- மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை – சத்தியக்குரல் ஆசிரியர்)
இஸ்லாத்தின் பார்வையில் பாவங்களுக்கு இரண்டு விதமான தண்டனையை நாம் காணலாம். ஒரு விதமான பாவத்தை பொறுத்தவரை திருடினால் பாவம். அதற்குத் தண்டனை இந்த உலகில் கை வெட்டப்படுதல். திருமணம் முடித்து விபச்சாரம் செய்வது பாவம். அதற்குத் தண்டனை இவ்வுலகில் கல்லெறிந்து கொல்லப்படுதல். மேலும் திருமணம் முடிக்காமல் விபச்சாரம் செய்வது பாவம். அதற்கு நூறு சாட்டையடி. மேலும் அவதூறு சொல்வது பாவம். அதற்கு சாட்டையடி. இப்படி உலகிலேயே பாவத்திற்கான பரிகாரத்தை இஸ்லாம் காட்டியுள்ளது.
இரண்டாவது வகையான பாவம். அவைகளை செய்வதால் மறுமையில் தண்டனை. உதாரணத்திற்கு புறம் பேசுவது, கோள் சொல்வது, இட்டுக்கட்டுவது. இப்படியான பாவங்களைக் குறிப்பிடலாம். ஆனால், சமுதாயத்தில் முதல் வகையான பாவத்தை பயப்படுகிறார்கள். அதேநேரம் இரண்டாவது வகையான பாவத்தை தாராளமாக, நாளாந்தம் செய்வதைக் காணலாம்.
திருடினால் கைதான் வெட்டப்படும். விபச்சாரம் செய்தால் உயிர்தான் போகும். அவதூறு பேசினால் சாட்டையடிதான் கிடைக்கும். ஆனால், புறம் பேசினால் நரகம், கோள் பேசினால் நரகம், இட்டுக் கட்டினால் நரகம். எந்தப் பாவம் கடுமையானது என்று இப்போது சிந்தியுங்கள். நரகத்திற்குரிய பாவத்தை சர்வ சாதாரண மாகக் செய்வதை பயப்பட வேண்டும்.
அந்த வரிசையில்தான் பிறரை இழிவாக எண்ணுவதும் நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பாவங்களில் அடங்குகிறது. ஏன் என்றால், ஒருவரை நாம் இழிவாக நினைப்பது இது ஜாஹிலியத்துக் கால பழக்கமாகும். அப்படி நினைப்பதால் நம்மை அறியாமல் நமது உள்ளத்தில் நான் என்ற பெருமை வந்து விடுகிறது. பிறரை இழிவாக நினைப்பதின் மூலம் அல்லது பேசுவதன் மூலம் புறம், கோள், பொய் போன்ற பாவங்கள் தன்னை அறியாமல் வந்து விடுகிறது.
எனவே அன்பு வாசகர்களே! இந்தக் கட்டுரையின் நோக்கம் நம்மிடத்தில் எவரையும் பற்றி தப்பான எண்ணம் வந்து விடக்கூடாது, அதை விட்டும் நாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
பிறரை இழிவாக எண்ணுவது இன்று படித்த உயர் மட்டத்திலிருந்து சாமானியர்கள் வரை சர்வ சாதாரணமாக இருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு ஒரு சில அதிபர்கள் தனக்கு கீழே உள்ள ஆசிரியர்களை அல்லது காரியாலயத்தில் பணி புரிவோரை குறைவாக, இழிவாக எண்ணுவது நான் இந்தப் பாடசாலையில் பெரிய அதிபர் என்று ஏனைய ஆசிரியர்களோடு கடுகடுப்பாக அல்லது அலட்சியமாக இருப்பதைக் காணலாம்.
இந்த எண்ணத்தினால் பெருமை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு சில அதிகாரிகள் தனக்கு கீழ் பணி புரிபவர்களை இழிவாகக் கருதுவதன் மூலம் பெருமை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில பள்ளி நிர்வாகிகளினால் முஅத்தின்கள் இழிவாகக் கருதப்படுகிறார்கள். சில மௌலவிமார்களால் சில மௌலவிமார்கள் இழிவாகக் கருதப்படுகிறார்கள்.
இன்று மௌலவிமார்களிடம் தன்னை அறியாமல் இப்படியான நிலை உருவாதை சாதாரணமாகக் காணலாம். சில மௌலவிமார்கள் சிலரைப் பார்த்து அவர்களுக்கு எங்களை போல பயான் செய்யத் தெரியாது என்று இழிவாக எண்ணுவதன் (பேசுவதன்) மூலம் பாவத்தை சம்பாதிக்கிறார்கள். வேறு சிலர் எங்கள் அமைப்பிற்கு நிறைய பணம், வசதி வாய்ப்பு உள்ளது என்று அப்படி இல்லாத அமைப்பை இழிவாகக் கருதுவது. இதனால் பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள்.
வேறு சிலர் எங்களிடத்தில் பெரிய, பெரிய மௌலவிகள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் யார் இருக்கிறார்கள் என்று ஜாஹிலிய்யது பெருமை அடிப்பது. இதனால் பாவத்தைத் தேடுகிறார்கள். வேறு சிலர் இதற்கு நாங்கள்தான் தகுதி. அவர்கள் எப்படிச் செய்வது என்று பேசி பாவத்தை தேடிக் கொள்வது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக சில உலமாக்க ளிடம் இப்படியான தீய பழக்கங்கள் குடி கொண்டிருப்பதை நாம் சொல்லி வாசகர்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.
இன்று சில மௌலவிமார்களை திருத்தக் கூடிய அளவிற்கு பொதுமக்கள் வந்து விட்டார்கள். சிலர் யாருடனும் சரியாகப் பேச மாட்டார்கள். எல்லா விதத்திலும் அவர்களுக்கு சமமானவர்களிடம் மட்டும் சிரிப்பது, பேசுவது. கட்டாயம் இப்படியான விடயங்களை சகலரும் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
அதேபோல சில செல்வந்தர்கள் ஏழைகளைக் கண்டால் ஏளனமாக எண்ணுவது. ஏழைகளை கணக்கெடுக்கவும் மாட்டார்கள். ஏழைகள் அமரும் சபையில் சமமாக அமர மாட்டார்கள். இதுவே பிறரை இழிவாகக் கருதுவதற்கு சமமாகும். இதனால் பெருமை தானாக வருகிறது. நரகத்தை இதன் மூலம் தேடிக் கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் அந்தஸ்தால் பிறரை இழிவாகக் கருதுவது எனக்கு பெரிய மாளிகை போல வீடு, அவருக்கு வீடில்லை, எனக்கு பல வாகனம். அவருக்கு வாகனம் இல்லை. நான் பல கோடி ரூபாய்களில் தொழில் புரியும் செல்வந்தர். அவர் கூலி வேலை செய்பவர் என்று பிறரை இழிவாகக் கருதுவதன் மூலம் பெருமை என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
சிலர் நான் மிகவும் அழகுடையவனாக இருக்கிறேன். வேறு சிலர் நான் பலசாலியாக இருக்கிறேன் என்று பிறரை இழிவாகக் கருதுவது இப்படி நரகத்திற்குரிய பாவத்தை பயப்படாமல் செய்யக் கூடிய நிலையைக் காணலாம். இதைப் பற்றி குர்ஆனும் ஹதிஸும் என்ன சொல்கிறது என்பதைத் தொடர்ந்து அவதானிப்போம்.
விசுவாசிகளே! ஒரு சமூகத்தால் மற் றொரு சமூகத்தாரை பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்களை விட இவர்கள் மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். மேலும் எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம். உங்கள் சிலர் சிலரை பட்டப் பெயரால் அழைக்கவும் வேண்டாம். விசுவாசங் கொண்ட பிறகு தீய பெயரால் அழைப்பது கெட்டதாகி விட்டது. எவர்கள் தவ்பா செய்து மீளவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள். (49:11)
இந்த வசனத்தில் ஒரு முஃமின் எப்படி பிறரோடு நடந்துகொள்ள வேண்டும் என்ப தைப் படைத்தவன் பாடம் நடத்துகிறான். நான் அவர்களை விட சிறப்புக்குரியவன் என்று எவரும் நினைக்கக் கூடாது. பிறரை குறை கூறிக் கொண்டே திரியவும் கூடாது. ஆனால், இந்தக் குர்ஆன் வசனம் இன்று புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
மேலும் தொடர்ந்து அந்த சூராவில்,
"விசுவாசிகளே! எண்ணத்தில் (தவறான) பெரும்பாலானவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக சில எண்ணங்கள் பாவமாகும். மேலும் நீங்கள் துருவித் துருவி விசாரிக்கவும் வேண்டாம். உங்களில் சிலர் சிலரை புறம் பேசவும் வேண்டாம். (49:12)
இந்த வசனத்தின் மூலம் யாரையும் தவறான முறையில் நினைக்கக் கூடாது என்று கூறுகிறான். பேசுவது வேறு நினைக்கவே வேண்டாம் என்கிறான். அதுபோல எதற்கெடுத்தாலும் குறை கூறிக் கொண்டே இருப்பது இங்கு ஒரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். எவர் இப்படி அடிக்கடி குறை பேசுகிறாரோ அவரிடம் நிறைய குறைகள் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதரிடம் ஒரு குறையை நாம் காண்கிறோம் என்றால், அவரை நேரடியாக சந்தித்து, நேரடியாக அந்த விடயத்தை எடுத்துக் கூறுங்கள். அதை விட்டு விட்டு, நாளுபேருக்கு மத்தியில் சுவாரஷ்யமாக குறைகளை பேசுவோம் என்றால் அல்லாஹ் நம்மை இது போல பேசவைத்து விடலாம்? அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.
அதேபோல் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: "தலைமுடி சுருண்ட கருப்பு நிற அடிமை உங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும்".
ஆனால், இன்று தனக்கு பிடிக்க வில்லை என்பதற்காக கட்டுப்பட மாட்டோம் அல்லது குறை கூறிக் கொண்டு திரிவதைக் காணலாம். அவருக்கு அரபு தெரியுமா? அவருக்கு பயான் செய்யத் தெரியுமா? அவருக்கு பண வசதி இருக்கிறதா? அவர் அசிங்கமாக இருக்கிறார்? என்று பலவாறாகப் பேசுவதன் மூலம் நரகத்திற் கான வழியை தேர்ந்தெடுக்கிறார்கள்?
"நிச்சயமாக இறையச்சம் உடையோரே அல்லாஹ்விடம் மிகச் சிறந்தவர்" என்று அல்லாஹ் கூறுகிறான். (49:13)
அதேபோல் "நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடம்புகளையோ, பொருட்களையோ பார்க்க மாட்டான். உங்கள் உள்ளங்களையும், இன்னும் அமல்களையும்தான் பார்க்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே, இனவெறி, மொழி வெறி, நிற வெறியை ஒரு பக்கம் தூக்கி வீசிவிட்டு, இறையச்சத்திற்கும் மனத் தூய்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் இஸ்லாத்தில் தண்டனை வழங்கப்படும். குறிப்பாக பயான்களை உபதேசமாகப் பேசிவிட்டு அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளா விட்டால் நரகில் குடல்கள் வெளியே தள்ளப்பட்டு, கழுதை ஒரு செக்கை சுற்றி சுற்றி வருவதைப் போல் இவர் கடுமையாக வேதனை செய்யப்படும்போது நரகில் ஏனையவர்கள் அம்மனிதனை நோக்கி, உலகில் மக்களுக்கு நல்லதைத்தானே சொல்லிக் கொண்டிருந்தாய் எனக் கேட்கும்போது, அதற்கு நல்லதைச் சொன்னேன். அதை நான் நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறுவான். (முஸ்லிம் 5713)
எனவே, அன்புக்குரியவர்களே பிறரை குறை சொல்வது, இழிவாக நினைப்பது, புறம் பேசுவது, கோள் சொல்வது, அவதூறு சொல்வது, பெருமையாக தன்னை நினைப்பது போன்ற நரகத்திற்குரிய பாவங்களை விட்டும் நாம் ஒதுங்கி, சுவனத்திற்குரிய அமல்களை செய்வதற்கு படைத்த இறை வன் நமக்கு அருள்பாலிப்பானாக.
http://www.islamkalvi.com/portal/?p=75312
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக