தொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை!! "தொப்புள் கொடி உறவுகள்" நிறைய உண்டல்லவா நமக்கு. "நிஜமான" தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
கருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று "எல்லாமே" தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை. முதலில் தொப்புள்கொடியின் வேலை என்ன என்று பார்ப்போம்.
பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை, தேவையான ஆக்ஸிஜனை மூச்சுக்காற்று வழியாக நுரையீரல் உதவியுடன் பெற்றுக் கொள்கிறோம். இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு நுரையீரல் வேலை செய்யாது என்பதால், அதன் வேலையை தொப்புள் கொடி செய்யும்.
குழந்தையின் இதயம் இரத்தத்தைப் பம்ப் செய்யும்போது, அந்த இரத்தம் தொப்புள் கொடியில் உள்ள இரண்டு artery – தமனிகள் வழி சென்று, "நஞ்சு " எனப்படும் Placenta – ப்ளாஸண்டாவுக்குச் செல்கிறது. அங்கு, குழந்தையின் இரத்தத்தில் உள்ள கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு, தாயிடமிருந்து ஆக்ஸிஜன் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், ஊட்டங்கள் ஆகியவை பெறப்பட்டு, குழந்தையின் இரத்தத்தில் கலக்கின்றன. பின்னர் அதே தொப்புள்கொடியில் உள்ள vein – சிரை வழியே மீண்டும் குழந்தை உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இது பிரசவம் வரை தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல். இதன் கட்டுப்பாடு குழந்தையின் இதயத்திடமே உள்ளது என்பதை நினைவில் கொள்க.
இந்தப் பரிமாற்றம் நடைபெறும்போது, குழந்தையின் இரத்தமும், தாயின் இரத்தமும் கலந்துவிடாதபடி பாதுகாக்கும் முறையில் ப்ளாஸண்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசவ வலி தொடங்கியதும், தொப்புள் கொடியினுள் இரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. பிரசவம் நடந்ததும், சில நிமிடங்களில் தொப்புள் கொடியின் மீது நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரு முனைகளிலும் க்ளிப்கள் போட்டு, அதன்மூலம் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, பின் கத்தரித்து விடுவார்கள். இதுதான் பிரசவத்தின்போது வழமையாகச் செய்யப்படுவது. அவ்வாறு நிறுத்துவது குழந்தையின் நுரையீரல் வேலை செய்ய ஆரம்பிக்கத் தூண்டுவதற்கு இலகுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிறந்தபின், குழந்தை நுரையீரல் வழிதானே சுவாசிக்க வேண்டும்.
தொப்புள் கொடியினுள் உள்ள Vein மற்றும் Artery யை பிரிக்க, அவற்றின் நடுவே Wharton jelly என்கிற கொழகொழப்பான பொருள் உள்ளது. மருத்துவர்கள் தொப்புள்கொடியில் க்ளிப் போட்டு செயற்கையாக நிறுத்தாவிட்டால், பிரசவம் நடந்த மூன்று நிமிடங்களில், தட்பவெப்ப மாறுபாட்டால், இந்த ஜெல்லி பொத பொதவென்று பெருகி இயற்கையாகவே அந்த Vein மற்றும் Arteryயை இறுக்கி, செயல்பாட்டை நிறுத்திவிடும்.
க்ளிப் போடுவதற்குள், கொடியில் உள்ள இரத்தம் தானாகவே குழந்தையின் உடலில் சென்றுவிடுவது நல்லது. தொப்புள் கொடி இரத்தத்தில் அரிய, பயன்மிகுந்த ஸ்டெம் செல்கள் இருப்பதால், இந்த இரத்தம் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும். குழந்தையின் இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாகும். பல்வேறு உடல் நலிவுகளிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும் குழந்தை பாதுகாக்கப்படும். உடலில் இரத்த அளவு கூடும். இதே அளவு இரத்தம் குழந்தையின் உடலில் சுரக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால் இந்த இரத்தத்தை தவற விடக்கூடாது. ஆகையால், பொதுவாக மருத்துவர்கள் க்ளிப் போடுவதற்குமுன் கொடியில் இரத்தம் வடியும்வரை காத்திருந்து க்ளிப் போடுவார்கள்.
தொப்புள் கொடியில் உள்ள இந்த இரத்தத்தை நாமாக குழந்தையின் உடலுக்குள் செலுத்த முடியாது. ஏனெனில், குழந்தையின் இதயம்தான் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.
மேற்சொல்லியவை எல்லாமே சிசேரியன் அல்லது சுகப்பிரசவம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே நடக்கும்.
இந்த இரத்தத்தின் சிறப்பை, தற்போது "cord blood banking" பிரபலமடைந்து வருவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். தொப்புள் கொடியில் உள்ள இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உட்பட பல்வேறு அரிய நோய்களுக்கான மருந்தாகக் கருதப்படும் பொருட்கள் இருப்பதால் இந்த இரத்தத்தை எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமித்து வைப்பது பெருகி வருகிறது. இரத்தப் புற்றுநோயின் சில வகைகள், லிம்ஃபோமா என்ற புற்றுநோய், இன்னும் மருந்தே இல்லாத சில வகை அரிய நோய்கள் – குறைபாடுகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஸ்டெம் செல்கள்தான் ஒரே தீர்வு. மேலைநாடுகளில் ஒருவரின் குடும்பத்தில் இவ்வகை நோய்கள் இருந்திருந்தால், அவர்கள் எதிர்காலத் தேவை கருதித் தம் குழந்தைகளின் தொப்புள் கொடி இரத்தத்தை அதற்கென உள்ள வங்கிகளில் சேமித்து வைப்பதுண்டு. அதே குழந்தைக்கு பின்னாளில் அந்த இரத்தத்தைப் பயன்படுத்த முடியாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அதுதவிர, தம் குடும்பத்திற்குத் தேவைப்படாவிட்டாலும், மற்றவர்களுக்கு உதவலாம் என்ற நல்லெண்ணத்திலும் – இரத்த தானம், இறந்தபின் கண் தானம் உறுப்புதானம் செய்வதுபோலவும் – சிலர் சேமிப்பதுண்டு.
இவை தாண்டி, நவீன மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிக்காகவும் இந்த இரத்தம் பெரிய அளவில் தேவைப்படுகிறது. பல மருந்து நிறுவனங்கள் தம் ஆராய்ச்சிக்காக, பெரும்பணம் கொடுத்து இந்த இரத்தத்தை – ஸ்டெம் செல்களைச் சேகரிக்கின்றன.
இப்படிப் பல வகைகளில் இந்த தொப்புள் கொடி இரத்தத்திற்கு டிமாண்ட் இருக்கிறது.
பொதுவாக இந்தியாவில், இதுவரை இந்த இரத்தத்தின் சிறப்பு அறியப்பட்டதில்லை என்பதாலோ, அல்லது இயல்பாகவே அதன் இரத்தம் முழுதும் குழந்தைக்குச் செலுத்தப்பட்டு விடுவதாலுமோ பிரசவத்தில் தொப்புள் கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது திடீரென இத்தொப்புள் கொடி இரத்தத்திற்குத் தேவை அதிகரித்து வருவதால், அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி பெற்றோர்களைச் சேமிக்கத் தூண்டுகிறார்கள்.
எனினும், இது குறித்துச் சில சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. சில இடங்களில் பெற்றோரின் அனுமதியின்றி, அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அந்த இரத்தத்தை மருத்துவர்கள் எடுத்து வெளியில் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே, அதிக இரத்தம் கிடைப்பதற்காக – அதன்மூலம் அதிகப் பணம் பெறுவதற்காக, குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை க்ளிப் போட்டு விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
இது பிறந்த குழந்தையின் அனுமதியின்றி, அதன் நலனை பின் தள்ளி, பெறப்படும் 'இரத்த தானம்' என்றும் கூறப்படுகிறது. (Involuntary blood donation)
மருத்துவர்கள் எல்லாரையும் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நல்ல மருத்துவர்களின் இடையில், சில புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்வர். நாம், நம்மளவில் கவனமாக இருந்துகொள்வதே நல்லது. ஆகவே, உங்களின் பிரசவ மருத்துவரிடம், இதுகுறித்துப் பேசுங்கள். Delayed cord clamping செய்யச் சொல்லிக் கேளுங்கள். தாய் – சேயின் நலத்தில் அக்கறை உள்ள மருத்துவர்கள் நாம் சொல்லமலே செய்துவிடுவார்கள். நீங்கள் அறிந்த கர்ப்பிணிகளிடம் இத்தகவலைக் கூறுங்கள்.
எனினும், சில சந்தர்ப்பங்களில் – குறைமாதக் குழந்தை, பிறவிலேயே சில வகைக் குறைபாடுகளுள்ள குழந்தை போன்ற சமயத்தில்- Early cord clamping செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஹுஸைனம்மா
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக