மனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் விரயமாகும். அத்துடன் திட்டமிட்டபடி ஒவ்வொரு நிலையிலும் பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படும். ஆகவே கட்டுமான பணியை தொடங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
- வீடு எத்தகைய வடிவமைப்புடன் அமைய வேண்டும் என்பதை கட்டிட வரைபடம் தான் நிர்ணயிக்கும். எனவே வரைபட தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் எத்தனை அறைகள் அமைக்கப் போகிறோம். ஒவ்வொரு அறையும் எவ்வளவு நீளம், அகலம் இருக்க வேண்டும் என்பதை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அறைகள் எந்தெந்த திசையில் அமைய வேண்டும்? அறைக்குள் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும்? என்பது பற்றியும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பிற வீடுகளை பார்த்தும், அவர் களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறலாம். ஆனால் கட்டிட வரைபடம் தயாரித்து இறுதி செய்தபிறகு எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
- கட்டுமானப்பணியின் போது தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அவை கட்டிட வரைபட வரைமுறைக்கு உட்பட்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டுமானப்பணிகள் ஆரம்பித்த பின்னர் பெரிய அளவில் மாற்றம் செய்ய நினைத்தால் மீண்டும் கட்டிட வரைபடம் தயாரிக்க வேண்டியிருக்கும். அதனால் தேவையில்லாத கால விரயமும், பண விரயமும் ஏற்படும்.
- கட்டுமான பணி தொடங்கும் போதே வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு தொகை செலவு ஆகும்? நம்மால் எவ்வளவு தொகை செலவு செய்ய முடியும்? என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவசியம். பணி தொடங்கியபிறகு கடன் வாங்கி கொள்ளலாம் என்று கற்பனை கோட்டை கட்டுவது பயன் தராது. ஏனெனில் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் போனால் கட்டுமானப்பணி பாதியில் நிற்கக்கூடும். ஆதலால் வீட்டை கட்டிமுடிப்பதற்கு ஆகும் தொகையை முதலிலேயே தயார் செய்து விட்டு கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும்.
- கட்டுமான பணியை ஒப்பந்ததாரரிடம் கொடுக்கும் பட்சத்தில் எவ்வளவு காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பது பற்றி இருவரும் கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும்.
- கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறும் பணிக்கு இலக்கு நிர்ணயித்து அந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் எந்த அளவு வேலை முடிந்துள்ளது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். திட்டமிட்டபடி பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
- பணியில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் அதுபற்றி ஒப்பந்ததாரருடன் கலந்து பேசி அதன் விவரங்களை அவசியம் இருதரப்பும் எழுதி வைக்க வேண்டும். அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை குறித்து வைக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு கட்ட நிலையிலும் ஆகும் செலவையும் எழுதி வைக்க வேண்டும்.
- கட்டிடம் கட்ட பயன்படும் தண்ணீர், மின்சாரம் போன்றவை தடையின்றி கிடைப்பதற்கு கட்டிட உரிமையாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- சிமெண்ட், செங்கல், கம்பியில் தொடங்கி டைல்ஸ், பெயிண்ட், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருள்கள் வரை அனைத்து பொருள்களும் எந்த கம்பெனியின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதையும், அப்பொருட்களின் அடிப்படை விலை பற்றிய விவரங்களும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்.
- கட்டுமான பொருட்களின் விலை குறைந்தாலோ, அதிகரித்தாலோ அதை இருவரும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.
- கட்டிடம் தவிர பிற வேலைகளான காம்பவுண்ட் சுவர், படிக்கட்டு, போர்டிகோ, நுழைவு வாயில், நீர் தேக்கத்தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றின் அளவு மற்றும் அதற்கு ஆகும் கட்டுமான செலவு விவரங்களை முதலிலேயே முடிவு செய்ய வேண்டும். கப்போர்ட் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதும் முதலிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.
- கதவு, ஜன்னல், கிரில் வகைக்கு தனியாக வரைபடம் தயாரித்து அதில் உரிமையாளர், ஒப்பந்ததாரர் இருவரும் கையெழுத்திட வேண்டும்.
- ஒவ்வொரு பகுதி வேலை முடியும்போதும் எத்தனை சதவீதம் பணம் கொடுக்கவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும்.
- இயற்கை பேரிடர் மற்றும் இன்னபிற காரணங்களால் வரும் இழப்புகள், அதனால் வரும் செலவுகளுக்கு யார்? யார் எவ்வளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியம்.
- எந்த ஒரு வேலையையும் இது தனி, அது தனி என பிரிக்காமல், வேலைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் ஒரு அனுபவமிக்க பொறியாளரிடம் கலந்து ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டு பின்னர் அவ்வப்போது அவரிடம் ஆலோசித்து கட்டுமான பணியை மேற்கொள்வது நல்லது.
- பொதுவாக பேஸ்மெண்ட் உயரம், நுழைவு வாயில், டைல்ஸ், கப்போர்ட், போர்டிகோ, மொட்டை மாடி போன்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் கட்டிட உரிமையாளர் தனது தேவைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
· பணம் முழுவதையும் மொத்தமாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் பணத்தை பிடித்தம் செய்து வேலை முடிந்த சுமார் ஆறு மாதத்துக்கு பிறகு ஏதேனும் குறைபாடு தோன்றாவிடில் பணம் முழுவதும் வழங்கலாம்.
நன்றி:நம்ம வீடு--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக