லேபிள்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கிட்னி தினம் கவனி!

 நமது உடலின் துப்புரவுத் தொழிற்சாலை சிறுநீரகங்கள். இடுப்புப் பகுதியில் பீன்ஸ் விதை போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும், கையடக்க அளவே கொண்ட சிறுநீரகங்கள் செய்யும் பணி மகத்தானது.
நம் உடலுக்குள் பல்வேறு வேலைகள் நடக்கின்றன. நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆனதும், அது சத்துக்களாகக் கிரகிக்கப்படுகிறது. இந்தச் சத்துக்கள் உடைக்கப்பட்டு உடலுக்குத் தேவையான விதத்தில் மாற்றப்படுகின்றன. இப்படி புரதம் உடைக்கப்படும்போது அமோனியா உருவாகிறது. இதை அப்படியே விட்டால் உயிரிழப்பு ஏற்படும். எனவே, அமோனியாவைச் சிதைத்து யூரியாவாக மாற்றி அதை ரத்தத்தில் சேர்க்கிறது, கல்லீரல். சிறுநீரகம் இதைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது.

நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு திசுவுக்கும் ஆற்றல் அளிக்கவும், தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளவும் உணவு தேவைப்படுகிறது. ரத்தத்தில் இருந்து உணவைப் பெறும் திசுக்கள், கழிவுகளை ரத்தத்தில் கலந்துவிடுகின்றன. இவற்றைப் பிரித்து வெளியேற்றாவிட்டால் நம் உடல் பாதிக்கப்படும். கழிவுகளை அகற்றும் மிக முக்கியமான பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகத்தினுள் நெப்ரான் என்ற நுண்ணிய வடிகட்டிகள் உள்ளன. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெப்ரான்கள் உள்ளன. இந்த நுண்ணிய வடிகட்டிகள்தான் நம்முடைய ரத்தத்தில் உள்ள அணுக்கள் மற்றும் தேவையான அளவு புரதம் உள்ளிட்ட ஊட்டச் சத்துகளை அனுமதித்து, அளவுக்கு அதிகமானவற்றைப் பிரித்து வெளியேற்றுகின்றன.
கழிவுகளை அகற்றி, உடலில் சத்துகள், நீரின் அளவைப் பராமரிப்பதைத் தவிர்த்து மேலும் சில வேலைகளையும் சிறுநீரகம் செய்கிறது. இதில் முக்கியமானது ஈ.பி.ஓ. என்ற ஹார்மோன் சுரப்பதாகும். இந்த ஹார்மோன்தான் எலும்பு மஜ்ஜையில் ரத்த செல்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. ரினின் என்ற ஹார்மோன் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கால்சிட்ரோல் (calcitriol), எலும்பில் கால்சியம் அளவைப் பராமரிக்கவும், உடலின் ரசாயன சமன்நிலையைப் பராமரிக்கவும் உதவுகிறது.
சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதைத் தவிர்க்கும் வழிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டோம்.

சிறுநீரகக் கற்கள்
டாக்டர் விஜயகுமார், சிறுநீரகவியல் மருத்துவர்
சிறுநீரகத்தில் படியும் கடினமான தாது உப்புப் படிவங்கள் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பிக்கும் இந்தப் படிவம் நாளடைவில் பெரிய கல்லாக உருவெடுக்கிறது. சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து கழிவைப் பிரித்து வெளியேற்றும்போது கழிவுகள் முழுமையாக வெளியேறவில்லை என்றால் படிவங்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் தோன்றும் வாய்ப்பு அதிகரிக்கிறது. சிறுநீரகக் கற்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிக அளவில் தோன்றுகிறது.

காரணம்
சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று, போதுமான அளவு நீர் அருந்தாமை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

சிறுநீரகக் கற்கள் வகை

 கால்சியம் கற்கள்
சிறுநீரகத்தில் தோன்றும் பெரும்பான்மையான கற்கள் கால்சியம் கற்கள்தான். இது கால்சியம் ஆக்சலேட் என்ற வடிவத்தில் இருக்கிறது. ஆக்சலேட் என்பது சில வகையான காய்கறி, பழங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. இது தவிர, நம்முடைய கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது. செரிமானப் பிரச்னை, சில மெட்டபாலிக் குறைபாடுகள் காரணமாக சிறுநீரில் கால்சியம் அல்லது ஆக்சலேட் அளவு அதிகரிக்கிறது. இதனால் கால்சியம் கற்கள் உருவாகின்றன.

 ஸ்ரூவைட் கற்கள்  (Struvite stones)
நோய்த் தொற்று, சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இந்த வகையான கற்கள் மிக விரைவிலேயே பெரிதாகும்.

 யூரிக் ஆசிட் கற்கள்
எக்ஸ்ரேவில் தெரியாது. புரதச் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கும், போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது. கீல் வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கல் உருவாகலாம்.

 சிஸ்டின் கற்கள்
மரபியல் ரீதியாகத் தோன்றக்கூடியது.

 அறிகுறிகள்
  சிறுநீரகக் கற்கள் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தென்படாது. அது பெரிதாகி நகரும்போது அல்லது சிறுநீர் வெளியேறும் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போது வலி ஏற்படும். சிறுநீரகக் கல்லின் அளவுக்கும், வலிக்கும் தொடர்பு இல்லை. கல் உருவாகிவிட்டால் ஒருவருக்கு கீழ் முதுகு அல்லது வயிறும் இடுப்பும் சேரும் இடத்தில் வலி இருக்கலாம்.
  அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
  முதுகுப் பகுதியில் பக்கவாட்டில், பின்பகுதியில் கடுமையான வலி இருக்கும்.
  கீழ் வயிற்றுப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் வலி பரவும்.
  சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத வலி இருக்கும்.
  சிறுநீர் சிவப்பு, பிங்க் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும்.
  சிறுநீரில் நாற்றம் இருக்கும்.
  குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்.
  நோய்த் தொற்று காரணமாக கல் ஏற்பட்டிருந்தால் காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

  எப்படிக் கண்டறியலாம்?
கவலைப்படும்படியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
பாதிப்பினால் ஏற்படும் வலி மற்றும் வாழ்க்கை முறை பற்றி விசாரிக்கும் மருத்துவர், அதைத் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து சிறுநீரகக் கற்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவார். இந்தப் பரிசோதனையின் மூலம் கல் இருந்தால் அது எந்த இடத்தில் இருக்கிறது, அதன் அளவு என்ன, எந்த வகையான கல் என்பது கண்டறியப்படும்.

 எக்ஸ்ரே கே.யு.பி
பொதுவாகத் தோன்றக்கூடிய 75 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவ முடியாததாக உள்ளது. இதனால் எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்துவதன் மூலம் இதை எளிதாகக் கண்டறியலாம்.

 அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
25 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவக்கூடியதாகவும், ஒலி அலைகளைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன. எனவே, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையைச் செலுத்தி கற்களைக் கண்டறியலாம்.
இன்ட்ராவீனஸ் பைலோகிராம் (ஐ.வி.பி): ரத்தக் குழாயில் டை செலுத்திய பிறகு எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்தி சிறுநீரகக் கல் கண்டறியப்படுகிறது.

 சி.டி.ஸ்கேன்:
வயிற்றுப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்து சிறுநீரகத்தைப் பரிசோதிப்பதன் மூலம் சிறுநீரகக் கல் எங்கே உள்ளது, அதன் அளவு என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறியலாம்.

 சிகிச்சை
சிறுநீரகக் கல்லின் அளவு மற்றும் அதன் தன்மையைப் பொறுத்து ஒவ்வொருவருக்குமான சிகிச்சை முறை மாறுபடும். சிறிய கல்லாக இருந்து, அறிகுறிகள் தென்பட்டால் அதற்கு துளையிட்டு கல்லை அகற்றும் சிகிச்சை எல்லாம் தேவைப்படாது. சிறிய கற்களை சிறுநீரிலேயே வெளியேற்றிவிட முடியும்.

 நீர் அருந்துவது
நாள் ஒன்றுக்குக் குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்தைத் தூய்மைப்படுத்தி, கல்லை வெளியேற்ற உதவும். டாக்டரே தண்ணீர் அருந்த வேண்டாம் என்று கூறாதவரை, தாராளமாகத் தண்ணீரை அருந்தவேண்டும். சிறுநீர் தெளிவானதாக வெளியேறும் அளவுக்கு தண்ணீர் அருந்துவது நல்லது. அதிக அளவில் நீர் அருந்துவது, திரவ உணவை எடுத்துக்கொள்வது போன்றவை கல்லை வெளியேற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

இப்படிச் செய்யும்போது பெரும்பாலான சிறிய கற்கள் தானாகவே சில மணி நேரங்களுக்குள் அல்லது சில நாட்களில் வெளியேறிவிடும்!

 மருந்து மாத்திரை
சிறிய கற்களை வெளியேற்ற சில மாத்திரை மருந்துகளை டாக்டர் பரிந்துரைக்கலாம். இது நம் சிறுநீரகக் குழாய்களில் தற்காலிகத் தளர்வை ஏற்படுத்தி கல் வெளியேறுவதை எளிமையாக்கும். சிலருக்கு சிறிய கற்கள் வலியை ஏற்படுத்தலாம். வலியை மறக்க டாக்டர் மருந்துகளை அளிப்பார். எந்தக் காரணத்துக்காகவும் சுயமாக மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளகூடாது.

 பெரிய கற்கள்
கல்லின் அளவு, தன்மையைப் பொருத்து டாக்டர் என்ன மாதிரியான சிகிச்சையைப் பெறலாம் என்று பரிந்துரைப்பார். கல்லின் அடிப்படையில் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவை,

 எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோடிரிப்ஸி (ESWL)
வெளிப்புறத்தில் இருந்து ஒலி அலை செலுத்தி கல் உடைக்கப்படுகிறது. 1 முதல் 1 1/2 செ.மீ. அளவுக்கு மேல் கல் இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தி கல் உடைக்கப்படும். ஒலி அலையானது சிறுநீரகக் கல்லின் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தி, சிறுசிறு துண்டுகளாக உடைக்கும். இப்படிச் செய்யும்போது தாங்க முடியாத வலிகூட ஏற்படலாம். எனவே, அந்த நேரத்தில் மயக்க மருந்து எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும். கல் உடைந்து வெளியேறுவதால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம்.

 பெர்கியூட்டேனிஸ் நெப்ரோலித்தோட்டமி (பி.சி.என்.எல்.)
இந்த முறையில் 2.5 செ.மீ. அளவுள்ள கல்லைக் கூட உடைத்து வெளியே எடுக்கலாம். இந்த முறையில், விலா எலும்புப் பகுதியில் சிறிய துளை இட்டு நெப்ரோஸ்கோப்பி கருவி செலுத்தப்படும். இந்தக் கருவி சிறுநீரகத்தில் துளையிட்டு கல்லை அடையும். இந்த கருவியுடன் உள்ளே செலுத்தப்படும் கேமரா இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் வெளியே காண்பிக்கும். கல்லை நெருங்கியதும் அது லேசர் கதிர்வீச்சால் உடைக்கப்பட்டு வெளியே உறிஞ்சப்படும்.
முந்தைய அறுவைசிகிச்சை முறைகளைக் காட்டிலும் மேலானது; வெற்றிகரமானது; பாதுகாப்பானது. இந்த முறையில் ரத்தக்கசிவுக்கு வாய்ப்பு இல்லை.
இந்த முறையில் மூன்று முதல் நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டி இருந்தது.

 யுரிட்ரோஸ்கோப்பி (யு.ஆர்.எஸ்.)
உறுதியான வளைந்துகொடுக்கக்கூடிய ஸ்கோப்பியானது சிறுநீர் வெளியேறும் வழியாக உள்ளே செலுத்தப்பட்டு கல் இருக்கும் இடத்தை அடையும். கல்லை அடைந்ததும் லேசர் கதிர்வீச்சைச் செலுத்தி கல் உடைக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு செ.மீ. அளவுள்ள கல்லைக்கூட எடுக்க முடியும். ஆனால், சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்ப் பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் குழாயில் கல் இருந்தால் மட்டுமே இந்த முறையில் கல் எடுக்க முடியும். சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை இந்த முறையால் எடுக்க முடியாது!

 ரிட்ரோகிரேட் இன்டர்னல் ரிஸ்ட்ரோஸ்கோப்பி (ஆர்.ஐ.ஆர்.எஸ்.)
வளையக்கூடிய யு.ஆர்.எஸ். என்ற ஃபைபரால் ஆன மெல்லிய டெலஸ்கோப் பைப், பிறப்புறுப்பு வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த பைப் சிறுநீர்ப் பையைத் தாண்டி சிறுநீரகம் வரை செல்லும். இதன், உள் முனையில் வெளிச்சத்துக்கு சிறிய லைட் பொருத்தப்பட்டிருக்கும். அதை வெளியே இருந்து இயக்கும்போது உள்ளே சிறுநீரகத்தில் உள்ள காட்சிகள் வெளியே திரையில் தெரியும்.
அதைக்கொண்டு கல் எங்கே உள்ளது என்று தெரிந்துகொள்ள முடியும். சிறிய கல்லாக இருப்பின், இந்த மெல்லிய குழாயில் இருக்கும் கூடையை வைத்து வெளியே எடுத்துவந்துவிடலாம். பெரிய கல்லாக இருந்தால், அதை லேசர் கொண்டுதான் உடைத்து வெளியே எடுக்க முடியும்.

   சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க
  ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்ற ரை லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக் கல் உருவாவதை மட்டுமல்ல, சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
 குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து சிறுநீரகச் செயல்பாட்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
 வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய மாத்திரைகள் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
 வயிற்றுப்போக்கு, வாந்தி என நீர் இழப்பு ஏற்பட்டால் உடனடியாகப் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 நீராகாரம், சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்கவேண்டும்.
 இறைச்சி, உப்பு, சாக்லெட், உலர் பழங்களில் அதிக அளவில் ஆக்சலேட் இருக்கும். இத்தகைய உணவுப் பொருள்களைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

  சிறுநீரகக் கல் வந்துவிட்டால்...

உணவில் உப்பு, காரம், மசாலா குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை, சிறுநீர் கழிப்பைத் துண்டும். இதனால் சிறு சிறு கற்கள் எல்லாம் வெளியேறிவிடும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறைக் குடிப்பதன்மூலம் சிறுநீரில் அமிலத்தன்மை குறைந்து கல் உருவாவது தடுக்கப்படும். ஒருமுறை கல் உருவானவர்களுக்கும் மீண்டும் மீண்டும் கல் உருவாக 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 கல் இருப்பவர்களுக்கு...

கால்சியம் கல் உள்ளவர்கள், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆக்சலேட் கல் இருப்பவர்கள், எல்லாக் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். சோயா மற்றும் கோகோ, சாக்லெட், பிளாக் டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பசலைக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

சிறுநீரகச் செயல் இழப்பு
டாக்டர் எம்.ஜி.சேகர், சிறுநீரக மருத்துவர், சென்னை
சிறுநீரகங்கள் நம் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற முடியாத நிலையை 'சிறுநீரகச் செயல் இழப்பு' என்கிறோம். நம்முடைய சிறுநீரகங்கள் கழிவுகளை வடிகட்டி, வெளியேற்றும் திறனை இழக்கும்போது, ரத்தத்தில் கழிவுகள் தேங்குகின்றன. கேடு விளைவுக்கும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும்போது அது உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

சிறுநீரகங்கள் செயல் இழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோ கூட ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் காரணமாகச் சிறுநீரகத்தின் பணித்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இதை 'நாள்பட்ட சிறுநீரக நோய்' என்போம்.
சில வேளைகளில், எதிர்பாராத விதமாகச் சிறுநீரகத்தின் பணி இரண்டு நாட்களுக்குள்ளாக நின்றுவிடும். இதை 'உடனடி சிறுநீரகச் செயல் இழப்பு' என்கிறோம்.

விபத்தில் ரத்த இழப்பு, சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, சுய மருத்துவம், சிறுநீர்ப் பாதையில் அடைப்பு, மாரடைப்பு ஆகியவையே உடனடி சிறுநீரகச் செயல் இழப்புக்குக் காரணம். ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுதல், தீக்காயம், அதிகப்படியான நீர் இழப்பு, காயம் போன்ற காரணங்களால் ரத்த அழுத்தம் குறைந்து சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வது குறையும் அல்லது தடைபட்டுப்போகும். சில சமயம், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே நம் உடல் உறுப்பைத் தாக்கும் போதும் (ஆட்டோ இம்யூன்) சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வதில் பிரச்னை ஏற்படும். விந்துச் சுரப்பியில் வீக்கம், சிறுநீர்ப்பாதையில் கல் அல்லது கட்டியினால் அடைப்பு ஏற்படுவது போன்ற காரணங்களாலும் உடனடி சிறுநீரகச் செயல் இழப்பு ஏற்படலாம்.

  அறிகுறிகள்
 சிறுநீர் அளவு குறைதல், திடீரென்று இயல்பு நிலைக்குத் திரும்புதல்
  நீர் வெளியேறாததால் கால், மூட்டு, பாதத்தில் நீர்கோத்தல்
  மயக்கம்
 மூச்சு விடுவதில் சிரமம்
  கவனச் சிதறல்
 குழப்பம்
 சோர்வு
 குமட்டல் மற்றும் வாந்தி
 கடுமையான வயிற்றுவலி
 வயிற்றுப் போக்கு
 நெஞ்சு வலி
அறிகுறிகளைப் புறக்கணிக்கும்போது அது கோமா நிலைக்குக்கூட கொண்டுசெல்லலாம்.

பரிசோதனை
மேலே சொன்ன அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். அவர் ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்து அவற்றில் உள்ள யூரியா, க்ரியாடின், எலக்ட்ரோலைட், பொட்டாசியம், சோடியம், குளோரைட் ஆகியவற்றின் அளவுகளை ஆராய்ந்து, சிறுநீரகச் செயல் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவார். சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்ற பரிசோதனை செய்வார்கள்.

நாள்பட்ட சிறுநீரக நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், அதன் தாக்கத்தைப் பொருத்து, நோயின் வேகத்தைக் குறைக்கலாம். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும். உடனடியாக சிறுநீரகத்தின் பணிகளை மீண்டும் செய்யத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். உடலின் நீர் அளவு சமநிலைப்படுத்தப்படும். சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவும் சரி செய்யப்படும். இதுபோன்ற சிகிச்சைகளுக்குப் பிறகும் சிறுநீரகம் தன்னுடைய பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் உடனடியாக வெளியேற்றப்படும்.

  தடுக்கலாம்
சிறுநீரகச் செயல் இழப்பைத் தவிர்க்க மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். வலி நிவாரணிகள், சுய மருத்துவம் கூடாது. சீரான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். புகைத்தலை நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து உடல் நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
  

  சர்க்கரை நோயும் சிறுநீரகமும்...
சர்க்கரை நோய் தாக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அவர்களின் சிறுநீரகங்களில் உள்ள நெப்ரான்கள் தடிமனாகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி அகற்றும் அதன் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். இதனால், நெப்ரானில் கசிவுகள் ஏற்படுகின்றன. அல்புமின் அதிக அளவில் சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது.

பிரச்னையை ஆரம்பநிலையிலேயே கண்டறிவதன் மூலம், பாதிப்பின் வேகத்தைக் குறைக்கலாம். அதிக அளவில் புரதம் வெளியேறினால் சிறுநீரகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். இன்சுலின் மற்றும் இதர பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை, மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்«பாது ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகமும்...
சிறுநீரகங்களின் செயல்பாடானது அதற்கு ரத்தத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் ரத்தக் குழாயின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்தக் குழாயைப் பாதிக்கிறது. சர்க்கரை நோயோடு, உயர் ரத்த அழுத்தமும் சேரும்போது நிலைமை இன்னும் சிக்கலாகிவிடுகிறது.

  சிறுநீரகச் செயல் இழப்பு: உயர் ரத்த அழுத்தத்தின் மிக மோசமான விளைவுகளுள் ஒன்று சிறுநீரகச் செயல் இழப்பு. உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகத்தின் திறனைப் பாதித்து உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு முற்றிவிடுகிறது.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று
டாக்டர் வீரமணி, சிறுநீரகவியல் மருத்துவர், சென்னை
பெண்களை அதிக அளவில் தாக்கும் சிறுநீரகப் பிரச்னை சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று. இது சிறுநீரகம், சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப் பை வரையுள்ள குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் பாதை என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

நம்முடைய சிறுநீரக மண்டலம் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளே நுழைந்தாலும், அதை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தற்காப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்படும்போது கிருமித் தொற்று ஏற்படுகிறது.
பொதுவாக ஈ-கோலை பாக்டீரியாவால் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படுகிறது. இந்தக் கிருமி நம்முடைய குடலில் இருக்கக் கூடியது. மலம் கழிக்கும்போது இந்தக் கிருமி வெளியேற்றப்படுகிறது. பெண்களுக்கு அவர்கள் உடல் அமைப்பு காரணமாக இந்தக் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகமாக உள்ளது. உடல் உறவின்  மூலமும் இந்தக் கிருமித் தொற்று ஏற்படுகிறது.

  பொதுவான அறிகுறிகள்:
 சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி
 சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
 சிறிய அளவு சிறுநீர் கழித்தல். அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
 சிறுநீர் மங்கலாக இருப்பது
 சில சமயங்களில் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்
 சிறுநீரில் நாற்றம்
 பெண்களுக்கு இடுப்பு வலி
 ஆண்களுக்கு மலக்குடல் சார்ந்த வலி
 காய்ச்சல்
 சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டால், மேல் முதுகு மற்றும் பக்கவாட்டில் வலி இருக்கும். கடுமையான காய்ச்சல் இருக்கும். வாந்தி, குமட்டல் இருக்கலாம்.
 சிறுநீர்ப் பையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் இடுப்புப் பகுதியில் அழுத்தம், கீழ் வயிற்றுப் பகுதியில் அசௌகரியம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை இருக்கும்.

  பரிசோதனை
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

  சிறுநீர் பரிசோதனை:
சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் சிறுநீர் பரிசோதனைக்கு (யூரின் கல்சர்) பரிந்துரைக்கப்படும். இந்தப் பரிசோதனையில், சிறுநீரில் ரத்த சிவப்பு அணு, வெள்ளை அணு அல்லது பாக்டீரியா கிருமி உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். இதன் அடிப்படையில் பாக்டீரியா எவ்வளவு உள்ளது என்று கண்டறியப்பட்டு அதற்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். டாக்டர் எவ்வளவு காலத்துக்கு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறாரோ அதுவரை கட்டாயம் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைத் தவிர்க்க...
போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். இதனால், சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியா அடித்துச் செல்லப்படும்.

பெண்கள் காலைக்கடன் முடித்தபிறகு மிகுந்த கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் ஆசனவாயில் இருந்து கிருமி, பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் நுழைவது தடுக்கப்படும்.

உடலுறவில் ஈடுபட்டதும், சிறுநீர் கழித்துவிட வேண்டும். இதனால், பாக்டீரியா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சிறுநீரகத்தைக் காக்க...
    
டாக்டர் செழியன், சிறுநீரகவியல் மருத்துவர், சென்னை
சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். ஆனால், சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எளிதானதும்கூட. சிறுநீரகத்தைப் பாதுகாக்க ஏழு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.

  ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

  சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாகச் செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

  ஆரோக்கிய உணவுப் பழக்கம் அவசியம்

உடல் உழைப்பு இன்றி, உடற்பயிற்சி இன்றி இருப்பது, கொழுப்புமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது, நேரம்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்றவை உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தல், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். ரத்த அழுத்தத்தை உப்பு தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்காள்வதும் நல்லதுதான். கடைகளில் விற்கப்படும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அளவுக்கு அதிகமாக இருக்கும். இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டு சிறந்த சிறுநீர் பிரிக்கும் தன்மை கொண்டது. (Diuretics) அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற வைக்கிறது!  

  போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்
  வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் வெளியேற்றம் சீராக நடக்க இது பெரிதும் உதவும்.

  புகை பிடிக்காதீர்கள்!
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். மேலும், புகைப் பழக்கம் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

  வேண்டாமே சுய மருத்துவம்
தலைவலி, மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும்.

  சிறுநீரகத்தைக் கண்காணித்தல்
சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே,  40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் - சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts