று கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிடுவார்கள். இதேபோல் பல நண்பர்கள் கேட்க ஓரிரு ஆண்டுகளில் கையில் டஜன் கணக்கில் பாலிசிகள். ஆனால், இந்த அனைத்து பாலிசிகளையும் சேர்த்தால், அவர்களின் ஆயுளுக்குப் போதிய கவரேஜ் இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காரணம், நண்பர்களின் வற்புறுத்த லால் எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பாலிசிகளும் ஆயுள் காப்பீடு கவரேஜ் மற்றும் முதிர்வு தொகை கொண்ட எண்டோவ்மென்ட் பாலிசிகள் அல்லது பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசி களாக இருக்கின்றன. இவற்றுக்குப் பதில் முற்றிலும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கும் (முதிர்வு தொகை எதுவும் இல்லா) டேர்ம் பிளான் எடுத்திருந்தால், பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும், அதிக கவரேஜும் கிடைக்கும்.
அடுத்து முக்கியமான விஷயம், எவ்வளவு தொகைக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விவரம் பலருக்கு தெரிவதில்லை. எண்டோவ்மென்ட் பாலிசிகள் முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கப்படுவதால், அதில் ஒருவரால் பிரீமியம் கட்டக் கூடிய அளவுக்குப் பாலிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வருமான ஆதாரம் எதுவும் கேட்கப்படுவதில்லை.

மேலும், மருத்துவப் பரிசோதனையும் பெரிதாகக் கிடையாது. டேர்ம் பிளான் பாலிசியில் அப்படி இல்லை. பாலிசி எடுப்பவருக்கான வருமான ஆதாரம் மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

வேலைக்குச் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆன 25 வயது இளைஞரின் மாத சம்பளம் 40,000 ரூபாய் என்றால், அவரின் ஆண்டுச் சம்பளம் ரூ.4.80 லட்சம். ஆண்டுச் சம்பளத்தைப்போல் குறைந்தபட்சம் சுமார் 10 மடங்குக்கு அதாவது, 48 லட்சம் ரூபாய்க்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. 

அவர் 50 லட்சம் ரூபாய்க்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் ஏறக்குறைய ரூ.2.38 லட்சம் கட்ட வேண்டியிருக்கும். இதுவே, அவர் டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டு பிரீமியமாக ரூ.15,000 மட்டும் கட்டினால் போதும். அதுவே, ஆன்லைனில் டேர்ம் பிளான் எடுத்தால் பிரீமியம் ரூ.5,150 மட்டுமே.

ஆயுள் காப்பீடு குறித்து இளைஞர் களிடம் இருக்கும் தவறான கருத்து ஒன்று மாற்றப்பட வேண்டும். நான்தான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேனே, நான் சாலையில் நன்றாகக் கவனித்துதானே வாகனம் ஓட்டுகிறேன், நான் ஏன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். சாலையில் நீங்கள் சரியாகத்தான் வாகனம் ஓட்டி செல்கிறீர்கள். பின்னால் வரும் வாகனம் அல்லது எதிரில் வரும் வாகனம் நிலைத் தடுமாறி இடித்து, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உங்களை நம்பி இருக்கும் பெற்றோர், மனைவி மற்றும் தம்பி, தங்கைகளின் எதிர்காலம் என்னாவது?

ஆயுள் காப்பீடு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
இதேபோல்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த அவர்களின் பார்வையும் தவறானதாக இருக்கிறது. நான்தான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேனே, எனக்கு எதுக்கு மருத்துவ பாலிசி என்கிறார்கள்.

இன்றைக்கு உணவுப் பழக்கம் மாற்றம் மற்றும் பாரம்பரிய காரணங் களால் 25 வயது இளைஞனுக்குக்கூட மாரடைப்பு வந்து, ஆளை சாய்த்து விடுகிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உதவுகிறது. 

பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் 1.5 மடங்குக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். இருந்தாலும் வசிக்கும் நகரம், அங்குள்ள மருத்துவச் செலவையும், ஒருவருக்குப் பாரம்பரியமாக ஏற்படக்கூடிய பாதிப்பையும் கவனித்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணத்துக்கு, திருநெல்வேலியில் வசிப்பவர் சென்னையில் வசிப்பவரைவிடக் குறைவான தொகைக்கு பாலிசி எடுத்துக் கொண்டால் போதும்.

லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் நபர்களுக்கானது என்பதால், அந்த பாலிசியை வேலை பார்க்கும் இளைஞர்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். 

ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவசியம் எடுக்க வேண்டிய பாலிசியாகும். அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கையிலிருந்து தான் செலவு செய்யவேண்டி இருக்கும். அவர்களுக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி எடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சில ஆயிரம் ரூபாய் பிரீமியத்தில் லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுவிட முடியும்.

குடும்பத்தினருக்கு எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத் தொகையை வரிதாரர் தனது சம்பளத் திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சேர்த்து ஆண்டுக்கு கட்டும் பிரீமியத்தில் 15,000 ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். 

வரிதாரர் அவரது பெற்றோருக்கு கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைக்குத் தனியாக ரூ.15,000 வரைக்கும் (மூத்த குடிமக்களாக இருந்தால் 20,000 வரை) வரிச் சலுகை பெற முடியும். 

குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு (ஹெல்த் செக்கப்) ஓராண்டில் ரூ. 5000 வரை வரிச் சலுகை பெறலாம். இது 15,000 ரூபாய் வரம்புக்குள்ளே வரும்.

 கல்விக் கடன் வட்டி..!
இளைஞர்கள் அவர்களின் மேல் படிப்புக்குக் கல்விக் கடன் வாங்கித் திரும்பக் கட்டிவந்தால், அதற்கான வட்டிக்கு வரிச் சலுகை பெற முடியும். அடுத்து, இரு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வரிச் சலுகை இருக்கிறது. இது 80சி பிரிவின் கீழ் வரும். 25 முதல் 35 வயதுக்குக்கு உட்பட்ட இளைஞர் ஒருவரின் ஆண்டு வருமானம் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் போது, அவர் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். பிஎஃப், லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைகள், பிள்ளைகளின் கல்விச் செலவு, கல்விக் கடன் வட்டி போன்றவைக் கழிக்கப்பட்ட பிறகும் வருமானம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்பட்சத்தில், வரிச் சலுகைக்கான முதலீட்டின் மீது பார்வையைச் செலுத்தலாம்.

 பங்குச் சந்தையில் பணம்..!
இளைஞர்கள் என்கிறபோது அவர்கள் கணிசமாக ரிஸ்க் எடுக்கலாம். அந்தவகையில் அவர்கள் பங்குச் சந்தை சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ் என்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதில் மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்ய லாம். மூன்றாண்டுகளுக்கு முதலீட்டை எடுக்க முடியாது. இதன்மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் மற்றும் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்கும்போது கிடைக்கும் மூலதன ஆதாயம் எதற்கும் வரி கட்டத் தேவை இருக்காது.

இதைவிடக் கூடுதலாக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும், பங்குச் சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்யும் இளைஞர்கள் ராஜீவ் காந்தி பங்குச் சந்தை சேமிப்பு திட்டத்தின் (ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்) கீழ் வருமான வரிச் சலுகை பெற முடியும். ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ளவர்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால், அதில் பாதி 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும். 

பட்டியல் இடப்பட்ட நிறுவனப் பங்குகளில் (குறிப்பாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றிருக்கும்) முதலீடு செய்யும்போது இந்தச் சலுகை கிடைக்கும்.

இவை தவிர, முக்கியப் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டுகள் செய்யும் முதலீட்டுக்கும் இந்தத் திட்டம் மூலம் வரிச் சலுகை பெற முடியும். இந்த முதலீட்டையும் மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது.

ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கிறவர்கள், சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் போக விருப்பத்தின் அடிப்படையில் அதிகபட்சம் அதே அளவுக்கு விபிஎஃப் பிடிக்கச் சொல்லலாம். இந்தத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.

மேலும், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி - வட்டி 8.5%), 15 ஆண்டு பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்- வட்டி 8.70%) ஆகியவற்றிலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். இதில் பிபிஎஃப் முதலீட்டில் வட்டிக்கு வரி கிடையாது. 

எஃப்டி மற்றும் என்எஸ்சி முதலீட்டில் வட்டி வருமானத்துக்கு வரிச் செலுத்த வேண்டும். உங்களின் முதலீடு எப்போது தேவை என்பதைப் பொறுத்து முதலீட்டு வகையைத் தேர்வு செய்யவும்.

இப்படி முதலீடு செய்து வைத்திருக்கும் பட்சத்தில் 3-லிருந்து ஐந்து ஆண்டுகள் லாக்கின் முடிந்தபிறகு உங்களின் எந்தத் தேவைக்கும் இந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.

வீட்டுக் கடன்!
வாடகை வீட்டில் இருந்தால், அந்த வாடகையை நிபந்தனைக்கு உட்பட்டு வரி கட்டும்முன் வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியும். அதேநேரத்தில், சொந்த வீடு வேண்டும்; கணிசமான தொகை வரியாக மிச்சமாக வேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கலாம். ஏற்கெனவே இடம் இருந்தால் அதில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கலாம்.

இப்படி வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் கடனில் அசல் தொகையில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் தனியாக வரிச் சலுகை (பிரிவு 24) கிடைக்கும்.

இளைஞர் ஒருவரால் தற்போது வாங்கும் சம்பளத்தில் நகரத்துக்குள் வீடு வாங்க முடியவில்லை. அவர் புறநகரில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதனை வாடகைக்குவிட்டால், திரும்பக் கட்டும் அசலில் ரூ. 1.5 லட்சம் மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.

அதேநேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டி இருப்பது அவசியம். இந்த இளைஞர் நகருக்குள் வாடகை வீட்டில் இருக்கும்பட்சத்தில் வீட்டு வாடகைபடி
  சலுகை மூலமும் வரியை மிச்சப்படுத்த முடியும்.

 மேல்படிப்புக்கு!
வரிதாரர் மற்றும் அவரது துணை (கணவன்/ மனைவி) மேல்படிப்புக்கு கடன் வாங்கினால், திரும்பக் கட்டும் வட்டிக்கு எட்டு ஆண்டுகள் வரிச் சலுகை பெற முடியும். இளைஞர்கள் இப்படிச் செய்யும்போது வரிச் சலுகை கிடைப்பதோடு, மேல்படிப்பு முடித்து அலுவலகத்தில் அடுத்தகட்டத்துக்கும் போக வழி கிடைக்கும்.

இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டால் வருமான வரியை கணிசமாக மிச்சப்படுத்த முடியும். இது வரியைச் சேமிப்பதற்கான முதலீடு என்பதோடு, எதிர்காலத் தேவைகளான சொந்த வீடு, கார் போன்றவற்றை வாங்கவும், பிள்ளைகள் கல்வி, திருமணச் செலவு மற்றும் ஓய்வுக்காலத் தேவைக்கு உதவுவதாக இருக்கும்.

 எளிமையான முதலீட்டு நடைமுறைகள்..!
வருமான வரி முதலீட்டுக்காக இளைஞர்கள் எங்கும் அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம்  முதலீட்டை மேற்கொண்டுவிட முடியும். 

இன்ஷூரன்ஸ் / மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளை போனில் அழைத்தால் போதும் அவர்கள், உங்கள் அலுவலகம் அல்லது வீடு தேடி வந்து முதலீட்டுக்கான அனைத்து வேலைகளையும் முடித்துத் தந்துவிடுவார்கள். இசிஎஸ் கொடுத்துவிட் டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்தே முதலீட்டுக்கான பணம் சென்றுவிடும்.

ஏஜென்ட்டுகளிடம் எந்தத் திட்டம் சிறந்தது என்று கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. முதலீட்டுக்கான திட்டங்களை தேர்வு செய்வது நீங்களாக இருக்க வேண்டு


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 27 அக்டோபர், 2016

அலுவலகத்தில் நீங்கள் யார்? உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்! !

நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன. நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதனை மேம்படுத்தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அனைவருமே சிஇஓ ஆக ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் சிஇஓ ஆகிறார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

முடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!

அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.

புதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்!

எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.

அப்டேட் ஆகுங்கள்!

உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

ரிஸ்க் எடுங்கள்!

சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.

குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்!

ஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.

சுய மதீப்பீடு தேவை!

உங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அலுவலகத்தில் கற்றுக்கொள்ளுங்கள்!

அலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.

குழுவாகச் செயல்படுங்கள்!

நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.

ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.

பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்!

வேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.

நீங்களே தலைவன்!

நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.

இந்தப் பத்து பண்புகளையும் வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இல்லாமல் தலைவராக மட்டுமே இருப்பீர்கள்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 25 அக்டோபர், 2016

மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்!


'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் மெட்ராஸ் ஐ என்று அர்த்தம்!' என்றாகிவிட்டது இன்று. ஆம்... எங்கு பார்த்தாலும் கறுப்பு கண்ணாடியுடன்தான் அலைகிறார்கள்.
இந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் தற்காப்பு குறித்து பேசுகிறார், வேலூரைச் சேர்ந்த சித்த வைத்தியர் அர்ஜுனன். இவர், தமிழ்நாடு பாரம்பர்ய சித்தவைத்திய மகாசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.

''இது, பருவநிலை மாறுபாடு காரணமாக வரும் ஒரு தொற்றுநோய். கண் அரிப்பு, கண் சிவப்பாக மாறுவது, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிவது போன்றவை இந்தக் கண் நோய்க்கான அறிகுறிகள். பொதுவாக, இந்தக் கண் நோய் 7 நாட்கள் வரை இருக்கும். கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் 15 நாட்கள் வரை இதன் வீரியம் இருக்கும்.

காற்று, கைகுலுக்குதல் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை (கர்ச்சீஃப், துண்டு, பேனா, அழிப்பான், பேப்பர்) பயன்படுத்துவது மூலம் இது பரவும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியையும் மற்றவர் பயன்படுத்தக் கூடாது.

பாதிக்கப்பட்டவர்கள், ரோஸ் வாட்டரை கண்களில் விட்டு கண்களை திறந்து மூட வேண்டும். காலை, மாலை என இரண்டு, மூன்று நாட்களுக்கு இப்படி செய்துவர, குணம் கிடைக்கும். சுத்தமான பஞ்சில் பன்னீரை விட்டு, மூடிய கண்கள் மீது வைக்கலாம். இது கண்களில் இருக்கும் உஷ்ணத்தைக் குறைக்கும். இதை மூன்று நாட்கள் செய்ய வேண்டும். 

காலை, மாலை சிறிது நேரம் நந்தியாவட்டை மலரை எடுத்து கண் இமை மீது ஒற்றி எடுக்கலாம். இ்தையும் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்துவர, 'மெட்ராஸ் ஐ' காணாமல் போய்விடும். குழந்தைகளுக்கு மிக எளிதில் பரவும் இந்நோய்க்கு, பன்னீர் மிகச்சிறந்த நிவாரணி. 

தாங்கள் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் மற்றும் பன்னீர் ஆகியவை தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்'' என்று சொன்ன அர்ஜுனன்,
''சித்த வைத்தியமாக இருந்தாலும், வேறு மருத்துவ முறைகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி, சுயமாக சிகிச்சை செய்துகொள்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்'' எச்சரித்து முடித்தார்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

வருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்

வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax)
இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது.
வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ் இயங்குகிறது.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்

PAN CARD என்றால் என்ன?அதை பெறுவது எப்படி?

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை.
Permanent Account Number என்பதின் சுருக்கமே. வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
 PAN CARD - ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2)
 வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3)
 ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.
4)
 அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000தாண்டும் போது அவசியம்.
5)
 ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6)
 வங்கி கணக்கு துவங்கும் போது.
7)
 தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8)
 தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ.25,000/- மிகும் போது அவசியம்.
9)
 ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.
10)
 வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.
11)
 சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.
12)
 முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்

VAT மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன ?

இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம். முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. அதாவது வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்வருகின்றார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் இந்த "வாட்" சட்டத்தின் கீழ் வருவார்கள். ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார். இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி! இதை மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா? அல்லது மாநில அரசிடம் செலுத்துகின்றார்களா ?

இது மாநில அரசின் வருமானம்தான். நமது சட்டம் எந்த வருவாய் மத்திய அரசுக்குப் போக வேண்டுமென்றும், எந்த வருவாய் மாநில அரசுக்குப் போக வேண்டுமென்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது. அரசியல் சட்டப்படி விற்பனை வரியென்பது மாநில அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி ஆதாரம்தான். இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. விற்பனை வரியில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1. தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம். 2. மத்திய விற்பனை வரிச் சட்டம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம் : இது 1937-38-ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கிறது.ஒருவர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் அரசாங்கத்தில் விற்பனை வரிச் சட்டத்தின் அவர் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டவர் Registered Dealer என்றழைக்கப் படுவார். பதிவு செய்து கொண்டதற்கு அவருக்கு ஒரு எண் கொடுக்கப் படும். அதை வைத்துக் கொண்டுதான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும்..சிறு வியாபாரிகளுக்கு இவ்வாறு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. பதிவு செய்து கொண்டவர் தமிழ்நாட்டில் வியாபாரம் தொடங்கலாம். அவர் செய்யும் விற்பனைகள் தமிழ் நாட்டிற்குள்ளேயே இருக்குமானால் அது உள்ளூர் விற்பனை என்றழைக்கப் படும். அதாவது Sale within Tamilnadu என்றழைப்பார்கள். விற்பனை செய்யும் பொருளுக்கு எவ்வளவு விற்பனை வரி விதிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப் பட்டு இருக்கும். அதன்படி வரியை பொருள் வாங்குவோரிடமிருந்து வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். ஒருபொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டு மென்று மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடமுடியாது. இது மாநில அரசின் நிதி அல்லவா! ஆகவே இதில் மத்திய அரசு தலையிட முடியாது. இந்த விற்பனை வரியானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உதாரணமாக நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தமிழ் நாட்டில் 10 சதவீதம் விற்பனைவரியானால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதற்குக் கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம். இதைப்போல்தான் மற்றமாநிலங்களும் தன் வசதிக்கேற்ப விற்பனை வரியை விதிக்க முடியும். ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான விற்பனை வரி இந்தியா முழுவதும் கிடையாது.

தமிழ்நாட்டில் ஒருவர் தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார். அதற்கு 10% விற்பனை வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு (Whole sale dealer) விற்பனை செய்கிறார். அவர் வாங்கி சில்லரை விற்பனையாளருக்கு ( Retail seller) விற்பனை செய்கிறார். இந்த விற்பனைக்கு 10% விற்பனை வரி விதிக்க வேண்டுமா வென்றால் இல்லையெண்ற்றுதான் கூற வேண்டும். இது Second Sale என்றழைக்கப் படுகிறது. அவர் இதற்கு 1% வசூலித்தால் போதுமானது. இதற்கு re-sale tax என்று பெயர். சில்லரை விற்பனையாளர் பொருள் வாங்கும் பொது மக்களுக்கு ( Consumer) விற்பனை செய்கிறார். அப்போதும் 1% வரி வசூலித்தால் போதுமானது. இவ்வாறு ஒவ்வொரு விற்பனையின் போதும் வரி வசூல் செய்வதை "Multi-point Tax" என்றழைப்பார்கள். இவ்வாறு உள்ள தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது. சில பொருள்களுக்கு 1% வரி இருக்கும்; இவ்வாறு பல விதமான வரி விகிதங்கள் இருக்கும். அதன்படி வரிவிதித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.

இதைத் தவிர Surcharge, Turnover-tax என்ற வரி விதிப்பும் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் உண்டு. இதைத் ஆண்டுதோறும் இந்த விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை அரசாங்கத்திடம் தணிக்கை செய்து தணிக்கை உத்தரவு பெறவேண்டும்.

இந்த நிலைதான் 31-12-2006 முடிய இருந்து வந்தது. இந்த ஆண்டுமுதல் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு பதில் மதிப்புக் கூட்டு வரி என்ற V.A.T. நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதை விளக்குமுன்னர் மத்திய விற்பனை வரிச் சட்டத்தையும் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம். இந்த விற்பனை வரிச் சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது. மாறவில்லை.

மத்திய விற்பனைச் சட்டம்.( Central Sales-tax Act):- ஒருமாநிலத்திலிருந்து மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்கள் வாங்கவும், விற்கவும்போதுதான் இந்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது. ஒருவியாபாரி மற்றொறு மாநிலத்திற்குப் பொருள்களை விற்கும்போது யாருக்கு விற்கிறார் எனப் பார்க்க வேண்டும். உதாரணமாக வியாபாரி ஒருவர் சென்னையிலிருந்து பெங்களூரில் உள்ள வியாபாரிக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்வோம். பெங்களூரில் உள்ள வியாபாரி அம்மாநிலத்தில் பதிவு செய்த வியாபாரியாக ( Registered Dealer) ஆக இருந்தால் விற்கும் பொருளுக்கு 4% விற்பனை வரி வசூலித்து அரசாங்கத்திற்குக் கட்டினால் போதுமானது. அவ்வாறு அவர் பதிவு செய்யாத வியாபாரியாக இருப்பின் உள்ளூரிலே அந்தப் பொருளுக்கு என்ன வரி விகிதமோ அதை வசூலிக்க வேண்டும். உதாரணமாக ஒரு பொருளுக்கு 12% உள்ளூர் வரி எனக் கொள்வோம். அதை பெங்களூரிலுள்ள பதிவு பெற்ற வியாபாரிக்கு 4%த்திலும், பதிவு பெறாத வியாபாரிக்கு 12%-த்திலும் விற்பனை செய்ய வேண்டும்.

அதைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள பதிவு பெற்ற வியாபாரி பெங்களூரில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் 4% வரி செலுத்தினால் போதுமானது. உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள் களை மற்ற மாநிலங்களிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்வோம். அவர் எந்த மூலப் பொருளாக இருந்தாலும் 4% வரி விகிதத்தில் அவர் பொருள்களை வாங்கி உற்பத்தியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் எந்த மாநிலத்திலிருந்து பொருள்கள் விற்கப் படுகின்றதோ அந்த மாநிலத்திற்குத்தான் விற்பனை வரி போய்ச் சேருகிறது. இந்த மத்திய விற்பனைவரிச் சட்டம் இன்னும் அமுலில்தான் இருக்கிறது. மாறவில்லை.

சரி! இப்போது மதிப்புக் கூட்டு வரியைப் பற்றிப் பார்ப்போம். இது தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கிறது என ஏற்கனவே கூறி இருக்கிறோம். இதன் ஷரத்துக்கள் என்ன வென்று பார்ப்போம். இந்த மதிப்புக் கூட்டு வரி ஏற்கனவே சுமார் 130 நாடுகளில் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தையும், பாண்டிச்சேரியையும் தவிர மற்ற மாநிலங்கள் ஏற்கனவே அமுல் செய்து விட்டன. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இன்னும் அமுல் செய்ய வில்லை.

இதில் வரி விகிதங்கள் நான்கு மட்டுமே.

1. சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது. அவைகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது.

2. மற்ற பொருள்களுக்கு 1%, 4%, 12.5% வரிவிகிதம்தான்.

இந்த மதிப்புக் கூட்டு வரியில் தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திலிருந்தது போல் Surcharge, Additional Tax ஆகியவைகள் எல்லம் கிடையாது. சரி! வரி விதிப்பு எவ்வாறு இருக்கிறது எனப் பார்ப்போம்.

உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் ஒரு பொருளை, மொத்த விற்பனையாளருக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்ளுங்கள். அந்தப் பொருளின் விலை ரூபாய் 10,000/- எனவும், அதன் விற்பனை வரி 4% எனவும் கொள்ளுங்கள். உற்பத்தியாளர் பொருளின் விலை ரூ. 10,000+ விற்பனை வரி ரூ.400/- ஆக மொத்தம் ரூ. 10,400/-க்கு விற்று விடுகிறார். ரூ.400/-ஐ அரசாங்கத்திடம் விற்பனை வரியாகக் கட்டி விடுகிறார்.

மொத்த விற்பனையாளைர் அதைப் ரூ. 12,000/- க்கு சில்லரை விற்பனையாளருக்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் ரூ.12,000/-க்கு 4% விற்பனை வரி எனக் கணக்கிட்டு மொத்தம் ரூ. 12480/- விற்கிறார். விற்பனை வரியான ரூ. 480/- ல் தான் கொடுத்த விற்பனை வரியான ரூ.400/- க் கழித்துக்கொண்டு மீதித் தொகையான ரூ.80/- அரசாங்கத்திற்குக் கொடுத்து விடுகிறார்.

சில்லரை விற்பனையாளர் பொருள் நுகர்வோருக்கு ரூ. 15,000/- க்கு விற்பனை செய்கிறார் எனக்கொள்ளுங்கள். அவர் ரூ. 15,000/- + விற்பனை வரி 4% ரூ. 600/- ஐ நுகர்வோரிடமிருந்து வாங்கி தான் வரி செலுத்திய ரூ.480/- க் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ. 120/- அராசாங்கத்திற்குச் செலுத்தி விடுகிறார்.

சரி ! உற்பத்தியாளருக்கு இது எவ்விதத்தில் பயனளிக்கிறது? தற்போது உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மூலப் பொருள்களுக்கு 4% வரிகொடுத்து எல்லா மூலப் பொருள்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுக்கு உற்பத்தியாளர்கள் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம். அயல் மாநிலத்திலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுகளையும் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விற்கும் போது தமிழ் நாட்டிலிருந்து வாங்கிய மூலப்பொருள்களுக்குக் கட்டிய வரி மட்டுமே விற்பனை செய்யும் வரியிலிருந்து கழித்துக் கொண்டு மீதத்தை அரசாங்கத்திற்குக் கட்டமுடியும். உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள்களை ரூ. 1000/-க்கு வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள். அதற்கு 4% வரி கட்டுகிறார். ரூ. 40/- வரித் தொகையா கின்றது. மொத்த அடக்க விலை 1000+40 = 1040. அதை ரூ.1200/-க்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அதற்கு வரித்தொகையாக ரூ. 48/- வசூல் செய்கிறார். அரசிற்குக் கட்டும்போது ரூ. 48/-ல் இருந்து ரூ. 40/- ஐக் கழித்துக் கொண்டு ரூ. 8/- மட்டும் செலுத்தினால் போதும். அதாவது அவர் வாங்கிய பொருள்களின் மீது செலுத்திய வரித் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. இது தமிழ்நாட்டிலிருந்து வாங்கிய பொருள்களின் வரித் தொகையையே இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியும். அயல் மாநிலத்திலிருந்து வாங்கிய பொருள்களுக்குக் கட்டிய வரியினை இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியாது.

இந்த மதிப்புக் கூட்டு வரியின் கீழ், தமிழ் நாடு வணிக வரிச் சட்டத்தின் கீழ் இருப்பதைப்போல் ஆண்டுதோறும் அதிகாரிகளால் Assessment Order பெற வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களே தாங்களாகவே சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டால் போதும்.மொத்த வணிகர்களில் சுமார் 20% பேர்களைத் தேர்வு செய்து Assessment செய்வோம் எனக் கூறுகிறது வணிக வரித்துறை.

இந்த மதிப்புக் கூட்டு வரியை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது நாம் பார்ப்போம்.

நாம் இப்போது இதில் உள்ள அனுகூலங்கள், பிரதிகூலங்களைப் பார்ப்போம். முதலில் அனுகூலங்களைப் பற்றி கூறப்படுவது என்ன?

உற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4% வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4% வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார். உற்பத்தி செய்த பொருளை ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு விற்பனை செய்து விடுகிறார். அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக் கட்டும்போது அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித் தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி விடுவார். அவர் கொடுத்த ரூ. 40/- "Input Credit" என்றழைக்கப் படுகிறது. இந்த V.A.T. சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 1000/- ஆகவே இருந்து வருகிறது. ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும் பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது விற்றிருப்பார். ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது இவர்களின் வாதம்.

"Input Credit" என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும் பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள். உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு Electric Motor - ஐ பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார் எனக்கொள்ளுங்கள். இது வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர் கொடுக்கும் வரியை Input Credit ஆக எடுத்துக் கொள்ள முடியாது. அதே Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்; அந்த வரிப் பணத்தை Input Credit ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர் செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க முயற்சிப்பார்கள். அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.

உள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டாம். அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப் படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது, Assessmentக்குச் செல்வது போன்றவைகள் கடையாது. V.A.T. வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ. 3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது. இப்போது அது கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.

இதில் Resale Tax, Surcharge, Turn-over- tax போன்றவைகள் கிடையாது.

இதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி! அடுத்த தரப்பின் வாதம் என்ன?

இந்த "Input Credit"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான, பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் Assessment கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும். அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும். வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

உள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே பொருள்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.

மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி விதிக்கப் படுகிறது. அறிவிக்கப் பட்டபோது "எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி விதிக்கப்படமாடடாது" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு 16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட வில்லை.

அடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல் கூறப்பட்டுள்ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மாதந்தோறும்
கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச் சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும். இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில் இடமுண்டு. இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை. இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்
 TDS என்றால் என்ன?
டிடிஎஸ் சம்பாதிக்க சம்பாதிக்க வரி செலுத்த உதவுகிறது. இது அரசுக்கு நிலையான வருமானம் வர வழிவகை செய்கிறது. இம்முறையானது வரி ஏய்ப்பை தடுப்பது மட்டுமல்லாது வரி அமைப்பை விரிவடைய செய்யும் சக்தி வாய்ந்த கருவியாக செயல்படுகிறது.
(What are the taxes on a restaurant bill? )

டிடிஎஸ் சான்றிதழ் வகைகள்
சம்பளம் வாங்குவோருக்கு படிவம் 16: சம்பளம் வாங்குவோர் என்றால் வரி கணக்கீடு விவரங்கள், கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் அடங்கிய படிவம் 16ல் சான்றிதல் வழங்க வேண்டும்.

சுயதொழில் செய்வோர்:
சுயதொழில் செய்பவர்களுக்கு படிவம் 16 ஏ: சுயதொழில் செய்பவர்கள் கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் கொண்ட படிவம் 16ஏ-ல் சான்றிதல் வழங்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனி சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
டிடிஎஸ் விகிதங்கள்
சம்பளம்:
சம்பளம் மூலம் ஆண்டு வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் பணியாளர் செலுத்த வேண்டிய வரி அந்த ஆண்டுக்கு கணக்கிட வேண்டும் பிறகு வரி சராசரி விகிதத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டும். உதாரணமாக செலுத்த வேண்டிய வரி ஆண்டுக்கு ரூ. 24,000 என்றால் ஒவ்வொரு மாதமும் ரூ. 2000 கழிக்கப்படும்.
பத்திரங்கள்/ லாப பங்கு/ வட்டி போன்றவைகளில் இருந்து கிடைக்கும் வட்டி:
வங்கி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனம், கூட்டுறவு ஸ்தாபனம், நிதி அல்லது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம் வழங்கும் வட்டியில் ரூ.10,000க்கு வரி விலக்கு உண்டு. டிடிஎஸ் 10 சதவீதமாக இருக்கும்.
லாட்டரிகள், புதிர்கள் மற்றும் குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றதில் கிடைத்த தொகை
லாட்டரிகள், புதிர்கள் மற்றும் குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றதில் இருந்து பெற்ற தொகைக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். எனினும் லாட்டரிகள் மற்றும் புதிர்களுக்கு அடிப்படை டிடிஸ் வரி விலக்கு வரம்பு ரூ. 5000 ஆகும். ஆனால் குதிரை பந்தயத்திற்கு மட்டும் ரூ. 2500 விலக்கு ஆகும்.

டிடிஎஸ் மூலம் வரி பிடித்தம் செய்யும் போது அதிகமாக கட்டிய வரி திரும்ப தரப்படாது என்று அர்த்தம் இல்லை. கட்ட வேண்டிய தொகையை விட அதிகமாக வரி கட்டியிருக்கும் பட்சத்தில் பணத்தை திரும்ப பெறுவதற்கு உரிமை கோரலாம். ஒரு வேளை இந்த அதிகப்படியான தொகை அந்த நிதி ஆண்டிற்கு அப்பால் கோரப்பட்டிருந்தால், அது சம்பந்தப்பட்ட மதிப்பீடு அதிகாரி(டிடிஎஸ்) மூலம் உரிமை கோரப்பட வேண்டும்.
 
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்

அன்பளிப்பு வரி என்றால் என்ன? யாரெல்லாம் செலுத்தணும்?

நாம் பெறும் அன்பளிப்புக்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆம், புதிதாக வந்திருக்கும் வருமான வரி சட்டம் யு/எஸ் 52 (2)ன் படி, நமது வருமானத்தைத் தவிர்த்து வேறு வழிகள் மூலமாக வரும் வருமானங்களுக்கும் நாம் வரி கட்ட வேண்டும். இந்த புதிய வருமான வரி சட்டத்தின்படி ரூ.50,000க்கு அதிகமாக பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ அன்பளிப்பாகப் பெற்றால் அந்த அன்பளிப்பிற்கு வரி செலுத்த வேண்டும்.
அது அசையா சொத்தாகவோ அல்லது அசையும் சொத்தாகவோ இருக்கலாம். ஆனால் அதன் மதிப்பு ரூ.50,000க்கு அதிகமாக இருந்தால் புதிய சட்டத்தின் படி அதற்கு வரி செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு பெறும் அன்பளிப்புகள்:
1. திருமணத்தின் போது பெறும் அன்பளிப்புகள்
2. உயில் மூலம் பெறப்படும் பூர்வீக சொத்துகள்
3. ஒரு வேளை அன்பளிப்பு வாங்கியவர் இறந்துவிட்டால்
4. இறந்த தொழிலாளியின் போனஸ், ஓய்வூதியம் மற்றும் முதிர்வுத் தொகை
5. என்ஆர்ஐ கணக்கு மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பெற்றோருக்கு அளிக்கும் அன்பளிப்பு
அதுபோல் ஒரு மருமகள் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் மருமகன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.
புரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்:
எடுத்துக்காட்டு 1
ஹரி என்பவர் தனது திருமணத்தின் போது தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடமிருந்து ரூ.50,000க்கும் அதிகமான அன்பளிப்புகளைப் பெற்றால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை. அதே போல் அவர் அசையும் மற்றும் அசையா பூர்வீக சொத்துக்களைப் பெற்றாலும் அதற்கு அவர் வரி செலுத்தத் தேவையில்லை.
எடுத்துக்காட்டு 2
ரூ.10 லட்சம் மதிப்பில் ஹரி தனது மனைவி தீபாவிற்காக ஒரு அன்பளிப்பு வாங்கிக் கொடுத்தால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை.
எடுத்துக்காட்டு 3
ஆனால் திருமணத்திற்கு முன்பு தனது வருங்கால மனைவி தீபாவிற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான வைர நெக்லசை அன்பளிப்பாக வழங்கினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு 4
ராகுல் என்பவர் ஹரி என்பவருக்கு ரூ.30,000 ரொக்க பணத்தை அன்பளிப்பாக வழங்குகிறார். அந்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதே நிதி ஆண்டில் ராகுல் மேலும் ரூ.21,000ஐ ஹரிக்கு அன்பளிப்பாக வழங்குகிறார். தற்போது அந்த ஆண்டு முழுவதும் ராகுலிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற ரூ.51,000க்கும் ஹிர வரி செலுத்த வேண்டும்.
வரி செலுத்த வேண்டிய உறவினர்கள்:
1. வரி செலுத்த வேண்டியவரின் வாழ்க்கைத் துணைவர்
2. வரி செலுத்த வேண்டியவரின் சகோதரர் அல்லது சகோதரி
3. வாழ்க்கைத் துணைவரின் சகோதரர் அல்லது சகோதரி
4. வரி செலுத்த வேண்டியவரின் பெற்றோர்களின் சகோதரர் அல்லது சகோதரி
5. வரி செலுத்த வேண்டியவரின் வாரிசு அல்லது மூதாதையர்
6. வாழ்க்கைத் துணைவரின் வாரிசு அல்லது மூதாதையர்
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்
 வீட்டுக்கடனில் கிடைக்கும் வருமான வரிச்சலுகை கிடைக்கிறது. எப்படி?
வங்கியிலிருந்து வீட்டுக்கடனோ அல்லது வீட்டு அடமான கடனோ பெற்றிருக்கிறீர்களா?
ஆம் என்றால், வருமான வரி துறை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் என்னென்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
முந்தைய தலைமுறையில் 50 வயதுக்கு மேல் தான் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ முடிந்தது. அவர்களது பொருளாதார வசதி போதுமானதாக இல்லாமலிருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் வங்கி கடன் வசதிகள் பெறுவது எளிதாக இல்லை.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் 35 வயதுக்குள்ளாகவே வீடு ஒன்றிற்கு சுலபமாக சொந்தக்காரர்களாக முடிகிறது.
கல்வி அறிவு வளர்ச்சி; விவசாய பொருளாதாரத்தில் இருந்து தொழில் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாடு பீடு நடை போடுவது; தகவல் மற்றும் தொழில் தொடர்பு துறைகளின் குறுகிய கால அசுர வளர்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை உன்னதமாக காணப்படுகிறது.
1961 ல் 70.3 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்திருந்த நாட்டில் இன்று இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் 48.9 சதவீதம் பேர் தான் என்று கூறுகிறது அரசின் புள்ளி விவரம் ஒன்று.
கடன் வாங்கி ஒரு வீட்டினை உரிமையாக்கிக்கொள்வது நமது வசதிகளை மேம்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தி முடிக்கின்ற வரையிலும் வருமான வரி சலுகையையும் அது பெற்று தருகிறது.
எனவே, வீட்டுக்கடன் பெற்றுத்தரும் வருமான வரி சலுகைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு முன், மாதாந்திர தவணை அதாவது (Equated Monthly InstallmentEMI) என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மாத தவணை
வீடு வாங்குவது என்பது பலவகைப்படும். சிலர் கட்டிய வீட்டை வாங்கலாம். சிலர் கட்டுமான நிறுவனங்கள் கட்டிக்கொடுக்கும் தனி வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வீடு வாங்கலாம். சிலர் தங்களுக்குரிய நிலத்தில் வீடு கட்டலாம். எனவே இதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அல்லது வீடுகட்டுமான நிறுவனத்தின் பெயரில் வங்கி கடன் அளிக்கும். இந்த கடன் தொகை காசோலை அல்லது பணவிடை மூலம் தரப்படுகிறது.
கடனாக பெற்ற இந்த தொகையை நாம் குறிப்பிட்ட காலத்துக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக திரும்ப செலுத்துகிறோம். இதனைத்தான் இ.எம்.ஐ. (EMI) என்கிறோம்.
இந்த இ.எம்.ஐ. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி அசலாகவும், மற்றொரு பகுதி வட்டியாகவும் நமது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் நாம் அசலையும் நிலுவையிலுள்ள தொகைக்கு வட்டியையும் சேர்த்தே செலுத்தி வருவதால் கடன் அளவு மாதாமாதம் குறைந்து வருகிறது. இவ்வகையில், ஆரம்ப காலத்தில் கடன் தொகை அதிகம் என்பதால் அதன் மீது செலுத்த வேண்டிய வட்டியும் அதிகமாகவே இருக்கும்.
எனவே, ஆரம்பகாலத்தில் செலுத்தப்படும் இ.எம்.ஐ.- ல் பெரும் பகுதி வட்டிக்காகவே வரவு வைக்கப்படுகிறது. அப்படியானால், அசலுக்காக வரவு வைக்கப்படும் தொகை தொடக்க காலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. இவ்வாறு மாதங்கள் செல்லச்செல்ல, இ.எம்.ஐ.- ல் வட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை குறைந்து வருவதையும், அசலுக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை அதிகரித்து வருவதையும் நாம் காணலாம்.
வருமான வரி சலுகை, திரும்ப செலுத்தப்படும் அசலுக்கு ஒரு விதமாகவும், செலுத்தப்படும் வட்டிக்கு மற்றொரு விதமாகவும் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் தனி நபர்களுக்கான வரி சலுகை வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 80 சி யின்படி வழங்கப்படுகிறது.
இந்த வருமான வரிச்சட்டப்பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா?
பிராவிடெண்ட் பண்ட் (பி.எப்.), பொது பிராவிடெண்ட் பண்ட் (பி.பி.எப்.), இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் பங்குகளோடு இணைந்த சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் ஆண்டுக்கு, (மேற்சொன்ன அனைத்து திட்டங்களிலும் சேர்த்து) ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம்.
இந்த ஒரு லட்சம் சேமிப்பு நமது மொத்த வருமானத்திலிருந்து குறைத்துக்கொள்ளப்படும். அதாவது, வரி செலுத்த வேண்டிய வருமானம் குறையும். உதாரணமாக உங்களது மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.
மேலே குறிப்பிட்ட இனங்களில் உங்கள் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆக இருக்கிறது என்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானம் 4 லட்ச ரூபாய் ஆக கணக்கிடப்படும்.
ஒருவேளை, மேற்சொன்ன இனங்களில் நீங்கள் சேமிப்பு எதுவும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுபோன்ற நிலையில் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால், திருப்பி செலுத்தப்படும் வீட்டுக்கடன்களுக்கான அசலில் ரூபாய் ஒரு லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெறலாம்.
எந்த வீட்டு மீதான கடனுக்கு நீங்கள் வருமான வரி விலக்கு கோருகிறீர்களோ அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும் என்பது வருமானவரி துறையின் விதியாக உள்ளது. ஒருவேளை, கடன் வாங்கி கட்டிய வீடு இருக்கும் அதே ஊரில் இல்லாமல், பணியின் காரணமாக வேறு ஊரில் நீங்கள் குடியிருப்பதாக வைத்துக்கொண்டால் உங்களுக்கு மேற் சொன்ன விதி பொருந்தாது. அதாவது, சலுகையை பெறுவதில் தடையில்லை.
உதாரணமாக நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; சென்னையிலேயே குடியிருக்கிறீர்கள். அதே நேரம், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடும் சென்னையிலேயே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது வருமான வரி துறை தரும் சலுகைக்கு நீங்கள் உரியவரல்ல. ஏனெனில், கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் நீங்கள் வசிக்கவில்லை என்பதனால் நீங்கள் சலுகை பெற தகுதியுடையவரல்ல.
நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; அங்கேயே குடியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடு மதுரையில் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சலுகை உண்டு, மதுரையில் உள்ள வீட்டினை நீங்கள் வாடகைக்கு கொடுத்திருந்தாலும் கூட.
இந்த சலுகையின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக வேறு வீடுகள் இருந்தாலும் அதே பகுதியில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் நீங்கள் குடியிருக்கும் பட்சத்தில் நீங்கள் சலுகைக்கு தகுதியானவரே.
எனவே, சென்னையில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் குடியிருக்கும் போது அதேபோல் கடன் வாங்கி மதுரையில் மற்றொரு வீட்டை கட்டியிருந்து, அதனை வாடகைக்கு கொடுத்திருந்தாலும் இரண்டு வீட்டிற்கும் வருமான வரி சலுகை உண்டு.
அடுத்து, வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டி மீதான சலுகை குறித்து வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது?
வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 ன்படி, வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி ரூ.1.50 லட்சம் வரை உங்களது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது. அதாவது, அந்த ரூ.1.50 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி `வீடு மூலம் ஈட்டப்பட்ட வருவாய்' என்ற தலைப்பின் கீழ் செலவாக கருதப்பட்டு அது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது.
அதே சமயம், குறிப்பிட்ட வீட்டின் மூலம் வாடகை கிடைப்பதாக இருந்தால் அது வருமானமாக கருதப்படும். அதாவது, வீட்டுக்கடனுக்காக செலுத்திய வட்டியிலிருந்து வாடகை வருவாய் குறைக்கப்பட்டு மீதமுள்ள வட்டி தொகைக்கே வருமான வரி சலுகை கிடைக்கும்.
நீங்கள் எத்தனை வீட்டுக்கடனுக்காக வட்டியை செலுத்தினாலும் சரி மொத்தத்தில் ரூ. 1.50 லட்சம் அளவிற்கு தான் சலுகை பெறமுடியும்.
வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 மேலும் ஒரு சலுகையை வழங்குகிறது. அதாவது, வீட்டுக்கடன் மீதான வட்டிக்குரிய வரி சலுகையை பெற நீங்கள் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
முன்னதாக செலுத்தப்படும் வட்டி
கடன் பெற்று கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளில் வங்கிகள் கடனை கொஞ்சம் கொஞ்சமாகவே வழங்கும். அப்போதெல்லாம், அசலுக்கான இ.எம்.ஐ-யை வங்கிகள் வசூலிப்பதில்லை. மாறாக, வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை இ.எம்.ஐ. வாயிலாக உங்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும்.
அவ்வாறு நீங்கள் செலுத்தும் வட்டியை எந்த நிதியாண்டில் செலுத்தினீர்களோ, அதே நிதியாண்டில் அதற்கான வருமான வரி சலுகையை பெற முடியாது. ஆனால், எந்த நிதியாண்டில் வீடு கட்டி முடிக்கப்படுகிறதோ அதிலிருந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு ஐந்து தவணைகளாக அந்த வட்டிக்கு வரி விலக்கு பெற முடியும்.
உதாரணமாக, நீங்கள் 2003-04, 2004-05 மற்றும் 2005-06 ஆகிய வருடங்களில் முறையே ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வட்டிக்கான இ.எம்.ஐ. மட்டும் செலுத்தியதாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம், ரூ. 80 ஆயிரத்தை வட்டியாக மூன்றாண்டுகளில் நீங்கள் செலுத்தியுள்ளீர்கள்.
ஆனால், வீடு 2006-07 ஆம் வருடத்தில் தான் கட்டி முடிக்கப்படுகிறது என்றால், இந்த ரூ. 80 ஆயிரத்துக்கான வரிச்சலுகையை 2006-07 ஆம் ஆண்டு தொடங்கி 2010-11 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் என்ற அளவில் வரி சலுகை பெறலாம்.
ஒருவேளை வாங்கப்படுகிற வீடு இரண்டு பேர் பெயர்களில் இருந்தால்?
இருவரும் இ.எம்.ஐ.-யை என்ன விகிதத்தில் பகிர்ந்து செலுத்துகிறார்களோ அதே விகிதத்தில் தான் சலுகையை பெற இயலும்.
உதாரணமாக, இருவர் சேர்ந்து வாங்கும் வீட்டிற்கான இ.எம்.ஐ. யில் 40 சதவீதத்தை ஒருவரும் 60 சதவீதத்தை மற்றொருவரும் பகிர்ந்து செலுத்துவதாக வைத்துக்கொண்டால் வருமான வரி சலுகையும் அதே 40:60 என்ற விகித அடிப்படையில் தான் கிடைக்கும்.
வருமானவரிச்சலுகை தொடர்பான கூடுதல் தகவல்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தின் (http://www.incometaxindia.gov.in) மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்

மொத்த வருவாய், நிகர வருவாய் வேறுபாடு என்ன?

"கணக்கு கஷ்டம் தான் ஆனா அக்கவுண்ட்ஸ் அதவிட கஷ்டம்!", "சரி இந்த வரி விவரங்கள் எப்படி?", "அய்யோ சாமி ஆள விடுங்க...." நாம் அடிக்கடி இதைக் கேட்டதுண்டு. அப்படி என்ன கஷ்டம் என்பதைப் பார்ப்பதற்கு முன், மொத்த வருவாய் (gross income), நிகர வருவாய் (net income) என்றால் என்ன என்பதையும் வருமான வரிக்கும் அதற்கும் உள்ள சம்மந்தம் என்ன, சம்பளம் வாங்குபவர்க்கும் தொழில் செய்பவர்க்கும் இதனால் என்ன வேறுபாடு என்பதையும் இங்கு பார்க்கலாம்.
மொத்த வருவாய் என்றால் மொத்த வருமானம். வருமானத்திலிருந்து வரி போன்றவற்றை கழிக்கும் முன் உள்ள தொகை. சுருக்கமாக ஒருவர் வாங்கும் மொத்த சம்பளம்.
நிகர வருவாய் என்றால் நிகர வருமானம். வருமானத்திலிருந்து வரி மற்றும் இதர பிடிப்புகள் - கழிக்கும் தொகைகள் என அனைத்தையும் கழித்த பின்னர் வரும் தொகை.
எப்போதும் மொத்த சம்பளத்தைவிட நிகர வருமானம் குறைவாகவே இருக்கும். சுயதொழில் செய்பவர்களின் நிகர வருமானம் அவர்களுடைய மொத்த வருமானத்தில் இருந்து செலவுகளையும், வட்டித் தொகையையும், வரிகளையும் கழித்த பின்னர் வரும் தொகை.
வரிக் கணக்கு:
இந்திய வரிச் சட்டத்தின் படி, சம்பளம் வாங்குபவர்கள் தங்களின் மொத்த வருமானத்திற்கு வரிக் கணக்கு செய்து வரி செலுத்தவேண்டும். சுயதொழில் செய்பவர்கள் மொத்த வருமானத்திலிருந்து செலவுகள், வட்டி ஆகியவற்றை கழித்து அந்த தொகைக்கு வரி செலுத்தவேண்டும்.
சம்பளம் வந்குப்பவர்களின் சம்பளத்தில் இருந்து வேலை செய்யும் கம்பெனி வரியைக் கழித்துவிடுதான் சம்பளத்தையே தரும்.
எடுத்துக்காட்டு:
ஹரி என்பவர் சம்பளம் வாங்கும் ஒருவர். அவருடைய மாதச் சம்பளம் ரூபாய்50,000. இந்த சம்பளத்தின் படி அவர் 20 சதவிதம் வரிக்கு உட்பட்டவர். அவருடைய வரிக் கணக்கீடு பின் வருவது போல இருக்கும்:
50,000 x 20% = 10,000 (50,000துக்கு 20% வரி போட்டால் 10,000 வரும்)
50,000 - 10,000 = 40,000. (10,000யை 50,000திலிருந்து கழித்தல் 40,000).
இந்த எடுத்துக்காட்டின் படி 50,000 ஹரியின் மொத்த வருமானம். 10,000 வரித்தொகை. 40,000 நிகர வருமானம்.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்
 வருமான வரி தாக்கல் செய்யத் தேவையான படிவங்கள் எவை?
உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது எந்த படிவத்தை உபயோகிப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருந்திருக்கலாம். எந்த படிவம் யார் யாருக்கு சரியானது என்பதைப் பற்றியும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான சில டிப்ஸ் பற்றியும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அடிப்படையான, ஃபார்ம் 16-இல் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் சம்பளம் வாங்கும் தனிநபராக இருப்பின், இப்படிவம் உங்கள் எம்ப்ளாயரால் வழங்கப்பட்டு அனைத்து அடித்தளங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது உங்கள் மொத்த வருமானம், வரிவிதிக்கத்தக்க வருமானம், நீங்கள் செய்துள்ள வரி சேமிப்புத் திட்டங்கள், மற்றும் உங்கள் வருமானத்திலிருந்து பிடிக்கப்பட்ட வரித்தொகை போன்ற அனைத்துத் தகவல்களையும் கொண்டதாக இருக்கும்.
வேறு விதமாக சொல்வதானால் ஃபார்ம் 16 என்பது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முன்பு உங்கள் வருமானம் மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி ஆகியவற்றுக்கான சான்றாகும்.
ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்க்ஸ் ஸ்கீம்ஸ் (இஎல்எஸ்எஸ்) மற்றும் பிபிஎஃப் போன்றவற்றில் செய்திருக்கும் முதலீடுகள், ஆயுள் காப்பீடுக்கான தவணை போன்ற துணைப் பிடித்தங்களுக்கான சான்றுகளை, நீங்கள் உங்கள் நிறுவனத்தின், சம்பளம் வழங்கும் துறையில் சமர்ப்பித்திருப்பீர்கள்.
தர்ம காரியங்களுக்கான நன்கொடைகளை, ஃபார்ம் 16-இல் சேர்க்கவியலாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வகையான நன்கொடைகள், வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, வரி விலக்குக்குட்பட்டதாக இருப்பினும், அதனை நீங்கள், உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது தனியாகத் தான் கோர முடியும்.
ஃபார்ம்: ஐடிஆர்-1 (ஸாஹஜ்)
தனிநபர்கள், பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டவராய் இருப்பின், இந்த படிவம் அவர்களுக்கு பொருத்தமானது.
சம்பளம்/ஓய்வூதியம் மூலம் வருமானம்
ஒரு வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம் - முந்தைய வருடங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த இழப்புகளைத் தவிர்த்து
பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் - லாட்டரிச் சீட்டிலோ அல்லது குதிரைப் பந்தயத்திலோ ஜெயித்ததினால் கிடைத்த வருமானத்தைத் தவிர்த்து
ஃபார்ம்: ஐடிஆர்-2
இப்படிவம், வியாபாரம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஏதும் இல்லாத, தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப்-களுக்கானது. இது, பின்வருவனவற்றைத் தவிர்த்து, மற்ற விதங்களில், ஐடிஆர்-1 படிவத்தை ஒத்துள்ளது.
ஐடிஆர்-1 படிவத்தை, ஹெச்யூஎஃப்-கள்(ஒருங்கிணைந்த இந்து குடும்பம்), நிரப்பவியலாது
ஒரு தனிநபருக்கு, வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் அவர் முந்தைய வருடங்களில் இருந்து, முன்னெடுத்து வந்திருந்த இழப்புகள்
ஒரு தனிநபருக்கு, ஒரு வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம்; மற்றும் அவருக்கு ஒரு வீட்டிற்கு மேல் சொந்தமாக இருக்ககக்கூடிய வீட்டு உடைமைகள்
லாட்டரிச் சீட்டிலோ அல்லது குதிரைப் பந்தயத்திலோ ஜெயித்ததன் மூலம் கிடைத்த வருமானம்
ஃபார்ம்: ஐடிஆர்-3
நிறுவனங்களில், பார்ட்னர்களாக இருக்கும்; ஆனால், சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் எதுவும் செய்யாமல் இருக்கும் தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப் -களுக்கானது இந்தப் படிவம்.
ஃபார்ம்: ஐடிஆர்-4
வணிக வருமான வரி தாக்கல்: சொந்தமாக செய்யும் வியாபாரம் அல்லது தொழில் மூலம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப் -களுக்கானது இப்படிவம்.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்
 அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-க்கள்) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, நேஷனல் சேவிங்க்ஸ் சர்ட்டிபிகேட்ஸ், பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஸ்கீம்ஸ் மற்றும் இதர அஞ்சலக திட்டங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் முதலீடு செய்ய முடியாது.
ஆச்சரியமாக, அரசு சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை, ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லை. ஆனால், தற்சமயம் அத்தகைய முதலீடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் அத்தகைய முதலீடுகளை உள்நாட்டுவாசியான தன் பெற்றோர்கள் அல்லது பிற நண்பர்கள் மூலம் தங்கள் பெயரில் இல்லாதவாறு அவர்கள் பெயரில் உள்ளவாறு மட்டுமே செய்ய முடியும். அஞ்சலக திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திறந்து வைக்கப்பட்டாலும் கூட, அதில் அவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
இதற்கான காரணம் மிகவும் எளிமாயானதே. அஞ்சலக திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானம் வரிவிதிப்பிற்குட்பட்டதாக இருக்கும். ஆனால் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரி விலக்கு பெற்றதாக இருப்பதோடல்லாமல், வங்கிகளால் வழங்கப்படும் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்கள், சில அஞ்சலக திட்டங்களைக் காட்டிலும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டவையாகவும் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பவைகளான சொத்து முதலீடு, வரி சேமிப்பு கடன் பத்திரங்கள், ஐபிஓ-க்கள், பரஸ்பர நிதி திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முயலலாம்.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்
 ஒரு என்ஆர்ஐ என்பவர் யார்?
ஃபாரீன் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட் 1999 (எஃப்இஎம்ஏ) -இன் படி, ஒரு நான் ரெசிடென்ட் இந்தியன் அல்லது என்ஆர்ஐ எனப்படுபவர், ஒரு இந்திய குடிமகனாகவோ அல்லது இந்திய வம்சாவளியில் வந்த ஒரு வெளிநாட்டுப் பிரஜையாகவோ இருந்து, அவர் வேலை வாய்ப்பு காரணங்களுக்காகவோ அல்லது வியாபார நோக்கங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையினாலோ வரையறுக்கப்படாத கால அளவில் இந்தியாவை விட்டு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலையில் இருப்பவரே ஆவர். ஒரு நபர் முந்தைய நிதியாண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாகத் தங்கிருக்க நேர்ந்திருப்பின், அந்நபரையும் என்ஆர்ஐ-யாகக் கருதலாம்.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்
 உரிமை மறுப்பு
வருமான வரி பற்றியும் அது தொடர்பான தகவல்கள் பற்றியும் மக்கள் அனைவரும் தமிழில் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த இணையபக்கம். இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மட்டுமே இறுதியானவை அல்ல.இதில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் வாசகர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு எவ்விதத்திலும் இணையதளம் பொறுப்பாகாது. தங்களின் சந்தேகங்களுக்கு அவ்வப்போது உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts